"மூச்சைக் கவனி, முழுவிழிப்புநிலையில் இரு!" புத்தர்
Showing posts with label லேனா. Show all posts
Showing posts with label லேனா. Show all posts

Tuesday, April 14, 2009

தீயினும் கொடியது காமம்! (18+)

மலரினும் மெல்லியது காமம் என்ற வள்ளுவன், இன்று வாழ்ந்தால் இப்படிச் சொல்வானா என்பது ஐயமே. 8 வயது பள்ளிச் சிறுமியை அவளது பள்ளியின் தலைமை ஆசிரியரே கற்பழிக்கிறார். தம் மனைவிக்கு, தாம் ஊரில் இல்லாதபோது பாதுகாப்பாக இருக்கட்டும் என்று 62 வயது தாய்மாமனையும் 63 வயதுச் சித்தப்பனையும் தம் மனைவியுடன் இருக்கச் செய்கிறார்.

இந்த 25 வயதுப் பெண்ணை இந்த இரு கிழவர்களும் கற்பழித்துக் கொன்றும் போடுகிறார்கள். இந்தத் தாய்மாமன் இப்பெண்ணுக்குச் சிற்றப்பன் முறை. அந்தச் சிற்றப்பனோ மாமன்முறை.

முறையாவது வெங்காயமாவது? வயது, தரம் உணராமல் காமம் வளர்த்துக்கொள். அதை யார் மீது வேண்டுமானாலும் பிரயோகி என்று கீழ்த்தரமாக எண்ணுமளவு பண்பாடு பற்றி வாயின் இருமுனைகளும் காதுகளைத் தொடுமளவு பேசும் தமிழகத்தில் இவ்விரு சம்பவங்களும் நடந்துள்ளன. இன்னும் கேவலமான உதாரணங்களையும் என்னால் காட்ட முடியும்.

இவ்விரு சம்பவங்களும் சில தினங்களின் இடைவெளியில் நடந்துள்ளதாலும், மிக அண்மையில் நடந்துள்ளதாலும் தமிழகம் எங்குதான் போய்க்கொண்டிருக்கிறது என்று மதிப்பிடத் தோன்றியது.

இவ்விரு சம்பவங்களிலிருந்து இரு உண்மைகளைத் தெரிந்து கொள்ள வேண்டும் என்று நம் சமூகத்திற்கு உணர்த்தத் தோன்றியதன் விளைவே இக்கட்டுரை.

பெண்பிள்ளைகளைக் குடும்ப உறுப்பினர்களாகக் கொண்டவர்கள் எவரையும் எளிதில் நம்பாதீர்கள். ‘சேச்சே! அவரைப் பற்றி அப்படியெல்லாம் கனவில்கூட நினைக்கக்கூடாது’ என்கிற நம்பிக்கைகளெல்லாம் தவிடுபொடியாகிக்கொண்டிருக்கிற காலம் இது.

பார்க்க அப்பாவியாய் இருக்கிற பலர் மனத்திற்குள் பொல்லாத வக்கிரங்களை வளர்த்துக்கொண்டிருக்கிறார்கள். இந்தப் புற்றிலிருந்தா இந்தப் பாம்பு கிளம்பியது என ஊகிக்க முடியாத நிலை.

சமூகத்தின் வக்கிரக் குணங்களைச் சூடேற்றிவிட்டுக் கொண்டிருப்பவை இன்றைய ஊடகங்களே.

எதுவும் தவறில்லை; சும்மா அனுபவி என்றே இன்றைய பொறுப்பற்ற ஊடகங்கள் பல உணர்வுகளுக்கு உசுப்பேற்றிக் கொண்டிருக்கின்றன.

இவற்றில் பத்திரிகைகளின் பங்கும் உண்டு என்றாலும் இவற்றின் பங்களிப்புக் குறைவே. சின்னத்திரையும், பெரிய திரையும், கணினி, செல்போன்கள் வழியேயும் மக்கள் மனத்தில் கொடூர எண்ணங்கள் வளர்க்கப்படுகின்றன. அடைகாத்து அடைகாத்து அவை குஞ்சு பொரிக்கின்றன.

வாய்ப்புகள் உருவாகும்போது வடிகால்களை உருவாக்கிக் கொள்கிறார்கள். வாய்ப்புக் கிட்டாதவர்கள் வேறு வழியின்றி நல்லவர்களாக நமக்குக் காட்சியளிக்கிறார்கள்.

ஊடகங்களின் போக்கை மாற்றி அவற்றிற்குப் பொறுப்புணர்ச்சியை ஊட்டமுடியும் என்பதில் எனக்கு அரைகுறை நம்பிக்கையே இருக்கிறது. ஆனால் யார் மனசில யாரு? யார் மனசில என்ன இருக்கு? என்பதை ஊகிக்க ஆற்றலற்ற நாம், பெண்களுக்கு மிகப் பாதுகாப்பான சூழலை ஏற்படுத்திக் தருவதிலாவது கூடுதல் கவனம் செலுத்தலாம்.

(கல்கண்டு இதழின் ஆசிரியர் லேனா தமிழ்வாணன் அவர்களின் சமீபத்திய கட்டுரை படித்தேன். அதை நண்பர்களோடு பகிர்ந்துகொண்டேன். இவருடைய ஒரு பக்க கட்டுரைகளும் நன்றாகவே இருக்கும். வாய்ப்பிருந்தால் தொடர்ந்து படியுங்கள்)

நன்றி: தமிழ்வாணன்.காம்