"மூச்சைக் கவனி, முழுவிழிப்புநிலையில் இரு!" புத்தர்
Showing posts with label வள்ளலார். Show all posts
Showing posts with label வள்ளலார். Show all posts

Tuesday, April 28, 2009

பெரியார், வள்ளலாருக்கு கொடுத்த மதிப்பு !

”கடவுள் இல்லை, வேதங்களை கொளுத்து, விநாயகர் சிலைகளை உடை’... ”என்பது போன்ற முழக்கங்களை ஒருபுறம் எழுப்பினாலும் மறுபுறம், ஏதேனும் ஓர் உயர்ந்த ஒழுக்க நெறியையும் மக்களுக்குக் காட்ட வேண்டும்’ என்ற எண்ணம் தந்தை பெரியார் உள்ளத்தில் இருந்தது.

அதனால் திருக்குறளைப் படிக்க வேண்டும் என்று வற்புறுத்தினார். திராவிடர் கழக மாநாடு நடத்தும்போதெல்லாம் அதற்கு முதல்நாள் திருக்குறள் மாநாடு என ஒன்றை நடத்தித் திருக்குறளின் சிறப்புகளை அறிஞர்கள் வாயிலாகக் கூறச் சொல்லிக் கேட்க வைத்தார்.

வள்ளல் பெருமானின் சமரச சன்மார்க்கக் கொள்கை பெரியாருக்கு மிகவும் பிடித்திருந்தது. ஒரு முறை வடலூர் சென்று சத்திய ஞானசபையை பார்க்கவேண்டும். அவரது கொள்கைகள் குறித்து விளக்கம் கேட்கவேண்டும் என விருப்பம் கொண்டார்.

அதன்படி ஒருமுறை தம் தொண்டர்கள் புடைசூழ வடலூருக்கு வந்துவிட்டார். சத்திய தருமச்சாலையின் அணையா அடுப்பையும், அங்கு நிகழும் அன்னதானப் பணிகளையும் பார்த்து முடித்தபின் சத்தியஞானசபையைப் பார்க்கவேண்டி அந்த வாசலுக்கு வந்தார்.

உடன் வந்தவர்கள் எல்லாம் ’திமுதிமு’வென்று ஞானசபை வளாகத்திற்குள் புகுந்துவிட்டனர். ஆனால் தந்தை பெரியாரோ பொறுமையாக ஞானசபையின் வெளியே உள்ள ஒவ்வொரு அம்சத்தையும் ஆராய்ச்சி செய்தபடி வாசலுக்கு முன் வந்தார்.

வந்தவர் ஞானசபையின் வாசலில் உள்ள கல்வெட்டில் இருந்த வாசகத்தைத் தம் மூக்கு கண்ணாடியை தூக்கிப் பிடித்தபடி படித்தார். அதில்,

’கொலை, புலை தவிர்த்தவர்கள் மட்டும் உள்ளே செல்லவும்

என்ற வாசகம் வள்ளல் பெருமானால் எழுதப் பெற்றிருந்தது. உடனே வழிகாட்டியாளராய் அருகில் நின்றிருந்த ஊரன் அடிகளாரிடம்,”இது என்ன?” என்று கேட்டார் பெரியார்.

"கொலை செய்யாதவர்கள், புலால் உண்ணாதவர்கள் மாத்திரம்தான் உள்ளே செல்ல வேண்டும் என்று அய்யாவே எழுதச் சொன்ன வாசகம்” என்று ஊரன் அடிகள் பதில் சொன்னார்

”அப்படியா? அப்ப உள்ளே செல்லும் அருகதை எனக்கில்லை. ஏனென்றால் நான் புலால் உண்ணுபவன்” என்று கூறியபடி அய்யா உள்ளே நுழையாமல் திரும்பினார்.

உடனே ஊரன் அடிகள் ”அதனால் ஒன்றும் தவறில்லை அய்யா. எழுதிப் போட்டிருக்கிறதே தவிர யாரும் அதைப் பின்பற்றுவதில்லை. பேரறிஞர் அண்ணா,கலைஞர் என எல்லோருமே வந்திருக்கிறார்கள். உள்ளே போய்ப் பார்த்திருக்கிறார்கள்.” என்று கூறினாராம்.

உடனே தந்தை பெரியார் சொல்லும் செயலும் ஒன்றாய் இருப்பதுதான் உண்மையான ஒழுக்கம். அவர் வாழும்போது அவர் கட்டளையை அவரது ஒப்புதலுடன் மீறினால் கூடத் தவறில்லை. அவர் இல்லாதபோது அவரது கட்டளையை மீறுவது அறிவு நாணயம் இல்லை. அத்தகைய தவறை நான் ஒருபோதும் செய்யமாட்டேன்” என்று கூறியபடி சத்திய ஞானசபையை பார்க்கமலேயே புறப்பட்டு விட்டாராம்.

இந்த நிகழ்ச்சியை கோவை ஆர்.எஸ்.புரம் மரக்கடை வசந்தம் அய்யா
கூறியதாக கவனகர் முழக்கம் ஏப்ரல் இதழில் வெளியிடப்பட்டு இருக்கிறது.

தலைவர் என்பவர் எப்படி இருக்கவேண்டும் என்பதற்கு பெரியார் ஒரு உதாரணம். அவர் வழி வருபவர் எப்படி இருக்கக்கூடாது, அல்லது தலைவர் கடைபிடிப்பது பின்னர் எப்படி எல்லாம் மாறிவிடுகிறது என்பதற்க்கு இந்த விஷயத்தில் மட்டும் பேரறிஞர் அண்ணா, கலைஞர், மற்றும் பிற ஆன்மீக அன்பர்கள் உதாரணமாக இருக்கிறார்கள் என்பதற்க்கு இந்நிகழ்ச்சி ஓர் நல்ல உதாரணம்.

நன்றி: கவனகர்முழக்கம் ஏப்ரல் மாத இதழ்