"மூச்சைக் கவனி, முழுவிழிப்புநிலையில் இரு!" புத்தர்

Thursday, October 17, 2019

பழங்களை எப்படிச் சாப்பிடணும்?

பழங்களை அப்படியே சாப்பிடணும்!

பழங்களை எப்படி சாப்பிட வேண்டும்; வெட்டி வைத்து சாப்பிடுவதால் ஏற்படும் பிரச்னைகள் என்ன என்பது குறித்து, இயற்கை மருத்துவர் ஒய்.தீபா:

பழங்களை நன்றாக கழுவிய பின், அப்படியே கடித்து சாப்பிடுவது தான் நல்லது. அலுவலகத்தில் அல்லது பிற இடங்களில் அவ்வாறு சாப்பிட முடியாது என நினைப்பவர்கள், சிறிய பேனா கத்தியை வைத்துக் கொள்ள வேண்டும். நேரம் கிடைக்கும் போது, துண்டுகளாக வெட்டி சாப்பிடலாம்.

பழங்களை வெட்டி, நீண்ட நேரம் வைத்திருந்து சாப்பிடும் போது, அந்த பழங்களில் உள்ள, 'விட்டமின் ஏ, சி, இ' போன்ற சத்துகளில் இழப்பு ஏற்படும். வெட்டப்பட்ட பழத்துண்டுகள், ஒளி மற்றும் ஆக்சிஜனுடன் வினை புரிந்து, பழத்தில் உள்ள, 'ஆன்டி ஆக்சிடன்ட்' அளவை குறைக்கிறது.

பழங்களை வெட்டி சாப்பிட வழியில்லை என நினைப்பவர்கள், அவற்றை துண்டுகளாக்கி, காற்று புகாத டப்பாவில் அடைத்து, 'ஏசி' அறை அல்லது பிரிஜ்ஜில் வைக்கலாம். இதனால், துண்டான பழங்களின் சுவாசம் குறைவாக இருக்கும்; எளிதில் கெட்டுப் போகாது.

அது போல, பழச்சாறுகளை, தயாரித்த சில நிமிடங்களில் அருந்த வேண்டும்; நீண்ட நேரம் வைத்திருந்தால், கெட்டு விடும். பழச்சாறுகளை உடனடியாக குடிக்க முடியவில்லை; கொஞ்ச நேரம் கழித்து தான் அருந்த முடியும் என்றால், ஐஸ் கட்டிகளை அதில் சேர்க்கக் கூடாது. இனிப்பு சேர்க்காமல், சிறிதளவு இந்துப்பு சேர்த்து வைத்தால், சீக்கிரம் கெட்டுப் போகாது.

எலுமிச்சை, நெல்லிக்காய், ஆரஞ்சு, சாத்துக்குடி, அன்னாசி போன்ற, 'விட்டமின் சி' சத்து அதிகம் உள்ள பழங்களை, நேரம் கழித்து பருகக் கூடாது. தயாரித்த உடனேயே அதில் உள்ள, விட்டமின் சி சத்து, காற்றில் கரைந்து விடும்; எனவே, உடனே பருக வேண்டும்.

'இதுவும் பழச்சாறு தான்' என, 'டின்' பழச்சாறுகள் விற்பனைக்கு வருகின்றன. கொஞ்ச நேரம் வைத்திருந்ததும் கெட்டுப் போகும் பழச்சாறுகள், டின்னில் வைத்திருந்தால் மட்டும் கெட்டுப் போகாமல் இருக்குமா... கெட விடாமல் தடுக்கும் ரசாயனமான, 'பிரசர்வேடிவ்' அதில் உள்ளது.பழச்சாறு, தரமாக இருக்கிறதா என்பதை கண்டறிவது எளிது. பழச்சாறு தயாரிக்கப்பட்ட போது, எந்த நிறத்தில் இருந்ததோ, அதே நிறத்தில் இருந்தால், தைரியமாக அருந்தலாம். நிறம் மாறி இருந்தால், கெட்டு விட்டது என, அர்த்தம்!பழக் கடைகளில் தயாரிக்கப்படும் பழச்சாறுகள், ரசாயனம், நிறமூட்டிகள் கலந்தே விற்கப்படுகின்றன.

பல விதமான பழங்களை ஒன்றாக கலந்து, கூழாக அரைத்து, பார்க்க நன்றாக இருக்க வேண்டும் என்பதற்காக, உடலுக்கு தீங்கு விளைவிக்கும் ரசாயனங்களை சேர்க்கின்றனர். அத்தகைய பழச்சாறுகளை தவிர்ப்பது நல்லது!

நன்றி தினமலர்

Wednesday, October 2, 2019

முன்னைப் போல் அதிகம் எழுதத் தோன்றுவதில்லை

முன்னைப் போல் அதிகம் எழுதத் தோன்றுவதில்லை. ஏனெனில் எதை எழுதினாலும், அதன் மறுபக்கம் அல்லது நியாயம் கூடவே மனதில் வந்து விடுகிறது. அதை ஒதுக்கி,  ஒன்றை நியாயப்படுத்தி எழுத வேண்டுமா என்ற கேள்வி தோன்றுகிறது.

கடும்கோடையில், பறவைகளுக்கு மொட்டை மாடியில்  சிறு கிண்ணங்களில் தண்ணீரும், சிறுதானியங்களும் வைத்தால், ஆகா அருமையான யோசனை  என, உயிர்களின் மீதான அன்பினை பாராட்டத் தோன்றுகிறது.

கூடவே, அது எங்கோ, தன் முயற்சியால் உணவு தேடி, நீர் அருந்தி, கூடு அடையும் பறவையாக இருப்பதை, நாய் பூனை போன்ற வீட்டு விலங்கு போல மாற்றி, அதன் இயல்பை, வாழும்திறனை ஒழிப்பதற்கு துணை போக வேண்டாம் எனவும் தோன்றுகிறது. இதுவும் அந்த உயிர்களின்  மீதுள்ள அன்பினால்தான் எனும்போது, இதையும் ஏற்க வேண்டியதாக இருக்கின்றது.

ஆக இரண்டு விசயங்களுமே சரிதான். செய்யலாம். ரொம்ப யோசிக்காமல் தோன்றுவதைச் செய்யலாம். இப்படி இருதரப்பு அபிப்ராயங்கள் வரும்போது எனக்கு என்ன விருப்பமோ அதையும், உங்களுக்கு என்ன விருப்பமோ அதையும் செய்ய வேண்டியதுதான்.  உள்ளார்ந்த அர்த்தம் அவரவர் வெளிப்படுத்தினால் அன்றித் தெரியாது.

தீனி வைக்காதவன் கஞ்சன் என்றோ, பிற உயிர்களின்மீது அக்கறை இல்லாதவன் என்று மற்றவனால் பார்க்கப்படலாம். தீனி வைத்தவன் நாயைக் கெடுத்தான்,  பூனையைக் கெடுத்தான், இப்ப குருவியின் வாழ்க்கை முறையை கெடுக்கிறான் என இவனால் பார்க்கப்படலாம். இதுதான் சமூக இயல்பு. இவற்றைக்  கண்டு கொள்ளாமல் உங்களுக்கு விருப்பமானதைச் செய்வதே நல்லது. ஏன்?

இப்படியான நம் விருப்பத்தில் எது சரி, எது தவறு என்பதெல்லாம் விளைவுகளைப் பொறுத்தே அமையும் என்பதே, என் நிலைப்பாடு. சரி, தவறு என்பதெல்லாம் தர்க்கரீதியாக மனதை வைத்து யோசிக்காமல், சொல் விளையாட்டில் சிக்கிக் கொள்ளாமல், செயலின் விளைவாக என்ன நடந்தது என்று கவனித்தால் போதுமானது. இது மனிதர்களோடு தொடர்ந்து உறவாட உதவியாக இருக்கும்.

அப்படி நடப்பது அல்லது கிடைப்பது மனரீதியாக இருக்கலாம். இல்லை, பொருள்ரீதியாக இருக்கலாம். ஒரு சில ரூபாய் மதிப்புள்ள சிறுதானியங்கள் மூலம், உங்கள் மனதிற்கு ஒரு சந்தோசம், நிம்மதி கிடைக்கிறது. கூடவே குருவிகளின் வயிறும் நிறைகிறது எனில், அதை ஏன் தவிர்ப்பானேன்?  இது ஒரு சுயநலமான யோசனைதான். நான் மறுக்கவில்லை.

சுயநலமின்றி, பொதுநலம் இல்லை. என்னிடம் இரண்டு வேளைக்கான உணவு இருக்கிறது. எனில், அடுத்தவேளையைப் பற்றி பிறகு பார்த்துக் கொள்வோம், இப்போது பசியுடன் இருக்கும் ஒருவரோடு பகிர்ந்து கொள்பவன் பாராட்டுக்குரியவனே.

தான் பட்டினி கிடந்தாலும் பரவாயில்லை என இரு நபர்களுக்கு கொடுப்பவன் தியாகி, தெய்வம், முட்டாள் என்று எப்படிச் சொன்னாலும், ஒரே பொருள்தான்.

இதில், நான் செயல்களை உயர்வு தாழ்வு எனப் பிரிக்கவில்லை.  உங்களின் செயல்கள் உங்களைச் சார்ந்தோருக்கு, குடும்பம், தொழில் நட்புகள் என எப்படி வைத்துக் கொண்டாலும் சரி, என்ன விளைவுகளை ஏற்படுத்துகிறது  என்பதை கவனத்தோடு இருங்கள். குருவி வயிறும் நிரம்பவேண்டும், நம் மனதும் நிரம்பவேண்டும். வீட்டில் இருப்போரை பட்டினி போட்டு, உணவை வெளியே பகிர்வது, இங்கு பாதிப்பு, அங்கு மகிழ்ச்சி என்று அமைந்துவிடும்.

எந்தச் செயலாக இருப்பினும், அதன் பலன் இரு தரப்பிலும் மகிழ்ச்சியை விதைக்குமாறு அமைய, முயற்சிப்போம். மனநிம்மதியைப் பெறுவோம்.

நிகழ்காலத்தில் சிவா