"மூச்சைக் கவனி, முழுவிழிப்புநிலையில் இரு!" புத்தர்

Wednesday, July 5, 2017

பெண்களுக்கான மேல்உள் ஆடை - கவனிக்கவேண்டியவை

அழகு மட்டுமல்ல; ஆரோக்கியத்திற்கும்நல்லது!


உள்ளாடை தேர்வில், பெண்களுக்கான விழிப்புணர்வு தகவல்களை கூறும், சென்னையைச் சேர்ந்த மகப்பேறு மருத்துவர், டாக்டர் மகேஸ்வரி:

 உள்ளாடை என்பது உடை சம்பந்தப்பட்ட விஷயம் மட்டுமல்ல. உடலுக்கு நாம் கொடுக்கும் முக்கியத்துவம், அதன் தேர்வில் அடங்கியிருக்கிறது. மேலும், அது ஒரு தன்னம்பிக்கை காரணியும் கூட.

ஒவ்வொரு பெண்ணும் வாழ்நாளில், தன் மார்பக அளவில், ஆறுமுறை மாற்றங்களைச் சந்திக்கிறாள். பதின்வயதுகளில் ஆரம்பிக்கும் மார்பக வளர்ச்சி, அதன் இறுதி ஆண்டுகளில் முழுமையான வளர்ச்சியை எட்டியிருக்கும். கர்ப்ப காலத்தின் போது அதிகரிக்கும் மார்பக அளவு, குழந்தை பிறந்த பின், பால் சுரப்பிகளின் காரணமாக மேலும் அதிகரிக்கும்.

தாய்ப் பாலுாட்டுவதை நிறுத்திய பின், பழைய நிலைக்குத் திரும்பும் மார்பகத்தில் தொய்வு ஏற்பட்டிருக்கும். அடுத்ததாக, மெனோபாஸ் காலத்திலும் மார்பக அளவில் மாற்றம் ஏற்படும். வயதான காலத்தில் மார்பகம் சுருங்கும்.

இப்படி, பெண்களின் வாழ்நாள் முழுக்க மார்பக அளவு மாறியபடி இருக்கும். ஆனால், பலர் அதற்கேற்றவாறு, தங்களின் பிரேசியர் அளவை மாற்றுவதில்லை. இந்த அலட்சியம் களையப்பட வேண்டும்.

பொதுவாக, பெண்கள் பிரேசியர் வாங்கும்போது, 32, 34, 36 என, உடற்சுற்றளவின் அடிப்படையிலேயே அதை தேர்ந்தெடுக்கின்றனர். ஆனால், அதன், கப் அளவே மார்பகத்தின் அளவைக் குறிப்பது. அது, 'ஏ, பி, சி' என, மூன்று அளவுகளில் கிடைக்கிறது.உதாரணமாக, 34ஏ என்பது, உடலில் சுற்றளவு மற்றும் அதையொத்த பெரிய கப் சைஸ் கொண்டது. 34பி, சராசரி கப் சைசும், 34சி, சிறிய கப் சைசும் கொண்டது. எனவே, உடல் சுற்றளவு மட்டுமின்றி, கப் சைசையும் கேட்டு வாங்க வேண்டியது அவசியம்.

அதிக இறுக்கமான அல்லது தளர்வான பிரேசியர் அணிவதை தவிர்க்க வேண்டும். இறுக்கமாக அணியும் போது வலி, அரிப்பு, எரிச்சல், பட்டைகள் அழுத்துவதால் ஏற்படும் புண் என்று பிரச்னைகள் ஏற்படலாம். எனவே, மார்பகத்துக்குச் சரியான வகையில் சப்போர்ட் கொடுக்கும் உள்ளாடைத் தேர்வு அவசியம்.

பாலுாட்டும் நேரத்தில் உள்ளாடை அணிய வேண்டாம், அணியக் கூடாது போன்ற மூடநம்பிக்கைகள் உள்ளன. உண்மையில், அப்போது மார்பகத்தில் உண்டாகும் வலி, கட்டிகள், பால் கட்டும் பிரச்னைகளை தவிர்க்க, கட்டாயம் பிரேசியர் அணிய வேண்டும்.

குழந்தை பிறப்புக்கு பின் சில பெண்கள், பிரேசியர் அணியும் பழக்கத்துக்கு விடை கொடுத்து விடுகின்றனர்; அது மிகத் தவறு. அழகு மட்டுமல்ல, இது ஆரோக்கியமும் சம்பந்தப்பட்டது. மார்பகத்தின் கீழ்ப் பகுதியில் வியர்வை தங்கி அரிப்பு, புண் ஏற்படுவதைத் தவிர்க்கவும், செல்களின் தொய்வைக் குறைக்கவும், பெண்களுக்கு உள்ளாடை மிக அவசியமாகிறது.

சிந்தெடிக் ரகங்கள் தவிர்த்து, காட்டன் பிரேசியரையே பயன்படுத்த வேண்டும். வெயிலில் அதிகம் செல்வோர், புறஊதாக் கதிர்களை உள்ளிழுக்கும் அடர் நிறங்கள் தவிர்த்து, வெளிர் நிறங்களில் உள்ளாடையைத் தேர்ந்தெடுக்கலாம்.

உடல் எடை அதிகமானால், மெலிந்தால் அதற்கேற்ப பிரா அளவையும் மாற்றிப் பயன்படுத்த வேண்டும். மேலும், ஒரு பிரேசியரை ஆறு முதல் ஒன்பது மாதம் வரை பயன்படுத்தலாம். எலாஸ்டிக் லுாசாகி, ஹூக் உடைந்த, துணி நைந்து போனவற்றை பயன்படுத்த வேண்டாம்.

நன்றி
தினமலர்
05/07/2017