"மூச்சைக் கவனி, முழுவிழிப்புநிலையில் இரு!" புத்தர்

Thursday, December 15, 2016

தம்மத்தில் அன்பும் வெறுப்பும் -- ஓஷோ


வெறுப்பு என்பது இறந்த காலத்திலும் எதிர்காலத்திலும் இருப்பது. நிகழ்காலத்தில் உங்களால் வெறுக்க முடியாது. முயற்சி செய்து பாருங்கள். முடியவே முடியாது. இறந்தகால, எதிர்காலத் தொடர்பில்லாமல் வெறுப்புக் காட்டவே முடியாது.

நேற்று யாராவது உங்களை அவமானப்படுத்தி இருப்பார்கள். அதை ஒரு மனக்காயமாக,  தலைவலியாக நீங்கள் சுமந்து கொண்டு இருக்கலாம். அல்லது நாளை யாராவது  உங்களை அவமானப்படுத்தக்கூடும் என்ற பயமோ, அதன் நிழலோ இருக்கலாம்.

இப்படிப்பட்ட வெறுப்பு,  வெறுப்பையே உருவாக்கும்.  வெறுப்பையே கிளறிவிடும். ஒருவரை நீங்கள் வெறுக்கும்போது அவர் மனதில் உங்களுக்கு எதிரான வெறுப்பையும் உருவாக்கி விடுகிறீர்கள்.

ஆனால் அன்புக்கு இறந்தகாலமும் கிடையாது எதிர்காலமும் இல்லை. அன்பு காரணமில்லாமல் நிகழ்வது. அது உங்கள் பரவசத்தின் வெளிப்பாடு. பரவசமோ விழிப்பின் துணைத் தயாரிப்பு. விழிப்புணர்வு ஏற்பட்டதும் ஆனந்த பரவசம் தானாக வந்துவிடும்.

நமது அன்பு வேறு... உண்மை அன்பு வேறு.

நமது அன்பு வெறுப்பின் மறுபக்கமே தவிர வேறில்லை. அதனால் நம் அன்பிற்கு ஒரு பின்னணி இருக்கும். யாராவது உங்களிடம் நேற்று இனிமையாக நடந்து கொண்டிருந்திருப்பார்கள். அதனால் உங்களுக்கு அவர்மீது அன்பு தோன்றி இருக்கும். அது அன்பே அன்று.. வெறுப்பின் மறுபக்கம்தான்.

அதனால்தான் எந்தக்கணத்திலும் அன்பு வெறுப்பாக மாறிவிடக்கூடியதாக இருக்கின்றது. மாறுவேடம் பூண்ட வெறுப்புதான் உங்கள் அன்பு.

உண்மையான அன்பிற்குப் பின்னணி தேவை இல்லை. உண்மை அன்பு உங்கள் உள்ளத்தின் மகிழ்ச்சியின் இடையறாத வெளிப்பாடு. அதைப் பொழிவதற்கும், பகிர்ந்து கொள்வதற்கும் காரணமே தேவையில்லை. வேறு நோக்கமும் தேவையில்லை. பகிர்ந்து கொள்ளும் மகிழ்விற்காகவே பகிர்ந்து கொள்வது.

நான் குறிப்பிடும் அன்பு அப்படிப்பட்ட அன்பு. இதற்குள் நீங்கள் பிரவேசிக்க முடியுமானால் அதுவே சுவர்க்கம். அன்பே ஒளி. உங்கள் இருப்பின் ஒளி.

அன்பு மட்டுமே வெறுப்பை விரட்டும். ஒளி மட்டுமே இருளை விரட்டும். இதுவே நிரந்தரவிதி. புத்தர் இதையே மீண்டும் மீண்டும் குறிப்பிடுகிறார்
               “ஏஸ் தம்மோ ஸனந்தனோ..”

ஓஷோ
தம்மபதம் 1