"மூச்சைக் கவனி, முழுவிழிப்புநிலையில் இரு!" புத்தர்

Monday, August 31, 2009

ஜோதிடமா? முன்வினையா? முயற்சியா?

நம் முன்னேற்றத்தை முடிவு செய்வது சோதிடமா? முன்வினைப்பதிவா?, முயற்சியா? விதிப்படிதான் எல்லாம் நிகழும் என்றால் முயற்சி எதற்கு?


இதை புரிந்து கொள்ள முதலில் நமது வாழ்க்கையை, மனதிற்கு உட்பட்ட வாழ்க்கை, மனம் கடந்த வாழ்க்கை என இருவிதமாக பிரித்துப்பார்ப்போம்.

மனதிற்கு உட்பட்ட வாழ்க்கை என்பது அஞ்ஞான வாழ்க்கை , இவ் வாழ்க்கை இகலோகம் எனப்படும் இவ்வுலகத்தை சுற்றி, சார்ந்தே அமையும்.

கல்வி, தொழில், மனைவி, மக்கள், உறவினர் சமுதாயம், பொருள் சம்பாத்தியம், அந்தஸ்து, அதிகாரம், புகழ் என இப்பூமியைச் சுற்றியே பின்னப்பட்ட வாழ்க்கை ஆகும்.

மனதிற்கு உட்பட்ட வாழ்க்கை என்பது மூலாதாரம், சுவாதிஸ்தானம், மணிபூரகம்,அனாகதம், விசுக்தி என்னும் ஐந்து ஆதாரத்துக்குள்ளேயே வாழ்வது, அதாவது விசுக்தி என்னும் கண்டத்தைத் தாண்டாத வாழ்க்கை ஆகும்

அத்தகைய கண்டம் கடக்காத அஞ்ஞான வாழ்க்கைக்கு முன்வினைப்பதிவு, முன்னோர் வினை, சோதிடம், என்கணிதம்,வாஸ்து ,விதி, சமுதாயம், தெய்வங்கள் என சகலத்தடைகளும் உண்டு. இவைகளின் பாதிப்பு உண்டு.

இவைகளிலிருந்து விடுபட முயற்சி கண்டிப்பாக தேவை, எதிர்நீச்சல் வெற்றியைத் தரும். இதற்கு தன்னம்பிக்கை முன்னேற்ற பயிற்சிகள், இதர ஆன்மீக அமைப்புகள், வழிமுறைகள் ஓரளவு உதவும், இது குறித்த விழிப்புணர்வும் நமக்கு வேண்டும். இல்லாவிடில் சிக்கலே. இது மனதின் தன்மைக்கு ஏற்ப ஒருவருக்கொருவர் வேறுபடும்.

வினைப்பதிவை நீக்கக்கூடிய வாழும் முறை,பரிகாரம், மனம் சார்ந்த பயிற்சிகள் போன்றவைகளினால் மேற்கண்ட தடைகளை கண்டிப்பாக குறைக்க அல்லது நீக்க முடியும்,

இந்த மனிதப்பிறப்பில், வாழ்வில், நமது தலைவிதியை நம் கையில் எடுத்து முயற்சியால் மாற்றலாம். ஆனால் அது அவ்வளவு எளிதானதல்ல, அதற்கும் மனமே மறைமுகமாக தடையாக இருக்கும். மனமே தலைவிதி எனலாம்.

இந்த மனதிற்கு உட்பட்ட வாழ்க்கைக்கு, முயற்சி நிச்சயம் உதவும்.

இதற்கு மனம் கடந்த வாழ்க்கை முறைக்கு உரிய வழிகளை பின்பற்ற வேண்டும்.

இனி  மனம் கடந்த வாழ்க்கை

மனம் கடந்த வாழ்க்கை என்பது ஞான வாழ்க்கை, இது இகலோகத்தை சார்ந்திருந்தாலும், பரலோகத்திற்குரிய எண்ணத்திலும், முயற்சியிலும் விடாமல் கவனம் வைத்திருக்கும் வாழ்க்கை ஆகும். திருமுறைகள்,மகான்கள் வழிபாடு, தவமுயற்சிகள் என்ற தொடர்புகள் ஏற்படுத்திக்கொண்டு வானத்தை நோக்கிய பயணமாக, வாழ்க்கை இருக்கும். இதில் மத வேறுபாடு கிடையாது.

மனம் கடந்த வாழ்க்கை என்பது விசுக்தி எனும் கண்டம் கடந்த
ஆக்ஞை, சகஸ்தரதளம் என்னும் ஆதாரங்களில் வாழும் தவ வாழ்க்கை ஆகும்.

இந்த ஞான வாழ்க்கைக்கு வந்தோர்க்கு சோதிடம்,விதி, முன்வினைப்பதிவு, சமுதாயம், தெய்வங்கள் போன்ற தடைகள் கிடையாது. மிச்சம், மீதி இருப்பதும் கரைந்து கொண்டே வரும். எந்த பாதிப்பையும் உண்டு பண்ணாது,

இதன் பின்னர் முயற்சி தேவைப்படுமா என்றால் இங்கு முயற்சிக்கு வேலையே கிடையாது, எதிர்நீச்சல் அவசியமே இல்லை. இதற்கு உதவுவதெல்லாம் ஞானியர் தொடர்பு, மந்திர உபாசனை, உடல் ஒழுக்கம், செயல் ஒழுக்கம் ஆகியவையே.

அறிவு தெளிவு அடைய அடையத்தான் அச்சம் விலகும், அத்தனை குழப்பங்களும் நீங்கும்

அவர் அவர் ப்ராரார்த்த ப்ரஹாரம் அதற்கானவன்
ஆங்காங்கிருந்து ஆட்டுவிப்பான், என்றும் நடவாதது
என் முயற்சிக்கினும் நடவாது;
நடப்பது என் தடை செய்யினும்
நில்லாது. இதுவே திண்ணம்.
ஆதலின், மெளனமாய் இருக்கை நன்று.

மகான் ரமணர் மனம் கடந்த நிலையில் வெளிப்படுத்திய இவ் மஹாவாக்கியம் பொருள் இகவாழ்விற்கானதல்ல, இதை இப்புவி வாழ்வுடன் இதை பொருத்தி பார்த்தால் குழப்பமே மிஞ்சும்,

நீங்கள் மனம் கடந்த வாழ்விற்கு தயாராகிறீர்களா? உங்களுக்காக சொல்லப்பட்டதே இது. வினைகள் கழிந்து மேல்நிலை அடைய அடைய, பரலோக வாழ்வு நமக்கு எப்படி வாய்க்கும் என்பது நமக்கு தெரியாது. ஆகவே முயற்சி செய்யாதே, உனக்கு இறைவிதிப்படி எப்படி அமைய வேண்டுமோ, அப்படி அமையும், மெளனமாக இரு என மனதிற்கு சொன்னது

ஆக பெரியோர்கள், ஞானியர் வாக்கினை சரியாக உணர்ந்து கொள்ளவேண்டுமானால் அவர்களின் மனோநிலைக்கு நம் மனம் செல்லவேண்டும்.

இல்லையெனில் நம் மனதின் தரத்தைக் கொண்டு எடைபோட்டுப் பார்த்தால் அர்த்தம் புரியாமல் முரண்பாடகத் தெரியும், ஆகவே தெளிவடைவோம். மனதிற்குட்பட்ட வாழ்க்கையில் வெற்றியடைவோம்.

மனம் கடந்த வாழ்க்கைக்கான பாதையில் பயணிப்போம்.

9 comments:

 1. மிக மிகச் சரியான சிந்தனை.தர்கம்.ஆய்வு,சிவா.

  ஆனால் வாழ்க்கை அவ்வப்போது தர்க்கங்களை,இலக்கணங்களை உடைத்து விட்டு ஒரு தாவு தாவும் பாருங்கள்,அப்போதுதான் அதன் விளையாட்டுப் புரியும்.

  ALWAYS THERE IS A QUANTAM LEAP UNEXPLAINABLE.

  ReplyDelete
 2. \\வாழ்க்கை அவ்வப்போது தர்க்கங்களை,இலக்கணங்களை உடைத்து விட்டு ஒரு தாவு தாவும் பாருங்கள்,அப்போதுதான் அதன் விளையாட்டுப் புரியும்.\\

  உண்மைதான்,

  அந்த தாவுதலை உணர தர்க்கமில்லாத மனம் வேண்டும். நடப்பது நிச்சயம், ஆனால் அதை
  உணரும் மனநிலைக்கு தயாராக இருக்கவேண்டியே
  இது போன்ற முயற்சிகள் நண்பரே

  வாழ்த்துக்கள்

  ReplyDelete
 3. நன்றி நண்பரே.


  உங்கள் பெருந்தன்மை என்னை வியக்க வைக்கின்றது. காலம் தீர்மானிக்கும் என்ன கைமாறு செய்ய வேண்டும் என்று.


  திரு. ஷண்முக பிரியன் கூட உங்கள் வாசகராக இருப்பதே நீங்கள் ஒரு நட்சத்திரம் என்று நண்பர் போல் சொல்லவா வேண்டும்.


  வாழ்க்கைக்கும் கொள்கைக்கும் சம்மந்தம் இல்லாமல் வாழ்ந்து கொண்டுருக்கும் இந்த பனியன் உலகத்தில் உங்களையும் என்னையும் சேர்த்து வைக்க வேண்டும் என்ற இறைவனின் சித்தத்தில் தான் இன்று திருமணத்தில் சந்தித்தோமோ? அதனால் தான் சுவாமிநாதன் அந்த காரண காரியத்திற்கு இறைவன் பணித்து இருப்பாரோ?


  எந்த நிறுவனங்களிலும் எத்தனையோ கசப்புகளை சந்தித்த போதிலும் எவரிடமும் எந்த வித காழ்ப்பு உணர்வுகளை காட்டாமல் எனது பயணம் இன்று வரை காட்டாறு போலத் தான் வந்து இன்று பலருடைய கவனத்தைப் பெற்றுள்ளது.


  நிகழ்காலத்தில் சிவா சாப்பிட்டுக்கொண்டுருக்கிறார். காத்துருக்க முடியுமா என்று சுவாமிநான் சொல்லியிருக்காவிட்டால் அந்த பழைய நட்பை இன்று புதுபித்து இருக்க முடியுமா?


  வாழ்க்கை என்பது வசதிகளை பெற்றுத் தந்துள்ளதா? என்ற கேள்விகளை விட உங்களிடம் உரையாடிய போது உணர்ந்த விஷயம் ஞானத்தை தந்துள்ளதா என்பதை தான் அறிந்தேன்.


  ஆச்சரியம் , வார்த்தைக்கும் வாழ்க்கைக்கும் அன்று போல் இன்று வரைக்கும் வித்யாசம் இல்லாமல் வாழ்ந்து கொண்டுருக்கும் உங்கள் வாழ்க்கை வெறும் வாழ்க்கை அல்ல. வாழ்ந்து முடித்தவன் பெற்ற ஞானம். இதுவும் இந்த வயதில் பெற்றுள்ளது தான் அத்தனையும் சிறப்பு.


  நீங்கள் சித்தர் இல்லை. ஆனால் சிறந்தவர் என்பதில் எந்த ஐயமும் எனக்கில்லை.


  வாரிசுகளுடன் வளமும் நலமும் பெற குலத்தை காத்துக்கொண்டுருப்பவளை பிரார்தனை செய்யும்


  ஜோதி கணேசன்

  தேவியர் இல்லம். திருப்பூர்.

  ReplyDelete
 4. ///முயற்சி செய்யாதே, உனக்கு இறைவிதிப்படி எப்படி அமைய வேண்டுமோ, அப்படி அமையும், மெளனமாக இரு என மனதிற்கு சொன்னது///

  தெய்வத்தான் ஆகும் எனினும் முயற்சிதன்
  மெய்வருத்த கூலி தரும்.

  அப்ப இதற்கு என்ன அர்த்தம்.

  ReplyDelete
 5. \\சிங்கக்குட்டி said...

  பதிவுலகில் நீங்கள் ஒரு ஸ்டார், இதோ உங்களுக்கு என் அன்பு பரிசு.


  நன்றி.\\

  அன்பை ஏற்றுக்கொள்கிறேன் சிங்கக் குட்டி

  வாழ்த்துக்கள்

  ReplyDelete
 6. \\திரு. ஷண்முக பிரியன் கூட உங்கள் வாசகராக இருப்பதே \\

  உணர்வால் ஒன்றுபட்டிருக்கிறோம், எங்களின் ஆன்மீகம் எங்களை இணைத்து வைத்துள்ளது.
  சுருக்கமாக சொன்னால் எனக்கு அண்ணன் இல்லாத குறையை தீர்த்து வைத்தவர், அவரது அன்பும், அரவணைப்பும் என்னை நெகிழ வைத்து இருக்கிறது.

  || இறைவனின் சித்தத்தில் தான் இன்று திருமணத்தில் சந்தித்தோமோ? ||

  அவனுக்குத் தெரியும், யார் யாரை எப்போது சேர்த்து வைக்க வேண்டும் என்று :)))

  \\ சுவாமிநாதன் அந்த காரண காரியத்திற்கு இறைவன் பணித்து இருப்பாரோ?\\

  சாமிநாதன் கருவி :))


  \\வாழ்க்கை என்பது வசதிகளை பெற்றுத் தந்துள்ளதா? என்ற கேள்விகளை விட உங்களிடம் உரையாடிய போது உணர்ந்த விஷயம் ஞானத்தை தந்துள்ளதா என்பதை தான் அறிந்தேன்.

  ஆச்சரியம் , வார்த்தைக்கும் வாழ்க்கைக்கும் அன்று போல் இன்று வரைக்கும் வித்யாசம் இல்லாமல் வாழ்ந்து கொண்டுருக்கும் உங்கள் வாழ்க்கை வெறும் வாழ்க்கை அல்ல. வாழ்ந்து முடித்தவன் பெற்ற ஞானம். இதுவும் இந்த வயதில் பெற்றுள்ளது தான் அத்தனையும் சிறப்பு.

  நீங்கள் சித்தர் இல்லை. ஆனால் சிறந்தவர் என்பதில் எந்த ஐயமும் எனக்கில்லை.\\

  தங்களின் அன்பை உணர்கிறேன். ஆனால் என்னளவில் நான் செல்ல வேண்டிய தூரம் இன்னும் அதிகம் என்ற உணர்வில் உள்ளேன்

  \\வாரிசுகளுடன் வளமும் நலமும் பெற குலத்தை காத்துக்கொண்டுருப்பவளை பிரார்தனை செய்யும்

  ஜோதி கணேசன்
  தேவியர் இல்லம். திருப்பூர்.\\

  தங்களின் மனமார்ந்த ஆசிர்வாதத்தை ஏற்றுக்கொள்கிறேன், குழந்தைகளிடம், மனைவியிடமும் தெரிவித்து மகிழ்ந்தேன்.

  மனதை எப்படி அடக்கவேண்டும் என்று நடைமுறையில் சாதித்துக்கொண்டிருக்கும் தங்களை
  பார்த்து வியக்கின்றேன்.

  வாழ்த்துக்கள் நண்பரே

  ReplyDelete
 7. Kesavan said...

  ///முயற்சி செய்யாதே, உனக்கு இறைவிதிப்படி எப்படி அமைய வேண்டுமோ, அப்படி அமையும், மெளனமாக இரு என மனதிற்கு சொன்னது///

  தெய்வத்தான் ஆகாது எனினும் முயற்சிதன்
  மெய்வருத்த கூலி தரும்.

  அப்ப இதற்கு என்ன அர்த்தம்.\\

  முதல் பகுதியான மனதிற்குட்பட்ட வாழ்க்கையில் நமக்கு விதியின்படி ஒரு காரியத்தில் வெற்றி கிடைக்காது என்று இருந்தால்கூட விடாமுயற்சியின் தன்மைக்கேற்ப பலன் கிடைத்தே தீரும் என்பதாக நான் கருதுகிறேன்

  வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நன்பரே

  வாழ்த்துக்கள்

  ReplyDelete
 8. நன்றி நண்பரே.

  சரியான கருத்து தான் நான் அதனை ஆமோதிக்கிறேன்

  ReplyDelete
 9. மனதுக்கு உட்பட்ட வாழ்க்கை! மனது கடந்த வாழ்க்கை.

  அற்புதமான சிந்தனை சிவா அவர்களே. மனதை வெல்ல போராடத்தான் வேண்டியிருக்கிறது. எதைச் செய்ய வேண்டாம் என நினைக்கிறோமோ அதில்தான் முதல் காலை எடுத்து வைக்கிறது. எதைச் செய்ய வேண்டுமென நினைக்கிறோமோ அதை அப்படியே ஆறப்போட்டு வேடிக்கைப் பார்க்கிறது. இந்த மனதைக் கட்டுப்படுத்தும் வித்தையைக் கற்றுக்கொள்வது தியானத்தினால் கைகூடும் என்கிறார்கள். தியானம் கூட ஒருவகை முயற்சிதானே. முயற்சியினால் எதையும் சாதிக்க இயலும்தான்.

  முயற்சி எதுவும் இல்லாமல் இருப்பதற்கும் முயற்சி அவசியம். சும்மா இரு! என அருணகிரிநாதரும் கூறி இருக்கிறாராமே!

  மனம் கடந்த வாழ்க்கை அத்தனை எளிதானது ஒன்றும் இல்லை, அதுவே மிகவும் கடினமானது என்கிறேன் நான். மனம் உட்பட்ட வாழ்க்கை கடினம் என்கிறார் ஒரு மகான்!

  மிக்க நன்றி சிவா அவர்களே

  ReplyDelete

மனசுல தோணினத சொல்லிட்டு போங்க :)