"மூச்சைக் கவனி, முழுவிழிப்புநிலையில் இரு!" புத்தர்
Showing posts with label மன அழுத்தம். Show all posts
Showing posts with label மன அழுத்தம். Show all posts

Friday, August 18, 2023

வெகுமதி

வெகுமதி என்றால், பரிசு என்பது நாம் அனைவரும் அறிந்தே இருந்தாலும், அது பொருளாகவோ பணமாகவோதான் நிகழ்காலத்தில் உணரப்படுகிறது.

நமக்கு, பல்வேறு தொழில் சூழல், குடும்ப, சமூக சூழல் காரணங்களினால் அவ்வப்போது மனச்சோர்வு ஏற்படத்தான் செய்யும். அப்போதெல்லாம் மீண்டு வருவது எப்படி ?  ஒவ்வொருவரின் மனவலியும், ஒவ்வொருவிதம். இதற்கு, வெளியிலிருந்து வரும் உணவு, இசை, பாடல், ஆட்டம், பயணம் எல்லாம் அதை குறைந்த காலத்திற்கே மறக்க வைக்கும். 

மனம், தன்னிலைக்கு ஏற்றவாறு, வெளியிலிருந்து வரும் வார்த்தைகளை, எழுத்துக்களை தன்வயமாக எப்போது உணர்கிறதோ, அப்போது உற்சாகம் கொள்ளும். வெறுமனே, தன்னம்பிக்கை ஊட்டும் வார்த்தைகள் நம்மை மீட்டெடுக்காது. 

நம்மை மீட்டு எடுத்து, உற்சாகம் ஊட்டும் வார்த்தைகள் எப்படி இருக்கும் தெரியுமா? நம் மனதுக்கு முதலில் ஆறுதல் அளிக்கும். நாம் செய்த காரியங்கள், நம் குணங்களில் உள்ள நியாயங்களை முழுமையாக ஏற்று வெளிப்படுத்தும். நாம் செல்லும் வழி, தனி வழியாக தெரிகிறதே? சரிதானா என்ற ஐயம் தோன்றும்போது, சரியான வழிதான் என்று உணர்த்தும். பின்னர் அம்மனச்சோர்வில் இருந்து மீண்டு வருவது எப்படி என்ற பாதையை காட்டும்.

அப்படியான ஒரு கவிதை பகிர்தல்.



(William Arthur Ward - The Rewarding)               

இவையெல்லாம் கடினமானதுதான். ஆனாலும் இவை வாழ்வில் நமக்கு வெகுமதியை தருகின்றன. இதை அனுபவமே, உண்மையென உணர்த்தும்.

செயல் ஊக்கம் கொண்டவன், விழி மூடி சும்மாவிருக்க மாட்டான்.  விழிப்புணர்வு பெறுவோம். ஆற்றலை வளர்ப்போம்.

(நன்றி: விஜயா பதிப்பகத்தின் நலவாழ்வின் படிகள் நான்கு என்ற நூல். ஆசிரியர் பேரா.எம்.இராமலிங்கன் அவர்கள் நூலில் இருந்து கவிதை பகிர்வு)

Friday, January 4, 2019

மன உளைச்சலை தவிர்ப்போம். மகிழ்ச்சியோடு இருப்போம்

மன உளைச்சல் - இதைப் பற்றி எழுதவே சற்று யோசனையாக உள்ளது. 

உடலுக்கு வரும் நோய்களை பல்வேறு பரிசோதனைகள் மூலம் கண்டறிந்து மருத்துவம் பார்க்கலாம். முன்னேற்றங்களையும் அப் பரிசோதனைகள் மூலமே சரிபார்த்து சிகிச்சையினைத் தொடரலாம்

ஆனால் மன உளைச்சல் ஆரம்ப நிலையில் அவ்வளவு எளிதாக கண்டறியப்பட முடிவதில்லை. அப்படி ஓரளவிற்கு கண்டறிந்து, மருத்துவ சிகிச்சை செய்தாலும் அவர்களின்  முன்னேற்றம் குறித்து எதனாலும் உறுதிப்படுத்த இயலாது. நன்றாக இருப்பது போல காட்டிக்கொள்வார்கள் . திடீரென எந்த முடிவுக்கும் இறங்கி விடுவார்கள்.

வீட்டுக்கு பக்கத்து வீதியில் இருக்கும் ஒருவரின் மனைவி, ஒரு மாதம் முன்னதாக, 8ம் வகுப்பு படிக்கும் பெண் குழந்தையை ( ஹாஸ்டலில் படித்துக்கொண்டு இருப்பவள்)  விட்டுவிட்டு, வேறொருவருடன் ஓடி விட்டார். மனமொடிந்த கணவர் இரயில் விழுந்து கதையை முடித்துக்கொண்டார்.  குழந்தையின் நிலை என்ன? பாசம் என்றால் என்ன என்று உணர்த்த வேண்டிய பெற்றோர் எங்கே ?

 அடுத்து, வயதான உறவினர் ஒருவர் தன் இரண்டு மகள்களுக்கும் திருமணம் முடித்துவிட்டார்.. வயதான தம்பதியருக்குள் ஏதோ பூர்விகச் சொத்து குறித்து கருத்து வேறுபாடு இருந்திருக்கின்றது..வயதான ஆண் கோழைத்தனமாக தன்னை மாய்த்து கொண்டார். மாதம் 40 ஆயிரம் பென்சன் வந்து கொண்டிருக்கின்றதாம். மிச்சம் இருக்கிற வாழ்நாளை மகிழ்ச்சியாக வாழ்ந்து இருக்க வேண்டியவர், போதுமான பணம் இருந்தும் பேரன் பேத்திகளோடு மகிழ்ந்து இருக்க வேண்டியவர் அன்பும் அரவணைப்பும் இல்லாததால் கிளம்பிவிட்டார். குடும்பத்தில் சொத்தினால் நிம்மதி இழப்பு

இன்னொரு உறவினர் மிக நிறைவான வாழ்க்கை,  சகோதரர்கள் ஒன்றிணைந்த தொழில், ஒற்றுமையே பலம் என்று  பலரும் பாராட்டும் வகையில் பேரோடும் புகழோடும் இருக்க , அதில் ஒருவரின் மனைவி தன்னை மாய்த்துக் கொண்டார்.  இவர்களுக்கு கல்லூரி செல்லும் மகனும், மேல்நிலைக்கல்வி பயிலும் மகளும் உண்டு. காரணம் உடல்நிலைக் கோளாறுகள். மற்றும் மற்றவர்களோடு எளிதில் பழகாமை. கணவரின் வெற்றிக்கு உறுதுணையாக, குடும்பத் தலைவியாக வழிகாட்ட வேண்டியவர் இப்போது இல்லை.. எல்லாம் இருந்தும் எதுவும் இல்லை என்ற நிலை இப்போது. குடும்பத்திற்கான தாயன்பு எங்கே ?

கூர்ந்து கவனித்தால் மன உளைச்சலுக்கு உள்ளானவர்களுக்கு தன்னைச் சார்ந்தவர்களுக்கு தான் செய்யவேண்டிய கடமை, பொறுப்பு, வழிகாட்டுதல் எல்லாமே மறந்து விடுகிறது. மாறாக தன்னைச் சார்ந்தவர்களை பழிவாங்கும் முகமாக தன்னை மாய்த்துக் கொண்டு விடுகிறார்கள். மேற்கண்ட மூன்று நிகழ்வுகளிலுமே பணப் பற்றாக்குறை இல்லை ..மனதிலே மகிழ்ச்சி இன்னும் தேவையாக இருந்திருக்கின்றது. நிம்மதி இன்னும் தேவையாக இருந்திருக்கின்றது. எங்கோ மனச்சிக்கல் ஏற்பட்டு விடுகின்றது.

உயிர் வாழ்வது முக்கியம். பொருள் ஈட்டுவதும், காப்பதும் இரண்டாம்பட்சம்
கெளரவம், மதிப்பு, இதெல்லாம் உயிரைவிட முக்கியமானதா?  இல்லை. பிறர் தன்னைப் பற்றி என்ன நினைப்பார்கள் என்பதும் முக்கியமானது இல்லை.  வெட்கம், மானம், ரோசம் என்பதை எல்லாம் நாம் உயர்வதற்கு உதவுமானால் வைத்துக்கொள்ளலாம்.. மாறாக நம் மனதில் குற்ற உணர்ச்சியைத் தோன்றச் செய்யுமானால் தூக்கி எறிந்துவிட்டு வேலையைப் பார்ப்பதே மேல். இதுவே மன உளைச்சலைத் தவிர்ப்பதற்கான வழி

உணர்வோம்., செயல்படுவோம், வாழ்வில் மகிழ்ச்சி, நிம்மதி, வெற்றி உண்டாகட்டும்

Monday, April 13, 2009

மன அழுத்தமா... டிடெக்டிவா மாறுங்க....

மனிதர்களுக்குத் தோன்றும் விதவிதமான கவலைகளை எந்தவொரு புத்தகத்திலும் (பதிவிலும்) அடக்கிவிட முடியாது. கவலைகளுக்கு முடிவே கிடையாது.

எதைப் பற்றியாவது, சதா யோசித்துக்கொண்டும், கவலைப்பட்டுக் கொண்டும் இருப்பது மனித சுபாவம்.

சின்னச் சின்னதாகத் தோன்றும் கவலைகளைப் பற்றி நாம் அதிகம் கவலைப்பட வேண்டியதில்லை. காரணம் அவை தோன்றும் வேகத்திலேயே காணாமல் போய்விடும்.

பஸ் வருமா, வராதா என்ற கவலை, பஸ் வந்தால் தீர்ந்துவிடும்.பரிட்சையில் பாஸ் ஆகிவிட்டால், பரீட்சை பற்றிய கவலை தீர்ந்துவிடும்.

அதேசமயம் பரீட்சையில் பெயில். அது மூட் அவுட் ஆக்கும் சங்கதிதான்.ஆனால் அடுத்தது என்ன செய்வது என்று சிந்தித்து, அப்போதே அதிலிருந்து மீண்டு விட்டால், எந்த பிரச்சினையும் இல்லை.

மீளா விட்டால்தான் பிரச்சினை, மன அழுத்தம் என்ற விஷயம் இங்கேதான் வருகிறது.

மன அழுத்தம் ஏற்பட்டால், மனம் மட்டுமல்ல, உடலும் சேர்ந்தே பாதிப்படைகிறது. அதனால்தான் ”பிரச்சினையா? என்னால் முடியவே முடியாது சாமி” என சோர்ந்து ஒடுங்கி விடுகின்றனர் பலர்.

அதோடு நம் எண்ணங்கள் மாறுகின்றன. நமது சாப்பிடும் முறை மாறுகிறது.தூக்கம் கெடுகிறது. மூச்சு குறுகி விடும். மொத்தத்தில் நம்மை முற்றிலுமாக தலைகீழாக புரட்டிப் போட்டு விடுகிறது.

மன அழுத்தம் தாக்கும்போது பயப்படக்கூடாது. உடைந்து போகக்கூடாது


மன அழுத்தம் என்பது ஒரு மூட், மனநிலை. அவ்வளவுதான்..அதில் அழுந்திவிடக் கூடாது.


ஆரம்பநிலையில் ’வாழ்க்கையே வெறுமையா இருக்கு. ரொம்ப போரடிக்குது.என்ன செய்யறதுன்னே தெரியலே ’இப்படி ஓர் எண்ணம் வந்தால், உடனடியாக அதற்கான காரணத்தை அறிய வேண்டும். என்ன செய்தால் வெறுமை ஒழியும், எதில் நமக்கு ஆர்வம் இருக்கிறது என்று நமக்குநாமே டிடெக்டிவ்வாக மாறி கண்டு பிடிக்க வேண்டும்.

மாறாக மனதிற்குள் போட்டு புதைத்துக் கொண்டால் பிரச்சினை தீராது. மாறாக அதிகரிக்கவே செய்யும்.யாரிடமாவது மனம் விட்டுப் பேசவேண்டும். கணவனோ, மனைவியோ, பெற்றோர் அல்லது நண்பராக இருக்கலாம். அப்படி பேசினால்தான் மன பாரம் குறையும். புதிய ஐடியாக்கள் கிடைக்கும்.

சரி, பிறருக்கு மன அழுத்தம் இருப்பதை உணர்ந்தால் நாம் என்ன செய்யலாம்?

அவர்களோடு மனம் விட்டுப் பேசவேண்டும். மன அழுத்தம் உள்ள பெரும்பாலானவர்கள், பிறருடைய அரவணைப்பை எதிர்பார்ப்பார்கள். நல்ல விதமாக யாரவது நாலு வார்த்தை சொல்லமாட்டார்களா? என்று ஏங்குவார்கள்.

என்ன....அவர்கள் மன அழுத்தத்திலிருந்து வெளியே வர இனிமேல் உதவுவீர்களா?

(தொடரும்)

நன்றி; கருத்து நோ ப்ராப்ளம் -- (சிபிகே சாலமன்) நூலில் இருந்து