"மூச்சைக் கவனி, முழுவிழிப்புநிலையில் இரு!" புத்தர்

Friday, May 31, 2013

பயனற்றதைப் பேசாதே 2...ஓஷோ

பயனற்றதைப் பேசாதே என்ற இந்த கட்டுரையை படித்த பின் தொடர்ச்சியாக படிக்கவேண்டிய கட்டுரை இது :)

எண்ணங்களும், ஞாபகங்களும், கனவுகளும், கற்பனைகளும் நிறைந்த மனதின் போக்குவரத்தைக் கவனியுங்கள். அமைதியாய் தனியே  கவனியுங்கள். எவ்வித பாரபட்சமும் வேண்டாம்.. கருத்தை உருவாக்கிக் கொள்ளவும் வேண்டாம். கண்டனம் செய்யவும் வேண்டாம் உள்ளார்ந்த அமைதியுடன் என்ன நிகழ்கிறது என்று கவனித்துப்பழக வேண்டும். இப்படி சென்ற இடுகையில் பார்த்தோம்.

எழுத எளிதாக இருக்கும் இந்த சில வரிகள் நடைமுறையில் பொதுவாக எளிதில் கைகூடாது. அதாவது கடினமானது என்று அர்த்தம் அல்ல. எளிதான விசயத்திற்கு மனம் ஒத்துழைக்காததோடு,  தன்விருப்பத்திற்கு மனம் அலைந்து கொண்டு, அதை, நமக்கு கடினமானதாகவே காண்பிக்கும் :)

தொடர்சூழ்நிலைகளும் சாண் ஏறினால், முழம் சறுக்கும் என்றுதான் அமையும். மனம் தளரக்கூடாது. :) மனமே இங்கு, மனதை மேய்க்கும் வேலையை செய்தாக வேண்டும் என்பதையும் மனதின் ஓரத்தில் போட்டு வைத்துக்கொள்ளுங்கள்.:)

சரி இப்படி சாட்சி பாவத்தில் இருந்தால் மனஅமைதி வாய்க்கும். அந்த அமைதியை ருசி பார்த்து அனுபவமாக்கிக் கொள்ளுங்கள்.

அமைதியை குலைத்துக் கொள்ளாமல் தொடர்ந்து இந்த நிலையிலேயே இருக்க முடியும்போது நிதானமாய் செயல்பட முடியும். மீண்டும் ஞாபகப்படுத்துகிறேன். இந்த அமைதியை குலைக்கும் வண்ணம்தான் அனைத்தும் நடக்கும்.:) மனம் தன் விருப்பப்படி கோபமோ, கவலையோ படும். இங்கே நம்மால் அமைதிநிலையை தக்க வைத்துக்கொள்ள முடியவில்லை என்பதை குற்ற உணர்ச்சி ஏதுமின்றி ஏற்றுக்கொண்டு தாண்டி வாருங்கள். தொடர்ந்து திரும்பவும் கவனிக்க வேண்டியதுதான்.:)

அன்றாட வேலைகளுக்கு இடையில் இதை ஆரம்பித்தால் சிரமப்படவேண்டும். சும்மா இருக்கிறதாக தோன்றும் சமயத்தில், அல்லது வீட்டில் சின்ன சின்ன வேலைகள் செய்யும்போது மனதை கவனித்துப் பழகுங்கள். சித்திரமும் கைப்பழக்கம் என்பது போல் தொடர்முயற்சியில் மனம் இனி வேலைக்காகாது என்று அடங்க ஆரம்பிக்கும். இந்த விழிப்புணர்வும் , விருப்பு வெறுப்பற்ற தொடர்கவனித்தலும், நிலைத்த மன அமைதியைத் தரும்.

நம்முடைய கவனம் வெளியே ஒருமுகப்பட்டால் செயல்திறன் கூடும். இது உள்ளே விழிப்புணர்வு வரும் முன்னதான நிலை. இங்கே சுயமுன்னேற்றம் எளிதில் வாய்க்கும். இது தற்காலிகமானது. குறுகிய காலப் பலன்களைத் தரும் அல்லது தராமலும் போகலாம்.

மாறாக உள்ளே நிலைத்தால் வெளியாகும் உங்களின் திறமைகள் உங்களையே அதிசயப்படவைக்கும். :)