"மூச்சைக் கவனி, முழுவிழிப்புநிலையில் இரு!" புத்தர்
Showing posts with label அரசியல். Show all posts
Showing posts with label அரசியல். Show all posts

Thursday, April 4, 2019

உங்களுக்கெல்லாம் எடப்பாடிசாமிதான் லாயக்கு :)

கோவை ராமநாதபுரம் ஏரியாவில் கடும் போக்குவரத்து நெரிசல்.. ஏறத்தாழ மதியம் 11.30 மணி கடும்வெய்யிலில் திணறினேன். காரணம் தேர்தல் பிரச்சாரம்.  சாலையின் இரும்ருங்கிலும் டெம்பொ டிராவலர் வேன்கள். சுமாராக 100 எண்ணிக்கையில் இருக்கலாம். சந்துபொந்துகளில் புகுந்து  சிங்காநல்லூர் செல்வதற்கு சுமார் 45 நிமிடங்கள் ஆனது

அடுத்து மாலை 4.15 க்கு பவர்ஹவுஸ் பகுதியில் முக்கிய வேலை.. அது முடிந்தபின் 4.45 க்கு கலெக்டர் அலுவலகம் அருகில் வேலை.. பவர் ஹவுஸ்கிட்ட அரசியல் மீட்டிங்.. ரோடு மறிக்கப்பட...... வண்டியை நிறுத்திவிட்டு நடந்து சென்றேன். இங்கும் சின்ன வேன்களில் சாரி சாரியாய் மக்கள் கொண்டு வரப்பட்டு, பாதுகாப்பு சோதனைகள் செய்தபின், உள்ளே அனுப்பி, எண்ணி சரிபார்க்கப்பட்டு அமர வைக்கப்பட்டனர்

எதற்காக இந்த கூட்டம் சேர்த்தல் என்று புரியவில்லை. யாருக்காக என்றும் புரியவில்லை..  எந்தக்கூட்டணியாக இருந்தாலும் சரி.. மக்களிடையே இந்த மீட்டிங், பிரச்சாரம் எல்லாம் காலாவதி ஆகிவிட்டதோ எனத் தோன்றியது.  எல்லோரின் கையிலும் வாட்ஸாப், ஃபேஸ்புக் வசதியுடன் அலைபேசி. எல்லா ஊழல்களும், அயோக்கியத்தனங்களும் விரல் நுனியில்.  இருந்தாலும் எதுவும் மாறப்போவதில்லை. 

சிங்காநல்லூர் நகராட்சி மண்டல  அலுவலகத்திற்கு ஒரு வேலையாகச் சென்றிருந்தேன். வரவேற்புக்கு ஒரு வயதான பெண் அலுவலர். .. வருபவர்களுக்கு தேவையான தகவல்களைத் தந்து கொண்டிருந்தார். அவரைச் சுற்றிலும் கூட்டம் அதிகமாக இருக்கவே சில நிமிடங்கள் அமைதியாக நின்று கொண்டிருந்தேன்.

அப்போது ஒரு நபர் சொத்துவரி கட்டுவதற்கான பாஸ்புத்தகத்தை கொண்டு வந்து கொடுத்து. புது புத்தகம் வேண்டும் என்றார். அந்த அம்மா ஏனுங்க இதுக்கு என்ன ஆச்சு ? என்று யதார்த்தமாகக் கேட்டார். உடனே இவர் என்ன ஆச்சா.. ? நல்லாப் பாருங்க தீர்ந்து போச்சு, தீர்ந்து போனாத்தானே வருவாங்க ? வேலையில்லாமலா இங்க கொண்டு வருகிறோம். ? நல்லாப் பார்க்கக் கூட மாட்டீங்கறீங்க என்று மானாங்காணியாகப் பேச ஆரம்பித்துவிட்டார்.

அந்த அம்மா சற்றே யோசனையுடன் புத்தகத்தை புரட்டிப் பார்க்க அருகில் நின்ற எனக்கே அவரைப் பார்க்க பாவமாக இருந்தது.. சரி என்றைக்குமே அரசு அதிகாரிகளுக்கு எதிராக பொங்க வேண்டுமா ? இன்று ஆதரவாக ஓரிரு வார்த்தைகளச் சொல்வோம் என்று எண்ணி “ அண்ணா.. நீங்க வந்து புத்தகத்தை கொடுத்ததில் இருந்து அந்தம்மா ஒரு வார்த்தை கூட பேசவில்லை. கொஞ்சம் பொறுமையாக இருங்க அவங்க பார்த்துச் சொல்லுவாங்க என்று சொன்னேன்.

ஆனால் அவரோ என்னை சற்று முறைத்துப் பார்த்துவிட்டு.. நீங்க கம்முனு இருங்க என்றார். சிரித்துக் கொண்டே சரி என அமைதியாக நின்று  விட்டேன். பெண் அலுவலர் அந்த புத்தகத்தை நன்கு புரட்டிப் பார்த்துவிட்டு, கடைசிப் பக்கத்தில் 2019-2020 என்று பிரிண்ட் செய்யப்பட்டிருப்பதைக் காண்பித்து இது இருக்கின்றதே இதுவே போதுமே அப்புறம் ஏன் கேட்கிறீர்கள் என்று அவரிடம் கேட்டார்
அவரோ அதெப்படி ஒரு பக்கம் போதுமா ? இந்த வருடம் முழுவதும் கட்ட இது போதுமா புது புத்தகம்தான் வேண்டும் என்று சண்டைக்கு நின்றார்.  இரண்டு வரி பதிவு செய்ய அந்த கடைசிப் பக்கமே தாரளமாகப் போதும் என்ற நிலைகூடத் தெரியாமல் வந்ததில் இருந்து சண்டைக் கட்டிக் கொண்டே இருந்த அந்த நபரைப் பார்த்ததும் தோன்றியது ஒன்றே ஒன்றுதான்..

உங்களுக்கெல்லாம் எடப்பாடிசாமிதான்டா லாயக்கு :) 

Saturday, February 15, 2014

அர்விந்த் கெஜ்ரிவால் போராளியா ? பிரதமராகத் தகுதியானவரா?

ஜனலோக்பால் மசோதா தோல்வி என பத்திரிக்கைகள் அலற..படித்துப்பார்த்த போதுதான் தெரிந்தது..ஜனலோக்பால் தாக்கல் செய்யப்பட்டு, விவாதமோ ஓட்டெடுப்போ நடந்து தோல்வி அடையவில்லை.

டில்லியைப் பொருத்தவரை எந்த மசோதாவாக இருந்தாலும், அது மாநில கவர்னருக்கு அனுப்பப்பட்டு, மத்திய அரசின் ஒப்புதலோடுதான்  நிறைவேற்றப்படுகிறது. இதையே துணைநிலை ஆளுநர் அறிவுறுத்தியும் அதையும் மீறி தாக்கல் செய்ய நினைத்து அதில்தான் தோல்வி அடைந்தார் கெஜ்ரி..கடைபிடிக்கவேண்டிய நெறிமுறை,மரபு,விதிகளுக்கேற்ப நடக்காததுதான் தோல்விக்குக் காரணம்..


இது ஒரு முதல்வருக்கு அழகல்ல..அனுப்பி, மறுக்கப்பட்டிருந்தால் இவருக்கு வலு கூடி இருக்கும். அதைக் கூடச் செய்யாமல் என் விருப்பபடி செய்வேன் அது நடக்காவிட்டால் ராஜினாமா செய்வேன் என முன்னதாக சொன்னதும் மூடத்தனம்.

முன்னதாக, அர்விந்த் கெஜ்ரிவால் டில்லியில் இத்தனை சீட் பிடிப்போம் என்றே  நினைத்துப் பார்க்காத நிலையில் மக்களின் ஆர்வத்தினால் வெற்றி பெற்றார்.. இவர் மற்ற துறைகளில் வல்லுநராக இருக்கலாம். ஆனால் அரசியலில் கத்துக்குட்டிதான்.. அவர் வெற்றி பெற்ற சமயத்தில் இந்த கருத்தை தெரிவித்தால் எதிர்மறை விமர்சனமாகவே கருதப்படும் என்பதால், எதையும் முன்கூட்டியே திட்டவட்டமாகச் சொல்லக்கூடாது என்பதாலும், பொறுமை காத்தேன்.

போதுமான பெரும்பான்மை இல்லை என்ற போதிலும் ஆட்சி அமைக்க முயற்சித்ததிலேயே இவரது பாதை சரியல்ல என்பது தெளிவானது. தகுதி இல்லாத ஒருத்தர் , தன்னைவிட அதிக தகுதி உடையவரை தாண்டிச் சென்று பயன் அடைவது என்பது லஞ்சத்தின மறைமுக வடிவம்தான்.

ஊழலை ஒழிப்பதாகச் சொல்லிக்கொண்டு இந்த டில்லியில் கடந்த ஆண்டுகளில் நாட்டையே ஊழல் என்ற போர்வைக்குள் மூடி வைத்த பெருமைக்குச் சொந்தமுடைய காங்கிரசோடு கூட்டணி என்பதே ஜீரணிக்க முடியாத ஒன்று.

சரி ஏதோ தேர்தல் வரை தாக்குப் பிடிக்குமென்று நினைத்த கெஜ்ரி அரசு  தனக்குத் தானே வேட்டு வைத்துக் கொண்டது

மசோதா தாக்கல் செய்வதற்கே தன்விருப்பப்படி நடக்கவேண்டும் என்று மூன்று வயது குழந்தையை விட மோசமாக அடம் பிடித்ததோடு மட்டுமில்லாமல்,  அப்படி நிறைவேறாவிட்டால் ராஜினாமா செய்வேன் என முன்கூட்டியே சொன்னது முதிர்ச்சி இல்லாத நிலையை படம் போட்டுக் காட்டுகிறது.

அரசியல் என்பது சாக்கடை என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.கூடவே அது ஒரு பணமுதலீடு இல்லா தொழில்.இதற்கு மூலதனம் வாய் பேசத் தெரியனும்.எந்த லாஜிக்கும் இல்லாம பேசத் தெரியனும். ... எனக்குத் தெரிந்து இந்தத் திறமை இன்றும் கூட குறையாமல் உற்சாகம் கொப்பளிக்க கொண்டு இருக்கிற எனக்குத் தெரிந்த ஒரு நபர் கலைஞர்தான்..இது உண்மையிலேயே பாராட்டுதான்..

கெஜ்ரி எதிர்பாராமல் தனக்குக் கிடைத்த வாய்ப்பை  சரியாக பயன்படுத்தத் தெரியாத முட்டாளாகப் போய்விட்டார். கிடைத்த வாய்ப்பை மரபு மற்றும் விதிகளுக்கு ஏற்ப செயல்பட்டு புத்திசாலித்தனமாக அணுகி, படிப்படையாக தான் நினைத்தது போல் அரசு நிர்வாகத்தைச் சீர்திருத்தி இருக்க வேண்டும்..

பெரும்பான்மை இல்லாத ஆட்சியில் முதல்வராக இருப்பதைவிட ராஜினாமா மேல் என சில நண்பர்கள் எழுதி இருந்ததை பார்த்தேன்,,  இது முதல்வராக பதவி ஏற்கும்போது தெரியலையா..பெரும்பான்மை என்ன ஆட்சி அமைத்ததற்கு பின்னரா குறைந்தது? என்ன சாதிக்கமுடியும் என்ன சாதிக்க முடியாதுன்னு தெரியாம எதற்காக ஆட்சிபீடத்தில் ஏறீனீங்க

மூச்சுக்கு முன்னூறுதரம் மைனாரிட்டி அரசுன்னு ஜெ திட்டினாலும் அந்த அரசை எப்படி ஆட்சிக்காலம்  முழுவதும் ஓட்டறதுன்னு கலைஞர்கிட்ட பாடம் கேட்டிருந்தாக் கூட தப்பிச்சிருக்கலாமே

அரசியல், நிர்வாகம் இரண்டிலுமே எந்தவித முன் அனுபவம் இல்லாத இவர் ஆட்சிக்கு வந்த உட்கார்ந்தபின் தான் நெருப்பின் மீது உட்கார்ந்த அனுபவம் கிடைத்து இருக்கிறது. சமாளிக்கும் பக்குவம் இன்றி விட்டால்போதும் என்ற மனநிலையில் இராஜினாமா செய்திருக்கிறார்

சத்தமில்லாமல் காரியங்கள் செய்து விளைவுகளை உறுதி செய்தபின் மீடியாவில் பரபரப்பாக வந்திருந்தால் பாராட்டலாம்.. நினைத்தவுடன் செய்வது என்பதும் அதை உடனே மீடியாவில் சொல்வது என்பதும் இன்னும் அரசியலின்,  நிர்வாகத்தின்,.பாலபாடம்கூட தெரியாத இந்த கெஜ்ரியின் ராஜினாமாவை  வரவேற்கிறேன்..

இது ஓட்டுப்போட்ட மக்களுக்கு புத்தியில் உரைக்கக் கூடிய விசயம்..மெஜாரிட்டி இல்லாமல் வாக்களித்தால் என்ன நடக்கும் என்பதற்கு எடுத்துக்காட்டாக பொதுத் தேர்தலுக்கு முன், நடத்திக் காட்டி விட்டார் கெஜ்ரி..வரும் பாரளுமன்ற தேர்தலில் எந்தக்கட்சியாக இருந்தாலும் சரி அது மெஜாரிட்டியாக வர வேண்டியதின் அவசியத்தை, மக்களுக்கு நன்கு உணர்த்திக் காட்டிய நிகழ்வே இது..

காங்கிரசு டில்லி அரசுக்கான ஆதரவை வாபஸ் வாங்கி, கெட்ட பெயர் சம்பாதிக்காமல் இருக்க, நேரடியாகவே பழம் நழுவி பாலில் விழுந்தாற்போல் அவராகவே விலகி உதவிதான் செய்திருக்கிறார்.

இனி இவரது எதிர்காலமும், இவரது ஆம் ஆத்மியின் எதிர்காலமும் வளமானதாக நிச்சயம் இருக்காது..பிரதமர் ஆகும் வாய்ப்பு இருக்கிறதாக நண்பர்கள் சொல்வதைக் கேட்டால் சிரிப்பும் வேதனையும் மிஞ்சுகிறது.

காணமல் போனவர்கள் பட்டியலில் கெஜ்ரியின் பெயர், நாடாளுமன்ற பொதுத்தேர்தலுக்கு பின்னர் இடம் பெறும் என்பதே உண்மை..

Thursday, September 26, 2013

மோடி பிரதமர் ஆவதை ஏன் வரவேற்க வேண்டும்?.

மோடி பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப் பட்டதில் இணையம் ரொம்பவுமே சூடாகிக் கொண்டு இருக்கிறது. ஃபேஸ்புக்கில் நான் பார்த்தவரை முஸ்லீம் அன்பர்கள் அதிகம் எதிர்ப்பை தெரிவித்து இருந்தனர். அவர்கள் தவிர்த்து மற்றவர்கள் அரசியல் நிலைப்பாடு காரணமாக எதிர்ப்பு தெரிவித்துக்கொண்டு இருந்தனர். அது அவர்கள் உரிமை. அதைத் தடை செய்ய இயலாது...ஆனால் அதில் அவர்கள் காட்டும் தீவீரம், மோடியை ஆதரிக்கும் இந்துமதம் சார்ந்த நண்பர்களின் கருத்துகளில் இருப்பதாகத் தெரிவதில்லை :)

Thursday, March 31, 2011

திமுக ஆட்சி இந்த ஒன்றிற்காகவேனும் ஒழியவேண்டும்:(

எல்லா அரசியல் கட்சிகளுமே சம்பாதிக்க மட்டுமே ஆட்சிக்கு வரத்துடிக்கிறார்களே தவிர மக்களுக்கு சேவை ஆற்ற அல்ல என்பதை நன்கு நாம் தெரிந்து வைத்திருந்தாலும் எரிகிற கொள்ளியில் எந்த கொள்ளி நல்ல கொள்ளி என அடையாளம் காண வேண்டிய சூழ்நிலையில் நாம் இருக்கிறோம்.

Tuesday, March 29, 2011

தேர்தல் கமிசனின் குழப்பமான உத்தரவுகள்.

தேர்தல் வந்தாலும் வந்தது. வழியில் செக்போஸ்ட் நடவடிக்கைகள் வேடிக்கையாகவே இருக்கின்றன. சரி அவர்கள் கடமையைத்தான் செய்கிறார்கள் என்று நினைத்துக்கொள்ள வேண்டியதுதான்!! தேர்தல் கமிசன் என்ன சொல்லி இருக்கு. வாகனங்களை சோதனையிட்டு ஒரு லட்சத்திற்கு மேல் பணமாகவோ, அல்லது சந்தேகப்படும்படியான இலவசத்திற்கான பொருள்களோ இருந்தால் பறிமுதல் செய்ய வேண்டும்.

Saturday, January 16, 2010

இப்ப என்ன ஆகிப் போச்சுங்கிறீங்க !!

"மத்திய தணிக்கைக் குழு அறிக்கையில், அரசு நிதியை, தவறான வழிகளில் செலவழித்து விட்டோம் எனக் குறிப்பிடப்படவில்லை' என்று முதல்வர் கருணாநிதி தெரிவித்துள்ளார்.அவர் வெளியிட்டுள்ள கேள்வி-பதில் அறிக்கை:மத்திய தணிக்கைக் குழு அளித்த அறிக்கையில், தமிழக வளர்ச்சித் திட்டங்களுக்காக ஒதுக்கப்பட்ட, 121 கோடி ரூபாய், தமிழக அரசின் இலவச திட்டங்களுக்காக செலவழிக்கப்பட்டுள்ளது என்று தான் குறிப்பிடப்பட்டுள்ளது.


தவறான வழிகளில் செலவழித்து விட்டோம் என்று கூறவில்லை. இந்த செலவழிப்பு முரண்பாடானதோ, தவறானதோ அல்ல.

அரசு நிதியை தவறான வழியில் செலவழிக்கவில்லை, தணிக்கை குழு அறிக்கை குறித்து முதல்வர் தகவல்

இனி வருங்காலத்தில் இதோ போல் எல்லா நிதிகளும் செலவழிக்கப்படும் என்பதற்கான திமிர்த்தனமான பதில், எதிர்பார்த்ததுதான்.

மக்களை பிச்சைக்காரனாகவே, இலவசங்களை கொடுத்து, பதவி, பணம், புகழ் தன் குடும்பத்தைச் சார்ந்தவர்கள் மட்டுமே பெற வேண்டும் என்கிற தெளிவான நோக்கத்துடன் இருக்கும் தானைத்தலைவர் கலைஞர் வாழ்க

தமிழன் என்ற பெருமையே நம்மை வாழ வைத்துவிடும் என வாய்சவாடல் இட்டுக்கொண்டு தமிழ்நாட்டிற்கு தொலைநோக்கோடு அடிப்படைவசதிகளான மின்சாரம், விவசாயத்திற்கும், குடிநீருக்கும் ஆதாரமாக ஏதேனும் புதிய அணை கட்டுதல், போன்றவை பற்றி சிந்திப்பது கூட இல்லை,

அண்டை மாநிலங்கள் போட்டி போட்டுக்கொண்டு அணை கட்டுவதைப் பார்த்தால் சற்றே பொறாமையாக இருந்தாலும் நமது நிலையை எண்ணி உள்ளூர வருத்தப்படாமல் இருக்க முடியவில்லை.

டிஸ்கி இது முந்தய பதிவின் தொடர்ச்சி

Wednesday, January 13, 2010

எனக்குத் தேவை பணம், பதவி, புகழ்

சென்னை : "தமிழக அரசின் முக்கிய திட்டங்களுக்காக ஒதுக்கீடு செய்யப்பட்ட நிதி, இலவச கலர், "டிவி', காஸ் அடுப்பு, மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு கடன் வழங்க பயன்படுத்தப்பட்டுள்ளது. கிராமப்புற வளர்ச்சி திட்டங்களுக்கான நிதியை, முக்கியமில்லாத திட்டங்களுக்கு பயன்படுத்த வேண்டாமென அரசுக்கு சிபாரிசு செய்துள் ளோம்,'' என தமிழக, புதுச்சேரி இந்திய தணிக்கை முதன்மை அதிகாரி சங்கர் நாராயணன் தெரிவித்துள்ளார்.


அவர், மேலும் கூறியதாவது:தமிழகத்தில், கடந்தாண்டு மார்ச் வரை கிராமப்புறங்களில் அமல்படுத்தப்பட்ட திட்டங்கள் மற்றும் அதற்காக ஒதுக்கப்பட்ட கோடிக் கணக்கான ரூபாய் பற்றி, தணிக்கை ஆய்வில் எடுத்துக் கொள்ளப்பட்டது.கிராமப்புறங்களில் குளம் வெட்டுதல், வாய்க்கால் வெட்டுதல் போன்ற நீர் ஆதார வசதியை மேம்படுத்துதல் மற்றும் உள் கட்டமைப்பு வளர்ச்சி திட்டங்களுக்கு உறுதுணையாக, "அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி' திட்டம் உள்ளது.ஆறு மாவட்டங்களில் உள்ள உள்ளாட்சி அமைப்புகளில் நடத்தப்பட்ட ஆய்வில், இத்திட்டத்திற்கு பயன்படுத்தப்பட வேண்டிய 120.98 கோடி ரூபாய், முக்கியமில்லாத திட்டங்களுக்கு பயன்படுத்தப்பட்டுள்ளது.முக்கிய திட்டங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட நிதி, இலவச கலர் "டிவி', இலவச காஸ் அடுப்பு, முதியோருக்கான பென்சன், மகளிர் உதவிக் குழுவினருக்கு கடன் மற்றும் தள்ளுபடிக்கு பயன்படுத்தப்பட்டுள்ளது.


ஒரு சில நகராட்சிகளில், வளர்ச்சி திட்டங்களுக்கான நிதி, பிற திட்டங்களுக்கு பயன்படுத்தப்பட்டுள்ளது. இவ்விவரங்கள் அடங்கிய பட்டியலை, கடந்த திங்கள் கிழமை, சட்டசபையில் தாக்கல் செய்துள்ளோம்.உள்ளாட்சி அமைப்புகளில் ஒரு பணியை எடுத்துக் கொள்வதற்கு முன், அப்பணியை எப்படி செய்ய வேண்டும் என்ற முன்னெச்சரிக்கை இல்லாமல், பல வேலைகளை திட்டமிடாமல் செய்து, மக்கள் பணத்தை வீணடித்துள்ளனர்.சென்னை மாநகராட்சி, நிர்வாகம், சுகாதாரம் மற்றும் மகளிர் மேம்பாட்டு திட்டத்தில், மோசமான பணியை செய்துள்ளது.


முக்கிய திட்டங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிதியை, இலவசங்களுக்கு பயன்படுத்த வேண்டாம் என, அரசுக்கு சிபாரிசு செய்துள்ளோம்.இவ்வாறு சங்கர் நாராயணன் கூறினார்.

நன்றி தினமலர் 13.01.2010

Monday, May 11, 2009

தமிழ் இனத் தலைவர் கலைஞர் -- ஒரு குழந்தை

இன உணர்வு என்பது ஒருவகைத் தாய்மை உணர்வு. தான் பெற்ற பிள்ளை குடிகாரனாய், திருடனாய்,தறுதலையாய் எப்படி இருந்தாலும் எப்படி ஒரு தாய் தன் பிள்ளை மீது மாறாத பாசம் வைத்திருக்கிறாளோ அதைப் போன்ற உணர்வே ஓர் இனத்திற்குள் ஒருவருக்கொருவர் கொள்ளவேண்டியதே இன உணர்வு.

தன் இனத்தான் முட்டாளாய் இருந்தாலும், துரோகியாய் மாறினாலும், ஏழையாய் இருந்தாலும், எதிரியுடன் சேர்ந்து கொண்டாலும் அவன் மீது வெறுப்புக் கொள்ளாமல் அவன் உயர்வுக்காக எண்ணுவதும், எழுதுவதும், அதற்கேற்றபடி செயல்படுவதும் இன உணர்வு உள்ளவர்களுடைய கடமை. அப்படித்தான் நம் முன்னோர்கள் உழைத்திருக்கிறார்கள்.

தமிழர்கள் சாதியின் பெயரால், மதத்தின் பெயரால் பிரிந்து கிடப்பது உண்மைதான். அதை ஒரு பலவீனமாய்க் கருதவேண்டிய தேவை இல்லை.
ஏனெனில் ஆடு, மாடுகள்தான் மந்தை மந்தையாய்ச் சேர்ந்திருக்கும். சிங்கங்கள் தனித்தனியாய்ப் பிரிந்துதான் இருக்கும். அதில் தவறேதுமில்லை. ஆனால் தேவை ஏற்படும்போது எல்லா வேற்றுமைகளையும் தூக்கி எறிந்து விட்டு ஒன்று சேரும் ‘துப்பு’ வேண்டும். அதை மட்டும் பராமரித்தாலே போதும். நம்மை யாரும் வீழ்த்த முடியாது.

நன்றி: விநோதமான வினாக்கள்,கவனகரின் விடிவுதரும் விடைகள்

*************************************************************************************

இனி எமது பார்வையில் ...

மனிதனை மனிதன் துன்புறுத்தாமல், வாழும் உரிமையில் குறுக்கிடாமல் இருப்பது உண்மையான மனிதத்தன்மை. தெய்வத்தன்மை என்றே சொல்லலாம்.

அதிலிருந்து ஒருபடி ஆராய்ச்சிக்காக (வேறு வழி இல்லாமல்) கீழ்இறங்கி பார்த்தால் இராஜபட்சே சிங்கள இனம் அதனால் அவர் தன் இனத்தை காக்க தமிழனின் மீது தாக்குதல் நடத்துவதாக எடுத்துக்கொள்ளலாம்.

அன்னை சோனியா வேறு இனம், வேறு நாடு அதனால் அவரையும் கூட தமிழனுக்கு பதவியை அதிகாரத்தை வைத்துக்கொண்டு எந்த உதவியையும் செய்யாததையும் புரிந்துகொள்ளலாம்.

ஆனால் தமிழினத்தலைவர் என அழைக்கப்படும் கலைஞரோ தனது பதவியை வைத்து ஈழத்தமிழருக்கு எதுவுமே செய்யவில்லை. இலங்கைஅரசுக்கு உதவியாக செயல்படும் இந்திய அரசுக்கு துணை நிற்பதைத்தவிர.

குறைந்தபட்சம் எதுவுமே செய்யமுடியவில்லை என்றால் காங்கிரசுக்கு மத்தியில் அளித்துவந்த ஆதரவை விலக்கி இருக்கலாம்.

இங்கே ஆட்சி கவிழ்ந்தாலும், அதையே முதலீடாக வைத்து பின் அனுதாப அலையிலாவது மீண்டும் ஆட்சிக்கு வந்து கம்பெனியை உலகத்தின் முதல் பணக்கார (குடும்ப) கம்பெனியாக கொண்டுவந்திருக்கலாம்.

எப்படியும் 2011 ஆட்சி இல்லை. தெரிந்தும் கம்பெனியை படுபாதளத்தில் வீழ்த்துகிறார்.சரி, பதவி விலகினால் இலங்கைதமிழர் பிரச்சினை தீருமா?

தீராது. குறைந்தபட்சம் நமது எதிர்ப்பை பதிவு செய்யலாம். (நல்ல மதிப்பும் புகழும் கிடைத்திருக்கும்.) எதிர்கால கம்பெனியின் நலனுக்கும் உதவும்.

போட்டிக் கம்பெனியினரைப் பற்றி இவருக்கு ஏன் அக்கறை?

அவர்கள் வந்து பிரச்சினையை தீர்த்தால் என்ன? தீர்க்காவிட்டால் என்ன? அவர்களாலும் முடியாது, என்னாலும் முடியாது அதனால் நானே நாற்காலியில் கடைசிவரை இருந்துவிடுகிறேன் என குழந்தைத்தனமாக பிடிவாதம் பிடிப்பது எதற்கு? இதுவரை சம்பாதித்த பணம் போதவில்லையா?

போட்டிக்கம்பெனியினர்க்கு ஒரு வாய்ப்பை கொடுத்தால் என்ன? ஒன்று பிரச்சினையை தீர்க்கட்டும். அல்லது அவர்கள் கம்பெனியும் வளரட்டும்.

அதில் என்ன தவறு? ஓ. சம்பாதித்ததை காப்பற்றவேண்டிய கடமையை மறந்துவிட்டேன்.

குடும்பத்தலைவரின் சொத்து பணமானலும் சரி, வினையானலும் சரி
பிள்ளைகளுக்கு சேரும். பாவம் அனுபவித்துத் தானே ஆகவேண்டும்.

Wednesday, March 25, 2009

இடதா, வலதா, இது கோவியாரின் அரசியலா?

இன்றிலிருந்து இடது, வலது என்றெல்லாம் பிரித்து பார்க்கக் கூடாது. இதில் எந்த அரசியல் உள்குத்தும் கிடையாது.

இனிமேல் சாலையில் செல்லும் பொழுது இடப்பக்கம், வலப்பக்கம் எப்படி வேண்டுமானாலும் போகும்படி விதிகளை மாற்றவேண்டும்.

இடப்பக்கம் என்ன தாழ்ந்துவிட்டது. ஏன் எங்களை இடப்பக்கமாகவே போகச் சொல்கிறீர்கள்?
இரண்டு பக்கமும் ஒரே திசை நோக்கி போக அனுமதிக்க வேண்டும்.

பொதுஇடங்களில் கைகளினால் செய்யும் பணிகளை காலால் செய்ய அனுமதிக்கவேண்டும். கால் எந்த விதத்தில் கையைவிட குறைந்துவிட்டது. இதிலும் எந்த அரசியலும் இல்லை.

நீங்கள் பாராட்டுதலுக்காக கை கொடுத்தாலோ, கும்பிட்டாலோ ப்திலுக்கு நான் காலை பயன்படுத்தினால் கோபம் கொள்ளக்கூடாது. கையைவிட கால் எந்த விதத்தில் குறைந்து போய்விட்டது.

உணர்ச்சி வசப்படாதீர்கள். கோவி அண்ணாரின் கட்டுரையை படித்தவுடன் எழுதியது.

இனி என் கருத்துகள்

//வெறும் தாள், செய்தித்தாள், ஏனைய தாள்களை சரஸ்வதியாக நினைத்துக் கொள்ள வேண்டும், அதன் மீது கால்படுவது சரஸ்வதியை அவமதிப்பதாகும் என்பதெல்லாம் மூடநம்பிக்கையாகவே படுகிறது// மூட நம்பிக்கைதான். கூடவே எது நம்பிக்கை, இதில் உள்ள உண்மைத்தத்துவம் என்ன? காலப்போக்கில் எப்படி மூடநம்பிக்கையாய் மாறியது என்று விளக்கினால் பொறுப்பான எழுத்தாக
அமையும்.

//அதன் மீது கால்படுவது சரஸ்வதியை அவமதிப்பதாகும் என்பதெல்லாம் மூடநம்பிக்கையாகவே படுகிறது// //வலது கை புனிதம், இடது கை பீச்சாங்கை என்றெல்லாம் இழித்து பேசுவதும், இடது கையால் பொருளை எடுத்துக் கொடுக்க கூடாது, சாப்பிடக் கூடாது என்பது மூட நம்பிக்கைகளின் எச்சங்களாக நம்மிடையே இருந்துவருகிறது. கையை விட கால்கள் எந்த விதத்தில் மதிப்பு குறைந்தது என்று தெரியவில்லை//.

வெகு எளிமையாக இயல்பாக வலது, இடது கைகள் ஒரேமாதிரியான வேலைகளுக்கு பழக்கப்படுத்தப்பட்டுள்ளது.

அடிப்படை நோக்கம் ஆரோக்கியம். எதோ ஒரு கை உடலுறுப்புகளை சுத்தம் செய்யவும், மறுகை உணவு உண்ணவும் பன்படுத்தப்பட்டது. கவனக்குறைவாக கையை சுத்தப்படுத்துதலில் குறைநிகழும்போது, ஆரோக்கிய குறைபாடு நிகழாவண்ணம் த்டுக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையே ஒருகையை குறிப்பிட்ட வேலைக்கு பயன்படுத்துவது. மாற்றிமாற்றி பயன்படுத்தினால்
என்ன விளைவு என்பதைப் பாருங்கள்?.

கால் பட்டவிதம் தற்செயலா, அல்லது தெரிந்தே, வேண்டுமென்றே பட்டதா என்பதை உணர்த்தும் செயற்குறிப்புதான், தெரியாமல் பட்டுவிட்டது எனக்காட்ட தொட்டு கண்ணில் ஒற்றுதல். இதில் என்ன மூடநம்பிக்கையை இருக்கிறது. குற்றமா இல்லையா என்பதல்ல, தெரிந்தா, தெரியாமலா என்பதே இங்கே முக்கியம்.

//இன்னும் தாள்களுக்கு அப்படி ஒரு மரியாதை கொடுப்பது பழைய பழக்கவழக்கத்தினால் வந்த பொருளற்ற செயலாகவே எனக்கு தெரிகிறது.// எந்தப் பொருளுக்கும் பழக்கம் காரணமாக ம்ரியாதை கொடுப்பது பொருளற்ற செயல்தான். உணர்ந்து கொடுப்பதே சிறப்பு.

//விரல்களின்றி கையின் பயன்பாடு குறைவு, கால்களின்றி நடக்கவே முடியாது, // எனக்கு இது புதிது. தொடர்ந்து இதுபோல் நிறைய உலகமறியாத உண்மைகளை எழுதவும்.

//மூத்தோர் கால்களில் விழுவதும் கூட சிறப்பானது தான். காலை இழிவு என்று ஒருபோதும் நினைக்கக் கூடாது என்றார்.// இவர் யார் காலிலாவது விழுந்தால் அவர் காலை உயர்வாக மதிக்க விழுவார். நம்மைப் போன்றோர் அவர்களிடம் நாம் காட்டும் பணிவையும், உள்ளத்தில் உள்ள உயர்வை வெளிக்காட்ட வார்த்தைகள் இன்றி, சுருக்கமாக உணர்த்தும் செயற்குறிப்பாகவே விழுகிறோம்.

//கையினால் மாட்டு சாணியை பிள்ளையாராக பிடித்து வணங்குபவர்கள், தாளை சரஸ்வதியாக நினைத்து கால்படக் கூடாது என்று சொல்வது முரணாக இருக்கிறது.//

மாட்டுசாணியை வரட்டி தட்டியும், சாணிக்குழியில் சேர்த்து உரமாக்கியும்,வீட்டிற்க்கு பாதுகாப்பாக சுத்தம் கருதி வழித்தும் தான் மட்டமாக பயன்படுத்த தெரியும். சாணியை பிள்ளையாராக வணங்குபவர்கள், தாளை சரஸ்வதியாக நினைப்பது சரிதானே? இதில் என்ன முரண்.?
முரணாகவே இருக்கட்டும் இதில் யாருக்கு என்ன நட்டம்?


//ஆனால் வழிபாட்டு உருவங்களை டாய்லெட் பேப்பர்களில் அச்சிடுவது மிகவும் தவறான ஒன்று, சமூக ஒற்றுமைக்கு எதிரானது, அந்த செயல் நம்பிக்கை உடையவர்களை அவமதிப்பதாகும். அந்த கடவுளை வணங்குபவர்களின் மனங்களை புண்படச் செய்யும். அதை எல்லாம் தவிர்கலாம்.//
//ஒரு தாளில் கால் தெரிந்தோ, தெரியாமலோ படுவதால் என்ன குற்றம் ஆகிவிடப் போகிறது ?//

பிராமணர் வீட்டு ஒருவயது குழந்தை சரஸ்வதி படத்தின் மீது ஒன்னுக்கு போய்ட்டா அது ச்மூக ஒற்றுமைக்கு எதிரானாதா?

அவன் எதை அச்சிட்டான் என்று பார்ப்பதோடு, எந்த நோக்கத்துடன் அச்சிட்டான் என்று அறிந்துகொள்வது நல்லது. வெறுமனே படம் நன்றாக உள்ளது என அச்சிட்டு இருந்தால், அந்த படத்தின் சிறப்பை, உயர்வை தகுந்த முறையில் எடுத்துச் சொன்னால் தானாக எடுத்து விட்டுப் போகிறான்.

ஒருவேளை தெரிந்தே செய்திருந்தால், நம் எதிர்கருத்தை தெரிவிக்கலாம். மாற்று நடவடிக்கை எடுக்க முயற்சிக்கலாம்.

எதை எப்படி பார்க்கவேண்டும் என்று தெரிந்தவரை சொல்லித்தராமல், சும்மா புறங் கூறுவது கோவியாருக்கு அழகல்ல.