"மூச்சைக் கவனி, முழுவிழிப்புநிலையில் இரு!" புத்தர்

Thursday, August 13, 2009

கடவுள் எனபது என்ன? கட -- உள்

கடவுள் இருக்கிறாரா இல்லையா என்பது குறித்து வலையுலகில் தற்போது வால்பையன் அவர்கள் விவாதங்களை ஆரம்பித்து வைத்துள்ளார்.


அவரது கருத்துகள் கடவுள் மறுப்பாக இருந்தாலும், இலாவகமாக பதில் கொடுத்துக் கொண்டிருக்கிறார். கேள்வி கேட்கப்பட்ட விதத்திற்கு பதிலடியாக உள்ளது. அதற்கு வரும் பின்னூட்டங்கள் சில சமயங்களில் ஆரோக்கியமாகவும்,சில சமயம் அர்த்தமற்றதாகவும் (என் பார்வையில்), இருக்கின்றது.


கடவுள் இருக்கிறார் என சில நண்பர்கள் விவாதம் செய்யும் தொனியில், எனக்கு சில அடிப்படை விசயங்கள் அதில் தவறு என நினைக்கும்போது, அதை மிக வலுவாகவும், தர்க்கரீதியாகவும் எதிர்க்கின்ற இவர்களிடமும் எனக்கு குழந்தைகள் விளையாட்டுக்கு அடித்துக்கொள்வதை பார்க்கின்ற உணர்வே ஏற்படுகிறது.


சரி விசயத்துக்கு வருவோம்


உங்கள் கையை நான் வெட்டி விடுகிறேன், இப்போது உங்கள் மனநிலை எப்படி இருக்கும்? உங்களை சேர்ந்தவர்கள் என்னை என்ன செய்யப் போகிறார்கள்.?


என் கைய வெட்டின நீயோ, உன் வம்சமோ இனிமேல் இருக்கக்கூடாது என நினைப்பீர்கள்.

உங்களை சேர்ந்தவர்களோ என்னை உயிரோடு விட்டால்தான் ஆச்சரியம்.


சரி அரசாங்கமும், நீதித்துறையும் என்ன செய்யப் போகிறது?. சிறையில் அடைத்து தண்டனை தந்துவிடும்.


அட ஒண்ண சொல்ல மறந்திட்டேனே


நான் ஒரு டாக்டர், நீங்க என்னிடத்தில் அறுவைச்சிகிச்சைக்கு வந்த நோயாளி !


உங்கள் கையை நான் வெட்டி விடுகிறேன், இப்போது உங்கள் மனநிலை எப்படி இருக்கும்? உங்களை சேர்ந்தவர்கள் என்னை என்ன செய்யப் போகிறார்கள்.?


என் கைய எடுத்து, என்ன காப்பத்தின டாக்டர், நீங்களும் உங்க வம்சமும் நீண்ட நாளைக்கு நல்லா இருக்கனும் என நினைப்பீர்கள்.


உங்களை சேர்ந்தவர்களோ என்னை தெய்வமாக நினைக்கா விட்டால்தான் ஆச்சரியம்.


பாருங்க மக்கள் எப்படின்னு??


ஒருத்தர் கைய வெட்டினா அது தப்புங்கிறாய்ங்க..

இன்னொருத்தர் கைய வெட்டினா ரொம்ப நல்லதுங்கிறாய்ங்க...

ய்ஏஏஏஏஏன்ன்ன்???


செயலிலே இல்லை சரி என்பதும் தவறு என்பதும். அதன் விளைவைப் பொறுத்தே தீர்மானிக்கப்படுகிறது.


இதற்கும் கடவுளுக்கும் என்ன சம்பந்தம்??


தேங்காய், பழம் உடைத்து வைத்தால் சாமியா வந்து சாப்பிடுது? ஆனா அது ஏன் என்று மெதுவா உள்ளே கேளுங்கள், மூட நம்பிக்கையா நினைக்காதீங்க, பொருத்தமான விடை வந்து சேரும். அதுதான் தத்துவம், உள்ளடங்கிய விளைவு,


உருவ வழிபாட்டு முறையின் செயல்பாடுகளில், உள்ள உள்ளார்ந்த அர்த்தங்களை உணருங்கள். இதற்கு என்ன அர்த்தம் என்றால் யார் சொன்னாலும் நம்புங்க, கூடவே நம்பாதீங்க


(பொன்னுச்சாமி சகவாசத்தால் வந்த வினை, புரியற மாதிரி எழுத மறந்து போச்சு)


உருவ வழிபாட்டின் எந்த ஆன்மீக செயலாக இருந்தாலும் அதன் விளைவை கூர்ந்து கவனியுங்கள். (செயல் செய்து முடித்த பின்), ஆடி மாதம் கடவுளுக்கு கிடாவெட்டா, விளைவு உயிர்ப்பலி தேவையான்னு யோசிங்க வேண்டாம்னு ஒதுக்குங்க


திருவண்ணாமலை கிரிவலம் போகனுமா என்னபலன் மேலோட்டமா பார்த்தாக்கூட நடைப்பயிற்சிதானே! யாருக்கு நட்டம்? போயிட்டு வாங்க.


கடவுள் விசயமும் இப்படித்தான், ரொம்ப ஆராய்ச்சி பண்ண வேண்டாம்,

பிராமணரா? முடிந்தால் சரியான நபரா என ஆராயுங்கள், சொல்றத கேளுங்க, பிடிக்கலை விட்டுடுங்க, ஆனால் சொல்றத செய்துபார்த்துட்டு, தவறுன்னு தெரிஞ்சா விட்டுடுங்க, ஆனா செய்யாமலேயே அது எப்படி சரியா வருமான்னா குழப்பம்தான் மிஞ்சும்.

எல்லாமே மனசுக்குத்தான், அது நிறைவடையத்தான் இத்தனையும்

சும்மா இயல்பா இருங்க, கடவுளப் பத்தி கவலைப்படாம இருங்க, அவரு உங்கள பார்த்துக்குவாரு. அல்லது பார்த்துக்க மாட்டாரு அப்படின்னும் வச்சுக்குங்க , ஆனா இயல்பா இருங்க,


நீங்க உங்களுக்கும் பிறருக்கும் நல்ல விளைவுகளை தரக்கூடிய செயல்களை மாத்திரம் செய்யுங்க, அது எதுவானாலும் சரி


செயல் செய்யும்போது ஆராய்ச்சி பண்ணாம, செய்வதற்கு முன் ஆராய்ச்சி பண்ணுங்க.,

தெரியல, புரியல அப்படின்னா செய்துட்டு அப்புறமா கூட ஆராய்ச்சி பண்ணுங்க

இத அனுபவத்தில் கொண்டு வந்து பாருங்க, விவாதம் குறையும், விளக்கம் கூடும்.



இனி வேதாத்திரி மகானின் கவிதைகள் இங்கே உங்கள் சிந்தனைக்கு....



கடவுள்

கடவுள் யார் என அறிய ஆர்வம் கொண்டு

கருத்துடனே ஆராயும் அன்பா கேளாய்

கடவுள் ஒன்றே பூரணமாம், உவமை இல்லை

கருத்தொடுங்கிக் கருத்தறிந்த நிலையில் மெளனம்

கடவுள் அணு,ஒலி,ஒளி,ஈர்ப்பு இவையாக உள்ளான்

கண்டிடலாம் அவனை எங்கும் இயற்கையாக

கடவுளே அணு, அண்ட பிண்டமானான்

கருத்தானான் அந்நிலையே நீயும் நானும்.

* * *

கட-உள் என்று சொல்லிவிட்டான் கருவறிந்தோன்

கருத்தறியான் ஊன்றி இதைக்காணவில்லை;

கட-உள் என்ற ஆக்கினையின் குறிப்பை மாற்றி

கண்டறிந்த நிலைக்கே அப்பெயரைக் கொண்டான்

கட-உள் என்ற இரு சொல்லை ஒன்றாய்ககூட்டி

கடவுள் என்றே சொல்லிச்சொல்லி வழக்கமாச்சு

கடவுள்! என்று மனிதன் ஓர் குறிப்புத்தந்தான்

கடவுள் எங்கே? என்று பலரும் தேடுகின்றார்


நன்றி மீண்டும் சந்திப்போம்

Wednesday, August 12, 2009

திருந்திய கலைஞரும், நானும்


சென்னை:""இந்திய அரசியலின் ஜாதகத்தை கணிக்கக் கூடிய அளவில் தி.மு.க., வெகு விரைவில் இடம்பெறும்,'' என முதல்வர் கருணாநிதி கூறினார். தினமலர்-12/08/09

ஜாதகம் பார்க்கும் சோதிடக் கலை நிபுணர்கள் இனி மனமகிழ்வு கொள்ளலாம். சோதிடம் இல்லை, மூடநம்பிக்கை என சொல்லும் 'பெரியார் வழி வந்தவர்கள் நாங்கள்' என தன்னை சொல்லிக் கொள்ளும் கலைஞர், சோதிடக்கலையில் ’இந்திய அரசியலின் ஜாதகத்தை’ கணிக்கும் நுட்பத்தை விரைவில் அறிமுகப்படுத்த போகிறார். அவரை உலகில் அளவில் பாராட்டிய முதல் நபர் என்ற பெருமையும், முடிந்தால் பட்டமும் எனக்கே சேர வேண்டும் என்பதை பின்னாளில் வேறு யாரும் பிரச்சினையாக்காமல் இருக்க இங்கே பதிவு செய்கிறேன்.

இலங்கை தமிழர்களின் ஜாதகத்தை மாற்றி எழுதியபோதே நான் சந்தேகப்பட்டேன். இவர் ஒரு தேர்ந்த சாமர்த்தியமான சோதிடக் கலை நிபுணர் ஆவார் என்று. சரி இனி எதிர்காலத்தில் கழக கண்மணிகள் எல்லாம் சோதிடக்கலையில் தேர்ந்து விடப்போவதால், எதற்கும் தற்சமயம் இத்தொழிலில் உள்ள அனைவரும் ஒன்று கழகத்தில் சேர்ந்து விடுங்கள், அல்லது வேறு தொழில் பார்ப்பது உத்தமம்.

இது குறித்து மேலும் நுட்பங்களை அறிய உள்ளூர் கழக, அல்லது வலையுலக கழக நண்பர்களோடு தொடர்பு கொள்ளுங்கள்.

பெரியார் வழி வந்த தொண்டர்களுக்கு என் அனுதாபங்கள். என்ன கலைஞர் இருந்தால் அவ்வப்போது, நெற்றியில் திருநீறு இடுவது மூடப்பழக்கம் என ஒரே நாளில் உலகத்தமிழர்களை எல்லாம் சென்று சேரும்படி கொள்கைகளை பரப்புவார். இனி ….


--அங்கலாய்ப்புடன்

புரியாத பொன்னுச்சாமி

Monday, August 10, 2009

சரியை, கிரியை, யோகம், ஞானம்

பேரின்பத்தை உணர்வதற்கென்று நான்குவித மார்க்கங்கள் உள்ளன.

*சரியை மார்க்கம்

*கிரியை மார்க்கம்

*யோக மார்க்கம்

*ஞான மார்க்கம்

சரியை மார்க்கம்: சிலைகளை வைத்து வணங்குதல், கோவில் கட்டுதல், குடமுழுக்கு நிகழ்த்துதல், தேர் உள்ளிட்ட அத்தனை உருவ வழிபாட்டு ஆராவாராங்களும் ‘சரியை மார்க்கம்’ எனப்படும் முதல் நிலையைச் சார்ந்தவை. இந்த மார்க்கத்தின் வழியே மன வைராக்கியம் பெறலாம். சில சித்துவேலைகள் கைவரப் பெறலாம்.இந்த மார்க்கத்தின் வழியே உயர் ஞானம் எனப்படும் பேரின்ப அனுபவத்தை அவ்வளவு எளிதில் பெற இயலாது.

கல்கத்தாக் காளிகோவில் பூசாரியான இராம கிருஷ்ணபரமஹம்சரும், திருக்கடையூர் அபிராமி கோவில் பூசாரியான அபிராமப்பட்டரும்தான் நமக்குத் தெரிய இந்த மார்க்கத்தின் வழியே உயர்ஞானம் பெற்றதாகத் தெரிகிறது.

கிரியை மார்க்கம்

தகுந்த குருவிடம் மந்திர உபாசனை பெற்று, அதைவிடாமல் பயிற்சி செய்து மனோலயப்படுதல் கிரியை மார்க்கம் எனப்படும். பல்வேறு சக்கரங்கள் வரைதல், கற்பனையாய் தெய்வ உருவங்களை ஆராதித்தல் உள்ளிட்ட அத்தனை மனப்பயிற்சிகளும் இந்த மார்க்கத்தில் அடக்கம். மெஸ்மரிசம்,ஹிப்னாடிசம் உள்ளிட்ட ஈர்ப்பு சக்திகள் இந்தப் பயிற்சிகளால் வரும். உயர்ந்த ஞானிகளின் அன்பை மானசீகமாகப் பெறலாம். சிறுதெய்வங்கள், குட்டிச்சைத்தான்கள் போன்றவற்றின் துணை பெறலாம். இந்த மார்க்கத்திலும் மனதின் ஆதிக்கம் இருப்பதால், உயர் ஞானம் எனப்படும் பேரின்ப அனுபவத்தை இதன் வழி பெறுதல் எளிய செயல் அல்ல.

சிலர் இதன் வழி அற்பக்காரியங்களைச் சாதித்துக் கொள்வார். ஆனால் இது நிலையானது அல்ல. யாகம், இரத்தப்பலி,யானைதானம்,என அலைபவர்கள் இந்த மார்க்கத்தை நம்பியிருப்பவர்களே.

அடுத்தது யோக மார்க்கம்,

ஆசனப் பயிற்சிகள் செய்து உடலை ஒழுங்கு செய்தல். மூச்சுப் பயிற்சிகள் செய்து மனத்தை ஒழுங்கு செய்தல்;இடைவிடாத தியானத்தால் உயிரை ஒழுங்கு செய்தல்; உள் ஒளியைக் காணும்வரை இடைவிடாது இந்த மார்க்கத்தின் ஒழுக்கங்களைப் பின்பற்றுதல்.

இது ஏறத்தாழ இறைஅனுபவத்திற்கு மிக அருகில் கொண்டு சேர்க்கும் ஓர் அற்புதமான மார்க்கம். ஆனால் நம்பத்தகுந்த குருநாதரின் வழிகாட்டுதல் இருந்தால் மட்டுமே இந்த மார்க்கத்தில் முழு வெற்றியை அடைய முடியும். சகல சித்திகளும் கைகூடும் வாய்ப்பு உண்டு.

உண்ணல், உடுத்தல், காமஇன்பம் அனுபவித்தல் உள்ளிட்ட சிற்றின்ப நுகர்ச்சிகளில் நிறைவு காணாதோர் இந்த மார்க்கத்தில் மிக எளிதில் சறுக்கி விழ வாய்ப்பு உண்டு.



அடுத்தது ஞானமார்க்கம். எல்லோருக்கும் உகந்த மிக இனியமார்க்கம் இதுதான். தாயுமானவர் இந்த மார்க்கத்தைக் ’கனி’ எனப் பாராட்டுவார்.

’கூறும் சரியை, கிரியை, யோகம், ஞானம் எனும் நான்கும் முறையே அரும்பு, மலர், காய், கனிக்கு இணையாகும்!’ என்பது அவரது கருத்து.

ஞானமார்க்கத்தின் அடிப்படைத் தேவைகள் என்ன தெரியுமா?

வற்றாத அன்பு,

குறையாத ஆனந்தம்,

கொடுத்து மகிழும் கொண்டாட்டம்,

குறைகளை கண்டு கொள்ளாத குழந்தைத்தனம்,

கோவலன் கொடுக்காத அன்பைக் கொடுத்ததாய்க் கருதி நிறைவுடன் வாழ்ந்த கண்ணகியைப்போல்,இறைவன் நமக்கு கொடுக்காத இன்பங்களைக்கூட கொடுத்ததாய்க் கருதி நன்றியுடன், ‘காதலாகிக் கசிந்து கண்ணீர் மல்க’ வணங்கும் விசுவாசம்

இவைதாம் ஞானமார்க்கத்தின் அடிப்படைத் தேவைகள்.

திருமணம் செய்து சிற்றின்பம் வழியே வருபவர்க்கும் இந்த மார்க்கம் பொருந்தும். காமத்தை விரும்பாத வள்ளலார், அவ்வையார் உள்ளிட்ட அத்தனை ஞானியர்க்கும் பொருந்தி வந்த மார்க்கம்.

மன இறுக்கத்துடன் முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடிக்கிறதா? அல்லது வழிகாட்டிய குருவின் வாலைப் பிடித்துக் கொண்டு வாழ்த்துப்பா பாடிக்கொண்டு திரிகிறீர்களா? இந்த மார்க்கத்தை உணர வாய்ப்பே இல்லை.

எல்லாம் வல்ல இறையாற்றலை மானசீகமாக சரணடைவதைத் தவிர வேறு யார் காலிலும் விழுந்து வணங்க கூச வேண்டும்.

இந்த நான்குவகை மார்க்கங்களைப் பின்பற்றுவோர்க்கு எந்தெந்த வகையில் இறையாற்றல் துணைநிற்கும் என்பதைக் கூறும் ஞானநெறிப்பாடல் இதோ. (ஈசன் என்றால் இறை அவ்வளவுதான். உடனே உருவ வழிபாட்டில் சென்று விடாதீர்கள்)

’சரியையிலே ஈசன்

சட வடிவாய் நிற்பான்

கிரியையிலே மந்திரத்தில்

கிட்டி அருகிருப்பான்

ஊனமில்லா யோகத்தில்

உள் ஒளியாய் நிற்பான்

ஞானத்தில் தானாகுவான்!’


ஏற்கனவே நீங்கள் இருக்கும் மார்க்கம் எது என்பதில் முதலில் தெளிவு பெறுங்கள். இனி எந்த மார்க்கத்தில் செல்வது? என்பதை அடுத்ததாக முடிவு செய்யுங்கள். அதற்குரிய தகுதிகளை முழுமையாக வளர்த்துக்கொள்ள விளையாட்டாய் முயற்சிசெய்யுங்கள்.

இவ்வளவுதான் ஆன்மீகம், இதை மையமாக வைத்துப் பார்த்தால் நண்பர்கள் ஒவ்வொருவரும் ஆன்மீகத்தைப்பற்றி சொல்லும் விளக்கம் இவற்றிற்குள் நன்கு பொருந்தி வருவதை உணரலாம்.


நன்றி: கவனகர் முழக்கம் ஆகஸ்ட் 2002

Friday, August 7, 2009

விதி - முயற்சி இரண்டிற்கும் உள்ள வித்தியாசம்

விதியும் முயற்சியும் ஒரு நாணயத்தின் இரண்டு பக்கங்கள். எனவே இரண்டையும் தனித்தனியாய்ப் பிரிக்க முடியாது. விதி எதிர்மின்வாய்-Negative(-) என்றால் முயற்சி என்பது நேர்மின்வாய்–Positive(+)

இயல்பாய் இருப்பவை, நிகழ்பவை எல்லாம் விதி; நாமாக மாற்றுபவை எல்லாம் முயற்சி.

இருள், தானாக வரும்; எனவே அது விதி. வெளிச்சம், தானாக வராது. ஒரு நட்சத்திரம், சூரியன், நிலவு, விளக்கு இருந்தால்தான் வரும். எனவே அது முயற்சி.



ஓர் இடம் குப்பையாக மாறுவதும் ஒழுங்கின்றி இருப்பதும் தானாக நிகழ்பவை. எனவே அது விதி. ஓர் இடம் தூய்மையாக இருப்பதும், ஒழுங்குடன் திகழ்வதும் தானாக நிகழாது. நாமாக மாற்ற வேண்டும்; எனவே அது முயற்சி.

அறியாமை, பிறப்பிலிருந்தே இயல்பாய் நம்மிடம் இருப்பது. எனவே அது விதி. ஆனால் அறிவு என்பது கல்வி, உயர்ந்தோர் எனப் பல்வேறு வழிகளில் நாமாகத் தேடிப் பெறுவது; எனவே அது முயற்சி.

வெறுப்புணர்ச்சி என்பது இயல்பாக நம்மிடம் இருப்பது. எனவே அது விதி.
அன்பு என்பது படிப்படியாய் அம்மாவிடம் தொடங்கி உறவினர், நண்பர்,பிற உயிர்கள் என வளர்த்துக்கொள்ள வேண்டிய உணர்வு. எனவே அது முயற்சி. (வெறுப்புணர்வை அகற் முயற்சி செய்தால் அன்பு தானாய் மலரும்)

பிறரிடமிருந்து எதையும் வாங்குவது என்பது குழந்தைப்பருவம் முதலே நம்மிடம் இருக்கும் இயல்பான குணம். எனவே அது விதி; பிறருக்கு கொடுத்து மகிழும் ஈகை என்பது நாமாக வளர்த்துக் கொள்ள வேண்டிய குணம். எனவே அது முயற்சி.

இது போல் பொறாமை என்பது விதி; பொறுமை என்பது முயற்சி.
சுயநல உணர்வு என்பது விதி;பொதுநல உணர்வு என்பது முயற்சி.
பொய்யை நம்புவது விதி; உண்மையை உணர்வதும் நம்புவதும் முயற்சி

நம் முன்னோர் அறியாமல் செய்த தவறுகளும், நாம் செய்த தவறுகளும் நம்மை வருத்த வருவது விதி.அதை முன் கூட்டியே அறிவால் உணர்ந்து நம்மை இறையருளால் பலப்படுத்திக் கொண்டு நம்மைத் தற்காத்துக் கொள்வது என்பது முயற்சி.

இன்னும் இதுபோல் சொல்லிக் கொண்டே போகலாம். அவற்றை உங்கள் சிந்தனைக்கே விட்டு விடுகிறேன்.


நன்றி: கவனகர் முழக்கம்

நண்பர்களே விதி என்ற வார்த்தைக்கு விளக்கங்களைப் பார்த்தீர்களா. இன்னும் வேறு விதமாகவும் சமயம் வாய்க்கும்போது பார்ப்போம்.

Wednesday, August 5, 2009

மனிதருள் வேறுபாடு ஏன்?

மனிதருள் வேறுபாடு

கருவமைப்பு, உணவு வகை, காலம், தேசம்,
கல்வி, தொழில், அரசாங்கம், கலை, முயற்சி,
பருவம், நட்பு, சந்தர்ப்பம், பல ஆராய்ச்சி,
பழக்கம், வழக்கம், ஒழுக்கம் இவற்றிற்கேற்ப
உருவமைப்பு, குணம், அறிவின் உயர்வு, கீர்த்தி
உடல்வலிவு, சுகம், செல்வம்,மனிதர்கட்கு
வரும் வகையும் அவற்றின் தரம் அளவுக்கேற்ப
வாழ்க்கைநிலை பேதமுடன் தோன்றக் கண்டேன்.

ஞானக் களஞ்சியம் - 177



ரசாயன அமைப்பும் மாற்றமும்

கருஅமைப்பு, உணவுவகை, எண்ணம், செய்கை,
ககனத்தில் கோள்கள் நிலை, சந்தர்ப்பத்தால்
வரும் இயற்கை நிகழ்ச்சிகளின் மோதல்-எல்லாம்
வாழும் உயிர்கட்குப் பல ரசாயனங்கள்
தரும், மாற்றும், தரமொக்க இன்பதுன்பம்,
தகுந்த அளவாம். இதிலோர் சக்திமீறி
பெருகி ரத்தச் சுழல் தடுக்க நோயாய் மாறி
பின்னும் அதிகரித்துவிட மரணம் ஆகும்


ஞானக் களஞ்சியம் - 816

வேதாத்திரி மகான் அவர்களின் பாடல்கள் நம் சிந்தனைக்கு:

வாழ்த்துக்கள்

Friday, July 31, 2009

சமயத்தில் ஒத்துழையா - சிலேடை

கோவை வானொலிக்காக நடந்த நிகழ்ச்சியில் திருக்குறள்.பெ.இராமையா அவர்கள் பங்கேற்றபோது, அவரிடம் ஒரு புலவர், ”மின்சாரத்திற்கும் சம்சாரத்திற்கும் சிலேடையாக ஒரு வெண்பாவைப் பாடவேண்டும்” என்றார்.

”ப்ளிச்...” என்று ஆரம்பித்த சிலேடைப் பாடலின் முதல் வரி, அனைவரையும் சிரிப்புக் கடலில் ஆழ்த்தியது.


சமயத்தில் ஒத்துழையா
ஷாக்அடிக்கும் தொட்டால்
இமைசிமிட்டும் இன்பமதை
ஊட்டும்-நமை உயர்த்தும்
தன்சாரம் குன்றாத
தன்மையால் எஞ்ஞான்றும்
மின்சாரம் சம்சாரமே!


சமயத்தில் ஒத்துழையா...’ என்பதில் ‘மின்சாரம்,சம்சாரம் இரண்டுமே எந்த நேரத்தில் காலை வாரும் என்று சொல்ல முடியாது. எதிர்பாரத நேரத்தில் தகராறு செய்து நமக்கு அதிர்ச்சியை (tension) உண்டாக்கும்.

ஷாக் அடிக்கும் தொட்டால்...’ என்பது அடுத்த வரி, தகராறு செய்யும் சமயத்தில் இரண்டின் மீதும் கையை வைக்காதே. பட்...டென்று அடித்து விடும்.

இமைசிமிட்டும்...’ அதிக அழுத்தம் (ஹீவோல்ட்), குறை அழுத்தம் காரணமாக மின்சார விளக்குகள் ‘ப்ளிச்..’ என எரிவதும், மங்கலாக ஒளிர்வதும் இயற்கை.
அதுபோல் வீட்டுக்கு வரும் விருந்தினரைப் பொறுத்து சுறுசுறுப்பாய் இயங்குவதும், மந்தமாய் இருப்பதும் சம்சாரத்தின் இயற்கை.
அதாவது பிறந்த வீட்டுச் சொந்தங்களாகிய அப்பா, அம்மா, அண்ணன், தங்கை என்று வந்தால் சுறுசுறுப்பாய்ப் ‘ப்ளிச்’சென்று மின்னும். புகுந்த வீட்டுச் சொந்தங்களாகிய மாமியார்,நாத்தனார் என்று வந்துவிட்டால் மந்தமாகி விடும்’.

இன்பமதை ஊட்டும்..’ வீட்டில் மின்விசிறி சுழல, மின் அடுப்பு எரிய,குளிர்பெட்டி குளிர, விளக்குகள் ஒளிர, மின்சாதனப் பொருட்கள் இயங்க என எல்லாவற்றிற்கும் மின்சார ஓட்டம் சீராக இருந்தால் நமக்கு இன்பமான மனநிலை தரும். அதேபோல் ஒரு குடும்பத்தின் அத்தனை இன்பங்களுக்கும் காரணமாய் இருந்து நமக்கு இன்பத்தை தருவது சம்சாரமே.

நமை உயர்த்தும்...’ ஒரு வீட்டின் உயர்வுக்கும் நாட்டின் பொருளாதார உயர்வுக்கும் மின்சக்தி ஓர் அடிப்படைத் தேவை. அதேபோல் ஒரு குடும்பத்தின் உயர்வுக்கு சம்சாரம் ஓர் அடிப்படைத் தேவை

தன்சாரம் குன்றாத தன்மையால்’ நேரம் கருதியோ, ஆளைக் கருதியோ மின்சாரம் தன் ஆற்ற்லைக் குறைத்துக் கொள்வது கிடையாது.240 வோல்ட் மின்சக்தி என்றால் யார், எப்போது தொட்டாலும் ஒரே மாதிரிதான் மின் அதிர்ச்சி இருக்கும். அதேபோல் இல்லத்தில் எப்போதும் தன் மதிப்புக் குறையாமல் பார்த்துக் கொள்வது சம்சாரத்தின் இயல்பாக இருக்கும்.

மேற்கூறிய காரணங்களால் மின்சாரமும் சம்சாரமும் ஒரே இயல்புடையவை
என பாடலை முடித்தார்.பதின்கவனகர் திரு.இராமையா பிள்ளை.

எப்படி..?

சுவையாக உள்ளதா சிலேடை..?!!!!!!

நன்றி: கவனகர் முழக்கம் தி.ஆ.2033 வைகாசி வெளியீடு