"மூச்சைக் கவனி, முழுவிழிப்புநிலையில் இரு!" புத்தர்

Thursday, August 30, 2018

ஒட்டுமொத்தமாய் வெளியே வீசி எறி - ஓஷோ


முன்பெல்லாம் புத்தர் என்ன சொல்லியிருக்கிறார் என்பது மட்டுமே பெளத்தர்களுக்குத் தெரிந்திருந்தது.  முகம்மது நபி சொல்லிப் போயிருந்தது மட்டுமே முகமதியர்களுக்குத் தெரிந்திருந்தது.   கிறிஸ்துவர்களுக்கு   இயேசுவை மட்டுமே தெரிந்திருந்தது .  ஆனால் இப்போதோ மானுடம் முழுக்க, இவர்கள் சொல்லிப் போயிருப்பது அனைத்துக்கும்,  நாம் வாரிசாகப் போயிருக்கிறோம்.

இயேசுவைத் தெரியும்,  ஸாரதூஸ்ட்ராவைத் தெரியும்,  பதஞ்சலி, புத்தர், மகாவீரர், லாவோட்சு என்று நூற்றுக்கணக்கானோர் சொல்லிப் போயிருக்கும் விளக்கங்கள் எல்லாம் தெரியும்.  உன் மனதில் எல்லாமும் ஒன்றோடு ஒன்று, பிணைந்து போய்க் கிடக்கின்றன.   இந்த குழப்ப வலையிலிருந்து உன்னைப் பிரித்து வெளியே கொண்டு வருவது முடியாத காரியம் ஆகிவிட்டது

ஒரே வழி என்னவென்றால் இத்தனை இரைச்சலையும் ஒட்டுமொத்தமாக வெளியே வீசி எறிந்து விடுவதுதான்.,  பகுதி பகுதியாக இல்லாமல் ஒட்டுமொத்தமாக வெளியே வீசி எறிந்துவிடுவதே என்னுடைய செய்தி.

 அப்படி அவற்றை விட்டொழித்து விடும் போது, இயேசுவை வீசி எறிந்து விடுவதில்லை. முகம்மதுவையோ, புத்தரையோ  விட்டு விலகி விடுவதும் இல்லை.  மாறாக அவற்றை விடுவதன் மூலம், அவர்களுக்கு மிகவும் நெருக்கமாகச் செல்கிறாய்.  அப்படி விட்டொழித்து விடும்போது , இந்த பூசாரிகள் சடங்குகள் சம்பிரதாயங்கள் இவற்றைத்தான் கழித்து வீசி விடுகிறாய். தெளிவு பிறக்கிறது. பரிசுத்தம் கிடைக்கின்றது. இதயம்  பளுவைத் துறந்து இலேசாகி விடுகிறது. அமைதி அடைகிறாய்

ஓஷோ
தம்மபதம் II
நிகழ்காலத்தில் சிவா

Tuesday, August 14, 2018

தளர்வாய் இருப்பது எப்படி ? தொடர்ச்சி.. ஓஷோ

இயற்கையின் இயக்கம் என்கிற செயல்பாடு எங்கும் நடந்து கொண்டே இருக்கின்றது. ஆனால் இறுக்கத்தின் பரபரப்பு இருப்பதில்லை. மரங்கள் வளர்ந்து கொண்டு இருக்கின்றன. பறவைகள் பாடிக்கொண்டு இருக்கின்றன. நதிகள் ஓடிக்கொண்டு இருக்கின்றன. நட்சத்திரங்கள் நகர்ந்து கொண்டு இருக்கின்றன. இவை அனைத்தும் ஒரு லயத்தோடு இயங்கிக் கொண்டே இருக்கின்றன.  அதில் பரபரப்பு இருப்பதில்லை. அவசரம் ஏதும்  இருப்பது இல்லை. கவலையும் இல்லை.

சரி.  உடலில் ஆரம்பி., பிறகு மெதுவாக , மிக மெதுவாக ஆழ்ந்து போய்ப் பார்.
முதல் கட்டத்தில் சிரமமாகத் தோன்றலாம்.  உடல் விறைத்துப்போய் இறுக்கமாக இருந்தால் மனதில் ஆரம்பிக்க முயலாதே பொறு.  முதலில் உடலின் இயக்கங்களை சரி செய்து கொள்

ஒரு குறிப்பிட்ட வேகத்தில் நடக்கிறாய் அல்லவா ? அது பழக்கமாகிப் போகின்றது. ,  தன்னிச்சையான செயலாகிப் போகின்றது.

மெதுவாக நடக்க முயன்று  பார்.  ஒவ்வோர் அடியையும் உணர்ந்து வைக்க வேண்டும்.  நடை மெதுவாகிவிடும். . உடலில் ஒருவித உணர்தல் ஆரம்பம் ஆகிவிடும். இப்படி எதையும் மெதுவாகச் செய்வதே பழைய பழக்கங்களை விட்டுவிடுவதற்காகத்தான்.. இப்போது உடலில் இறுக்கமே இருக்காது. குழந்தையைப் போல், உன் உடல் இறுக்கமில்லாததாக ஆகிப்போகும்.

அடுத்து மனதைக் கவனிக்கலாம். மனதின் இறுக்கத்தை உணர்கிறாய். நான் எப்போதாவது ஆசுவாசமாக இருந்ததாக, உணர்ந்ததே இல்லை என்றே தோன்றும். சரிதான். மனதைப்பற்றி ஏதாவது ஒன்றை உணர்ந்தால்தானே, அதைப்பற்றி ஏதேனும் செய்யமுடியும் ? எதுவும் தெரியவே தெரியாதென்றால் எதுவுமே சாத்தியமில்லை

தெரிந்திருப்பதே நிலை மாற்றத்துக்கான ஆரம்பம்.

மனம் இறுக்கமின்றி இருப்பதன் அடையாளங்கள் பல. நம்பிக்கை வைப்பது, சரணடைவது, அன்போடு ஏற்றுக்கொள்வது, அதன்போக்கில் போவது, இருத்தலோடு இணைந்துவிடுவது, தானின்றி இருப்பது, பரவசம் என எல்லாமே இறுக்கமின்றி இருக்கும்போது  ஏற்படுகின்றன.

இறுக்கமாக இருப்பதுதான் நரகம். இறுக்கமின்றி இயல்பாக இருப்பதே
சொர்க்கம். எல்லாவிதமான குற்ற உணர்வுகளில் இருந்தும் பயத்திலிருந்தும் உன்னை விடுவிப்பதுதான் என்னுடைய செயல்.

ஓஷோ
தம்மபதம் I
நிகழ்காலத்தில் சிவா