"மூச்சைக் கவனி, முழுவிழிப்புநிலையில் இரு!" புத்தர்

Monday, November 9, 2009

பிதற்றல்கள் - 1 (09/11/2009)

முதலில் இந்த தலைப்பை தேர்ந்தெடுத்த காரணம்...

மனதின் ஓட்டங்களை கூர்ந்து கவனிக்கும் போது எப்படி வேண்டுமானாலும் அது மாறுகிறது, நேற்று எடுத்த முடிவை இன்று மாற்றிக்கொள்கிறது, பல்வேறு விசயங்களில் சமரசம் செய்து கொள்கிறது, நடிக்கிறது. கெளரவம் பார்க்கிறது, மானம், ரோசம், வெட்கம் பார்க்கிறது.

முக்கியமாக நான் எப்படி வாழவேண்டும் என நினைக்கிறேனோ அதற்கு முரணாகவே செயல்பட்டுக் கொண்டு இருக்கிறது, அறிவு சில சமயங்களில் விழித்து கொண்டு மனதை அடக்கினாலும் தன் வேலையைக் காண்பிக்கிறது,

என் மனதை ஒழுங்குபடுத்தவேண்டும், அதற்கு அடக்கினால் அடங்காது, அறிய நினைத்தால் அடங்கும். அப்படி அறிய வேண்டுமானால் மனதில் தோன்றுவதை பதிவு செய்யவேண்டும். அப்போதுதான் நான் இன்னும் பயணிக்க வேண்டிய தூரம் தெரியும். என் மன அழுக்குகள் ஏதேனும் இருந்தால் அவற்றையும் பதிவு செய்யவே விரும்புகிறேன்.

இது ஒரு சோதனை முயற்சி, உங்களுக்கும் இது ’சோதனை’ தான் :))

மிக கண்டிப்பாக, நட்போடு பழகுவதில் இந்த தலைப்பில் ஏதேனும் கருத்துகள் வந்தால் இவரா இப்படி என்று நினைத்து விடாதீர்கள்.

பிரித்து பார்க்க கற்றுக்கொள்ளுங்கள், உள்ளொன்று புறமொன்று இருக்கக்கூடாது என நினைப்பதால் இதையும் குறிப்பிடுகிறேன்.

இன்று..


காலையில் அருகில் உள்ள உழவர் சந்தைக்கு வீட்டுக்காரி(மனைவி)யுடன் சென்றேன், அங்கு ஒரு பெரியவர் வயது எழுபதுக்கு மேல் இருக்கலாம், கையில் சிறு பாலீதீன் பையுடன் மெதுவாக கீழ் நோக்கி பார்த்துக் கொண்டே வந்தார், பையில் சில வெங்காயங்கள், வெண்டைக்காய், கத்திரிக்காய் முதலியன மொத்தமாகவே கால்கிலோ கூட தேறாது.

மக்கள் நடமாட்டம் சற்று குறைவாக இருக்கவே, சந்தையின் நடைபாதை இன்னும் மற்ற இடங்களிலும் கீழே சிதறிக் கிடக்கும் காய்கறிகளில் தேர்ந்தெடுத்து சிலவற்றைப் பொறுக்கி பையில் போட்டுக்கொண்டே வந்தார்,

மனம் ஓட ஆரம்பித்தது,

அடடே எதுக்காக பொறுக்குகிறார்?

ஒருவேளை தனது உணவுக்காக பொறுக்குகிறாரா? பணமில்லா வறுமை என்ன பாடுபட வைக்கிறது?

ஆகா.. பரவாயில்லை பிச்சை எடுக்காமல் சுகாதாரம் இல்லாவிட்டாலும் உழைப்பின் வழி  வாழ்கிறாரே!!

ஒருவேளை பொறுக்கி சின்ன கடையாப் பார்த்து விற்றுவிடுவாரோ? பார்த்தா அப்படி தெரியவில்லையே?

ஒருவேளை அப்படி கடைக்கு விற்றால் அதை தின்கிறவன் கதி?

இதுக்கு நாம எதாவது பண்ணலாமா?


வேணுமின்னா எண்ணத்தை உள்ள போட்டுவச்சுக்கோ., நீ முதல்ல ஒழுங்கா வீட்டு வேலையச் செய்யி, அப்புறம் பார்க்கலாம்!
Post a Comment