கோவை வானொலிக்காக நடந்த நிகழ்ச்சியில் திருக்குறள்.பெ.இராமையா அவர்கள் பங்கேற்றபோது, அவரிடம் ஒரு புலவர், ”மின்சாரத்திற்கும் சம்சாரத்திற்கும் சிலேடையாக ஒரு வெண்பாவைப் பாடவேண்டும்” என்றார்.
”ப்ளிச்...” என்று ஆரம்பித்த சிலேடைப் பாடலின் முதல் வரி, அனைவரையும் சிரிப்புக் கடலில் ஆழ்த்தியது.
’சமயத்தில் ஒத்துழையா
’ஷாக்’ அடிக்கும் தொட்டால்
இமைசிமிட்டும் இன்பமதை
ஊட்டும்-நமை உயர்த்தும்
தன்சாரம் குன்றாத
தன்மையால் எஞ்ஞான்றும்
மின்சாரம் சம்சாரமே!’
’சமயத்தில் ஒத்துழையா...’ என்பதில் ‘மின்சாரம்,சம்சாரம் இரண்டுமே எந்த நேரத்தில் காலை வாரும் என்று சொல்ல முடியாது. எதிர்பாரத நேரத்தில் தகராறு செய்து நமக்கு அதிர்ச்சியை (tension) உண்டாக்கும்.
ஷாக் அடிக்கும் தொட்டால்...’ என்பது அடுத்த வரி, தகராறு செய்யும் சமயத்தில் இரண்டின் மீதும் கையை வைக்காதே. பட்...டென்று அடித்து விடும்.
இமைசிமிட்டும்...’ அதிக அழுத்தம் (ஹீவோல்ட்), குறை அழுத்தம் காரணமாக மின்சார விளக்குகள் ‘ப்ளிச்..’ என எரிவதும், மங்கலாக ஒளிர்வதும் இயற்கை.
அதுபோல் வீட்டுக்கு வரும் விருந்தினரைப் பொறுத்து சுறுசுறுப்பாய் இயங்குவதும், மந்தமாய் இருப்பதும் சம்சாரத்தின் இயற்கை.
அதாவது பிறந்த வீட்டுச் சொந்தங்களாகிய அப்பா, அம்மா, அண்ணன், தங்கை என்று வந்தால் சுறுசுறுப்பாய்ப் ‘ப்ளிச்’சென்று மின்னும். புகுந்த வீட்டுச் சொந்தங்களாகிய மாமியார்,நாத்தனார் என்று வந்துவிட்டால் மந்தமாகி விடும்’.
’இன்பமதை ஊட்டும்..’ வீட்டில் மின்விசிறி சுழல, மின் அடுப்பு எரிய,குளிர்பெட்டி குளிர, விளக்குகள் ஒளிர, மின்சாதனப் பொருட்கள் இயங்க என எல்லாவற்றிற்கும் மின்சார ஓட்டம் சீராக இருந்தால் நமக்கு இன்பமான மனநிலை தரும். அதேபோல் ஒரு குடும்பத்தின் அத்தனை இன்பங்களுக்கும் காரணமாய் இருந்து நமக்கு இன்பத்தை தருவது சம்சாரமே.
’நமை உயர்த்தும்...’ ஒரு வீட்டின் உயர்வுக்கும் நாட்டின் பொருளாதார உயர்வுக்கும் மின்சக்தி ஓர் அடிப்படைத் தேவை. அதேபோல் ஒரு குடும்பத்தின் உயர்வுக்கு சம்சாரம் ஓர் அடிப்படைத் தேவை
’தன்சாரம் குன்றாத தன்மையால்’ நேரம் கருதியோ, ஆளைக் கருதியோ மின்சாரம் தன் ஆற்ற்லைக் குறைத்துக் கொள்வது கிடையாது.240 வோல்ட் மின்சக்தி என்றால் யார், எப்போது தொட்டாலும் ஒரே மாதிரிதான் மின் அதிர்ச்சி இருக்கும். அதேபோல் இல்லத்தில் எப்போதும் தன் மதிப்புக் குறையாமல் பார்த்துக் கொள்வது சம்சாரத்தின் இயல்பாக இருக்கும்.
மேற்கூறிய காரணங்களால் மின்சாரமும் சம்சாரமும் ஒரே இயல்புடையவை
என பாடலை முடித்தார்.பதின்கவனகர் திரு.இராமையா பிள்ளை.
எப்படி..?
சுவையாக உள்ளதா சிலேடை..?!!!!!!
நன்றி: கவனகர் முழக்கம் தி.ஆ.2033 வைகாசி வெளியீடு