"மூச்சைக் கவனி, முழுவிழிப்புநிலையில் இரு!" புத்தர்

Wednesday, December 10, 2014

கறையை நீக்குவதில் கவனம் தேவை!


 விலையுயர்ந்த துணிகளை வாங்குபவர்களுக்கு, அதை பராமரிக்கவும் தெரிந்திருக்க வேண்டும். பட்டுப் புடவைகளை உடுத்திக் களைந்த பின், வியர்வை, ஈரம் உலரும் வரை நிழலில் காய வைக்க வேண்டும். பின், 'அயர்ன்' செய்யாமல் அப்படியே மடித்து, மர அலமாரியில் வைத்து விட வேண்டும்.மறுமுறை தேவைப்படும் போது, அந்த சமயத்தில் எடுத்து, 'அயர்ன்' செய்து உடுத்திக் கொள்ளலாம். ஏனெனில், நீண்ட காலத்துக்கு, பட்டுப் புடவை, 'அயர்ன்' மடிப்பில் இருக்கும் போது, அந்த மடிப்பில் நுாலும், ஜரியும் சேதமடைந்து, புடவை கிழிந்து விடும்.

அதேபோல், ஆண்களின் டி-ஷர்ட், உள் பனியன் வகைகளை அடித்து துவைப்பது, முறுக்கிப் பிழிவது கூடாது. நிறம் மங்கிய வெள்ளை நிறத் துணிகள், வேட்டி போன்றவற்றில் அதன் நிறம் பளிச்சிட, கறை போக்குவதற்கான, 'லிக்விட்'களை நீரில் கலந்து, அதிகபட்சம், 10 நிமிடங்கள் ஊற வைத்து அலசினால் போதும். கூடுதல் வெண்மை வேண்டும் என, அதிக நேரம் வைத்தால் துணி தான் சேதமாகும்.

குழந்தைகளுக்கான உடைகளுக்கு அதிகப்படியான சோப்பு பவுடர், சோப்பை பயன்படுத்த வேண்டாம். குறிப்பாக, அவர்களின் உள்ளாடைகளில் படிந்திருக்கும் சோப்பின் காரம், அரிப்பு மற்றும் எரிச்சலை ஏற்படுத்துவதோடு, அசவுகரியத்தையும் கொடுக்கும்.துணிகளில் படிந்த கறையை எடுக்க, நெயில்பாலிஷ் அசிட்டோன் எனப்படும் கெமிக்கலை, அந்த இடத்தில் சில துளிகள் விட்டு, காட்டனால் மெதுவாக தேய்த்து எடுக்க, கறை நீங்கி விடும் அல்லது அசிட்டோன் சேர்க்கப்பட்டுள்ள நெயில் பாலிஷ் ரிமூவரையும் இதற்கு பயன்படுத்தலாம்.

 ஐஸ்கிரீம், பால், சாக்லேட், கிரேவி, லிப்ஸ்டிக் கறையை எடுக்க, துணியை, வாஷிங் பவுடர் கரைசலில் ஊற வைத்து, டிடர்ஜன்ட் சோப்பை அந்த இடத்தில் மட்டும் கவனம் கொடுத்து தேய்த்தால் போதுமானது.

எண்ணெய் கறை படிந்த ஆடைகளை, முக பவுடரை மிதமான சூட்டில் நீரில் கலக்கி, அந்த துளிகளை கறையில் விட்டு பிரஷ் செய்தால், கறை காணாமல் போய்விடும்.

ரத்தம், துரு, சூப், கிரேவி போன்றவை கறையாக படிந்திருந்தால், சில துளிகள் ஹைட்ரஜன் பெராக்சைடை அதில் விட்டு மெதுவாக தேய்த்தால் போய் விடும்.

ஆடைகளை ஊற வைக்கும் போது, அதிகளவு டிடர்ஜன்ட் பவுடர் சேர்ப்பதையும், அதிக நேரம் ஊற வைப்பதையும் தவிர்க்க வேண்டும். இதனால், எத்தனை முறை அலசினாலும், சோப்பின் ரசாயனம் துணியில் தங்கி விடும். காய வைத்து எடுத்தாலும், வெண்மை கோடுகள் இருக்கும்.எல்லா வகை ஆடைகளையும், உள்பக்கம் வெளியில் தெரியுமாறு உலர்த்தினால், நிறமும், ஆயுளும் பாதுகாக்கப்படும்

நன்றி தினமலர்