"மூச்சைக் கவனி, முழுவிழிப்புநிலையில் இரு!" புத்தர்
Showing posts with label முன்வினை. Show all posts
Showing posts with label முன்வினை. Show all posts

Saturday, October 10, 2009

உருவ வழிபாடு ஏன்?

உருவமைப்பு, குணம், அறிவின் உயர்வு, உடல்வலிவு, சுகம், செல்வம், இவ்வேழு சம்பத்துக்களும் சரியாக இருந்தால்தான் ஒரு மனிதன் வாழ்க்கையில் தங்கு தடையின்றி எல்லாவற்றையும் சரிப்படுத்திக் கொள்ளமுடியும்.

இது கருவமைப்பின் மூலமாகவோ அல்லது சமுதாயத்தில் உள்ள ஏற்றத் தாழ்வின் காரணமாகவோ ஒவ்வொருவருக்கும் ஒன்றில் சிறப்பு இருக்கும். ஒவ்வொன்றில் குறைவு இருக்கும்.

குறைவாக உள்ளதை சரி செய்து, சமப்படுத்திக் கொள்வதற்கு அவரவர்கள் அறிவினாலேயே மனதில் சங்கல்பத்தின் மூலம் திடப்படுத்தி, பல தடவை அதையே எண்ணி எண்ணி குறைபாட்டைக் களைந்து நிறைவு செய்து வருவதற்கு, அறிவிற்குத் துணை செய்வதற்கு பூஜாவிதிகள் என்பதை முற்காலத்தில் ஏற்படுத்தினார்கள்.

பூஜாவிதி என்பது சடங்குகள் என்றாலும் எந்தக் குறைபாடு மனிதனிடம் இருக்கிறதோ, அந்தக் குறைபாட்டை அவனே நீக்கிக் கொள்வதற்காக மனஎழுச்சி, மனோதிடம், கற்பனையாக இருந்தாலும், பலதடவை செய்து செய்து இம்மாதிரி எனக்கு வேண்டும் என்று எண்ணும்போது முனைமனமானது, அடிமனதோடு தொடர்பு கொள்ளும்., அடிமனமானது பிரபஞ்சம் முழுவதும் உள்ள ஆற்றல் களத்தோடு தொடர்பு கொண்டு, எங்கேயிருந்தாலும் இவனுக்கு வேண்டியது தானாக வந்து சேரும் அளவுக்கு உண்டாக்கும்.

இயற்கைச் சட்டம் என்ன என்றால் fraction demands totality supplies

இயற்கையிலிருந்து துண்டுபட்டுள்ளதே ஜீவன், மனிதன்


முழுமுதற்பொழுதாக உள்ள இறைநிலை, அறிவு என்ற நிலையில் பிரபஞ்சம் முழுவதும் கலந்து, உயிருள்ள, உயிரற்ற எல்லாவற்றிலும் நிரம்பி இயங்கி கொண்டிருக்கிறது.

அதனால் எங்கே யாருக்கு என்ன தேவைப்பட்டாலும், விரும்பினாலும் அது கிடைக்கத்தான் வேண்டும்


ஆனால் விரும்புவர்கள் மனதை அதற்குரிய முறையில் அழுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும், தகுதியாகவும் வைத்துக்கொள்ள வேண்டும்.

---வேதாத்திரி மகரிஷி,

தொடரும்



டிஸ்கி; வேதாத்திரி மகரிஷி அவர்களின் இந்த கட்டுரை எளிமையாக அனைவருக்கும் புரியும்வண்ணம் அமைந்துள்ளதாக நான் எண்ணுவதால் இன்னும் சில பகுதிகள் தொடரும்.

Monday, August 31, 2009

ஜோதிடமா? முன்வினையா? முயற்சியா?

நம் முன்னேற்றத்தை முடிவு செய்வது சோதிடமா? முன்வினைப்பதிவா?, முயற்சியா? விதிப்படிதான் எல்லாம் நிகழும் என்றால் முயற்சி எதற்கு?


இதை புரிந்து கொள்ள முதலில் நமது வாழ்க்கையை, மனதிற்கு உட்பட்ட வாழ்க்கை, மனம் கடந்த வாழ்க்கை என இருவிதமாக பிரித்துப்பார்ப்போம்.

மனதிற்கு உட்பட்ட வாழ்க்கை என்பது அஞ்ஞான வாழ்க்கை , இவ் வாழ்க்கை இகலோகம் எனப்படும் இவ்வுலகத்தை சுற்றி, சார்ந்தே அமையும்.

கல்வி, தொழில், மனைவி, மக்கள், உறவினர் சமுதாயம், பொருள் சம்பாத்தியம், அந்தஸ்து, அதிகாரம், புகழ் என இப்பூமியைச் சுற்றியே பின்னப்பட்ட வாழ்க்கை ஆகும்.

மனதிற்கு உட்பட்ட வாழ்க்கை என்பது மூலாதாரம், சுவாதிஸ்தானம், மணிபூரகம்,அனாகதம், விசுக்தி என்னும் ஐந்து ஆதாரத்துக்குள்ளேயே வாழ்வது, அதாவது விசுக்தி என்னும் கண்டத்தைத் தாண்டாத வாழ்க்கை ஆகும்

அத்தகைய கண்டம் கடக்காத அஞ்ஞான வாழ்க்கைக்கு முன்வினைப்பதிவு, முன்னோர் வினை, சோதிடம், என்கணிதம்,வாஸ்து ,விதி, சமுதாயம், தெய்வங்கள் என சகலத்தடைகளும் உண்டு. இவைகளின் பாதிப்பு உண்டு.

இவைகளிலிருந்து விடுபட முயற்சி கண்டிப்பாக தேவை, எதிர்நீச்சல் வெற்றியைத் தரும். இதற்கு தன்னம்பிக்கை முன்னேற்ற பயிற்சிகள், இதர ஆன்மீக அமைப்புகள், வழிமுறைகள் ஓரளவு உதவும், இது குறித்த விழிப்புணர்வும் நமக்கு வேண்டும். இல்லாவிடில் சிக்கலே. இது மனதின் தன்மைக்கு ஏற்ப ஒருவருக்கொருவர் வேறுபடும்.

வினைப்பதிவை நீக்கக்கூடிய வாழும் முறை,பரிகாரம், மனம் சார்ந்த பயிற்சிகள் போன்றவைகளினால் மேற்கண்ட தடைகளை கண்டிப்பாக குறைக்க அல்லது நீக்க முடியும்,

இந்த மனிதப்பிறப்பில், வாழ்வில், நமது தலைவிதியை நம் கையில் எடுத்து முயற்சியால் மாற்றலாம். ஆனால் அது அவ்வளவு எளிதானதல்ல, அதற்கும் மனமே மறைமுகமாக தடையாக இருக்கும். மனமே தலைவிதி எனலாம்.

இந்த மனதிற்கு உட்பட்ட வாழ்க்கைக்கு, முயற்சி நிச்சயம் உதவும்.

இதற்கு மனம் கடந்த வாழ்க்கை முறைக்கு உரிய வழிகளை பின்பற்ற வேண்டும்.





இனி  மனம் கடந்த வாழ்க்கை

மனம் கடந்த வாழ்க்கை என்பது ஞான வாழ்க்கை, இது இகலோகத்தை சார்ந்திருந்தாலும், பரலோகத்திற்குரிய எண்ணத்திலும், முயற்சியிலும் விடாமல் கவனம் வைத்திருக்கும் வாழ்க்கை ஆகும். திருமுறைகள்,மகான்கள் வழிபாடு, தவமுயற்சிகள் என்ற தொடர்புகள் ஏற்படுத்திக்கொண்டு வானத்தை நோக்கிய பயணமாக, வாழ்க்கை இருக்கும். இதில் மத வேறுபாடு கிடையாது.

மனம் கடந்த வாழ்க்கை என்பது விசுக்தி எனும் கண்டம் கடந்த
ஆக்ஞை, சகஸ்தரதளம் என்னும் ஆதாரங்களில் வாழும் தவ வாழ்க்கை ஆகும்.

இந்த ஞான வாழ்க்கைக்கு வந்தோர்க்கு சோதிடம்,விதி, முன்வினைப்பதிவு, சமுதாயம், தெய்வங்கள் போன்ற தடைகள் கிடையாது. மிச்சம், மீதி இருப்பதும் கரைந்து கொண்டே வரும். எந்த பாதிப்பையும் உண்டு பண்ணாது,

இதன் பின்னர் முயற்சி தேவைப்படுமா என்றால் இங்கு முயற்சிக்கு வேலையே கிடையாது, எதிர்நீச்சல் அவசியமே இல்லை. இதற்கு உதவுவதெல்லாம் ஞானியர் தொடர்பு, மந்திர உபாசனை, உடல் ஒழுக்கம், செயல் ஒழுக்கம் ஆகியவையே.

அறிவு தெளிவு அடைய அடையத்தான் அச்சம் விலகும், அத்தனை குழப்பங்களும் நீங்கும்

அவர் அவர் ப்ராரார்த்த ப்ரஹாரம் அதற்கானவன்
ஆங்காங்கிருந்து ஆட்டுவிப்பான், என்றும் நடவாதது
என் முயற்சிக்கினும் நடவாது;
நடப்பது என் தடை செய்யினும்
நில்லாது. இதுவே திண்ணம்.
ஆதலின், மெளனமாய் இருக்கை நன்று.

மகான் ரமணர் மனம் கடந்த நிலையில் வெளிப்படுத்திய இவ் மஹாவாக்கியம் பொருள் இகவாழ்விற்கானதல்ல, இதை இப்புவி வாழ்வுடன் இதை பொருத்தி பார்த்தால் குழப்பமே மிஞ்சும்,

நீங்கள் மனம் கடந்த வாழ்விற்கு தயாராகிறீர்களா? உங்களுக்காக சொல்லப்பட்டதே இது. வினைகள் கழிந்து மேல்நிலை அடைய அடைய, பரலோக வாழ்வு நமக்கு எப்படி வாய்க்கும் என்பது நமக்கு தெரியாது. ஆகவே முயற்சி செய்யாதே, உனக்கு இறைவிதிப்படி எப்படி அமைய வேண்டுமோ, அப்படி அமையும், மெளனமாக இரு என மனதிற்கு சொன்னது

ஆக பெரியோர்கள், ஞானியர் வாக்கினை சரியாக உணர்ந்து கொள்ளவேண்டுமானால் அவர்களின் மனோநிலைக்கு நம் மனம் செல்லவேண்டும்.

இல்லையெனில் நம் மனதின் தரத்தைக் கொண்டு எடைபோட்டுப் பார்த்தால் அர்த்தம் புரியாமல் முரண்பாடகத் தெரியும், ஆகவே தெளிவடைவோம். மனதிற்குட்பட்ட வாழ்க்கையில் வெற்றியடைவோம்.

மனம் கடந்த வாழ்க்கைக்கான பாதையில் பயணிப்போம்.