"மூச்சைக் கவனி, முழுவிழிப்புநிலையில் இரு!" புத்தர்

Monday, December 28, 2009

வாழ்வில் பிரச்சினைகள் தேவையா?

கடவுளிடம் ஒரு விவசாயி கடுமையாகச் சண்டைக்குப் போனான்.

”உனக்குப் பயிர்களைப் பற்றி என்ன தெரியும்? நீ நினைத்தபோது மழையை அனுப்புகிறாய்.தப்பான சமயத்தில் காற்றை வீசுகிறாய். உன்னால் பெரிய தொந்தரவாக இருக்கிறது. பேசாமல், இந்த வேலைகளை விவசாயி ஒருத்தனிடம் ஒப்படைத்துவிடேன்!”

கடவுள் உடனே, “ அப்படியா? சரி. இனிமேல் வெளிச்சம், மழை, காற்று எல்லாம் உன் கட்டுப்பாட்டிலேயே இருக்கட்டும்.” என்று வரம் அருளிவிட்டுப் போய்விட்டார்.

விவசாயிக்கு சந்தோஷம் பிடிபடவில்லை. அடுத்த விதைப்பிற்கான பருவம் வந்தது.

”மழையே பெய்” என்றான். பெய்தது. நிறுத்தச் சொன்னபோது, மழை நின்றது. ஈரமான நிலத்தை உழுதான். தேவையான வேகத்தில் காற்றை வீசச் செய்து, விதையை தூவினான்.

மழை வெயில் காற்று எல்லாமே அவன் சொன்ன பேச்சைக் கேட்டன. பயிர் பச்சைப் பசேல் என வளர்ந்தது. வயல்வெளியைப் பார்க்கவே படுரம்மியமாக இருந்தது.

அறுவடைக் காலம் வந்தது. விவசாயி ஒரு கதிரை அறுத்தான். அதனை உதிர்த்து,திறந்து பார்த்தான். அதிர்ந்தான். உள்ளே தானியத்தைக் காணவில்லை, மிகச் சிறிய பதர்தான் இருந்தது. அடுத்தது, அதற்கடுத்தது என்று ஒவ்வொரு தானியக்கதிராக வெட்டி எடுத்து உடைத்துப் பார்த்தால் ஒன்றிலுமே தானியம் இல்லை.

”ஏ கடவுளே!” என்று கோபத்தோடு கூப்பிட்டான். “மழை, வெயில், காற்று எல்லாவற்றையுமே மிகச் சரியான விகிதங்களில்தானே பயன்படுத்தினேன்!, ஆனாலும், பயிர்கள் பாழாகிவிட்டதே, ஏன்?”


கடவுள் புன்னகைத்தார்: “என் கட்டுப்பாட்டில் இருந்தபோது காற்று வேகமாக வீசும். அப்போது பயிர்களெல்லாம், அம்மாவை இறுக்கிக் கொள்ளும் குழந்தைகளைப்போல பூமிக்குள் தங்கள் வேர்களை மிக ஆழமாக அனுப்பிப் பிடித்துக்கொள்ளும். 

மழை குறைந்தால், தண்ணீரைத் தேடி வேர்களை நாலாபக்கமும் அனுப்பும். போராட்டம் இருந்தால்தான் தாவரங்கள் தங்களைப் பாதுகாத்துக்கொண்டு, வலுவாக வளரும். எல்லாமே வசதியாக அமைத்துக் கொடுத்ததில் உன் பயிர்களுக்கு சோம்பேறித்தனம் வந்துவிட்டது. 

தளதளவென்று வளர்ந்ததே தவிர, ஆரோக்கியமான தானியங்களைக் கொடுக்க அவற்றிற்கு தெரியவில்லை!”

வேண்டாமடா, உன் மழையும் காற்றும்! நீயே வைத்துக்கொள்” என்று கடவுளிடமே அவற்றைத் திருப்பித் தந்துவிட்டான் விவசாயி.

பிரச்சினைகள் உங்களைப் போட்டு அழுத்தும்போதுதான், உங்களின் திறமை அதிகரிக்கும். இருட்டு என்று ஒரு பிரச்சினை இருந்ததால்தான் மின்விளக்கு கண்டுபிடிக்கப்பட்டது. பயணம் என்பது பிரச்சினையானபோதுதான் வாகனம் உருவானது.

பிரச்சினைகளே இல்லாமல் இருந்துவிட்டால் நம் மூளையின் திறனை எவ்வாறு அறிவீர்கள்?

எதிர்பாராத திருப்பங்கள்தானே நம் வாழ்க்கையைச் சுவையாக அமைத்துத் தரமுடியும்.


நன்றி: அத்தனைக்கும் ஆசைப்படு, ஜக்கி வாசுதேவ், விகடன் பிரசுரம்

Friday, December 25, 2009

படித்ததில் பிடித்தது 25/12/09

நண்பர்களே, வலையில் மேய்ந்து கொண்டிருந்த போது கண்ணில் பட்டது...

நீங்களும் பாருங்களும். இதுவும் ஒரு அவசியமான தகவல்தான்.


நன்றி  -  திருத்தம் வலைப்பதிவு

வாழ்த்துகள்

Wednesday, December 23, 2009

பூப் பறித்தல், பூக் கிள்ளுதல், பூக் கொய்தல்


தமிழின் தனிச்சிறப்பு

பூப் பறித்தல், பூக் கிள்ளுதல், பூக் கொய்தல் என்ற பல சொற்கள் பழக்கத்தில் இருப்பினும், ஒவ்வொன்றும் ஒரு தனிப் பொருளைப் பெற்றுள்ளது.

ரோஜா முதலிய செடிகளில் பூக்கும் பூவை எடுப்பதைப் பூப்பறித்தல் என்று கூறுவர்.

தரையில் படர்ந்திருக்கும் கொடிகளில் உள்ள பூவை எடுப்பதனைப் பூக் கிள்ளுதல் என்று கூறுவர்.

மரம், பந்தல் ஆகியவற்றில் உயர்ந்து படர்ந்திருக்கும் கொடிகளில் உள்ள பூவை எடுப்பதைப் பூக் கொய்தல் என்று கூறுவர்.

சொன்னவர்; பேரா.அ.ச.ஞானசம்பந்தன் அவர்கள்

பூப்பறித்தல் என்பதை மட்டுமே வழக்கமாக அனைத்துக்கும் பயன்படுத்தும் எனக்கு இவரின் தகவல் மனதில் பதிந்து விட்டது

Tuesday, December 15, 2009

உடன்பாட்டு எண்ணங்கள்

இந்த பிரபஞ்சத்தில் எண்ண அலைகள் எங்கும் நிறைந்துள்ளன. நமது மனதிலிருந்து புறப்படும் எண்ண அலைகளுக்கு ஏற்ப, பிரபஞ்ச மனதிலிருந்து எண்ண அலைகள் நம்மை நோக்கியும் வருகின்றன.

பிரபஞ்சமனதின் மிக முக்கியமான செயல்களுள் ஒன்று  நமது எண்ண அலைகளுக்கு அதிக உணர்வூட்டி, வலுவூட்டி அதை நாம் இவ்வுலகில் நிறைவேற்றக் காரணமாக அமைவதே.

பிரபஞ்ச எண்ண அலைகள் ஒரு கடல் போன்றது. அதிலிருந்து அமுதமும் எடுக்கலாம், ஆலகால விசமும் எடுக்கலாம். நமக்கு எது வேண்டுமோ அதைத் தரும் அட்சயப்பாத்திரம் அது. உடன்பாட்டு (நேர்மறை) எண்ணமுடையார்க்கு அதே அளவு வலுவூட்டி அமுதை அளிக்கும்.  எதிர்மறை எண்ணமுடையவருக்கும் அதே அளவு வலுவை ஊட்டி ஆலகாலத்தை அளிக்கும்.

ஏனெனில் இறையருள் என்பது நமது மனநிலையைப் பொறுத்ததே.  நெல் விதைத்து முள் கொள்வாரில்லை. முள் விதைத்து நெல் கொள்வாருமில்லை.

ஏழை ஏழ்மையைப் பற்றி சிந்திக்க சிந்திக்க ஏழ்மையே பெருகும். நோயாளி நோயைப் பற்றிச் சிந்திக்க சிந்திக்க நோய் தீவீரமாகும். செல்வந்தன் செல்வம் பற்றிச் சிந்திக்க சிந்திக்க செல்வம் சேரும்.

ஏழை செல்வம் வருதல் பற்றி சிந்திக்க வேண்டும், நோயாளி உடல்நலம் பெறுதல் பற்றிச் சிந்திக்க வேண்டும். இருளினின்று ஒளிக்குச் செல்ல வேண்டும். இதுவே உடன்பாட்டுச் சிந்தனை. இத்தகைய நலம் பயக்கும் வார்த்தைகளைப் பேசப்பேச, சிந்திக்க சிந்திக்க சூழல் மாறும். இது நம் வாழ்வை உயர்த்தும்.

நீங்கள் பேசும், சிந்திக்கும், எழுதும் வார்த்தைகளை சிந்தனைக்கு எடுத்துக்கொள்ளுங்கள்.....நண்பரே :))

வாழ்த்துகள்

Friday, December 11, 2009

பாரதியாரும், எனது நூறாவது இடுகையும்

அறிவே தெய்வம் என சொன்னவர் பாரதி

ஞானப்பாடல் தொகுப்பில் 10வது பாடலைப் பாருங்கள்,

11வது பாடல் பரமசிவவெள்ளம்

இறைநிலை குறித்தான விளக்கமாக அமைந்த பாடல்.

நேரம் கிடைக்கும் போது இந்த இரு பாடல்களையும் சிலமுறை படித்துப்பாருங்கள்.

பாடல்கள் இணைப்பு கிடைக்கும் இடம் சிலம்புமதுரைத்திட்டம்

மனதில் ஆன்மீகம் குறித்தான தெளிவு பிறக்கும்.

நான் பாரதியை இப்படித்தான் பார்க்கிறேன் :))

பாரதியாரின் பிறந்தநாள் நினைவு கூறவும், எனது நூறாவது இடுகையாகவும் என் விருப்பமாக இதை உங்களோடு பகிர்நது கொள்கிறேன்

\\\நிகழ்காலத்தில்... (அறிவே தெய்வம்)
– Hide – Always show
100 Posts, last published on Dec 11, 2009 –\\

dash board - ல் இருந்து கிடைத்த தகவல், ஆனால் பதிவின் வலதுபுறம் இந்த வருடம் 99 இடுகையும், சென்ற வருடம் 2 இடுகையும் மொத்தம் 101 காட்டுகிறது. இதை ஒட்டி முன்னதாக, முந்தய இடுகையிலேயே வாழ்த்து சொன்ன கோவியாருக்கும், என் வலையுலக நண்பர்கள் அனைவருக்கும் நன்றிகளும் வாழ்த்துகளும்  காணிக்கையாக்குகிறேன்


வாழ்த்துகள்


இன்று மாலை இந்த பதிவைப் பார்த்தேன். பாரதியைப் பற்றிஎன் பாரதி

Wednesday, December 2, 2009

வெற்றி மனப்பான்மையும், தோல்வி மனப்பான்மையும்

A winner is always a part of Answer. A loser is always a part of the problem

சோப்பு தயாரிப்பு நிறுவனத்தில் இயந்திரமயமாக்கப்பட்ட பேக்கிங் பிரிவில் தவிர்க்கவே முடியாமல் ஒரு சில காலி உறைகளும் பேக்கிங் ஆகி நிறுவனத்திற்கு தலைவலியைத் தந்து கொண்டிருந்தது. அலுவலகத்தில் பலகட்ட/பலமட்ட ஆலோசனைகள் பயன் தரவில்லை.

அப்போது ஒரு தொழிலாளி ”இதற்கு எதுக்கு இவ்வளவு சிரமப்படுறீங்க, ஒரு ஃபேன் வாங்கி நிக்க வச்சா போதும், காலி உறை வெளியே விழுந்து விடும்” என்றார்.. இவர் ஒரு வெற்றியாளர். part of answer

A winner always has different Programmmes, A loser always has so many excuses

வெற்றியாளன் எந்த கடினமான பொறுப்பைக் கொடுத்தாலும், அதை எளிதாக நிறைவேற்ற பல வழிகளை சிந்தித்தபடி இருப்பான். தோல்வியாளனோ ஒருவேளை பொறுப்பு நிறைவேறாவிட்டால் அதற்கான காரணம் என்ன? என சொல்லி தப்பிக்கலாம் என சிந்திப்பான்.

A winner says"Let me do it for you". A loser says,"That is my not job"

வெற்றியாளன் எந்தப் பணியைக்கொடுத்தாலும் “ உங்களுக்காக இதைக்கூட செய்யமாட்டேனா? என உற்சாகமாக ஏற்றுக்கொள்வார் தோல்வியாளரோ "இது என் வேலை அல்ல, இதற்கு வேறு ஆளைப் பார்" என தப்பிக்கவே முயல்வான்.

A winner sees an answer in every problem; A loser sees a problem in every answer

வெற்றியாளன் ஒவ்வொரு சிக்கல்களிலிருந்தும் ஒரு தீர்வைக் கண்டு பிடிப்பான். தோல்வியாளனோ ஒவ்வொரு தீர்வுக்குள்ளும் புதிய சிக்கல் ஒன்றைக் கண்டுபிடித்தபடியே இருப்பான்.


A winner ever says,"It may difficult but it is possible". A loser ever says,"It may be possible but it is too difficult"

வெற்றியாளன் "இது கடினமான பணியாக இருந்தாலும் எப்படியும் வெற்றி பெறலாம்" என்பான். தோல்வியாளன் "வெற்றிபெறலாம்தான். ஆனால் இத்தனை பிரச்சினைகள் உள்ளன. இதனால் எப்படி வெற்றி பெற முடியும்?” என்பான்.

உங்களிடம் உள்ள சிந்தனைப் போக்கு எத்தகையது என பாருங்கள். அது வெற்றியைத்தருவதா தோல்வியைத்தருவதா என பிரித்து ஆராயுங்கள்
உங்களுக்கு வெற்றி என்பது சாதரணமாகி விடும்.

என்ன செய்வீர்களா :))

Sunday, November 29, 2009

படித்ததில் பிடித்தது 29/11/2009

பாலகுமாரனின் எழுத்துகள் எப்போதும் உள்நோக்கிய சிந்தனைகளை மையமாகக் கொண்டிருக்கும். அவரது கதாபாத்திரங்கள் மனிதருள் பலவிதம் இருப்பதை அப்படியே படம்பிடித்துக்காட்டும்.

வாழ்க்கையில் வெற்றி பெற எதிர்கொள்ள வேண்டிய பிரச்சினைகள், பல வித அவமானம் தாங்குதல் பற்றி அவர் எழுதும் பாங்கு எனக்குப் பிடிக்கும்.

படித்துப் பாருங்களேன்..ரஜினிகாந்த் அவர்கள் வாழ்வில் உச்சாணியில் இருந்தபோதும், அவரது மனநிலையை அப்படியே இங்கே கொடுத்திருக்கிறார்

“எவர் உயர்ந்தாலும், உன்னதமான நிலைக்கு வந்தாலும் அவரைத் தூற்ற, அந்த நிலையிலிருந்து அவரைச் சாய்க்க, உலகத்தின் ஒரு பகுதி கடுமையாய் முயலும், அதுவும் மிகச் சாதாரணமாய் இருந்தவர் முன்னேறினால் அவருக்கு எதிரிகள் உடனே உருவாகி விடுவார்கள்.

தனக்கு யோக்கியதை இருந்தும் உயர்வு கிடைக்கவில்லை. யோக்கியதை இல்லாத இவனுக்குக் கிடைத்து விட்டது என்று சிலர் பொறாமைப்படுவார்கள். இவ்வளவு உயரத்துக்கு இவர் வந்துடுவார்னு அன்னிக்கே தெரிஞ்சிருந்தா இன்னும் க்ளோசா ஒட்டிட்டிருந்திருப்பேனே. தெரியாத போயிடுத்து. இப்ப ஓட்ட ட்ரை பண்ணுவோம். ஒட்டவிடலைன்னா தொந்தரவு பண்ணுவோம். எனக்கு தெரியும்டா உன்னைப் பத்தி, என்கிட்ட டீ வாங்கி குடிச்சவந்தான் என்று சொல்லி எரிச்சல் மூட்டுவோம் என்று வேறு சிலர் முயல்வார்கள்.

கண்டக்டரா, கன்னடமா, தமிழ், இங்கிலீஷ், ஃப்ரெஞ்ச் எதுவும் தெரியாதா. டான்ஸ் வராதா...நாவல் படிக்கிற பழக்கம் இல்லையா. ஸ்கேட்டிங், ரைஃபிள் ஷுட்டிங். ஒண்ணும் தெரியாதா. பின்ன எப்படி இவ்வளவு உயரத்துல. ஏதோ குருட்டு அதிர்ஷ்டமா. நமக்குத் தெரிஞ்சதெல்லாம் அவுத்துவிட்டு உனக்கு என்ன தெரியலை பார்னு குழப்பி வுட்டுரலாம். இப்படியும் சிலர் முயல்வார்கள்.

இவர்கள் எல்லோரையும் அமைதியாய் அதிகம் எதிர்ப்பு காட்டாது சமாளித்தாக வேண்டும். அளவுக்கு மீறிய பொறுமை வேண்டும். பொறுமையே சிறிதும் இல்லாத நான் வன்முறையாய், வலுக்கட்டாயமாய் மெளனத்தை-அமைதியை வரவழைத்துக் கொள்கிறேன். சில சமயம் சிதறடித்து விடுகிறேன். நான் பெரிய தத்துவவாதியில்லை, நான் அதிகம் புத்தகம் படித்ததில்லை. ஆனால் இரவில் மனம் நொந்து புரண்டு படுக்கிறபோது எனக்கு நடந்த வேதனைகளின் வேர் எது என்று யோசிக்கிறபோது வாழ்க்கை மொத்தமும் பிடிபட்டுப் போவது போல் இருக்கிறது.

மனிதர்கள் ஆரம்பத்தில் இப்படித் தான் வேதனைப்படுத்துவார்கள். தாங்கிக் கொள் என்று தெளிவாய் தெரிகிறது. எதிர்த்தால் சரிவு நிச்சயம். அதனால் பிறர் ஹிம்சையைத் தாங்கி அமைதியாய் நமது அடுத்த வேலையைச் செய்ய.. இன்னும் உயர்வு வரும். மனிதர்கள் தாக்கவே முடியாத உயர்வுக்குப் போய்விட வேண்டும். அதற்கு வேறு எதிலும் கவனம் சிதறாது உழைக்கவேண்டும்.”


நன்றி;   பாலகுமாரன் பேசுகிறார். வலைத்தளம்


வாழ்த்துகள்

Thursday, November 26, 2009

அறிவும் உணர்ச்சியும் தொழில்நுட்பக் கோளாறும்

நண்பர்களே


நம் வாழ்க்கை பயணத்தில் எங்காவது தடை நேர்கிறது, சிக்கல் வருகிறது என்றால் அந்தத் தடைக்கு அறிவு, உணர்ச்சி என்னும் இந்த இரண்டு அம்சங்களில் ஏதோ ஒன்றில் தொழில்நுட்பச் சிக்கல் ஏற்பட்டுள்ளது என்றே பொருள்.


”எந்த மாற்றத்திற்கும் தயார்!” என்ற ஊக்கத்துடன் மனதை வெட்ட வெளியாகத் திறந்து வைத்திருப்பர்க்கு எந்த வெற்றியும் இந்த உலகில் எளிதாக வாய்க்கும்.


”நான் எந்த விதத்திலும் மாறமாட்டேன். மற்றவர்கள்தாம் எனக்காக மாறவேண்டும்!” என்று அடம் பிடிப்போர்க்குத்தான் எல்லாமே சிக்கலாகத் தெரியும்.


மாறமாட்டேன் என்று அடம் பிடிக்கும் அந்தப் பிடிவாத மனதிற்குப் பெயர்தான் விதி... வினைப்பயன்...துரதிர்ஷ்டம் என்று பல பெயர்கள் வைத்துள்ளோம்.


சமையலில் சிறிது உப்பு அதிகம் என்றால் சற்று தண்ணீர் சேர்த்து சரி செய்யலாம். அதே போல் தண்ணீர் அதிகமாகிவிட்டால் சற்று தண்ணீர் அதிகமாக்கி சரி செய்யலாம்.


அதுபோல் உணர்ச்சி சார்ந்த சிக்கல்களுக்கு சிறிது அறிவைக் கலந்தால் சரியாகிவிடும், (உறவுச் சிக்கல்கள்)


அறிவு சார்ந்த சிக்கல்களுக்குச் சிறிது உணர்ச்சியைக் கலந்தால் சரியாகிவிடும் (தொழில்சிக்கல்கள்)


முயற்சித்துப் பாருங்களேன்

வாழ்த்துகள்

Wednesday, November 25, 2009

வலையுலக நட்பும், கருத்துச் சுதந்திரமும்.

வலையுலகில் பலவித இடுகைகளை படிக்கிறோம். படிக்கிற இடுகை ஒரு கவிதை, கதை, குறித்தான இடுகையாக இருக்கும்போது, அதில் பதிவரின் எண்ண ஓட்டம் தெரிகிறது. அதற்கு பின்னூட்டம் சூப்பர், நல்லா இருக்கு அவ்வளவுதான். அங்கே விவாததிற்கு இடமே இல்லை.

சாதி, ஆன்மீகம், மதம், நாத்திகம், அரசியல்,காமம் சார்ந்த இடுகைகள் வரும்போது விவாதத்திற்கு உள்ளாகக் கூடிய வகையில்தான் கருத்துகள் அமையும். விவாதமும் தவிர்க்க முடியாதது.

இது போன்ற இடுகைகளை நான் படிக்கும்போது முதலில் கட்டுரையின் நோக்கம் என்ன என்பதைத்தான் கவனிக்கிறேன்,

அது கடுமையாக எதிர்க்கிறதா? கண்ணை மூடிக்கொண்டு ஜால்ராவா? இல்லை கிண்டல் அடிக்கிறதா? ஆராய்கிறதா? எடுத்துக்கொண்ட கருத்தை நிறுவுகிறதா? சமுதாயத்தில் தனது கருத்தை ஆதங்கத்துடன் பதிவு செய்கிறதா என்று இடுகையைப் பற்றி படித்து முடிவுக்கு வருகிறேன்.

கடுமையாக எதிர்க்கிறது, நிறைகளைச் சுட்டிக் காட்டாமல் குறைகளையே பெரிது படுத்தி பேசுகிறது என்றால் அங்கே நமது குரல் எடுபடாது. குரல் கொடுத்தாலும் கடுமையான ஆட்சேபனைகள் நிச்சயம் வரும். எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தாது. எனவே விலகிவிடுகிறேன்.மாறாக ஒத்த கருத்துடைய அந்த நண்பர்களின் பின்னூட்டங்களை வைத்தே அவர்களை மதிப்பீடு செய்து இரசிக்கிறேன்.

உதாரணமாக ஆன்மீகம் சார்ந்து எழுதக்கூடிய அன்பர்களிடையே தானகவே ஒரு குழுபோல் அமைந்துவிடும். தினசரி வந்து படிக்கும் நண்பர்கள் மற்றும் எழுதும் பதிவரிடையே கருத்தளவில், மனதளவில் ஒரு நெருக்கம் ஏற்பட்டுவிடும். அப்போது இடையில் புகும் மாற்றுக் கருத்துடைய நண்பர் தொடர்ந்து படிப்பவராக இருந்தாலும், தாங்கமுடியாமல் ஒருகட்டத்தில் எதிர்க் கருத்தை அங்கு பதிவு செய்ய முயலும்போது அது அவரைப் பொறுத்து சரியானதாகவே இருந்தாலும், மற்ற அனைவராலும் வித்தியாசமாகவே பார்க்கப்படுகிறது.

அதோடு மட்டுமில்லாமல் அவர் சொல்ல வந்ததும் மறைக்கப்பட்டு, பின்னூட்டமிட்ட நண்பரின் மீது குழுவாக பாய்ச்சல் நிச்சயம்.

இது சூழ்நிலையையே கெடுத்துவிடுகிறது. இவர்களுக்கும் பாடம் போய்விடும், அவருக்கும் எதிர்ப்பை திரும்பவும் எதிர்க்க, கருத்தை வலியுறுத்த என மனநிம்மதி போய்விடும்.

இது ஆன்மீகம் மட்டுமல்ல, அனைத்துத் துறையினருக்கும் பொருந்தும், கணினி தொழில்நுட்ப விளக்கம் தரும் நண்பரின் நோக்கம் புரிந்து கொள்ளாது அங்கு தமிழில் குற்றம் கண்டுபிடிக்கிறார் ஒரு நண்பர்.

இந்த சூழ்நிலையை நான் எப்படி எதிர்கொள்கிறேன் என்றால் இடுகையின் நோக்கம் புரிந்தது. ஆக்கபூர்வமான நோக்கம் எனில் சிறு குறைகளாக என் மனதிற்கு பட்டதை (பிழைதிருத்தத்தை கூட) தனி மடலிடுவேன், நிறைவுகளை பாராட்டி விடுவேன். முக்கிய நோக்கத்தைப் புறக்கணித்து குறைகளை பெரிது படுத்தும்போது எந்த பிரயோசனமும் இல்லாமல் போய்விடுகிறது. இடுகையின் நோக்கம் திசை திருப்பப்பட்டு பின்னர் வந்து படிப்பவரின் மனோநிலையை குழப்பம் அடையச் செய்து விடுகிறது.

அதற்காக தவறை அனுமதிக்க வேண்டுமா என்றால் நிச்சயம் இல்லை. அந்தத் தவறு முக்கிய பங்கு வகிக்கிறது என்றால் அவரிடம் தெரிவித்துவிட்டு என் தளத்தில் தனித் தலைப்பிட்டு எதிர்கருத்தை பதிவு செய்கிறேன். அப்போது அவர்கள் மனநிலையும் கெடுவதில்லை, எழுதும் எனக்கும் மனநிறைவு ஏற்பட்டுவிடும்.

இதனால் என்னுடைய பின்னூட்டம் எங்கு இருந்தாலும் பெரும்பாலும் பாராட்டியே இருக்கும், சிறு நகைச்சுவை இருக்கலாம். அதிகமாக இடுகையின் மையத்தை விட்டு விலகி பின்னூட்டமிடுவதில்லை அதனால் கும்மிக்கு நான் எதிரானவன் அல்ல, மனதை ரிலாக்ஸ் பண்ண சில சமயங்களில் கும்மியும் தேவைதான். அதற்கான இடுகை எது எனபதை தெளிவாக முடிவு செய்ய வேண்டும் என்றே சொல்ல வருகிறேன்.  

இடுகைகளின் தரத்தை முடிவு செய்து அதற்கேற்றவாறு பின்னூட்டமிடுவது பதிவரிடையே நட்பை இன்னும் பலப்படுத்தும், பிணைப்பை ஏற்படுத்தும்.

வலையுலகில் நட்பு முக்கியமா, என் கருத்து முக்கியமா எனும்போது என்கருத்தை வாய்ப்பு கிடைக்கும் போது மீண்டும் சொல்லிக்கொள்ளலாம், ஆனால் நட்பு என்பது விரிசல் வந்தால் மீண்டும் மனதளவில் ஒட்டாது. வாயளவில்தான் நட்பு இருக்கும். எனவே பின்னூட்டத்தில் எனது பாணியாக இதைக் கடைபிடித்து வருகிறேன்.

சிந்தனைக்கு எடுத்துக்கொள்ளுங்கள் உங்களது கருத்தா......நட்பா.. உங்கள் விருப்பம்.!!!

வாழ்த்துகள்..

Tuesday, November 24, 2009

பரிணாமம் குறித்தான...1

 முந்தய இடுகையின் பின்னூட்டங்களின் தொடர்ச்சியே இந்த இடுகை
இந்த பதில் பின்னூட்டமாக வெளியிடுவதில் கூகுளாண்டவர் ஒத்துழைக்காததால் இங்கே இடுகையாக..


டவுட் தனபாலின்  கேள்விக்கான பதில்

\\அந்த ஒரு செல் உயிரியின் செயல் எதனால் நிர்ணயம் செய்யப்பட்டது? அதற்கு முன் தான் செயலோ வினையோ இல்லையே?\\

அதற்கு முன்னர் பஞ்சபூதங்களின் தோற்றம், அதற்கு முந்தய நிலை இவற்றிற்கு எந்த செயலும் விளைவும் காரணம் இல்லைதான்.

காரணம் உருபொருள் என தாங்கள் சொல்லும் இறையின் தன்மைகளுள் ஒன்று விரிவு,அழுத்தம்

ஆகவே அதன் பெருக்கத்தில் மலர்போல் உள்ளிருந்து உள்ளாக தோன்றியதே இப்பிரபஞ்சம், இதில் மறைபொருளாய் இருப்பது காந்த ஆற்றல்.

விளைவு என்பதே வித்திலிருந்துதான் தொடங்குகிறது. அதன் பின்னரே வினைப்பதிவுகள் வந்தன.

\\புல்லாகி உருவாக புல்லுக்கு முன் என்னவாக இருந்தது? \\

பஞ்சபூதங்களாக, அதற்கு முன்னதாக இந்த பூமியை எது தாங்கிக் கொண்டிருக்கிறதோ அதுவாக இருந்தது.அதற்கு முன் அதுவுமில்லாமல் இருந்தது.

\\புல்லாக எது செயல்பட்டது? \\

தோற்றுவித்தது எதுவோ அதுவே புல்லாகவும் செயல்பட்டது.

\\எதன் கருமையம் புல்லில் இருந்தது?\\

உயிரோட்டம் எதை மையமாக வைத்து ஓடுகிறதோ அதை கருமையம் என்கிறோம். அப்படி பார்க்கும்போது தாவர இனங்கள் புவியோடு வேர்மூலம் இணைந்தே இருப்பதால் கருமையம் என்று ஒன்று தனியாக இல்லை. அது நகரும் உயிரினங்களுக்கே உரித்தானது

\\புல் எந்த செயல் செய்ததால் வினை பயன் பெற்று பூடாகியது? பிறகு புழுவாக மாற எது காரணமாகியது.?\\

இதற்கு சற்று யோசிக்க வேண்டியதாக இருக்கிறது. அதாவது செயலுக்கு வினைக்கு விளைவு நிச்சயமே தவிர செயலினால்தான், அதன் விளைவினால்தான் அடுத்த பிறவி (பரிணாமம்)என என்னால் சொல்ல முடியவில்லை.

ஆனால் அதன் குணங்களும்,அமைப்புகளும் காந்ததின் மூலம் சுருக்கி இருப்பாக வைத்து அடுத்த நிலையில் விரித்து காண்பிக்கப்படுகிறது.

 காந்தஓட்டம் பஞ்சபூதங்களுள் முறையான சுழற்சி அடையும் போது ஒருசெல் உயிரினம், இந்த ஓட்டம் மேலும் ஒழுங்கு பெற்றபோது பிற உயிரினங்கள் வந்தன.

அவையும் அழுத்தம், ஒலி,ஒளி,சுவை, மணம் இவற்றை உணர்ந்து கொள்ளும் வகையில் வரிசையாக தோன்றின. இதில் காந்த(சக்தி) ஆற்றலின் பங்கு மகத்தானது

இறையின் பண்புகளின் ஒன்று ’விரிவு‘ அதுதான் காரணம்., யார் கண்டார்கள், பலகோடி வருடத்திற்குபின் பரிணாமத்தில் நாம் என்ன உருவம் எடுப்போமோ?

இதில் ஏதேனும் குறை இருந்தால் அது என்னுடையது. நிறை இருந்தால் வேதாத்திரி மகானுடையது.

வாழ்த்துகளைத் தனபாலிடம் சொல்லுங்கள்.

Monday, November 23, 2009

நடராஜர் கோவிலில் ராஜாத்தி (அம்மாள்) சாமி தரிசனம்

சிதம்பரம், நவ.23-
சிதம்பரம் நடராஜர் கோவிலில், முதல்வர் கருணாநிதியின் துணைவி ராஜாத்தி, தனது பேரனுடன் சாமி தரிசனம் செய்தார்.

முதல்வர் கருணாநிதியின் துணைவி ராஜாத்தி, தனது பேரனும், கனிமொழியின் மகனுமான ஆதித்யனுடன் நேற்று சிதம்பரம் நடராஜர் கோவிலுக்கு வந்தார். தி.மு.க. நகர செயலர் செந்தில்குமார் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் அவரை வரவேற்று கோவிலுக்குள் அழைத்துச் சென்றனர்.

கோவிலில் சிற்றம்பல மேடையில் ஏறி சாமி தரிசனம் செய்தார். பின் கோவில் வளாகத்தில் உள்ள கோவிந்தராஜ பெருமாள், ஆதிமூலநாதர் உள்ளிட்ட சன்னிதிகளுக்கு சென்று தரிசனம் செய்து விட்டு புறப்பட்டு சென்றனர்.


நன்றி தினமலர்-23-11-2009 கடைசிப்பக்க செய்தி

டவுட் தனபாலுக்கான பதில் - முதல் மனிதனின் வினை

திரு.டவுட் தனபால் அவர்களின் சென்ற இடுகையை ஒட்டிய கேள்வி

\\என் வாழ்க்கையின் ஒவ்வொரு நிகழ்வுக்கும் முன் செய்த வினை (செயல்) தான் காரணம் என்றால், நான் இவ்வுலகில் முதன் முதலில் ஒரு பிறப்பு எடுத்திருப்பேன் அல்லவா? [அதற்கு முன் பிறப்பில்லை.] அப்படிபட்ட முதல் பிறப்பில் நான் செய்த செயல்களுக்கு எது காரணமாக இருந்தது?


முன்னால் எதுவும் செயலும் விளைவும் இல்லாத சூழலில் எனக்கு நிகழ்வுகள் எப்படி ஏற்படுத்தபட்டது? \\

டிஸ்கி:என்னைச் சார்ந்த மரியாதைக்குரிய புரியாத பொன்னுசாமி அவர்களிடம் இந்த கேள்வியின் விபரம் தரப்பட்டு அதற்கான பதில் வாங்கி இங்கு இடுகையாக வெளியிடப்படுகிறது.:))


முதல்ல இந்த கேள்வியின் அடிப்படை முதல் மனிதன் திடீரென தோன்றினான். எனவே மனிதன் திடீரென படைக்கப் பட்டதால் அதற்கு முன்னதாக எந்த செயலும் இல்லை, விளைவும் இல்லை. பின் எப்படி விளைவு வந்தது ? சரிங்களா !!”

இதையே கொஞ்சம் மாற்றிப் பாருங்க..

முதல் பிறப்பு, முதல் மனிதன் அப்படிங்கறதே இல்லை, எந்தக் கடவுளும் மனிதனைப் படைக்கவில்லை. மனிதன் விலங்கிலிருந்து பரிணாம வளர்ச்சியில் வந்தவன்தான். விலங்கினங்களிடம் இருந்த அடிப்படைக் குணங்கள் அவனிடமும் இருந்தன,

எனவே விலங்கினத்தொடர் மனிதன், அப்படின்னா
விலங்கினப் பதிவுகள் நம் வினைகள், அவ்வளவுதான்.

போதுங்களா., தேவைன்னா இனி சற்று விளக்கமாப் பார்ப்போம்.

பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளாக நான்கு கால்களோடு வாழ்ந்த ஐயறிவு உயிரினங்கள், பின்கால்கள் இரண்டைக் கொண்டே நிற்கப் பழகிக் கொண்டு, இரண்டுகால் உடைய உயிரினமாகவும், அதிலிருந்து ஆதிமனிதனாகவும் பரிணாமம் அடைந்தன.

ஆதிமனிதன் ஒருபோதும் கடவுளால் இப்போது உள்ளவாறு திடீரென படைக்கப் படவில்லை, அதேசமயம் மனிதனுக்காக வேறு எந்த உயிரினத்தையும் படைக்கவில்லை. :))

 பரிணாம வளர்ச்சியில் யூகம், அனுமானம் என்கிற ஆறாவது அறிவுடன் மனிதன்வந்தான்.

இவையெல்லாம் வருவதற்கு பலகோடி ஆண்டுகள் ஆகிவிட்டன. இதுவே மனித பரிணாம வளர்ச்சியின் சாரம்.

மனிதன் எங்கிருந்து வந்தான் எனப்பார்த்தால் பல கோடி வருடங்களாக பல உயிரினங்களின் வித்துத் தொடராக வந்து இன்றைய நிலையை அடைந்திருக்கிறான்.

பிரபஞ்சம் உருவாகி விரிவடைந்து வரும் கோடிக்கணக்காக வருடங்களில் இப்புவியில் நிலம், நீர், காற்று, வெப்பம், விண் முதலான பஞ்சபூதங்கள் முதலியன  ஒரு பொருத்தமான கூட்டாக தக்க சூழ்நிலையில் சேர்ந்தது.

அப்போது அது ஒரு செல் உயிரினமாக நீரில் தோன்றியதிலிருந்து விலங்கினம் வரை வித்துத் தொடராக அவற்றின் வாழ்க்கை முறைப் பதிவுகள் அனைத்தும் நம்முள்ளே உண்டு. ஆகையால் மனிதனிடத்தில், அவனுடைய வித்தில், கருமையத்தில் இவை அனைத்தின் சாரம்சமும் உள்ளடங்கியே இருக்கும்.

சரி அந்த சாராம்சம் என்ன பறித்துண்ணுதல்

சுருக்கமாக..  ஈரறிவு முதல் ஐயறிவு வரை உள்ள உயிரினங்கள் அனைத்திலும் பெரும்பான்மையாக, வேறு ஒரு உயிரைக் கொன்று அதன் உடலை உணவாகக் கொண்டே வாழுகின்றன,

இந்த விலங்கினத்தின் வித்தில், உடலில், மூளையில் பிற உயிரைப் பறித்து உண்ணும் செயல்களும், குணங்களுமே பதிவுகளாக உள்ளன. அதே விலங்கினத்தின் வித்துத் தொடராகத்தான் மனிதன் வந்திருக்கிறான்.

பிற உயிரின் வாழும் சுதந்திரத்தை அழித்தல்
பிற உயிரைத் துன்புறுத்தல், கொல்லுதல்,
பிற உயிரின் பொருளைத்திருடுதல் - இதுவே விலங்கின செயல்


உணவாகப் போகிற, உணவாக்கிக்கொள்கிற இரு உயிர்களின் போராட்டத்தில் ஒன்றால் மற்றொன்றுக்கு துன்பம் விளையும்போது அதை சமாளிக்க எழும் வேகம், கோபமாகவும், பயமாகவும், தனது உணவை மற்றவை பறிக்க வரும்போது அதை காப்பாற்றிக்கொள்ள முனைவது (அதிக)ஆசையாகவும், தன்னைத்துன்புறுத்திய உயிரினத்தை எதிர்க்கும் முயற்சி தோல்வியடையும்போது எழும் உணர்வு வஞ்சமாகவும் வளர்ந்து தொடர்ந்து நீடித்து நம்மிடம் வந்துள்ளது.

இதே பண்புகள் நவீனமாக மனிதனிடத்தில் பொருள்,புகழ், அதிகாரம்,புலனின்ப வசதிகளுக்கான வேட்கையாக மாறி, அதற்கான வெளிப்பாடாக பொய்,சூது,களவு,கொலை,கற்பழிவு எனும் தீய செயல்களாக பல இலட்சம் தலைமுறைகளாகத் தொடர்ந்து வந்து கொண்டுதான் இருக்கிறது..

இது மேலும் மேலும் அதிகமாகி தீவினைப் பதிவுகளாக நமக்கு சேர்ந்து கொண்டே வருகிறது. மனிதனுக்கு வினை வந்த வழி இதுதான்.

இதை உணர்வது ஆறாவது அறிவு, உணர்ந்துபின் அதை களைவதுதான் நமது வாழ்வின் அமைதிக்கு வழி.

தான் பண்படுதல், தனக்கும் பிறர்க்கும் பயன்படுதல். இதுவே வினை அழிக்கும் மந்திரம்.

அவ்வளவுதான் விசயம். இதை நண்பர் டவுட் தனபாலிடம் சேர்த்து விடுங்கள், இதில ஏதாவது டவுட் வந்தா அதையும் அய்யா கிட்ட சொல்லிடுங்க..

-----புரியாத பொன்னுசாமி.

Saturday, November 21, 2009

பாவ புண்ணியங்களும் அதன் விளைவுகளும்

சிலர் செய்யும் பாவ புண்ணியங்களுக்கு மாறாகவும் பயன்களை அனுபவிக்கின்றனர்-இது ஏன்?


செயலுக்குத் தக்க விளைவு என்பது இயற்கை நியதி. இதில் சிறிது கூட தவறு இராது.வராது.

செயலுக்கும் விளைவுக்கும் இடையே உள்ள காலநீளம் பல காரணங்களினால் வேறுபடும். மனிதன் ஆயுள் ஒரு எல்லை உடையது. இதனால் எல்லா செயல்களுக்கும் விளைவுகளை இணைத்துப் பார்ப்பதில் பொருத்தமில்லாமல் போகிறது.

ஒரு செயலுக்கு அடுத்த நிமிடமே விளைவு உண்டாகலாம்,
மற்றொரு செயலுக்கு 100 ஆண்டுகள் கழித்து விளைவு வரலாம்.
இன்னொரு செயல் அதைச் செய்தவரிடம் கருவமைப்பாக பதிந்து மூன்று அல்லது நான்கு தலைமுறைக்குப் பின்கூட விளைவு வரலாம்.

கணித்து இணைத்துப் பார்ப்பதில் தவறு இருக்குமே தவிர இயற்கைச் சட்டத்தில் என்றுமே தவறு இருக்க முடியாது.

இதனாலேயே நாம் செய்யும் செயல்கள் முடிந்தவரை பிறரின் உடல், உயிர்,மனம் இவற்றிற்கு துன்பம் தருமா என்பதை ஆராய்ந்து செயலாற்ற வேண்டும். அதே சமயம் நமது உடல்,ம்னம், உயிருக்கு இனிமை தருவதாகவும் அமைய வேண்டும்.

நன்றி - அன்பொளி 1983ம் வருடம் -  வேதாத்திரி மகரிஷி

வருங்கால சந்ததிக்கு நாம் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் சேர்த்து வைக்கும் சொத்து வினைப்பதிவுகளே. ஆகவே நம் வினைகளை தேர்ந்து செய்வோம்.

Wednesday, November 18, 2009

சிந்தனையை மாற்றுங்கள், சிக்கல்கள் விலகும்

வெற்றியாளன் எப்போதும் நேர்மறைச் சிந்தனையாளனாகவே திகழ்கிறான்.
தோல்வியாளன் எப்போதும் எதிர்மறைச் சிந்தனையாளனாகவே திகழ்கிறான்எதிர்மறைச் சிந்தனை என்பது அச்சத்தின் காரணமாகப் பிறவியிலிருந்தே இயல்பாய் நம்மிடம் இருக்கும் அவநம்பிக்கைதான்.

நம்மைச் சுற்றி தோல்வி அலைகளான negative waves அடர்த்தியாய்ச் சூழ்ந்து கொண்டால் தொட்டது எதுவும் துலங்காது.

அதேசமயம் நேர்மறைச் சிந்தனை என்பது இயல்பாக நம்மிடையே இருப்பதுஅல்ல. ஊக்கத்துடன் தொடர்ந்து பயிற்சி செய்வதால்தான் வரக்கூடியது.

நம்பிக்கைதான் இந்தசிந்தனையின் அடிப்படை.இந்த சிந்தனை வளர வளர நம்மைச் சுற்றி வெற்றி அலைகள் ‘possitive waves'
அடர்த்தியாய்ச் சூழ்ந்து கொள்வதால் தொட்டது துலங்கும்.


பூக்கள் பூத்திருக்கும் தோட்டத்தில் ‘கும்ம்ம்...’மென்று பூவின் மணம் வரும், 

குப்பையும் சாக்கடையும் நிறைந்திருக்கும் பகுதியிலிருந்து குடலைப்புரட்டும் கெட்ட நாற்றம்தான் வரும்.

நீங்கள் பூ வாசம் வீசும் நேர்மறைச் சிந்தனையாளாரா? சாக்கடை நாற்றம் மிக்க எதிர்மறைச் சிந்தனையாளாரா? யாராக வேண்டுமானாலும் இருக்க
உங்களுக்கு பூரண சுதந்திரம் உண்டு. முடிவு செய்து செயல்படுங்கள் :))

எங்கும் வெற்றி! எதிலும் வெற்றி! எப்படி- என்கிற நூலில் இருந்து..

குடும்பத்தில் இனிமை நிலவ... (18+)

 கள்ளத் தொடர்பு என்பது கணவனுக்கு தெரியாமல் மனைவியும், மனைவிக்கு தெரியாமல் கணவனும் வேறு துணைதேடிப் போவது என நினைக்கிறேன். வாழ்க்கைதுணை அல்லாத வேறு ஒருவருடன் தாம்பத்ய உறவு வைத்துக்கொள்வது என பொதுவாக வைத்துக் கொள்வோம்.

இது ஏன் நிகழ்கிறது?

ஆணோ பெண்ணோ தாம்பத்யத்தில் நிறைவு பெறாமல் இருக்கும்போது, வேறு ஒருவர் தூண்டில் போட்டால் சிக்கி விடுகிறார்கள்., அல்லது இவர்களே வலை வீசி பிடித்து விடுகின்றனர். :))

இது தவறா சரியா என்ற ஆராய்ச்சிக்குள் நான் போகவில்லை.,

சமுதாய அமைப்பில் இது தவறு என்றாலும் அவர்களைப் பொறுத்தவரை இது சரியே!


ரி தன் வாழ்க்கைத்துணையிடம் இல்லாதது பிறரிடம் என்ன அதிகமாக இருக்கிறது? எனக்குத் தேவையானதை இங்கேயே கேட்டுப் பெற்றுக்கொள்ளவேண்டியதுதானே,


“எனக்கு என் மகிழ்ச்சிதான் முக்கியம், அதற்கு ஒரேவிதமான தாம்பத்ய நிலைகள் சலித்துப்போய்விட்டது. வித்தியாசம் வித்தியாசமாக இருக்க வேண்டும். என் துணை ஒத்துக்கொள்ளவில்லை, அதனால வேறுபக்கம் போய்விட்டேன், அங்க எனக்கு திருப்தியா இருக்கு.”

”அட அறிவு அதிகமா போனவனே, உன்னோட சொகத்த பார்த்தியே, உன்னோட துணையின் சுகத்த, திருப்திய என்னிக்காவது நினைச்சுப் பார்த்திருக்கியா, அவங்கள திருப்தின்னு மனசில இருந்து சொல்ற மாதிரி நீ செயல்பட்டு இருக்கியா? அவங்க திருப்தியா இருந்தா நிச்சயமா உன்னோட தேவைய நிறைவு செய்வாங்க, எப்படி வேணுமோ அப்படி:))

உன்னோட வேல முடிஞ்ச உடனே ஒதுங்கிட்டீன்னா அவங்களுக்கு ஏமாற்றம்தான், ரிசல்ட் என்ன,?

உடல்வேகம் தாங்க கூடிய அளவில இருந்தா உங்கோட மட்டும்தான் தாம்பத்யம், உடல்வேகம் எல்லைமீறி அளவுக்குஅதிகமா இருந்தா வேலிதாண்டிருவாங்க..

உடல்தாங்கினாலும் மனம்நிச்சயம் தாங்காது, அது எப்படி வெளியாகும் தெரியுமா, எரிச்சல், சண்டை, கெளரவம் பார்க்கிறது அப்படி வெளிப்படும். அதுக்கும், தாம்பத்யத்திற்கும் சம்பந்தமில்லை அப்படின்னு நினைக்காத,

தாம்பத்யத்துல இரண்டுபேருக்கும் முழுநிறைவு வந்துச்சுன்னா கண்டிப்பா இருவருக்குள்ளும் ஒரு அந்நியோன்யம் வந்து விடும், வேறு எந்த
பிரச்சினையா இருந்தாலும் உக்காந்து பேச மனசு வரும், தீர்வு கிடைக்கும்.வேறு எதுவும் உள்ள வந்து சண்டைய உருவாக்க முடியாது.

அது இல்லைன்னா சாதரணபிரச்சினை கூட சண்டைக்குரியதா மாறிவிடும். மூணாவது மனுசன் உள்ள வந்தால் அதோகதிதான்..


இனிமே உங்க தேவையத் தீர்த்துக்குங்க, கூடவே துணையிடம் நிறைவா இருந்ததா அப்படீன்னு கேட்டுக்குங்க, அப்பதான் அடுத்தமுறை சரியாச்’செய்ய’முடியும்.

நான் என் துணையின் உடலும்,மனமும் நிறைவாயிற்றா என சூழ்நிலையைப் பொறுத்து அடுத்தநாள் காலையிலாவது கண்டிப்பாக கேட்கிறேன்.
இந்த பழக்கம் என் துணைக்கும் ஒட்டிக்கொண்டு எனக்கு போதுமா என்கிறாள்.

அன்பு மட்டுமல்ல, காமமும் பகிரப்பகிர இருவருக்கும் மகிழ்ச்சி இரட்டிப்பாகும். மனம் நிறைவடைந்தால் அங்கு ஏது பிரச்சினை,!!

டிஸ்கி:இது ஒரு சதவீதமேனும் உங்களுக்கு  உடன்பாடாக இருக்கும் என நம்புகிறேன்.  இந்த கருத்து நண்பர்களிடம் வரும் என எதிர்பார்த்து இந்த இடுகையை வெளியிட்டேன். நான் வெளியிட்ட விதம், நடை சரியில்லை போல இருக்கிறது.  வாழ்த்துமழையில் நனைந்து விட்டேன்:))

பிழைக்கத் தெரியாத பிரபாகரன்.

சென்னை : "விடுதலைப்புலிகள் அவசரப்பட்டு எடுத்த அரசியல் முடிவின்
விளைவுகளை எண்ணிப் பார்க்கும் போது, நாம் மவுனமாக அழுவது யார் காதில் விழப் போகிறது;

விடுதலைப் புலிகள் போர்த் தந்திரத்தை எதிர்காலக் கணிப்போடு கடைப்பிடிக்காததுதான் காரணம் என்பதை புரிந்து கொள்ள முடியும்.

நம் மவுன வலி தான் யாருக்குத் தெரியப் போகிறது?' என,
முதல்வர் கருணாநிதி தெரிவித்துள்ளார்.

தினமலர்


நிதானம், பொறுமை என்ற வார்த்தைகளின் பொருள் தெரியாதவராக இருந்திருக்கிறார் பிரபாகரன்.

காலம், விஞ்ஞானமும் எவ்வளவு வளர்ச்சி அடைந்திருந்தாலும், எவ்வளவு அதிமுக்கிய முல்லைப்பெரியார், ஒகேனக்கல் கூட்டுக்குடிநீர்த்திட்டம், ஈழத்தமிழர் மீதான தாக்குதலின்போதும் பொறுமையாகவும், அவசரமின்றியும் மத்திய அரசுக்கு கடிதம் எழுதி கலஞைர் காத்திருக்கவில்லையா?

தமிழ் ஈழம் என்பது தமிழக மத்திய மந்திரி பதவியைவிட உயர்ந்ததா, நேரில்  சென்று தங்கி வாங்கிவர..?

கலைஞரின் பேச்சைக் கேட்டிருந்தால் இன்று பிரபாகரன் உயிரோடும், சுகமாக இருந்திருக்கலாம், பிழைக்கத் தெரியாத பிரபாகரன்.

Tuesday, November 17, 2009

பிதற்றல்கள்.. செக்ஸ் குறித்தான... (17-11-2009)

கொஞ்ச நாளா மனசுக்குள்ள ஓடிக்கிட்டே இருந்தது.. சரி இன்னும் வலுப்பெறட்டும் என விட்டுவிட்டேன்.


மனதில் தோன்றியதை உங்களிடம் பகிர்ந்து கொள்கிறேன்


கலவிக்கு சற்றுமுன்...
கலவியின்போது...
கலவிக்குப் பின்....

அதன் பின் அடுத்த நாள்...

உங்கள் மனநிலை என்ன?

உங்கள் துணையோடு(ஆண், பெண் இருபாலருக்கும் மன உறவு எப்படி இருந்தது.?

பின்னூட்ட நிபந்தனைகள்

1)இதில் அங்குபடித்தது, இங்கு கேட்டது இது எல்லாம்  எழுத வேண்டாம்

2)முழுக்க முழுக்க உங்களது சொந்த மனம் குறித்தான அனுபவங்களை மட்டும் எழுதுங்கள் (உடல் அனுபவத்தை நான் கேட்கவே இல்லைங்க சாமிகளா)

3)திருமணமானவ்ர்கள், திருமணம் ஆகாதவர்கள், குறுக்குத்தொடர்பு உள்ளவர்கள் எல்லோருமே பின்னூட்டமிடலாம்.

4)கூச்சமா இருக்கா.

கவலையே படவேண்டாம், முழுக்க முழுக்க அனானி என்ற பெயரிலேயே பின்னூட்டமிடுங்கள், அந்த வசதி இந்த இடுகைக்கு  மட்டும் ஏற்படுத்தப் பட்டிருக்கிறது.

5)நான் இடையில் கருத்து தெரிவிக்கமாட்டேன்.

6)ஆபாசம் தொனிக்காமல் தகவல் தெரிவிக்கும் இயல்பான தொனியில் பின்னூட்டங்கள் இருத்தல் வேண்டும்,

7)வக்கிரமான பின்னூட்டங்கள் வந்தால் நீக்கப்படும்.

இது கலவி குறித்த விழிப்புணர்வுக்கான இடுகை

ஓட்டுப்போடுங்கள், கூடவே உங்கள் நண்பர்களையும் கலந்து கொள்ளச் செய்யுங்கள்


கலவி  என்றால் என்ன என தெரியாதவர்கள் வெளியேறவும் , நன்றி

காத்திருக்கிறேன்......உங்களுக்காக

***************************************************

டிஸ்கி: இந்த இடுகையின் நோக்கம் கலவி நம் மனதில் என்னவிதமான மாற்றங்களை ஏற்படுத்துகிறது.? கலவியில் மனம் நிறைவு பெறுவது எப்படி?,  இதில் துணை தவிர்த்து நம் பங்கு என்ன? இது சமுதாயத்தில் என்ன தாக்கத்தை ஏற்படுத்தும் என்கிற சிந்தனையைத் தூண்டுவதே
****************************************************

Saturday, November 14, 2009

வலையுலகில் தேவையான பண்பாடு

வலையுலகம் பல்வேறு துறையைச் சார்ந்த அன்பர்களின் திறன்களை வெளிக்கொண்டுவரும் இடமாக உள்ளது

எந்த வித செலவும் இல்லாமல் எது குறித்தும் உங்கள் அறிவை வளர்த்துக்கொள்ளும் இடமாகவும் இருக்கிறது.

ஆனால் சிலசமயம் நாம் வீதிகளில் நேருக்குநேர் சண்டை கட்டிக்கொள்வதைப்போல் இங்கும் சிலர் கருத்து மோதல்களில் கடுமையாக ஈடுபடுகின்றனர். இவர்களின் நோக்கம் பலரின் பார்வையில் பட்டு அதன்மூலம் பிரபலம் ஆவது என்றே தோன்றுகிறது.

நேரில் சந்தித்து அறியாத பல பதிவர்களும் மானசீகமாக நமக்கு நண்பர்களே, இங்கு நட்பையே முக்கியப்படுத்த வேண்டும்,

ஒருவரின் கருத்தை மறுத்து எதிர் கருத்து கூறும்போது, அவரது மனம் வருந்தாமல் அவரும் ஆர்வத்தோடு நம் கேள்விகளுக்கு பதில் கூறும் வண்ணம் ஆரோக்கியமான வகையில் வார்த்தைகளை பயன்படுத்தும்போது இருவருக்கும் மனமகிழ்ச்சிதான்.

மாறாக வலைத்தளத்திற்கு வந்து தரமற்ற, முகம் சுழிக்க வைக்கும் வார்த்தைகள், என்னோடு மோதிப்பார் என்ற வசனங்களை வீசி நீங்களும் மன உளைச்சல் அடைந்து, நம் நண்பர்களுக்கும் மன உளைச்சலை ஏன் உண்டாக்க வேண்டும்.?

தமிழனின் பல்வேறு சிறப்புக்குணங்களில் இதுவும் ஒன்று:)

வல்லவனுக்கு வல்லவன் வையகத்துள் உண்டு.


இது மனதின் ஆராவாரம், அடக்கமின்மை என்பதை உணருங்கள், எல்லோரும் நல்லவரே, மனதிடம் சிக்கி நட்பை இழ்க்காதீர்கள் என்பதே என் அன்பு வேண்டுகோள்!

நீங்கள் மிகுந்த உணர்ச்சிகரமானவராகவும் சமுதாய மாற்றத்தை விரும்புகிறவராக இருந்தால் நேரடியாக களத்தில் இறங்கி செயல்படுங்கள். பலராலும் கவனிக்கப் படுவீர்கள்.

இதோ கீழே கொடுத்த சுட்டிகளைப் பாருங்கள்.

எதிர்வினையாற்றிய நண்பர் சின்னஞ்சிறுகதைகள் பேசி அவர்களின் இடுகையில் ஏதேனும் தாக்குதல் இருக்கிறதா?

பண்போடு மறுத்திருக்கிறார். அவரை நான் பாரட்டுகிறேன். இப்பண்பு இப்பதிவுலகம் முழுமையும் பரவட்டும்


சிவத்தமிழோன் என்பவர் 'திருக்குறள் ஒரு சைவசமய நூலே' என்பதாக எழுதிய பதிவிற்கான எதிர்வினைவாழ்த்துக்கள் நண்பர்களே   

Tuesday, November 10, 2009

மனிதன் ஏன் மாமிசம் சாப்பிடக் கூடாது?

மனிதன் அசைவம் சாப்பிடலாமா கூடாதா இது இன்னும் தீர்வு இல்லாத கேள்வி, இது தவறு என நான் நினைக்கிறேன்.

ஒரே ஒரு கருத்துதான் நான் சொல்ல விரும்புவது

மனிதனுக்கும் மிருகத்திற்கும் உள்ள வித்தியாசம் ஆறாவது அறிவு

அதென்ன ஆறாவது அறிவு?

தோல், கண், காது, மூக்கு, வாய் என்ற புலன்கள் மூலமான ஐந்து உணர்வு, அறிவு பிற உயிரினங்களுக்கும், மனிதனுக்கும் பொது,

ஆறாவது அறிவு, என்பது சிந்தனை, மனம்

சிந்தனை மலர்ந்து அதன் விளைவு

1)பிற உயிர்களின் இன்பதுன்ப உணர்வுகளை உணரும் ஆற்றல், (எனக்கு வலிப்பதுபோல் அவனுக்கும் வலிக்கும்)

2)உடலின் கருவிகளுக்கு சூழ்நிலைக்கேற்ப உதவ உபகருவிகள் செய்து பயன்படுத்துதல், (காலுக்கு உதவியாக வாகனங்கள்,)

3)செயற்கையாக இயற்கையானவற்றை அருவி,ஏரி,தீவு போன்று உருவாக்கும் ஆற்றல்

4)குகைகளைப்போல் அல்லாது விருப்பப்படி வாழும்வகையில் வீடுகளை உருவாக்கி அதில் வாழும் ஆற்றல்

5)உணவுக்கு தேவையானவற்றை உணவுதானிய, தாவர வகைகளை இயற்கை நமக்கு வழங்குவதை விட பலமடங்கு விவசாயம் செய்து பெருக்கும்
ஆற்றல்.

இத்தனையும் நமக்குஇருக்கிறது ஆறாவது அறிவாக

புலி வீடும் கட்டாது, விவசாயம் பண்ணாது, புலி உயிரினம் தோன்றிய காலம்தொட்டு பிற உயிரினங்களை கொன்றுதான் சாப்பிடும்,
நமக்கு வலிப்பதுபோல் அதற்கும் வலிக்கும் என சிந்திக்க தெரியாது. அதனால் அது செய்வது சரியே

ஒரு நெல்லை பல நெல்லாக்கும் வித்தை தெரிந்த நாமும் புலி செய்வதையே செய்தால் மனிதன் அல்ல, ........@#$$$%^& .தெய்வம் என்றுதான் சொல்ல வேண்டும்

துருவப் பிரதேசத்தில், பாலைவனத்தில் இருப்பவன் என்ன செய்ய? என்றால் அவனுக்கு முடிந்தால் நீங்கள் உணவுப்பொருள்களை பகிர்ந்து கொள்ளுங்கள்
அல்லது அவன் சாப்பிட்டுவிட்டு போகிறான், உணவுப்பயிர்கள் விளையும் இடத்தில் இருக்கும் நீங்கள் ஊர்வன, பறப்பன இவற்றில் கப்பல், விமானம் மீதி
அனைத்தையும் ஏன் சாப்பிட வேண்டும்?

குர்-ஆன் தந்த நபிப் பெருமான் குர்-ஆன் தரும்முன் மாமிசம் உண்டாலும், அறிவு ஞானம் பெற்று குர்-ஆன் ஐ தந்தபின் அசைவம் முற்றிலுமாக துறந்து வாழ்ந்தார்.

இந்தத் தகவலை முஸ்லீம் நண்பர்கள் உறுதிப் படுத்தினால் நல்லது. மகான்களின் வாழ்க்கையைப் பின்பற்றினாலே போதும்.

அவர் விதிவிலக்காக சொன்னது நம் செளகரியத்தை முன்னிட்டு அத்தியாவசியமாகி விட்டது.

மனிதன் மனதிற்கும், நாக்குக்கும் அடிமை, இதுதான் உண்மைகாரணமே தவிர பிற உயிரை மதிக்க வேண்டும் என நினைத்தாலே நமது உணவுப் பழக்க வழக்கம் மாறிவிடும். மதங்களும், சாதியும் இந்த விசயத்தில் சப்பைக்கட்டுகளே :))

சந்திப்போம், சிந்திப்போம்

Monday, November 9, 2009

பிதற்றல்கள் - 1 (09/11/2009)

முதலில் இந்த தலைப்பை தேர்ந்தெடுத்த காரணம்...

மனதின் ஓட்டங்களை கூர்ந்து கவனிக்கும் போது எப்படி வேண்டுமானாலும் அது மாறுகிறது, நேற்று எடுத்த முடிவை இன்று மாற்றிக்கொள்கிறது, பல்வேறு விசயங்களில் சமரசம் செய்து கொள்கிறது, நடிக்கிறது. கெளரவம் பார்க்கிறது, மானம், ரோசம், வெட்கம் பார்க்கிறது.

முக்கியமாக நான் எப்படி வாழவேண்டும் என நினைக்கிறேனோ அதற்கு முரணாகவே செயல்பட்டுக் கொண்டு இருக்கிறது, அறிவு சில சமயங்களில் விழித்து கொண்டு மனதை அடக்கினாலும் தன் வேலையைக் காண்பிக்கிறது,

என் மனதை ஒழுங்குபடுத்தவேண்டும், அதற்கு அடக்கினால் அடங்காது, அறிய நினைத்தால் அடங்கும். அப்படி அறிய வேண்டுமானால் மனதில் தோன்றுவதை பதிவு செய்யவேண்டும். அப்போதுதான் நான் இன்னும் பயணிக்க வேண்டிய தூரம் தெரியும். என் மன அழுக்குகள் ஏதேனும் இருந்தால் அவற்றையும் பதிவு செய்யவே விரும்புகிறேன்.

இது ஒரு சோதனை முயற்சி, உங்களுக்கும் இது ’சோதனை’ தான் :))

மிக கண்டிப்பாக, நட்போடு பழகுவதில் இந்த தலைப்பில் ஏதேனும் கருத்துகள் வந்தால் இவரா இப்படி என்று நினைத்து விடாதீர்கள்.

பிரித்து பார்க்க கற்றுக்கொள்ளுங்கள், உள்ளொன்று புறமொன்று இருக்கக்கூடாது என நினைப்பதால் இதையும் குறிப்பிடுகிறேன்.

இன்று..


காலையில் அருகில் உள்ள உழவர் சந்தைக்கு வீட்டுக்காரி(மனைவி)யுடன் சென்றேன், அங்கு ஒரு பெரியவர் வயது எழுபதுக்கு மேல் இருக்கலாம், கையில் சிறு பாலீதீன் பையுடன் மெதுவாக கீழ் நோக்கி பார்த்துக் கொண்டே வந்தார், பையில் சில வெங்காயங்கள், வெண்டைக்காய், கத்திரிக்காய் முதலியன மொத்தமாகவே கால்கிலோ கூட தேறாது.

மக்கள் நடமாட்டம் சற்று குறைவாக இருக்கவே, சந்தையின் நடைபாதை இன்னும் மற்ற இடங்களிலும் கீழே சிதறிக் கிடக்கும் காய்கறிகளில் தேர்ந்தெடுத்து சிலவற்றைப் பொறுக்கி பையில் போட்டுக்கொண்டே வந்தார்,

மனம் ஓட ஆரம்பித்தது,

அடடே எதுக்காக பொறுக்குகிறார்?

ஒருவேளை தனது உணவுக்காக பொறுக்குகிறாரா? பணமில்லா வறுமை என்ன பாடுபட வைக்கிறது?

ஆகா.. பரவாயில்லை பிச்சை எடுக்காமல் சுகாதாரம் இல்லாவிட்டாலும் உழைப்பின் வழி  வாழ்கிறாரே!!

ஒருவேளை பொறுக்கி சின்ன கடையாப் பார்த்து விற்றுவிடுவாரோ? பார்த்தா அப்படி தெரியவில்லையே?

ஒருவேளை அப்படி கடைக்கு விற்றால் அதை தின்கிறவன் கதி?

இதுக்கு நாம எதாவது பண்ணலாமா?


வேணுமின்னா எண்ணத்தை உள்ள போட்டுவச்சுக்கோ., நீ முதல்ல ஒழுங்கா வீட்டு வேலையச் செய்யி, அப்புறம் பார்க்கலாம்!

Thursday, November 5, 2009

மருத்துவ முறைகள் மூன்று

ஒரு குடும்பத்தை மருவி வாழும் மகளுக்கு மருமகள் என்று பெயர், அதுபோல் நம் உடலில் ஓடிக்கொண்டிருக்கும் உயிர் ஆற்றலோடு மருவி, உந்தும் ஆற்றலுக்கு மருந்து என்று பெயர். மரு+உந்து வழியில் நோய் தீர்க்கும் கலைக்கு மருத்துவம் என்றே பெயர் வந்தது.
மூன்றுவகை மருத்துவம்

1)இரத்தத்தையும் சதைகளையும் இரசாயன முறையில் குறைபாட்டை நீக்கி, சீரமைக்கும் முறை ஒன்று. இம்முறையில் ஆங்கில மருத்துவம், ஆயுர்வேதம்,யுனானி,உணவு மாற்றம், உடற்பயிற்சி இவைகள் அடங்கும்.

2)உயிர்துகள்களைப் பெருக்கி அதன்மூலம் ஜீவகாந்த ஆற்றலுக்கு திணிவு ஏற்படுத்தி, அதன் மூலம் நோயை போக்கும் முறை இரண்டாவது. இதில் இதில் இரசம்,கந்தகம்,பாஷாண வகைகளைக் கொண்டு செய்யப்படும். சித்த மருத்துவமும் இதுபோன்ற முறைகளும் இதில் அடங்கும்.

3)சீவகாந்தக்களத்தின் தன்மைகளை மாற்றும் காந்த அலைகளை ஊட்டி, அதன் மூலம் நோய்களைத் தீர்க்கும் முறை ஒன்று. ஓமியோபதி, உளப்பயிற்சி, பிரார்த்தனை இவையும் இவை ஒத்த பிற முறைகளும் இதில் அடங்கும்.

மேற்கண்ட மூன்று வகைகளுமே இன்றுவரை மனித இனத்தில் பழக்கத்தில் இருந்து வரும் முறைகள் ஆகும். அதே சமயம் ஒவ்வொரு மருத்துவத்திலும், மற்ற மருத்துவ வகைகளின் பயன் மறைமுகமாக ஓரளவிற்கேனும் செயல்படும்.

--வேதாத்திரி மகரிஷி

Monday, November 2, 2009

ஹைய்யா... நானும் வாத்தியாராயிட்டேன்....!!

அன்பு நண்பர்களே

அன்பின் சீனா அவர்களின் ஆதரவினால் வலைச்சரம் வலைப்பதிவிற்கு இந்த வார பொறுப்பு ஆசிரியராக பொறுப்பு ஏற்றிருக்கிறேன்.

வாரம் ஒரு பதிவு என்பது போய், இந்த வாரம் முழுவதும் உத்தரவாதமாக :)
தினம் ஒரு இடுகை பதிவு செய்ய திட்டமிட்டு இருக்கிறேன்

வழக்கமான ஆதரவை வலைச்சரத்தில் நல்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்

Friday, October 23, 2009

விரல் நகம் வெட்டிய போது..

இன்று மாலை சின்ன மகளுக்கு விரல் நகங்களை வெட்டி சீர்திருத்தும் பணி ., தங்களின் மேலே ஏறி ஆட்டம் போடும்போது கீறி விடுகிறாள் என பெரிய மகளும் வீட்டுக்காரி(மனைவி)யும் என்னிடம் புகார் தெரிவிக்க, சரி என அந்த வேலையில் இறங்கிவிட்டேன்.

ஒருவழியாக ஆட்டம் போட்ட சின்னவளை சமாதானப்படுத்தி கைநகங்களை வெட்டி ஒழுங்குபடுத்திவிட்டேன், கால் நகங்களை வெட்ட ஆரம்பித்தேன், வீட்டுக்காரி எனக்குப் பின்னால் நின்று நான் நெகம் வெட்டும் அளகை(*&$%#@) பார்த்து ரசித்துக்கொண்டு இருந்தாள்.

சின்னவளின் கால் விரல் அமைப்பு என் காலைப்போலவே இருக்கும், எந்த மாற்றமும் இருக்காது, அளவு மட்டும்தான் சிறியதாக இருக்கும்.

”தேனுங்கோ.. யாரவது வந்து இவளை உங்க மக இல்லைன்னா இந்த ஜீனு டெசுடு, இதென்ன....டிஎனேஎ (DNA) டெசுடு எதுவும் எடுக்க வேண்டாம், செலவே பன்ன வாண்டாம்..காலு பெருவிரல காமிச்சா போதும், ஒத்துக்கிட்டு ஓடியே போயிருவாங்கோ.. என்றாள்

மனைவி பொது அறிவை வெளிப்படுத்திய திறன் கண்டு பிரமித்து நின்றேன்

Thursday, October 22, 2009

காதலிப்பதே என் தொழில்

திருநல்வேலி தனித்தமிழ் இலக்கியக் கழகத்தில் நிகழ்ந்த பதின்கவனக நிகழ்ச்சியின்போது, வெண்பாவுக்கு ஈற்றடி தந்த பேராசிரியர் பா.வளவன் அரசு அவர்கள் நகைச்சுவையாகவும் சிக்கலாகவும் இருக்குமாறு ஓர் ஈற்றடியைக் கொடுத்தார்.

”காதலிப்பதே என் தொழில்’ என்று வெண்பா முடிய வேண்டும். ஆனால் பாடல் அகத்துறைப்பாடலாக அதாவது ஆண்-பெண் காதல் பற்றிப் பாடும் பாடலாக இருக்கக் கூடாது” என்று நிபந்தனையுடன் பாடலைக் கேட்டார்.

அதற்கு கவனகர் திரு.இராமையாபிள்ளை சற்றும் தடுமாறாமல் புன்னகையோடு பாடிய வெண்பா இதுதான்

‘சங்கத் தமிழைத் தடையின்றிக் கற்றறிந்தே
மங்காப் புகழுடனே வாழ்ந்திங்கே-இங்கிதமாய்
ஓதல் உணர்தல் உடைய புலவர்களைக்
காதலிப்ப தேஎன் தொழில்

பாராட்டுகள் குவிந்தன. தந்தையிடம் இராம.கனகசுப்புரத்தினம் வியப்புடன் கேட்கிறார். “எப்படிச் சிக்கலாகக் கேள்வி கேட்டாலும் உடனே உரிய குறளை எடுத்து நீட்டுகிறீர்களே, எப்படி அய்யா முடிகிறது?”

”அப்பா, திருக்குறளை வெறுமனே மனப்பாடம் செய்து வைத்திருக்கவில்லை. என் உயிருடன் உணர்வுடன் கலந்து இருக்கிறது. அது மட்டுமல்ல, திருக்குறளுக்குள் இன்னும் திருவள்ளுவர் வாழ்ந்து கொண்டிருக்கிறார். அவர் மீது அன்பு வைத்து, நம் உயிருடனும் உணர்வுடனும் அவரோடு கலந்து விட்டால் அவையோர் எந்த கேள்வி கேட்டாலும், அவரே பதிலைக் கூறிவிடுவார். நாம் வெறும் கருவியாய் இருந்து வேடிக்கை பார்த்தால் போதும். என்றார்.

Monday, October 12, 2009

ருசியான சிக்கன் வேண்டுமா ?

நோயால் செத்த கோழிகளை விற்கும் கும்பல் : உடுமலை அருகே சிக்கியது

உடுமலை: பண்ணைகளில் நோய்த் தாக்குதலால் இறந்த கோழிகளை சேகரித்து அவற்றை ஓட்டல்களுக்கு விற்கும் கும்பலைச் சேர்ந்தவரை உடுமலை பகுதியில் விவசாயிகள் வளைத்து பிடித்தனர்

.பண்ணைகளில் நோய்த் தாக்குதல் மற்றும் இதர காரணங்களால் இறக்கும் கோழிகளை ஆள் நடமாட் டம் இல்லாத பகுதிகளில் வீசுகின்றனர். அவற்றை சேகரித்து, ஓட் டல்களில் குறைந்த விலைக்கு விற்பதை ஒரு கும்பல் தொழிலாக செய்கிறது.

பெதப்பம்பட்டி அருகிலுள்ள மாலக்கோவில் பிரிவில் ஆட்கள் நடமாட்டம் இல்லாத பகுதியில் நேற்று அதிகாலை மர்மநபர், இறந்த கோழிகளை பதப்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளார்.

அந்த நபரின் நடவடிக்கையில் சந்தேகமடைந்த விவசாயிகள் சென்று விசாரித்துள்ளனர். இறந்து பல நாட்களான 200க்கு மேற்பட்ட கோழிகள் சேகரித்து வைக்கப் பட்டிருந்தது தெரியவந்தது. அந்த நபரை விவசாயிகள் நன்கு "கவனித்தனர்'. இதில், காயமடைந்த நபர், தனது ஊர் பல்லடம் அருகேயுள்ள கிருஷ்ணாபுரம் என்றும், பெயர் பாண்டியன் என்றும் தெரிவித்துள்ளார்.அவர் விவசாயிகளிடம் கூறியதாவது: உடுமலை, திருப்பூர், பொள்ளாச்சி, பல்லடம் ஆகிய பகுதிகளில் உள்ள ஓட்டல்களுக்கு இறந்த கோழிகளை சேகரித்து குறைந்த விலைக்கு விற்கிறோம். சேகரிக்கும் இறந்த கோழிகளை தூய்மைப்படுத்தி "பேக்' செய்து ஓட்டல்களுக்கு விற்பனை செய்வோம்.வெளிமார்க்கெட்டில் ஒரு கிலோ 100 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. இறந்த கோழி இறைச்சி கிலோ 20 ரூபாய்க்கு ஓட்டல்களுக்கு "டோர் டெலிவரி' செய்ததால் எங்களுக்கு அதிகளவு வாடிக்கையாளர்கள் கிடைத்தனர்.இவ்வாறு, பாண்டியன் தெரிவித்துள்ளார். பாண்டியன் தெரிவித்த தகவலால் அதிர்ச்சியடைந்த விவசாயிகள், குடிமங்கலம் போலீசுக்கும், சுகாதார துறை அதிகாரிகளுக்கும் தகவல் அளித்தனர். பாண்டியனை போலீசார் கைது செய்தனர்.


பலத்த டிமாண்ட்: பாண்டியன் சிக்கியவுடன் விவசாயிகள் அவரிடமிருந்த மொபைல்போனை கைப்பற்றினர். அரை மணி நேரத்திற்குள் திருப்பூர், பொள்ளாச்சி உட்பட பல பகுதிகளை சேர்ந்த ஓட்டல்களிலிருந்து, "சிக்கன் என்ன ஆயிற்று?' என தொடர்ச்சியாக போன் அழைப்புகள் வந்தன. இந்த அழைப்புகளையும், இறந்த கோழி இறைச்சிகளை பயன்படுத்தும் சம்பந்தப்பட்ட ஓட்டல் பெயர்களையும் விவசாயிகள் குறித்துக் கொண்டனர்.

நன்றி; தினமலர் 12.10.2009

Saturday, October 10, 2009

உருவ வழிபாடு ஏன்?

உருவமைப்பு, குணம், அறிவின் உயர்வு, உடல்வலிவு, சுகம், செல்வம், இவ்வேழு சம்பத்துக்களும் சரியாக இருந்தால்தான் ஒரு மனிதன் வாழ்க்கையில் தங்கு தடையின்றி எல்லாவற்றையும் சரிப்படுத்திக் கொள்ளமுடியும்.

இது கருவமைப்பின் மூலமாகவோ அல்லது சமுதாயத்தில் உள்ள ஏற்றத் தாழ்வின் காரணமாகவோ ஒவ்வொருவருக்கும் ஒன்றில் சிறப்பு இருக்கும். ஒவ்வொன்றில் குறைவு இருக்கும்.

குறைவாக உள்ளதை சரி செய்து, சமப்படுத்திக் கொள்வதற்கு அவரவர்கள் அறிவினாலேயே மனதில் சங்கல்பத்தின் மூலம் திடப்படுத்தி, பல தடவை அதையே எண்ணி எண்ணி குறைபாட்டைக் களைந்து நிறைவு செய்து வருவதற்கு, அறிவிற்குத் துணை செய்வதற்கு பூஜாவிதிகள் என்பதை முற்காலத்தில் ஏற்படுத்தினார்கள்.

பூஜாவிதி என்பது சடங்குகள் என்றாலும் எந்தக் குறைபாடு மனிதனிடம் இருக்கிறதோ, அந்தக் குறைபாட்டை அவனே நீக்கிக் கொள்வதற்காக மனஎழுச்சி, மனோதிடம், கற்பனையாக இருந்தாலும், பலதடவை செய்து செய்து இம்மாதிரி எனக்கு வேண்டும் என்று எண்ணும்போது முனைமனமானது, அடிமனதோடு தொடர்பு கொள்ளும்., அடிமனமானது பிரபஞ்சம் முழுவதும் உள்ள ஆற்றல் களத்தோடு தொடர்பு கொண்டு, எங்கேயிருந்தாலும் இவனுக்கு வேண்டியது தானாக வந்து சேரும் அளவுக்கு உண்டாக்கும்.

இயற்கைச் சட்டம் என்ன என்றால் fraction demands totality supplies

இயற்கையிலிருந்து துண்டுபட்டுள்ளதே ஜீவன், மனிதன்


முழுமுதற்பொழுதாக உள்ள இறைநிலை, அறிவு என்ற நிலையில் பிரபஞ்சம் முழுவதும் கலந்து, உயிருள்ள, உயிரற்ற எல்லாவற்றிலும் நிரம்பி இயங்கி கொண்டிருக்கிறது.

அதனால் எங்கே யாருக்கு என்ன தேவைப்பட்டாலும், விரும்பினாலும் அது கிடைக்கத்தான் வேண்டும்


ஆனால் விரும்புவர்கள் மனதை அதற்குரிய முறையில் அழுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும், தகுதியாகவும் வைத்துக்கொள்ள வேண்டும்.

---வேதாத்திரி மகரிஷி,

தொடரும்டிஸ்கி; வேதாத்திரி மகரிஷி அவர்களின் இந்த கட்டுரை எளிமையாக அனைவருக்கும் புரியும்வண்ணம் அமைந்துள்ளதாக நான் எண்ணுவதால் இன்னும் சில பகுதிகள் தொடரும்.

Tuesday, October 6, 2009

பணமும் பெரியாரும்... பாரதியும்....

பணம் நமது வாழ்விற்கு இன்றியமையாதது ஆகிவிட்டது.,

திறமைகள் இருந்தும், தகுந்த தொழிலோ, வேலையோ செய்தும் போதுமான பணம் வருவதில்லை. ஏன்?

பணம் வரும் வழிதான் என்ன? இதில் நம் பங்கு என்ன?

பணத்தின் மீது பற்றும் அக்கறையும் வைத்துக் கேட்டால்தான் பணம் வரும்.

தந்தை பெரியார் ஒரு மாபெரும் அறிஞர். அவர் இந்த பணவிசயத்தில் மிக சரியாகவும், தெளிவாகவும் சிந்தித்தார். பொதுக்கூட்டம் முடிந்தவுடன் அவர் முதலில் கேட்கும் கேள்வி. “ புத்தகம் எத்தனை ரூபாய்க்கு விற்றது?” என்பதுதான்.

மக்கள் அவரிடம் நினைவுக்குறிப்பில் கையொப்பம் கேட்டால்கூட. ‘இருபத்தி ஐந்துகாசு’ இன்றைய கணக்குப்படி இருபத்தி ஐந்து ரூபாய் என்று வைத்துக்கொள்ளலாம், வாங்கிக்கொண்டுதான் கையொப்பம் இடுவார்.

பணத்தின்மீதும் ஒருகண் வைத்திருந்தார். இன்று அவர் தேடி சேர்த்து வைத்த சொத்து நீங்கள் அறிந்ததுதான்.

நேர்வழியில் பணம் சம்பாதிக்க தொழில் செய்யும்போது பணத்தின் மீதே கண்ணாக இருக்க வேண்டும்,


பாரதியார் பணம் சேர்ப்பது குறித்து கணப்பொழுதேனும் சிந்தித்திருக்கவில்லை. அவரது துணைவியார் பக்கத்துவீட்டில் கடனாக வாங்கி வைத்திருந்த அரிசியையே, “காக்கை குருவி எங்கள் சாதி..” என்று பாடியபடி முற்றத்தில் சிதறவிட்டுக் குருவிகள் தின்பதை வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தவர். ஆனால் எண்ணத்தை முறைப்படி வானத்தில் அனுப்பாமல் வறுமையில் உழன்றார். இதில் தவறேதும் இல்லை என்றாலும் பணம் சம்பாதிக்கும் நுட்பத்தை அவர் கைக்கொள்ளவில்லை என்றே தோன்றுகிறது.

பணத்தை உணர்ந்து மதிப்போம், வாழ்வில் ஏற்றம் பெறுவோம்.

Sunday, October 4, 2009

முருகக் கடவுள் தலைமைச் சித்தர்


ஏறத்தாழ 9000 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த மகான் ஆகக் கருதப்படுபவர் முருகக் கடவுள்.

தமிழ் மொழியை வடிவமைத்ததால் தமிழ்க் கடவுள் என்ற சிறப்பு உண்டு.

வயதாகும் நிலையை அதாவது Aging Process -ஐ நிறுத்தி, என்றும் குமரனாக, அழகனாக நீண்டகாலம் ஏறத்தாழ 4000 ஆண்டுகள் பூத உடலுடன் வாழ்ந்து காட்டிய மகான் என்ற பெருமையும் இவருக்கு உண்டு.

’சரம்’ என்றால் மூச்சு. ’சரத்தை வயப்படுத்தினால் காலத்தை வெல்லலாம்; காலனையும் வெல்லலாம்; கடவுளையும் காணலாம்’ என்பது இவரது தத்துவம். சரத்தை வணப்படுத்திக் காட்டியதால் ‘சரவணன்’ என்ற சிறப்புப் பெயரும் உண்டு.

மனிதன் இறுதியில் சவமாகக் கூடாது; சிவமாக வேண்டும். கற்பூரம் கரைவது போல் தன்னை வேறொரு பரிமாணத்திற்கு மாற்றிக்கொண்டு பிரபஞ்சம் எங்கும் வியாபிக்க வேண்டும் என்பது நிறைவான செய்தி. அதை அவரே நிரூபித்துக் காட்டியதால், ‘பெம்மான் முருகன் பிறவான்;இறவான்...’ என்று அருணகிரி நாதரால் பாடப் பெற்றார்.

அகத்தியர், போகர், அவ்வையார், அருணகிரிநாதர், நக்கீரர், வள்ளலார உள்ளிட்ட பல மகான்கள் இவரிடம் நிறைவுத் தீட்சை பெற்று மரணமிலாப் பெருவாழ்வு எய்திய மகான்கள். உலகில் முருகனை அறியாத தமிழர்கள், முருகனை வணங்காத தமிழர்கள் எந்த நாட்டிலும் இல்லை.

முருகக் கடவுள் இல்லாத ஒரு நபரல்ல, மனிதனாக இருந்தவர் மகானாக மாறி இருக்கிறார்.

Friday, September 25, 2009

நாய் வளர்த்ததும், கண்கள் பனித்ததும்

நாய், பூனை என செல்லப்பிராணிகள் வளர்ப்பதில் ஆர்வம் அதிகம், ரொம்ப உயர்ந்தரகம் என்கிற அளவில் நினைத்து விடாதீர்கள்,

சாதரண கிராமத்தில் கிடைக்கக்கூடிய பழகிய நாய், பூனை அவற்றின் குட்டிகளை பார்க்க பார்க்க, வளர்த்த வேண்டும் என்ற ஆவல் ஏற்பட்டு செயலில் இறங்கிவிடுவேன்

இப்போது அல்ல, சின்ன வயதில், 12 அல்லது 13 வயது இருக்கும்,

நாய்க்குட்டி வளர்த்தும்போது அதைப் பராமரிப்பது தனிசுகம்,அது உணவுக்காக நம்மை எதிர்பார்ப்பதும் வாலை ஆட்டிக்கொண்டு நம்மோடு உறவாடுவதால் ஏற்படும் மகிழ்ச்சியும் அலாதியானது. அது ஒரு தனி சுகம்.

எனக்கு கிடைக்கிற உணவு, பால் ஆகியவற்றை அதனோடு பகிர்ந்து கொள்வேன், இதற்கிடையில் கிணற்றில் நீந்தப்போகும்போது நாய்குட்டியை உடன் கூட்டிச்சென்று, அதைத் தூக்கி தண்ணீரில் போட்டுவிட்டு, அப்புறம்தான் நான் குதிப்பேன்.

நாம் நீச்சல் பழகும்போது, கத்தாளைமுட்டி, என்கிற கத்தாளையின் காய்ந்த தண்டுப்பகுதி, சுரைப்பொரடை என்கிற காய்ந்த சுரைக்காய் ஆகியனவற்றை முதுகில் கட்டிக்கொண்டு நீச்சல் பழகியது உண்டு,

நாய்க்குட்டியோ எந்த உதவியும் இல்லாமலே இயற்கையாகவே நீந்தும். அது மட்டுமில்லாமல் இரவு திண்ணையில் நான் தூங்கும்போது , அது அருகிலேயே வாசற்படியில் தூங்கும், அதிகாலையில் பார்த்தால் எனது போர்வைக்குள் படுத்துக்கொண்டிருக்கும்,

அதற்கு ஆரம்பத்தில் பெயர் வைத்ததுதான் வேடிக்கை, எந்தப்பெயரும் தோன்றாமல், ஏனோ எனக்கு பிடித்தது எனத் தோன்றிய மணி என்கிற பெயரை வைத்தேன்

என் தந்தை சற்று கண்டிப்பானவர், எனவே அவர் பணிக்கு சென்ற பின்னர்தான் இந்த நாய்க்குட்டியுடன் கொஞ்சல் எல்லாம்
.
அவர் இருந்தால் அமைதியாக இருப்பேன், நாயும்தான்

மணி,மணி,மணி... என்று அழைத்தால் போதும், எங்கிருந்தாலும் ஓடி வந்துவிடும், அப்படி ஒருநாள் அழைத்து உணவிட்டுக் கொண்டிருந்தபோது ஒருநாள் பின்னால் வந்து நின்ற என் தந்தையார் ’திமிரப்பாரு..’ என்றபடியே என் முதுகில் ஒரு சாத்து சாத்தினார்,

காரணம் புரியாமல் விழித்தேன்,

அப்புறம்தான் தெரிந்தது. அவரது வேலை செய்யும் இடத்தில் அவரது சுருக்கமான பெயர் மணி என்பது :))

அன்றிலிருந்து நாயின் பெயர் ’ஏய்’ தான்,


அப்போது ஒரு நாய்க்கு பெயர் வைப்பதில் இத்தனை விசயங்கள் அடங்கி உள்ளதா !!!
இந்த சுதந்திரம்கூட நமக்கு வாய்க்கவில்லையே என அந்த வயதில் வருத்தப்பட்டது உண்டு

இன்று மகிழ்ச்சியாக இருக்கிறேன், காரணம் சிவா என்கிற என்பெயர் குறித்துதான். அவ்வப்போது ஏதோ தகுந்த காரணத்தோடுதான் பெயர் அமைந்திருக்கிறது என நினைத்து கொள்வேன்,

என் நண்பரால் எப்போதும் நினைவில் வைத்துக்கொண்டு அன்றாடம் அழைத்து மகிழும் வகையில் அமைந்தது கண்டு உண்மையிலேயே பெருமிதம் கொள்கிறேன்.

நண்பர் ஓம்கார் தினமும் என்னை கவனித்துக்கொண்டும், அழைத்து மகிழ்வதும் நான் பெற்றபேறுதான் :) ஏனோ இன்னும் நெருக்கமாக உணர்கிறேன். மேலதிக விவரங்களுக்கு

இதை சிவனின் திருவிளையாடலுக்கு மேலும் ஒரு சான்றாக எடுத்துக்கொள்கிறேன்.

கண்கள் பனிக்க இதயம் கனக்க      சிவா

Wednesday, September 23, 2009

பொத்திக்கிட்டு என்ன செய்யனுமோ அதைச் செய்

காலையில் வேலைக்கு கிளம்பும் அவசரம், குளித்துவிட்டு தயாராகி காலை உணவுக்காக காத்திருப்பேன், குழந்தைகள் பள்ளிக்கு கிளம்பும் மும்முரமும் சேர்ந்து கொள்ள, கிடைக்கும் பதினைந்து நிமிட இடைவெளியில் இணயத்தில் மேய்வது வழக்கம்,


அப்படிப்பட்ட சூழ்நிலையில் சின்னவள் வந்து "அப்பா தோசையப் பிச்சுப் போட்டுக்கொடுங்க" என்று அழைக்க

"அம்மாகிட்ட போயேன்,"


"ஏன் உன்னால பிச்சுப் போட்ட்டுக்கொடுக்க முடியாதா?"


"இல்ல, சுவாரசியமா படிச்சிட்டு இருந்தேன், அதனாலதான்ன்..."


"இந்த வேலை எல்லாம் இங்க நடக்காது, பொத்திக்கிட்டு என்ன செய்யனுமோ அதைச் செய், இந்த பம்மாத்தெல்லாம் இங்க வேகாது...."


"சரிங்ங்ங்..."

சட்டென சின்னவளின் தட்டில் இருந்த தோசையை பிய்த்து போட்டேன், மகளின் முகத்தில் உருவான புன்முறுவல் மனதிற்கு சந்தோசமாக இருந்தது.

என் மகளுக்கு ஒரு இனிய நிகழ்வை கொடுத்த நிறைவு ஏற்பட்டது.

மேற்கண்ட உரையாடல் எனக்கும் யாருக்கும் இடையே நடந்திருக்கும், சரியாக ஊகித்தால் உங்களை நீங்களே பாராட்டிக்கொள்ளலாம்.
>
>
>
>
>
>
>
>
>
>
>
>
>
>
>
>
>
>
>
>
>
>
>
>
>
>
>
>
>
>
>
>
>
>
>
>
>
>
'அம்மாகிட்ட போயேன்' என்று சொல்லலாம் என மனதுள் எண்ணம் எழுந்துவிட்டது, வாய்வரை வந்து சொல்லாக மாறவேண்டியதுதான் பாக்கி...

உள்ளிருந்தே ஒரு குரல் என்மனதை கேள்வி கேட்க ஆரம்பித்தது, முடிவு என் மனம் வாலைச் சுருட்டிக்கொண்டு அதன் சொன்னபடி கேட்டது, விளைவு நீங்கள் அறிந்ததே ,

இது அனைத்தும் நடந்தது விநாடிக்கும் மிகக்குறைவான நேரத்தில்தான்.


இதுபோல உங்களாலும் மனதை கட்டுப்படுத்த முடியும், மனம் கட்டுப்படும்.


பல்வேறு செயல்களின் ஊடேயும் இப்படி மனதைக் கேள்வி கேட்டுப்பாருங்கள்,

விளைவுகளை பின்னூட்டமிடுங்கள், சாதக பாதகங்களை அலசுவோம்.

சிந்திப்பதுடன் செயல்படுவோம்

வாழ்த்துக்கள்,

Sunday, September 20, 2009

பொன்னுச்சாமியின் புலம்பல்

என்றைக்கும் இல்லாத சத்தம் , விளம்பர பாடல்கள் காதில் விழுந்தது. சுற்றும் முற்றும் பார்த்தேன், எங்கும் எந்த ஸ்பீக்கரையும் காணோம்

பகல் பொழுதில் நகரின் ஒரு பகுதியில் அமைந்துள்ள புதிய பஸ்நிலையம் பகுதி வழியாக இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தேன்,

சுற்றும் முற்றும் பார்த்தேன். பாடல் தொடர்ந்து காதில் விழுந்தது.மேலிருந்து சத்தம் வந்ததால் நிமிர்ந்து பார்த்தேன்

பாதையின் வலதுபுறம் இரண்டு மாடிக் கட்டடம், மொட்டை மாடியில் பத்தடிக்கு பத்தடி அளவில் பெரிய திரை, அது திரையா அல்லது டிவியா என சரியாக தெரியவில்லை.

எங்கள் பகுதியில் உள்ள வியாபார நிறுவனங்களின் விளம்பரங்கள், சரி தீபாவளி நெருங்கிவிட்டது, அதனால் துணி,நகை விற்பனையகங்கள் விளம்பரம் செய்தால்தான் வாடிக்கையாளாரை ஈர்க்க முடியும் என்று நினைத்தபடியே சென்றுவிட்டேன்,

பனியன் உற்பத்தி துறை வேலைகள் அலைக்கழிக்க ஒருவழியாய் முடித்து அலுவலகம் திரும்பினேன், இரவு வர, பணி முடிந்தது, அப்போதுதான் பார்த்தேன்

பொன்னுசாமி சற்றே காலை இழுத்து இழுத்து நடந்து வந்தார், போகும்போது நன்றாகத்தானே போனார்,??

”ஏனுங்ன்னா, என்னாச்சுங்க,.. ”

”ஒன்னுமில்லைங்கைய்யா, டவுனுக்குள்ளார போகும்போது ஒரு மொப்பட்க்காரன் மேலே கொண்டு வந்து வண்டிய விட்டுடான்ங்ய்யா.. கீழ விழுந்ததுல சுளுக்கு மாதிரி ஆயிப்போச்சுங்க.”

“ஆசுபத்திரிக்கு போனிங்களா..”

”ஆமாங்கய்யா எக்ஸ்ரே எடுத்து பார்த்து ஒன்னுமில்லை அப்படினு சொல்லிட்டாங்க, தசைப்பிடிப்புன்னு ஆயின்மெண்ட் கொடுத்திருக்காங்க”

”எப்படி ஆச்சு, வண்டியிலெ போகும்போது எச்சரிக்கையாத்தானே போவீங்க?”

நா போயி என்ன பண்றதுங்க, எதிரில வர்றவுங்க பார்த்து வரோணுமில்ல,”

அப்படி என்ன ஆச்சு?”

”மொபட்டுக்காரன் ஒருத்தன் மேல பார்த்துக்கிட்டே வந்து எம்மேல உட்டுட்டானுங்..”

”மேலயா” என்றேன்.  “ரோட்டப்பார்க்காம மேல பார்த்தானா !!”

”மேல ஏதோ புதுப்படப்பாட்டு கேட்டுதுங்க, மாடிமேல இருக்கிற டிவிய பாத்துக்கிட்டே எம்மேல வந்து ஏறிட்டானுங்..”

“என்ன கவருமெண்டோ இத்தனை நாளா போஸ்டர் வச்சு குப்புற அடிச்சு விழ வெச்சானுக, இப்ப பல்டியே அடிக்கிற மாதிரி பெரிய டிவி விளம்பரம், என்ன லாஜிக்கோ தெரியலீங்க.”என்றவாறே உள்ளே சென்றார்.

யோசித்தபடியே வீடு திரும்பினேன்

Wednesday, September 16, 2009

திரு.கோவி.கண்ணன் அவர்களுக்கு வாழ்த்துக்கள்

பாசத்துக்குரிய நண்பர் கோவியானந்தா, கோவியார், என்று நம் அனைவராலும் அன்போடு அழைக்கப்படும் திரு. கோவி கண்ணன் அவர்களுக்கு இன்று திருமணநாள்

பதினோராவது ஆண்டுதொடக்கம், ஆண்டு முழுவதும் இனிமையாக அமைய வாழ்த்தி மகிழ்கிறேன்.

திரு.கோவி.கண்ணன் குடும்பத்தார் அனைவரும் அருட்பேராற்றல் கருணையினால் உடல்நலம், நீளாயுள், நிறைசெல்வம்,  உயர்புகழ்,மெய்ஞானம் இவற்றில் ஓங்கி, நீடூழி வாழ வேண்டும்என குடும்பத்தினர், நண்பர்கள் சார்பாகவும் வாழ்த்துகிறேன்
***********************************************
டிஸ்கி; நம்மால சமாளிக்க முடியாத இவரை சமாளித்துக்கொண்டிருக்கும்  அண்ணியாருக்கு கூடுதல் வாழ்த்துக்கள்
***********************************************

Friday, September 11, 2009

பாட்டுக்கேட்டுக்கிட்டே வேலை செய்வது.....

ஏற்றுமதி பனியன் தயாரிப்பு தொழிலில் பல்வேறு துறைகள் இருக்கின்றன. நிட்டிங், டையிங்,பிரிண்டிங், எம்ப்ராய்டரி இதுபோல இன்னும் பல துறைகள் உள்ளன.

அதில் ஒன்றுதான் தேவையான பிரிண்டிங் வரைபடத்தை கணினியில் மேம்படுத்தித் தருதல், அங்கு பணிநிமித்தம் சென்றேன், காலை 10.00 மணி இருக்கும் ,

மூன்று கணினிகள் உள்ள அலுவலகம், தொழிற்சாலையும் அதுதான்:))

எனக்குத்தேவையான டிசைனை மேம்படுத்த சென்றிருந்தேன். கணினியின் பின்புலத்தில் சினிமா பாடல்கள் பாடிக் கொண்டிருந்தது. எல்லா பாடல்களுமே நான் அதிகம் கேள்விப்படாதவை, எல்லாமே புதியவை.

சற்று சத்தமாகவே இருந்தது."என்ன தம்பி, வேலை செய்யும் போது கொஞ்சம் மெதுவாக சத்தம் வைக்கலாம் அல்லவா?" என்றேன்.

சிரித்துக் கொண்டே சத்தம் குறைத்து, பின்னர் வேலையில் ஈடுபட்டார்.

வேலையின் சலிப்பை போக்கிக்கொள்ள பாட்டுக்கேட்பதாக எடுத்துக்கொண்டேன்.

அந்த நபர் பாட்டை ஒழுங்கா கேட்பாரா !!

இல்லை வேலைய ஒழுங்கா செய்வாரா !!


சரி நான் கார் ஓட்டிப்பழகும்போது, பாட்டுக்கேட்டால் எப்படி கார் ஓட்டமுடியும், ரோட்டைப்பார்த்து எப்படி காரோட்டுவது என்று பயிற்றுவிக்கும் நண்பருடன் சண்டைக்கே போய்விட்டேன்.

ஆனால் இப்போது கார் ஓட்டும்போது ஏதேனும் பாட்டோ, உரையோ ஒலித்த வண்ணம் தான் இருக்கிறது.

இதெல்லாம் சரியா, தவறான்னு மனசு யோசிக்குது :)))

நீங்க எப்படி ?

உங்க மனசுல தோணுவதை சொல்லுங்க, அலசிப் பார்ப்போம் :)

Sunday, September 6, 2009

அனானியும் வேதாத்திரி மகானும்

நண்பர் ரவிஆதித்யா அவர்களது அந்த ”அனானி” யார்? சொல்லமுடியுமா? கட்டுரை மிகச் சிறப்பாக அமைந்திருந்தது. மிகச் சரியான முறையில் விஞ்ஞானம் சொன்னதை அலசி இருந்தார்.


\\ஒரு பொருள் இருந்தால் அதனை உருவாக்கியவன் கட்டாயமாக இருக்க வேண்டும் என்பது விஞ்ஞான நியதி. காரணம்-காரணன். நான்கு M இருந்தே ஆக வேண்டும். அதாவது Man,Machine,Method,Materials.\\

அதே சமயம் இறைநிலை என்பது பொருள் அல்ல,அதற்கு இந்த சூத்திரம் உதவாது.

சுலபமா யோசித்தால்கூட நாம் ஓட்டுகிற வாகனம், கீழே பூமி தாங்கி இருப்பதால்தான் பாதையில் ஓடுகிறது. ஒரு அடி உயரமா சக்கரம் நிலத்தில் படாமல் இருந்தால் ஓடாது, வெறும் சக்கரம்தான் சுற்றும், வாகனம் நகராது.

சரி பூமியின் எடையும், பருமனும் எவ்வளவு?
இதை எது தாங்கிக் கொண்டிருக்கிறது ?
பூமிக்கு கீழ் எந்த ரோடு சூரியனைச் சுற்றி வர போடப்பட்டிருக்கிறது ?
பூமி அதில் உருண்டு கொண்டு இருக்கிறதா ?
பூமி தன்னைத்தானே சுற்றும் வேகம் மற்றும் சூரியனைச் சுற்றி வரும் வேகத்திற்கு காரணம் என்ன?

பதிலே கேள்விக்குரியதாக அமையும் அறிவியலில். 

சூன்யத்திற்கு காரணம் வேண்டியதில்லை, ஏனெனில் சூன்யமே காரணம், சூனியமே காரியமாகவும் மலர்கிறது, சூனியம் என்பது அனைத்துக்கும் மூலம், அதனுள் அனைத்தும் அடக்கம்.

இனி இதோ வேதாத்திரி மகானின் கருத்துக்கள்

“சுத்தவெளி சுத்தவெளியாகவே இருந்திருக்கலாம் அல்லவா?
அது ஏன் இயக்கம் பெற்று, பரிணாமம் பெற்று வளர்ந்தது? அதன் இரகசியம் என்ன?


மகானின் பதில்

”படுத்திருக்கிறீர்கள், நல்ல ஓய்வு, அப்படியே படுத்திருக்க வேண்டியதுதானே...? ஏன் எழுந்திருக்கிறீர்கள்? உங்களுக்குள் மிகும் உடல்ஆற்றல் வேகம் தானகவே எழுந்திருக்கச் செய்கிறது.

சுத்தவெளி தன்னிறுக்கச் சூழ்ந்தழுத்தும் ஆற்றல்தன்மை கொண்டது. அது எப்போதுமே தானாகவே விரிந்து கொண்டே இருக்குக்கூடியது. அதனால் அதிலிருந்து மற்றவை தோன்றித்தான் ஆகும், தோன்றிக்கொண்டேதான் இருக்கும்.”

எனக்கு மகானின் இக்கருத்து, முழுமையாக, சந்தேகத்துக்கு இடமில்லாமல் தெளிவானதாக இருக்கிறது. சுத்தவெளி என்ற இறைவெளி இதையே இறை என மதிக்கிறோம்.

இந்த கருத்தை நான் இடுகையாக்க தூண்டுதலாய் இருந்த நண்பர் ரவி ஆதித்யாவுக்கு  எனது நன்றிகள், வாழ்த்துக்கள்

Friday, September 4, 2009

சித்தாந்தமும் வேதாந்தமும் எப்படி புரிந்து கொள்வது?

சித்தாந்தமும் வேதாந்தமும் எப்படி புரிந்து கொள்வது?

ஆன்மீகத்தின் பெயரால் உலகில் எத்தனையோ மார்க்கங்கள் உருவாகி விட்டன. சைவம், வைணவம், அத்வைதம், துவைதம், விசிஷ்டாத்வைதம், சமணம், பெளத்தம், சாங்கியம், சீக்கியம், கிறித்துவம்,இஸ்லாம், திபேத்தியம்... இப்படி எண்ணற்ற மார்க்கங்கள்

எது உண்மையான முக்தியைக் கொடுக்கும் ?

ஆன்மீகத்தில் ஈடுபாடு உடையோரை குழப்பும் விசயம் இது.

எல்லாவற்றையும் அலசி ஆராய்ந்து பார்த்த்தால் இவற்றை இரண்டே இரண்டாக வகுத்து விடலாம்.
(1) இறைவனை உண்டு என்று ஒப்புக்கொள்ளும் ஒளிமார்க்கம்,
(2) இறைவனை இல்லை என்று மறுக்கும் இருள்மார்க்கம்

உண்டு என்று ஒப்புக்கொள்ளும் ஒளி மார்க்கத்தை சித்தாந்தம் என்று பொதுவாய் அழைக்கலாம்.

இல்லை என்று மறுக்கும் இருள் மார்க்கத்தை வேதாந்தம் என்று அழைக்கலாம்.

இந்த உடலை மெய் என்று போற்றுவது சித்தாந்தம்

இந்த உடலை பொய் என்று போற்றுவது வேதாந்தம்.

இந்த உலகம், சூரியன்,கோள்கள், நட்சத்திரங்கள் உள்ளிட்ட அண்ட சராசரம் அனைத்தும் உண்மை என்கிறது சித்தாந்தம்.

அத்தனையும் உண்மையல்ல, மாயையே என்கிறது வேதாந்தம்.

அது என்னும் பிரம்மம் நீயாக இருக்கிறாய்! என்று உள்ளே காட்டுவது சித்தாந்தம்.

நீ அதுவாய் இருக்கிறாய் என்று வெளியே தேடச் சொல்வது வேதாந்தம்

’அவன் கால்பட்டு அழிந்தது என் தலைமேல் அயன் கையெழுத்தே!’ என்று அருணாகிரிநாதப்பெருமான் பாடியதுபோல், ’கர்மவினையைக் கடவுள் நினைத்தால் கணப்பொழுதில் அழிக்கலாம்!‘ என்கிறது சித்தாந்தம்.

கர்ம வினையை யாரலும் அழிக்கமுடியாது, அதை அனுபவித்துதான் தீர்க்க வேண்டும்!’ என்பது வேதாந்தம்.

நாம் மனது வைத்தால் இந்த ஒரே பிறவியில் முயன்று முக்தி பெறலாம்! என்கிறது சித்தாந்தம்.
பல பிறவிகள் எடுத்துப் படிப்படியாய்த் தான் முக்தியை அடைய முடியும் !’ என்கிறது வேதாந்தம்.

உள்ளே கடவுளைப் பார்க்கலாம் என்கிறது சித்தாந்தம்.
‘உலகையே கடவுளாகப்பார்’ என்று உபதேசிக்கிறது வேதாந்தம்.

’தொண்டு செய்தால் கண்டு கொள்வார்கள் மகான்கள்!’ என்கிறது சித்தாந்தம்.
தொடர்ந்து கடும்பயிற்சிகள், தவ முயற்சிகள், கடும் வைராக்கியம்,கடும் ஒழுக்கம் தேவை என்கிறது வேதாந்தம்.நன்றி-அரங்கராச தேசிக சுவாமிகள், ஓங்காரக்குடில், துறையூர், திருச்சி

Monday, August 31, 2009

ஜோதிடமா? முன்வினையா? முயற்சியா?

நம் முன்னேற்றத்தை முடிவு செய்வது சோதிடமா? முன்வினைப்பதிவா?, முயற்சியா? விதிப்படிதான் எல்லாம் நிகழும் என்றால் முயற்சி எதற்கு?


இதை புரிந்து கொள்ள முதலில் நமது வாழ்க்கையை, மனதிற்கு உட்பட்ட வாழ்க்கை, மனம் கடந்த வாழ்க்கை என இருவிதமாக பிரித்துப்பார்ப்போம்.

மனதிற்கு உட்பட்ட வாழ்க்கை என்பது அஞ்ஞான வாழ்க்கை , இவ் வாழ்க்கை இகலோகம் எனப்படும் இவ்வுலகத்தை சுற்றி, சார்ந்தே அமையும்.

கல்வி, தொழில், மனைவி, மக்கள், உறவினர் சமுதாயம், பொருள் சம்பாத்தியம், அந்தஸ்து, அதிகாரம், புகழ் என இப்பூமியைச் சுற்றியே பின்னப்பட்ட வாழ்க்கை ஆகும்.

மனதிற்கு உட்பட்ட வாழ்க்கை என்பது மூலாதாரம், சுவாதிஸ்தானம், மணிபூரகம்,அனாகதம், விசுக்தி என்னும் ஐந்து ஆதாரத்துக்குள்ளேயே வாழ்வது, அதாவது விசுக்தி என்னும் கண்டத்தைத் தாண்டாத வாழ்க்கை ஆகும்

அத்தகைய கண்டம் கடக்காத அஞ்ஞான வாழ்க்கைக்கு முன்வினைப்பதிவு, முன்னோர் வினை, சோதிடம், என்கணிதம்,வாஸ்து ,விதி, சமுதாயம், தெய்வங்கள் என சகலத்தடைகளும் உண்டு. இவைகளின் பாதிப்பு உண்டு.

இவைகளிலிருந்து விடுபட முயற்சி கண்டிப்பாக தேவை, எதிர்நீச்சல் வெற்றியைத் தரும். இதற்கு தன்னம்பிக்கை முன்னேற்ற பயிற்சிகள், இதர ஆன்மீக அமைப்புகள், வழிமுறைகள் ஓரளவு உதவும், இது குறித்த விழிப்புணர்வும் நமக்கு வேண்டும். இல்லாவிடில் சிக்கலே. இது மனதின் தன்மைக்கு ஏற்ப ஒருவருக்கொருவர் வேறுபடும்.

வினைப்பதிவை நீக்கக்கூடிய வாழும் முறை,பரிகாரம், மனம் சார்ந்த பயிற்சிகள் போன்றவைகளினால் மேற்கண்ட தடைகளை கண்டிப்பாக குறைக்க அல்லது நீக்க முடியும்,

இந்த மனிதப்பிறப்பில், வாழ்வில், நமது தலைவிதியை நம் கையில் எடுத்து முயற்சியால் மாற்றலாம். ஆனால் அது அவ்வளவு எளிதானதல்ல, அதற்கும் மனமே மறைமுகமாக தடையாக இருக்கும். மனமே தலைவிதி எனலாம்.

இந்த மனதிற்கு உட்பட்ட வாழ்க்கைக்கு, முயற்சி நிச்சயம் உதவும்.

இதற்கு மனம் கடந்த வாழ்க்கை முறைக்கு உரிய வழிகளை பின்பற்ற வேண்டும்.

இனி  மனம் கடந்த வாழ்க்கை

மனம் கடந்த வாழ்க்கை என்பது ஞான வாழ்க்கை, இது இகலோகத்தை சார்ந்திருந்தாலும், பரலோகத்திற்குரிய எண்ணத்திலும், முயற்சியிலும் விடாமல் கவனம் வைத்திருக்கும் வாழ்க்கை ஆகும். திருமுறைகள்,மகான்கள் வழிபாடு, தவமுயற்சிகள் என்ற தொடர்புகள் ஏற்படுத்திக்கொண்டு வானத்தை நோக்கிய பயணமாக, வாழ்க்கை இருக்கும். இதில் மத வேறுபாடு கிடையாது.

மனம் கடந்த வாழ்க்கை என்பது விசுக்தி எனும் கண்டம் கடந்த
ஆக்ஞை, சகஸ்தரதளம் என்னும் ஆதாரங்களில் வாழும் தவ வாழ்க்கை ஆகும்.

இந்த ஞான வாழ்க்கைக்கு வந்தோர்க்கு சோதிடம்,விதி, முன்வினைப்பதிவு, சமுதாயம், தெய்வங்கள் போன்ற தடைகள் கிடையாது. மிச்சம், மீதி இருப்பதும் கரைந்து கொண்டே வரும். எந்த பாதிப்பையும் உண்டு பண்ணாது,

இதன் பின்னர் முயற்சி தேவைப்படுமா என்றால் இங்கு முயற்சிக்கு வேலையே கிடையாது, எதிர்நீச்சல் அவசியமே இல்லை. இதற்கு உதவுவதெல்லாம் ஞானியர் தொடர்பு, மந்திர உபாசனை, உடல் ஒழுக்கம், செயல் ஒழுக்கம் ஆகியவையே.

அறிவு தெளிவு அடைய அடையத்தான் அச்சம் விலகும், அத்தனை குழப்பங்களும் நீங்கும்

அவர் அவர் ப்ராரார்த்த ப்ரஹாரம் அதற்கானவன்
ஆங்காங்கிருந்து ஆட்டுவிப்பான், என்றும் நடவாதது
என் முயற்சிக்கினும் நடவாது;
நடப்பது என் தடை செய்யினும்
நில்லாது. இதுவே திண்ணம்.
ஆதலின், மெளனமாய் இருக்கை நன்று.

மகான் ரமணர் மனம் கடந்த நிலையில் வெளிப்படுத்திய இவ் மஹாவாக்கியம் பொருள் இகவாழ்விற்கானதல்ல, இதை இப்புவி வாழ்வுடன் இதை பொருத்தி பார்த்தால் குழப்பமே மிஞ்சும்,

நீங்கள் மனம் கடந்த வாழ்விற்கு தயாராகிறீர்களா? உங்களுக்காக சொல்லப்பட்டதே இது. வினைகள் கழிந்து மேல்நிலை அடைய அடைய, பரலோக வாழ்வு நமக்கு எப்படி வாய்க்கும் என்பது நமக்கு தெரியாது. ஆகவே முயற்சி செய்யாதே, உனக்கு இறைவிதிப்படி எப்படி அமைய வேண்டுமோ, அப்படி அமையும், மெளனமாக இரு என மனதிற்கு சொன்னது

ஆக பெரியோர்கள், ஞானியர் வாக்கினை சரியாக உணர்ந்து கொள்ளவேண்டுமானால் அவர்களின் மனோநிலைக்கு நம் மனம் செல்லவேண்டும்.

இல்லையெனில் நம் மனதின் தரத்தைக் கொண்டு எடைபோட்டுப் பார்த்தால் அர்த்தம் புரியாமல் முரண்பாடகத் தெரியும், ஆகவே தெளிவடைவோம். மனதிற்குட்பட்ட வாழ்க்கையில் வெற்றியடைவோம்.

மனம் கடந்த வாழ்க்கைக்கான பாதையில் பயணிப்போம்.

Saturday, August 29, 2009

மனித உயிரின் மதிப்பு இவ்வளவுதானா..!!!

மிருகம் ஐந்தறிவு உள்ளது, மனிதனோ ஆறறிவு படைத்தவன், மிருகங்கள் உணவுக்காக
உணவை உற்பத்தி செய்ய தெரியாததால் பிற உயிரை கொன்று தின்கின்றன.

மனிதன் ருசிக்காக மிருகங்களை கொன்று தின்று வாழ்கிறான்.

அதே சமயம் சீவகாருண்யத்துடன் உயிர்களைப் பார்ப்பவர்களும் உண்டு.

இந்த காணொளியை என் முந்தய இடுகையில் க. தங்கமணி பிரபு பின்னூட்டத்தில் தெரிவித்த இணைப்பில் முதன்முதலாக பார்த்தேன். மனிதம் இவ்வளவு தாழ்ந்துவிட்டதா ? அதிர்ச்சியாக இருந்தது.

இங்கு ஒருபுறம் முகம் தெரியாத நண்பர்கள் ஒன்று சேர்ந்து செந்தில்நாதனை இயல்புக்கு கொண்டு வர போராடிக் கொண்டிருக்கிறோம்.

கைக்கெட்டும் தூரத்தில் மனிதனை மனிதன் சத்தமிடக்கூட வாய்ப்பின்றி, காக்கை குருவியை சுடுவதுபோல் சுடுவது கண்டு அதிர்ச்சி அடைந்தேன்.

சுடப்பட்டவன் நிலையில் இருந்து பார்க்கிறேன்.

அவன் மனம் அந்த கணத்தில் என்ன பாடுபட்டிருக்கும் ?

வார்த்தைகள் எழும்ப மறுக்கின்றன…

எதைக் குற்றஞ் சொல்வது, மனிதன் இப்புவியில் வாழும் உரிமை பறிக்கப்பட்டதற்க்கு
அறிவியலையா, மதத்தையா, இனத்தையா, இது நமக்கு தேவைதானா?

கதிரின் இடுகை

நர்சிம்


இலங்கை இராணுவத்தின் கோரம் : மீண்டும் அதிர்ச்சியூட்டும் படங்கள்
பார்த்தால் மனம் பதைபதைக்கும் இந்த நிகழ்வுக்கு என்ன பதில் ? இதை அந்த நாடே அனுபவிக்கும், இயற்கைச் சட்டம் என்ன செய்கிறது என்று பார்க்கலாம் !

Friday, August 28, 2009

உங்களை பாம்பு கடித்திருக்கிறதா ?

சில்லென்ற காற்று முகத்தில் அறைகிற மாதிரி வீசிக் கொண்டிருந்தது. இங்கு எப்பவுமே இப்படித்தான், நல்ல கிராமம், ஆனால் தண்ணீர் பற்றாக்குறை, மெள்ள மெள்ள விவசாயம் குறைந்து பெரிய பெரிய குடோன்கள் முளைத்துவிட்டன. இவை பனியன் தயாரிக்கும் சிறிய தொழிற்சாலைகளுக்கு வசதியானவை, துணியை தயார் செய்து அதை வேண்டிய வடிவம், அளவுகளில் வெட்டி தயார் செய்வதில் கழிவுகள் ஏதும் வெளியேறாததால் அக்கம்பெனிகளும் வந்துவிட்டன.

நகரத்தில் ஆட்கள் பற்றாக்குறை, நிறைய தொழிற்சாலைகள் உருவாகி இயங்கி கொண்டிருக்கின்றன.கிராமத்திற்கு பஸ் அனுப்பி வேலைக்கு ஆள்களை வரவழைத்துக்கொண்டு இருக்கிறார்கள்.இந்த சூழ்நிலையில் கிராமத்திலேயே இந்த கம்பெனிகள் அமைவதால் பல வசதிகள்., சில சிரமங்கள், அதில் ஒன்றுதான் எனக்கு தினமும் வீட்டுக்கு போவது என்பது, வீட்டுக்கு சுமாராக பன்னிரண்டு கிலோமீட்டர்கள் வரும். பைக்கில் இந்த குளிரில் வீட்டிற்கு செல்வது சற்று சிரமாகத்தான் இருக்கும்.

விளக்குகள் அணைக்கப்பட்டன.வேலை முடிந்தது. வேலை செய்பவர்கள் அனைவரும் வீட்டிற்கு கிளம்ப நானும் வீட்டிற்கு கிளம்பினேன். சட்டென ஞாபகம் வந்தது. மனைவியும் குழந்தைகளும் அம்மா வீட்டிற்கு சென்றிருந்தார்கள். சரி இன்றைக்கு இங்கேயே இருந்துவிட வேண்டியதுதான், உணவுக்குத்தான்...ம்ம்சரி

இங்கு பெரிய அளவில் உணவுவிடுதி ஏதும் கிடையாது. அரை கிலோ மீட்டர் சென்றால் ஊர் மையத்தில் மங்கலான குண்டுபல்பு வெளிச்சத்தில் அமைந்துள்ள குடிசைவீடுதான் இங்கு உள்ள ஒரே உணவு விடுதி, கிடைப்பதை வைத்து வயிற்றை நிறைத்துக்கொண்டு இன்று இங்கேயே இருக்கிற ஓய்வறையில் படுத்துக்கொள்ள வேண்டியதுதான்.

ஒத்தையடிப்பாதை வழியாக சென்றால் பக்கம், சீக்கிரம் சென்று திரும்பிவிடலாம்.
உணவை முடித்துக் கொண்டு திரும்பினேன். தனியாக வருவதால் பயம் வேறு, அப்பயத்தை துரத்த வேண்டி அச்சம் என்பது மடமையடா, அஞ்சாமை திராவிடர் உடமையடா எனப் பாடிக்கொண்டே நடையை எட்டிப்போடுகிறேன்
சட்டென இருள் சூழ்ந்தது. சரியான நேரத்திற்க்கு எது நடக்குதோ இல்லையோ மின்சாரம் போவது மட்டும் நடந்து விடுகிறது.
தொழிற்சாலை வாசலை அடைந்து, நிதானத்திலேயே கேட்டை உட்புறமாக பூட்டிவிட்டு, ஓய்வறைக்கு நகர்ந்தேன். தொழிற்சாலை கட்டிடத்தை விட்டு தள்ளி உட்புறமாக 200 அடி தொலைவில் அறை, கட்டில், குளிக்கும் வசதிகளுடன் ஓய்வறை,

வழக்கமான பாதைதான், முழங்கால் உயரத்துக்கு செடிகள் கண்டபடி வளர்ந்து பாதையை மறைக்க முயற்சித்துக் கொண்டிருக்கின்றன. கட்டிட வேலை நடந்த போது ஏற்பட்ட குழிகள், மண் மேடும் பள்ளமுமாய், அந்த இடத்தை கடக்க முயற்சிக்கும் போது சட்டென புத்திக்கு ஏதோ உரைக்கிறது, காலுக்கு கீழ் ஏதோ மிதிபடுவதைப்போல் உணர்வு, சற்று உருண்டையாக , கனமாக, வழுவழுப்பாக செருப்புக்கு கீழ் உணர முடிந்தது. அனிச்சை செயலாய் உடல் துள்ள, அந்த இடத்தை விட்டு எட்டிக் குதித்து,எப்படி அறைக்கு வந்து சேர்ந்தேன் என்பது எனக்கே தெரியவில்லை.

பிறகுதான் தெரிந்தது, உடல் நடுங்குகிற நடுக்கம், படபடவென்ற இதயத்துடிப்பு, மூச்சு வாங்குதல் இதெல்லாம்,

கதவை நீக்கினேன், மேசைமீது இருந்த, குளிர்ந்த நீரை சொம்போடு எடுத்து அப்படியே அண்ணாந்து ஒரே மொடக்காக குடித்தேன். தலை சுற்றுவது போல் இருந்தது. அப்படியே கீழே உட்கார்ந்து கொண்டேன்,. கிறுகிறு என்று வந்தது. கண்ணை மூடிக்கொண்டேன்

யார் செய்த புண்ணியமோ, தப்பித்தேன் என நினைத்துக்கொண்டேன்.

பாம்புகள் பலவிதம் எனக் கேள்விப்பட்டிருக்கிறேன், விசமுள்ளது, விசம் இல்லாதது, என்று, நமக்கென்ன தெரியும் எந்த பாம்பு எப்படி இருக்கும், எதில் விசம் இருக்கும் என்று? காற்று வந்தால் நன்றாக இருக்கும் போல் இருந்தது, சன்னலை திறந்து வைத்தேன்

அப்போது கால் பாதம் சற்றே ஈரமானது போன்ற உணர்வு, குடித்த தண்ணீர் சிந்திவிட்டதோ, சட்டென மனம் எச்சரிக்கை செய்ய கையால் தொட்டு பார்த்தேன், பிசுபிசுப்பாக இருந்தது, கையில் ஒட்டுவதுபோல் தெரிந்தது,கீறல் இருந்தது. வலிக்கவும் ஆரம்பித்தது.
கையை கிட்டே கொண்டுவந்து பார்த்ததில் இருட்டில் தெளிவாக தெரியாவிட்டாலும், சிவப்பாக தெரிந்தது, இரத்தம் என மனது அலற ஆரம்பிக்க, முகர்ந்து பார்த்தேன், வாடையை வைத்து இரத்தம்தான் என உறுதி செய்தேன்.

அய்யய்யோ ! பாம்பு கடித்து ஒரேடியாக போய்விட்டால் என்ன ஆவது, மனைவி, குழந்தைகள் எல்லாம் வெளியூர் போன சமயத்தில் ஏதாவது ஆகிவிட்டால் ? ஒருவேளை அவர்களுக்கு எந்த தகவலும் கிடைக்காமலே போய்விட்டால் என்ன ஆகும்?

அட அது எப்படியோ போகட்டும் அக்கம் பக்கத்தில் யாராவது விடிந்தவுடன் எட்டிப்பார்த்து தகவல் சொல்லாமலா போய்விடுவார்கள்.,

இந்த வாரம் அனுப்ப வேண்டிய சரக்கு இன்னும் தைக்க முடியாமல் இருக்கிறது, இந்த நிலையில் இப்படி என்றால் என்ன செய்வது, விடியும் வரை தாங்குமா, இந்த நேரத்திற்கு திருப்பூரில் எந்த ஆஸ்பத்திரி இருக்கும், டாக்டர் யாராவது இருப்பார்களா? இருந்தாலும் விசமுறிவு வைத்தியம் நல்லமுறையில் தெரிந்திருக்குமா

செல்போனை எடுத்தேன், யாரை அழைக்க,? உடனடியாக இங்கு யாராவது வந்தால்தான் நாம் உயிர் தப்பிக்க முடியும். போனை அழுத்த இயங்க மறுத்தது, ச்ச்சே மாலையிலேயே சார்ஜ் குறைந்து இருந்தது, வேலை மும்முரம், மறந்தாயிற்று

இனி ஒரே வழி, எப்படியாவது தொழிற்சாலைக்கு சென்று ஜெனரேட்டர் போட்டுத்தான் ஆகவேண்டும், அப்போதுதான் செல்போன் சார்ஜ் பண்ணமுடியும். அல்லது இருட்டில் சரக்குகளுக்கிடையே சென்று தடுமாறிக்கொண்டே அலுவலகத்தை திறந்து போன் பண்ண வேண்டும்.

எங்கே செல்வது, ஓரேடியாக கோவை சென்றுவிடுவது நல்லதோ?

எப்படியாவது காப்பாற்றி விடுவார்கள், இரத்தமே முழுவதாக மாற்ற வேண்டிய அவசியம் வந்தால் கூட செய்ய முடியும், அதுவரை தாங்குவேனா?

குழந்தைகள் இதை எப்படி எடுத்துக் கொள்வார்கள்?
அவர்களுக்கு மரணம் என்றால் என்ன என்பதே தெரியாமல் இருக்கும் வயதாயிற்றே? தாங்கிக் கொள்வார்களா? இவர்கள் ஒருபுறம் இருக்க, மனைவியை நினைத்தால் இன்னும் கஷ்டம்..
நீங்க இல்லைன்னா நான் இருக்கமாட்டேன்னு சொல்லிக்கிட்டே இருப்பாளே இவ, என்ன பண்ணப்போறா? அப்படி ஏதேனும் அவ தவறான முடிவெடுத்திட்டா குழந்தைகளின் கதி?

இருட்டினூடே வெளியேறி தொழிற்சாலைக்கு செல்வதே இப்போதைக்கு ஒரே வழி, இருட்டினுள் துழாவ கட்டிலின் அருகே ஒரு பனியன் துணி நீளமாக கயிறுபோல் கிடந்தது தட்டுப்பட்டது.எடுத்து கணுக்காலோடு சேர்த்து இறுக்க்கிக் கட்டிக் கொண்டேன், விசம் ஏறாமல் இருக்க வேண்டும்.மீண்டும் இருட்டினுள் அதே வழியில் நடக்க வேண்டும், கால் மரத்துப்போக ஆரம்பித்தது. வாழ்வா சாவா போரட்டம் என்றால் என்ன என புரிந்தது.

பயமாக இருந்தது. இன்னும் ஏதேனும் பாம்பு இருந்தால்,? சரி இனி எந்த பாம்பு கடித்தால் என்ன? ஏற்கனவே கடித்துவிட்டதே,, மனதை தைரியப்படுத்திக்கொண்டேன்.

தடுமாறி எழுந்து தொழிற்சாலையை நோக்கி நடந்தேன், இல்லை தவழ்ந்தேன், சரி எப்படியோ சென்றேன். கையில் இருந்த சாவியால் கதவை நீக்கினேன், இதெல்லாம் ஒரு யுகம் போல் தெரிந்தது.

சட்டென முகத்தில் வெளிச்சம் அடித்தது, மின்சாரம் வந்துவிட்டதோ?

கண்ணுக்கு எல்லாமே மங்கலாக தெரிந்தது, யாரோ இருவர் எதிரே நிற்பது போல் தெரிந்தது, உற்றுப்பார்த்ததில் தலையில் கிரீடம் வைத்துக்கொண்டு கொம்புடன்…. குழப்பத்துடன் பார்த்தேன்,ஒன்றுமே தெரியவில்லை, தூக்கி தோளில் போட்டுக் கொண்டு கொஞ்சதூரம் நடந்த மாதிரி தெரிந்தது.பின்னர் தேரில் ஏறி பறந்தது தெளிவாக உண்ர முடிந்தது. சொர்க்கமா, நரகமா எங்கே போகிறோம் என்றும் புரியவில்லை,

கண்விழித்துப்பார்த்தேன். வெண்ணிற் ஆடையில் அங்குமிங்கும் தேவதைகள் நடந்து கொண்டிருந்தன.

எதிரே மனைவியும் குழந்தைகளும், மனைவி அழுகையை அடக்க முடியாமல் நின்று கொண்டிருந்தாள்.

சுற்றும் முற்றும் பார்த்தேன். மருத்துவமனையில் படுக்கையில் நான் படுத்திருப்பதை உணர்ந்தேன்

தூரத்தில் அலுவலக நண்பர்கள், அருகில் அம்மா, அப்பா,

எனக்கு என்ன நடந்தது என்று நினைவுக்கு கொண்டு வர முடியவில்லை. கையில் குளுக்கோஸ் வாட்டர் ட்யூப் வழியாக உள்ளே ஏறிக்கொண்டிருந்தது. மீண்டும் ஒரு மாதிரியாக இருக்க, கண்ணை மூடிப் படுத்துக்கொண்டேன்.

மதியம் மருத்துவர் வந்து எல்லாமே நல்லாயிருக்கு, எப்ப வேண்டுமானாலும் வீட்டுக்கு போகலாம் என்று சொல்ல மாலையில் வீடுதிரும்பினேன். இரண்டுநாள் ஓய்விற்கு பின் தொழிற்சாலைக்கு திரும்பினேன். உடல் முழுவதும் இலேசான வலி,

தொழிற்சாலையில் உள்ளே செல்லும் வழியில் ஏதோ பைப் உடைந்து விட்டது போல. பிளம்பர் வந்து பிரித்து போட்டு ஒட்ட வைத்துக் கொண்டிருந்தார்.

அருகில் வேட்டியை மடித்துக் கட்டிக்கொண்டு பொன்னுச்சாமி நின்றிருந்தார், என்னைப் பார்த்தவுடன் ”அய்யா வாங்க உடம்புக்கு இப்ப பரவாயில்லீங்களா?” என்று கேட்டவாறே என் பதிலுக்கு காத்திராமல் ”என்னையா உங்கோட ஒரே வம்பாப் போச்சு, தேவையானத கொண்டு வரமாட்ட, இங்க வந்து அதுவேணும், இது வேணும் அப்படின்னுட்டு, இப்ப என்ன, பைப்ப சூடுபண்ண ஏதாவது வேணும் அவ்வளவுதானே?” என்றவாறு அங்கும் இங்கும் துழாவியவர் சட்டென காலில் தட்டுப்பட்ட ஏற்கனவே பாதி எரிந்த கம்பிகள் வெளியே துருத்திக்கொண்டிருந்த, பழைய சைக்கிள் டயரை எடுத்து இந்தா என்று பிளம்பர் கையில் கொடுத்துவிட்டு, என்னிடம் திரும்பி ”அய்யா இப்ப உடம்புக்கு எப்படி இருக்கு, திடீர்ன்னு நீங்க மயங்கிக் கிடந்ததை காலையில் பார்த்து எனக்கு உசிரே போச்சிங்க, அப்புறம் ஆசுபத்திரில சேர்த்து உங்களுக்கு ஒண்ணுமில்ல அப்படின்னு கேட்ட பொறவுதான் நிம்மதி ஆச்சுங்க… என்றவாறு என் கையை ஆதரவாகப் பிடித்தார். எனக்கு கண்ணை இருட்டிக்கொண்டு வந்தது.

Tuesday, August 18, 2009

ஆன்மிகம் என்றால் விரும்புவது ஏன்?

இதுதான் என் வாழ்க்கை, என் வாழ்வும் சாவும் இரண்டும் என் கையில் என்பதே ஆன்மீகம்.

நண்பர் எல்லாம் இருக்கும் வரை அவர்களின் இடுகையை படித்தேன். அவருடைய கருத்துக்களோடு ஒத்துப் போன போதிலும் சில கருத்துப் பகிர்வுகள் தேவை என நினைத்ததால் இந்த இடுகை. எனவே இதை படிக்கும் முன் அவரது இடுகையினை படித்துவிடுதல் நலம். அதன் தொடர்ச்சியே இது:))

\\ஆன்மிகத்திற்கு விளக்கம் அவசியமில்லை எனும் கருத்து எனக்குண்டு. ஆன்மிகம் ஒரு உணர்வு. \\ இது நண்பரின் கருத்து.,

இனி எனது கருத்து

மீன் தண்ணீருக்குள் இருந்து வாழ வேண்டும் என்பது விதி.

ஆனால் ஆற்று நீரோட்டத்தின் வழியே வாழ்வது, விதியின் வழியே வாழ்வது ஆகும் ஆனால் எதிர்நீச்சல் போட்டு, தன் விருப்பப்படி வாழ்வது முயற்சி ஆகும். ஆனால் இரண்டுமே தண்ணீரை விட்டு வெளியே வராது, வந்தால் மரணம்தான்.

இது மனித வாழ்வில் உன் முயற்சியினால். எப்படி வேண்டுமோ அப்படி வாழ்ந்து கொள் என அனைத்தையும் இயற்கை விதி நமக்கு வழங்கி இருக்கிறது. இது நம் முறை, விளையாட்டாக சொன்னால் பந்து நம் கையில், என்னவேண்டுமானாலும் செய்யலாம், அந்த உரிமையை எப்படி வேண்டுமானாலும் பயன்படுத்திக் கொள்வது நம் சுதந்திரம்:))

ஆன்மீகம் என்பது விளக்க வேண்டிய ஒன்றே. அந்த விளக்கம் அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்படும் வகையில் இருக்க வேண்டும். அதற்கு நாம் சரியாக உணர்ந்து இருக்க வேண்டும் அல்லது சரியாக வாழ்ந்து காட்டி இருக்க வேண்டும். அப்படி வாழ முழுமையாய் உணர்ந்தால்தான் வாழ முடியும்.

இந்த கருத்தை, அதாவது ஆன்மீகத்தை விளக்க முயலாவிட்டால் நாம் எதிர்கால சந்ததியினருக்கு தவறிழைக்கிறோம் என்பதே என் கருத்து.


ஆன்மீகம் என்பது ஒருங்கிணைத்துப் பார்ப்பது

அறிவியல் என்பது தனித்தனியாக பார்ப்பது

இவ்வளவுதான். இதை சரியாக பிடித்துக் கொண்டால் ஆன்மீகம் என்பது எளிதில் விளங்கிவிடும்.

ஆன்மீகம் என்பது வேறொன்றுமில்லை, உடல்நலம், உயிர்நலம், மனநலம், சமுதாயநலம் இவை ஒன்றுக்கு ஒன்று முரண்படாமல் இனிமை காத்து வாழ்வது என்பதுதான். இதில் பல சாதனைகளும் சாதரணமாகிவிடும்.

இதற்கு உதவவே வேதங்கள்,கலைகள், புராணங்கள் என்று புரிந்து கொண்டு பார்த்தால் எல்லாம் சரியாக இருப்பது தெரியவரும்,

மனதிற்குத்தான் எல்லாமுமே.மனம் சிலசமயம் சொன்னதைக்கேட்கும், சில சமயம் முரண்டுபிடிக்கும்,அலையும்,எப்படி வேண்டுமானாலும் மாறும், இதை கட்டுக்குள் கொண்டுவந்து இந்த உயிரும், உடலும் மேன்மை அடையவே இந்த வேதங்கள்,கலைகள், புராணங்கள், மதங்கள் அனைத்தும்

மனம் அடங்கிவிட்டதா,? அன்பாகவே, கருணையாகவே மாறிவிட்டதா,? இனி எச் சூழலிலும் இதிலிருந்து மாறாதா? அப்படியானால் உங்களுக்கு சொல்லப்பட்டதல்ல வேதங்கள்,கலைகள், புராணங்கள்.! இனி உங்களுக்கு அவை தேவையுமில்லை.

மனதோடு போராடிக் கொண்டு இருப்பவருக்கே இவையெல்லாம் தேவை

ஆன்மீகத்தை சரியாக புரிந்து கொண்டால் நமக்கு நாமே பிணக்கு, அல்லது பிறரிடம் சமுதாயத்திடம் பிணக்கு என்பது எழாது. அப்படி எழுந்தால் நாம் சரியாக புரிந்து கொள்ளவில்லை என்பதே உண்மை.

*** ***

நோய் இல்லாத உடம்பை இறைவனிடம் ஒப்புவிக்க வேண்டும் என்பது ஆன்மீகம் என்றால் இறைவனுக்கு இந்த மனிதர்களின் உடம்பை வைத்து என்ன செய்யப் போகிறான், ஒருவேளை சிவன் வெட்டியான் என்பதால் இந்த கருத்தோ?:))

நோய் இல்லாத உடம்பில் இறைவன் குடி கொள்வான் என்பதே குறிப்பு, நாம் உடல்நலம், உயிர்நலம் பேண வேண்டும் என்பதே இங்கு முக்கியம்,

நோய் வந்த பின் மருந்து என்பதை விட நோய் வராத நிலை வேண்டும் என்பதே ஆன்மீகம், வந்த பின் நோயை குணமாக்கலாம் என்பது அறிவியல். இதில் எந்த முரண்பாடும் இல்லை. ஆன்மீகத்துக்குள் அறிவியல், நோக்கம் ஒன்றுதான்.

மதம், சடங்கு சம்பிரதாயம் எல்லாமே ஆன்மீகத்தில் அடக்கம்தான், தேவையானதுதான். ஆனால் அதை புரிந்து கொள்வதில், அல்லது எடுத்து விளக்குவதில்தான் தவறு நேர்கிறது, எல்லாமே மனிதகுல மேன்மைக்காக ஏற்படுத்தப்பட்டது என்ற உணர்வோடு பார்த்தால் எல்லாமும் சரியாகவே இருக்கும்.

சரி இப்போது சிந்தியுங்கள் ஆன்மீகம் என்றால் ஒதுங்கிப்போவோரா நீங்கள்?:))

மீண்டும் சந்திப்போம்

Saturday, August 15, 2009

குழந்தையும், சுதந்திர தின அனுபவமும்

சுதந்திர தினத்தில் காலையில் 9.00 மணிக்கு குழந்தைகளோடு பள்ளிக்கு சென்றேன். இரண்டுமணி நேர நிகழ்ச்சி, கொடியேற்றம், பின்னர் மாணவ மாணவியரின் அணிவகுப்பு, கூட்டு உடற்பயிற்சி என கொண்டாட்டங்கள் தொடர்ந்தன.

தொடர்ந்து சிறப்பு விருந்தினர் உரை., பள்ளியில் சுமாராக 1800 பேர் அமைதியாக அமர்ந்து கேட்டனர். பெரிய மைதானத்தில் ’ப’ மாதிரி மாணவ மாணவியர் அமர்ந்து கேட்டுக்கொண்டிருந்தனர். அனைவரும் தூய வெண்ணிற ஆடை அணிந்து அமர்ந்திருந்தது கண்கொள்ளா காட்சியாக அமைந்து இருந்தது.

இறுதியாக விழா நிறைவு பெறும் நேரம் நெருங்கிவிட்டது. என்னைப்போன்ற பெற்றோர்கள் அனைவரும் சுமார் 200 அடி தொலைவில் கூடி நின்றிருந்தோம். அங்கிருந்து பார்த்தால் மாணவ மாணவியரைப் பார்த்த போது அவர்களின் முதுகுப்பக்கமே எங்கள் பார்வையில் பட்டதால் வெண்மையைத் தவிர வேறெதுவும் தெரியவில்லை.

இதிலும் எனக்கு பொதுவாக பள்ளியினுள் என் மகளை எளிதில் அடையாளம் காண இயலாது. எந்த குழந்தையைப் பார்த்தாலும் என் குழந்தைபோலவே இருக்கும், அல்லது என் மகள் கூட வேறு பெண்போல தெரிவாள். இந்நிலை பலநாட்கள் ஆகியும் இப்படித்தான்.

விழா நிறைவு பெற்றது. இனி குழந்தைகளுக்கு இனிப்பு வழங்கும் நிகழ்ச்சி. வகுப்பு ஆசிரியைகள் இனிப்பு வழங்கிக் கொண்டு வந்தார்கள்.

நாங்கள் நின்றிருந்த பகுதியில் இருந்து சுமார் ஒன்றரை வயது குழந்தை ”அக்கா, அக்கா” என்ற சத்தம் போட்டபடி விழா நடந்த இடத்தை நோக்கி ’தத்தக்கா பித்தக்கா’ என்று ஓட ஆரம்பித்தது. அந்த நடையைப் பார்த்தால் கீழே விழாமல் நடக்க கற்றுக்கொண்டு ஒரிரு நாட்கள் தான் ஆகி இருக்க வேண்டும்.

குழந்தையின் பெற்றோர் ”அங்கே போகாதே” என சப்தமிட, அவனோ அதை காதில் வாங்காமல் ”அக்கா அக்கா” என்றவாறு 50 அடி தூரமேனும் சென்றிருப்பான்.

நானும் இன்னும் சிலரும் அக்குழந்தையின் பெற்றோரிடம் ”தடுக்காதீர்கள், பள்ளியினுள் விழா முடிந்தபின்னர் தானே போகிறான், போகட்டும்.” என்றோம்

அவர்களுக்கோ தனியாக செல்லும் குழந்தை விழா நடைபெற்ற இடத்திற்கு தனியே அவ்வளவு தூரம் நடக்க இயலுமா? நல்லபடியாக சென்றாலும் அங்கே எப்படி 1800 மாணவர்களுக்குள் தன் அக்காவை எப்படி கண்டுபிடிக்கப்போகிறான்., குழந்தைகள் கூட்டத்தில் சிக்கி விடுவனோ என்ற எண்ண ஓட்டத்துடன் நின்றிருந்தனர்.

நானோ ’உறுதியாக சென்று விடுவான், தன் அக்காவை எப்பாடுபட்டாவது கண்டுபிடித்து விடுவான். மற்றவர்கள் குழந்தையைக் கண்டு ஒதுங்கி விடுவார்கள்’ என்ற நம்பிக்கையுடன் நின்றிருந்தேன்.

மாணவ மாணவியர் எழுந்து நின்றனர். ஒழுங்குடன் வகுப்பறை திரும்ப அவர்களுக்கு உத்தரவிடப்பட்டு இருக்கிறது. யாரும் கலையவில்லை. அருகில் நின்றிருந்த வகுப்பு ஆசிரியைகளின் தலையசைப்புக்கு ஏற்ப நகர எத்தனிக்கின்றனர்.

இதற்குள் அவர்களின் முதுகுப்பக்கமாக இந்த குழந்தை அக்கா, அக்கா என்று சப்தமிட்டவாறு ஓடிக்கொண்டே இருக்கிறான். சுமார் 100 அடிதூரம் சென்றிருப்பான். இதெல்லாம் ஓரிரு நிமிடங்களுக்குள் நடந்து கொண்டிருக்கிறது.

எனக்கோ ஒரு ஆனந்த உணர்வு, அந்த குழந்தை ஓடிக்கொண்டிருக்கும் அழகு, அது தன் அக்காவை உள்ளார்ந்த உணர்வோடு அழைத்துக் கொண்டே செல்லும் பாங்கை பார்த்து, அது நானாக இல்லையே என்ற ஏக்கத்துடன் பார்த்துக்கொண்டே இருந்தேன்.

மாணவ மணிகள் குழந்தை ஓடிய திசை நோக்கி திரும்பி வகுப்பறை நோக்கி நகரத் தொடங்கினர். சற்றே ஒழுங்கு குலைய முதலில் ஓடி வந்த நாலைந்து சிறுமிகளில் ஒருத்தி குழந்தையிடம் ஓடி வர அக்கா என்றவாறே அவளிடம் ஓடி ஒட்டிக்கொண்டான். அவர்கள் இருவரும் எங்களை நோக்கி வர அந்த மாணவி உண்மையிலே அந்த குழந்தையின் அக்காதான், வேறு அல்ல என்பதை அறிந்தேன்.

அதிர்ந்து நெகிழ்ந்து நின்றேன்.

இது எப்படி நடந்தது?

பெற்றோரோ அக்குழந்தை நிச்சயம் ஓடிச்சென்று அக்காவை அக்கூட்டத்தில் கண்டுபிடிப்பது கடினம் என நினைத்தனர்.

நானோ குழந்தைகளை தன்னம்பிக்கையோடு வளர்த்த வேண்டும், அவன் தனியாகவே சென்று தன் அக்காவை எப்பாடுபட்டாவது எவ்வளவு நேரமானாலும் கண்டுபிடித்துவிடுவான், இவனைப்பார்த்து இவன் அக்கா வந்து விட வாய்ப்பும் உண்டு என திடநம்பிக்கையோடு நின்றிருந்தேன்.

ஆனால் நடந்ததோ இரண்டு நிமிடத்திற்குள்ளாக தன் அக்காவை முதல் ஆளாக கண்டுபிடித்து எப்படி சேர்ந்தான்?

இதிலிருந்து நான் மீள சில நிமிடங்கள் ஆயிற்று.

நாமாக இருந்தால் ஆளை அடையாளம் கண்டுபிடிக்கும்வரை பொறுத்திருந்து. பார்த்தவுடன் அவர் காதில் விழும் வண்ணம் சப்தமிட்டு கவனத்தை ஈர்த்து அருகில் செல்வோம்.

தன் அக்கா எங்கு அமர்ந்திருப்பாள் என்று தெரியாது, முதுகு காட்டி அமர்ந்திருக்கும் அந்த கூட்டத்தில் தன் அக்கா யாரென்று தெரியாமலே ‘அக்கா அக்கா’ என அழைத்து சென்று அக்குழந்தை ஒரு நிமிடத்தில் சேர்ந்தது எப்படி?


குழந்தையின் அக்காவோ அந்த கூட்டத்தில் வரிசையில் பின்னதாக அமர்ந்திருந்தது எப்படி,?

கூட்டம் முடிந்த சில நொடிகளில் தன் தம்பியை அடைந்தது எப்படி?

இந்த நிகழ்வை என்னவென்று சொல்வது?

விதியின்படிமுன்னரே தீர்மானிக்கப்பட்டது என்றா?

அறிவியல்பூர்வமாக தற்செயலாக அமைந்த நிகழ்வு என்பதா?

மனதில் எந்த வித மாச்சரியங்களும் இல்லாமல் அன்பு ஒன்றே மனதில்நிறைந்திருக்க ஒன்றை நோக்கி சென்றால் அது கிடைத்தே தீரும் என்ற இறைவிதியாகக் கொள்வதா?


--- புரியாத பொன்னுச்சாமி