"மூச்சைக் கவனி, முழுவிழிப்புநிலையில் இரு!" புத்தர்
Showing posts with label நல்ஒழுக்க உறவு. Show all posts
Showing posts with label நல்ஒழுக்க உறவு. Show all posts

Monday, April 27, 2009

கடவுளும்..நல்ஒழுக்க உறவும்..அன்பான உறவும்

‘கடவுளை இவர்கள் கண்டு கொள்வதில்லை. ஆனால் கடவுளோ இவர்களைக் கண்டு கொள்வார்!’

என்னும் மூன்றாம் வகை உறவே நல்ஒழுக்க உறவு.

பகவான் புத்தர், மகாவீரர், கபிலதேவர் போன்ற மகான்களே இந்தப் பட்டியலில் உள்ளவர்கள்.

இவர்கள் கடவுளைப் பற்றிப் பேசவில்லை; புகழவில்லை; கடவுள் நம்பிக்கையும் வைத்திருக்கவில்லை. ஆனால் கடவுளுக்கு உகந்த உண்மை, அன்பு, தியாகம், ஜீவகாருண்யம், தொண்டுள்ளம், பொறுமை, ஆணவமின்மை உள்ளிட்ட சகல நல் ஒழுக்கங்களையும் கடுமையாய்ப் பின்பற்றி நோன்பிருந்தார்கள்.

இவர்கள் கடவுளைக் கண்டு கொள்ளாவிட்டாலும், கடவுள் இவர்களைக் கண்டுகொண்டார். அதனால்தான் அவர்களுக்கு ஞானமும் வாய்த்தது.சமாதியும் வாய்த்தது. இந்த வழி போற்றுதலுக்குரிய வழி. தாரளமாய் இந்த வழியில் நாம் பயணிக்கலாம்.

நான்காம் வகை ; அன்பான உறவு

‘கடவுளை இவர்கள் நேசிக்கின்றனர், கடவுளும் இவர்களை நேசிக்கின்றார் !’

என்னும் நான்காம் வகை உறவே அன்புவழி உறவு. இருப்பதில் உயர்ந்த உறவு. உத்தமான உறவு.

வள்ளல் பெருமான், பட்டினத்தடிகள், சைவ நாயன்மார்கள், சித்தர்கள் எனப் பலரும் பின்பற்றிய உறவு இது.கடவுள் விரும்பும் அனைத்து நல் ஒழுக்கங்களையும் வைத்திருந்து தவம் செய்து உயர்வடைந்தவர்கள். அதே வேளையில் கடவுளைப் புகழ்ந்து போற்றிப் பாடுவார்கள்.

தன்னை கடவுள் என்றும், அவதாரம் என்றும் பிரகடனம் செய்ய மாட்டார்கள். தன்னைச் சுற்றி புகழ்வதற்கென்று கூட்டம் கூட்ட மாட்டார்கள். மக்களோடு மக்களாய் எளிமையாய் வாழ்வார்கள்.

’திருநீறு வர வைக்கிறேன். எலுமிச்சம்பழம் வர வைக்கிறேன்’ என்பதுபோல் அல்ப சித்துக்களைக் காட்டிப் பாமரர்களை ஏமாற்ற மாட்டார்கள்.

’என்னிடம் பணம் கட்டிப் பாதபூஜை செய்தால் வினைகள் தீர்ந்துவிடும்’ என்பதுபோல் பொய் பிரகடனம் செய்ய மாட்டார்கள்

’தான் மட்டுமே குரு. நீ எந்நாளும் சீடன்தான் !’ என்பது போல் அடிமை வம்சத்தை உருவாக்க மாட்டார்கள்.

‘நின் கடன் அடியேனையும் தாங்குதல். என் கடன் பணி செய்து கிடப்பதே!’ என்ற அப்பர் சுவாமிகளின் திருவாக்குப்போல் அடக்கமாய், எளிமையாய், மறைவாய், தனியாய் வாழ்வார்கள்.

இருப்பதில் உயர்ந்த நிலையை எய்தும் வல்லமை இவர்களுக்கே உண்டு. இவர்களை பின்பற்றுவோர் தாரளமாய் கடைத்தேறலாம்

இந்த நால்வரில் நீங்கள் யார் ?

நீங்கள் யார் என்பதையும், எந்த நிலையில் இருக்கிறீர்கள் என்பதையும் உணருங்கள். யாராக வேண்டுமானாலும் மாற உங்களுக்கு உரிமையும் தகுதியும் சுதந்திரமும் உண்டு முடிவு செய்யுங்கள் செயல்படுங்கள்.

நன்றி; கடவுளைக் கண்டோம்! காட்டவும் வல்லோம்! ஞானதேவபாரதி சுவாமிகள் அவர்களின் நூலில் இருந்து