"மூச்சைக் கவனி, முழுவிழிப்புநிலையில் இரு!" புத்தர்
Showing posts with label எதிர்பார்ப்பு. Show all posts
Showing posts with label எதிர்பார்ப்பு. Show all posts

Tuesday, June 9, 2009

கடவுள் நல்லவரா கெட்டவரா

காட்சி ஒன்று

தருமி மாதிரி ஏழையான ஒரு தீவிர கடவுள் பக்தன் வறுமையில் வாடிக்கொண்டிருக்கிறான். அளவு கடந்த வறுமை,

வாழ்வில் வளம் பெற எல்லா வழிகளிலும் முயற்சித்தும் இதுவரை எந்த பலனும் இல்லை. எந்நேரமும் இறைவனை நினைந்தபடி இருக்கும் அவன், இறைனிடமே கேட்க முடிவு செய்கிறான்.

ஒரு கோடி ரூபாய் பணம் வேண்டும்,அப்பொழுதான் தான் என் கஷ்டமெல்லாம் தீர்ந்து மகிழ்ச்சியாக வாழமுடியும். இதைப் பெறவேண்டி அன்றைய தினம் எந்த வேலைக்கும் செல்லாது பிரார்த்தனை செய்கிறான். இரவும் பிரார்த்தனை செய்துகொண்டே தூங்கி விடுகிறான். விடியற்காலையில் சப்தம் கேட்டு தூக்கத்திலிருந்து கண்விழித்துப் பார்க்கிறான்.

எதிரே பட்டுத்துணியில் கட்டப்பட்ட ஒரு மூட்டை, என்னவென்று அவிழ்த்துப் பார்க்கிறான் உள்ளே பணம் கட்டுக்கட்டாக, சரியாக ஒரு கோடி ரூபாய், இறைவனின் கருணையை எண்ணி வியந்து, மகிழ்கிறான்.

******************************************************************************************
காட்சி இரண்டு

கடவுள் தன் இருப்பிடம் திரும்பிக்கொண்டிருக்கின்றார், பின்னால் ஒரு பெரிய மூட்டை, எதிரே வந்த எமதர்மன் வணங்கி, என்ன இது என்றும் இல்லாத வழக்கமாய் பெரிய மூட்டையுடன் திரும்பிக் கொண்டிருக்கின்றீர்கள் என்று கேட்டார்,

அதற்கு கடவுள், ”அது வேறொன்றுமில்லை, என் பக்தன் ஒருவனுக்கு கொடுக்க பணம் கொண்டு சென்றேன். அவன் ஒரு கோடி வேண்டும் எனக் கேட்டான். கொடுத்துவிட்டு திரும்பிக் கொண்டு இருக்கிறேன்.

நான் அவனுக்கு கொடுக்க நினைத்து கொண்டு சென்றதோ நூறு கோடி, பக்தன் கேட்டதை கொடுக்க வேண்டியது என் கடமை ஆதலால் வேறு வழியில்லாமல் கேட்ட ஒரு கோடியை கொடுத்துவிட்டு மீதி 99 கோடியை திருப்பிக் கொண்டுவந்துவிட்டேன்” என்றார்,

*****************************************************************************************
முதல் காட்சியில் ஏதேனும் தவறு இருக்கிறதா? எல்லாம் நிறைவாகத்தானே நடந்தது.

ஆனால் இரண்டாவது காட்சியை படித்தவுடன் முதல் காட்சியில் மறைந்த இருந்த தவறு புரிகிறதா?இதிலிருந்து என்ன தெரிகிறது? செயலுக்கு விளைவாக சரியானதை இறைநியதி நமக்கு வழங்கியே தீரும். நமக்கு வருவதை, நடப்பதை மனதின் சமநிலை மாறாமல், மன விரிவோடு ஏற்றுக்கொள்ளப் பழக வேண்டும்.

என்ன செய்தோம், என்ன கிடைத்தது எனப் பார்த்து செயலை ஒழுங்கு செய்வோம்,

எதிர்பார்ப்பு இன்றி சரியான முறையில் செயல்களை செய்யப் பழகிக்கொள்ளுங்கள், வரவேண்டியது தானாய் வரும். எதிர்பார்ப்பதைவிட பலமடங்கு அதிகமாய்.நிச்சயம் வரும்.

எதிர்பார்த்தால் நமக்கு வருவதை நாமே தடை செய்துவிடுகிறோம், பல சமயம் ஏமாற்றமும் அடைகிறோம்.

சிந்திப்போம், சந்திப்போம்

டிஸ்கி: நண்பர் ஓம்காரி்ன் இடுகைக்கும் இதற்கும் தொடர்பு உண்டு