"மூச்சைக் கவனி, முழுவிழிப்புநிலையில் இரு!" புத்தர்
Showing posts with label விழிப்புணர்வு. Show all posts
Showing posts with label விழிப்புணர்வு. Show all posts

Tuesday, December 11, 2012

திருப்பூர் பதிவர் சந்திப்பு 09/12/2012

வெள்ளிக்கிழமை அன்று இந்தத் தகவலை நண்பர் ஜோதிஜி பகிர்ந்து கொள்ள முதலில் தொடர் வேலைகளினால் அப்புறம் பார்ப்போம் என்று விட்டுவிட்டேன். பின்னர் நடக்கிற இடம் உள்ளூரில் என்பதால், கலந்து கொள்வோம் முடிவு செய்து ஞாயிற்றுக்கிழமை திருப்பூர் காங்கயம் ரோட்டில் அமைந்துள்ள செண்பகம் மக்கள் சந்தை என்கிற டிபார்மெண்டல் ஸ்டோரில் ஆஜராகிவிட்டேன்.

இந்த விழா தொழிற்களம், மக்கள் சந்தை, தமிழ்ச்செடி என்கிற அமைப்புகளின் சார்பில் நடப்பதாக பேனர் தெரிவிக்க சற்று யோசனையோடுதான் இருந்தேன். கடைசியில் MLM வியாபாரமுறையில் கொண்டு நிறுத்தி விடுவார்களோ என்ற கலக்கம் உள்ளூர இருந்தது. :)

10 மணிக்கு விழா என்ற் உடன் சரியாக விழாவின் சிறப்பு அழைப்பாளார் திரு.சுப்ர பாரதி மணியன் வருகை புரிய இயல்பாக பேசிக்கொண்டிருந்தோம். நிறைய நாவல்கள் சிறுகதைகள் எழுதி இருந்தபோதும் இவரை எனக்கு என் தொழிற்கூடத்திற்கு அருகில் தாய்தமிழ்ப் பள்ளி என்ற ஆரம்பப்பள்ளி நடத்திவருபவர் என்ற வகையில் அறிமுகம். ரூபாய் நூறுக்கும் குறைவான மாதக்கட்டணத்தில் மூன்றாம் வகுப்பிற்கு மேல்தான் ஆங்கிலம் என நடுத்தர, மக்களுக்கு இவரது சேவை பாராட்ட வார்த்தைகள் இல்லை.

இவர் வளர்ந்துவரும் எழுத்தாளர் நா.மணிவண்ணனை பாராட்ட பொருத்தமானவர் என்பதில் சந்தேகம் ஏதுமில்லை. ஒவ்வொருவராக வர அடுத்த கால்மணிநேரத்தில் அரங்கம் உற்சாகமானது :)

தமிழ்த்தாய் வாழ்த்துடன் துவங்கிய கூட்டம் கலந்துரையாடல் போல தொடங்கியது. சுப்ரபாரதி மணியன் பேசும்போது போஸ்ட்மார்டனிசம் என்பதன்படி மையத்தில் இருப்பவர்களுக்காக விளிம்பில் இருப்பவர்கள் எல்லோரும் இயங்க வேண்டி இருக்கிறது. அதுபோல் எழுத்துலகில் சில எழுத்தாளர்கள் ஆட்சி செலுத்தி கொண்டிருந்த போதும், மற்றவர்கள் படிப்பதையும் விமர்சிப்பதையும் தவிர்த்து ஏதும்செய்ய முடியாத சூழலில் புத்தகம் வெளியிட அவசியம் இல்லாது தனது கருத்துகளை உடனுக்குடன் வெளிப்படுத்த இணையம் உதவுகிறது, என்றும் இந்த ஒன்றே விளிம்புநிலை வாசகர்களை மையத்தை நோக்கி பயணிக்கச் செய்து இன்றைய எழுத்தாளர்களை ஊக்குவிக்கிறது. அந்தவிதமாகவே நா.மணிவண்ணனுக்கான பாராட்டும் பொருந்தும் என்றார்.



அடுத்து பதிவர்கள் சுய அறிமுகமாக நிகழ்ச்சி பயணிக்கத் தொடங்கியதும் அதில் மெட்ராஸ் ப்வன் சிவகுமார் இணையத்தில் தமிழ் என்ற தலைப்பை ஒட்டி ஜோதிஜியால் மேடைக்கு அழைக்கப்பட்டு பேச ஆரம்பித்தார். தமிழ் வளர்ச்சியில் தமிழரின் பங்காக தமிழன் தன்னைத்தானே கிண்டல் செய்து கொள்வதையும், தமிழை கிண்டல் செய்வதையும் தவிர்த்தால் போதும். தூய தமிழுக்கு மெனக்கெட வேண்டியதில்லை. மேலும் வரும்காலத்திலும் இப்போதும் ஆங்கிலம் இன்றி சம்பாத்தியம் இல்லை என்று சொல்ல. கோவை மு சரளா ஊடாடிய கருத்துகளை தெரிவிக்க இரு தரப்பின் கருத்துகளும் சந்தேகமின்றி பார்வையாளர்களுக்குத் தெளிவானது. இந்த கருத்துப் பரிமாற்றம் ஒரு துளிகூட மோதலோ, கடுமையோ, இன்றி இயல்பாக அமைந்ததை உணர்ந்தேன்.

செண்பகம் மக்கள் சந்தை என்ற டிபார்மெண்டல் ஸ்டோரின் உரிமையாளர் திரு. சீனிவாசன் வந்தவர்களுடன் அன்போடு எந்தவித பந்தாவும் இல்லாமல் இயல்பாகப் பழகினார். நிகழ்வு நடத்த இடத்தையும் வழங்கி, தேநீர் பிஸ்கெட்டுகள் வழங்கி உற்சாகப்படுத்தினார்.

கூட்டத்தில் அவரது கடைக்கு வந்த நண்பர் தம்பதியினரை வர வைத்து பேச வைத்தார். அவர் இணையத்தில் எழுதுபவர்கள் வெறும் கவிதையும், கதையும் எழுதுவதோடு மற்ற்வர்களுக்கு பயன் தரும் கருத்துகள் எழுத வேண்டினார். இதோடு நான் முரண்பட்டாலும் தெரிவிக்கவில்லை.:)

இணையம் என்கிற பொதுவெளியை தன் திறமையினை வெளிக்கொணரும் இடமாகவே பயனாளர்கள் பயன்படுத்தவேண்டும் என்பதே என் அவா. கவிதையோ, மொக்கையோ நகைச்சுவையோ இயல்பாக வெளிப்படுத்திப் பழகி, மெருகேற்றிக்கொள்ள இணையவெளியை பயன்படுத்தவேண்டும். எல்லோரும் அறிவுரை சொன்னால் இணையம் தாங்காது :) வராததை முயற்சிக்க வேண்டிய அவசியம் இல்லை

மணிவண்ணன் எனக்கு பேச வராது என்று யதார்த்தமாக சொல்லி, தனது எழுத்து சிறுமுயற்சிதானே தவிர இன்னும் வளரவேண்டிய இடத்தில்தான் இருக்கிறது என்றார். இன்னும் தன்னை தகுதிப்படுத்திக்கொள்ள இந்த பரிசு சுட்டிக்காட்டுகிறது என்றார்.

தமிழ்ச்செடி குறித்து இரவு வானம் சுரேஷ் விவரித்தார். ஜோதிஜி கருத்துகளை இணைத்தும் நிகழ்ச்சியை வ்ழிநடத்த இறுதியில் மணிவண்ணனுக்கு நூல் பரிசளிப்பும், நினைவுப்பரிசும் வழங்கப்பட விழா நிறைவடைந்தது. மொத்தத்தில் கூட்டம் கலந்துரையாடல் போல் அமைந்து இயல்பாக சம்பிரதாயங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்காமல் நடந்த கலந்துரையாடல்,, தேர்ந்த திட்டமிடப்பட்ட கூட்டத்தில் கலந்துகொண்ட நிறைவைக்கொடுத்தது.

இந்தக்கூட்டத்தில் தவிர்க்கப்பட வேண்டிய விசயங்கள் என்று எதையும் என்னால் குறிப்பிட முடியாத அளவு சிறப்பாக இருந்தது என்றால் மிகையில்லை.

Wednesday, October 31, 2012

உள்ளுற நோக்குதல் - விபாஸ்ஸனா

தீபாவளி பக்கம் வந்துவிட்டது. இன்னும் 10 நாட்களே இருக்கையில் அதற்குப் பின்னதாக வரும் லீவு நாட்களை , மனதில் கொண்டு  ஓட வேண்டி இருக்கிறது.

அன்றாட வாழ்க்கையும், அதை உரசல் இல்லாமல் நகர்த்த பணம் ஒரு அத்தியாவசியத் தேவையாக மாறிவிட பணத்தின் மீது பற்றுதல் இல்லை என மனம் சொன்னாலும் பணத்தின் பின்னால் ஓட வேண்டி இருக்கிறது என்பதே நிதர்சனம்.. இது ஒன்றும் கடினமான பணி அல்ல. சற்றே அயர்ச்சியைத் தரும் பணி அவ்வளவுதான்.

இங்கே அயற்சியை உணர்வது உடல் அல்ல.மனம்தான் :)

இச் சூழ்நிலையில் மனதைப் பயன்படுத்துவதில் வரும் சிக்கல்களுக்கு தீர்வு என்ன. என்று பார்த்தால் மனதிற்கான வடிகாலாக, தற்காலிகமாக கவனத்தை இடமாற்றம் செய்வது......திசைதிருப்புவது மற்றும் கவனஈர்ப்புதான்... ஆடல், பாடல் திரைப்படம், கிண்டல், கேலி இணையம் என மனதை வெளிப்புறமாக திசை திருப்புதல்தான் நடக்கின்றது.

 சில சமயங்களில் இவை தற்காலிக நிம்மதியைக் கொடுத்தாலும் கிண்டலும் கேலியும் இருக்கிற நிம்மதியையும் கெடுத்துவிடுகின்றன.:( இணையத்தில் டிவிட்டரில் ஓடிக்கொண்டு இருக்கும் பிரச்சினைகளே இதற்குச் சாட்சி.

நமக்கென ஒரு மனத்தோற்றத்தை நாம் ஒவ்வொருவரும் வைத்துகொண்டுள்ளோம். நாம் பார்க்க விரும்பும் தோற்றத்தைப் பார்க்கின்றோமே  தவிர நாம் உண்மையைப் பார்ப்பதில்லை.:)  பிறரும் அவ்வாறே பார்க்கவேண்டும் என விரும்புகிறோம். அவ்வாறு இல்லையெனில் புரிதல் இல்லாது பிரச்சினைகள் பெரிதாகின்றன.

நமது வாழ்க்கை முழுவதும் நாம் புறத்தே பார்த்தே பழகிவிட்டோம். வெளியில், நடப்பது என்ன என்பதிலும், மற்றவர்கள் என்ன செய்கிறார்கள் என்பதிலுமே எப்போதும் ஆர்வமுள்ளவராக இருந்துவந்திருக்கிறோம்.

நம்மையே. நமது மன உடல் கூட்டமைப்பையே, நமது சொந்த செயல்களையே, நமது சொந்த உண்மையையே நாம்  ஒருபோதும் முழுமையாக ஆய்வு செய்ய முயற்சித்ததே இல்லை.  நாம் நம்மை அறியாமலே இருந்து வருகின்றோம். இந்த அறியாமை எவ்வளவு தீமையானது என்பதை நாம் உணர்ந்தவர்களும் இல்லை.

நம்முள் இருக்கும் மன உந்துதல்களுக்கு நாம் எவ்வளவு அடிமையாக இருந்து வருகின்றோம் என்பதைப் பற்றி அறியாமலும், புரியாமலுமே இருந்து வருகிறோம். உண்மையை புரிந்துகொள்ள இந்த உள்ளிருள் நீக்கப்பட வேண்டும்.

இதற்கான நெறிதான் தன்னையே உற்று நோக்கும்  விபாஸ்ஸனா தியானமுறை.

நம்மையே உற்று நோக்குவதால், நமது மனதை மூடுகின்ற, மறைக்கின்ற நம்மிடமிருந்தே உண்மையை மறைக்கின்ற, துன்பங்களை உண்டாக்குகின்ற சில எதிர்வினைகளையும், தவறான எண்ணங்களையும் பற்றியும் முதன்முதலாக விழிப்புணர்வு கொள்கிறோம். இதெல்லாம் படிக்க நன்றாக இருந்தாலும் செயலில் நாம் இறங்காதவரை விழிப்புணர்வை அனுபவிக்க முடியாது.

மனதிற்கான மருந்து தியானம்தான்,  இந்த தியானம் உலகியலிலிருந்து தப்பித்து வாழும் நிலை என்பதாக சிலர் நினைக்கக்கூடும். ஏனென்றால் தீவிரமாக தியானம் செய்வதாக சில அன்பர்கள் வேறு உலகத்திலே மிதந்து கொண்டிருப்பது போல் மற்றவர்களுக்குத் தோன்றும். இதில் ஓரளவிற்கு உண்மை இருக்கத்தான் செய்கிறது.,

விபாசனா என்பது உள்ளுற நோக்குதல்., என்பது பொருளாகும். உள்ளுற கவனித்தல் மட்டுமே...வேறு எந்த விளக்கங்களையும் திணித்துக்கொள்ளாமல் செயலில் இருந்தால் மட்டுமே இது அனுபவமாகும். 

விபாசனாவில் நீங்கள் உங்களை உள்ளுற நோக்குதலுக்குரிய சூழலை ஏற்படுத்தித் தருகிறார்கள். அவ்வளவே..

ஆர்வம் இருப்பவர்களுக்காக
பத்துநாள் முகாம் ஒன்றில் பங்கேற்றுப் பாருங்கள்.  கூடுதல் விவரத்திற்கு இங்கே சுட்டுங்கள்.

 கோவை சார்ந்த பகுதியினருக்காக
முகாம் மற்றும் நாட்கள் இடம் தொடர்பு கொள்ள
10-நாள் முகாம் (ஆண்கள் மட்டும்)
29-நவம்பர்-2012 முதல் 10-டிசம்பர்-2012 வரை
உலக அமைதி நிறுவனம் (Universal Peace Foundation),
நல்லகவுண்டம்பாளையம்,
படுவம்பள்ளி,
கருமத்தம்பட்டி-அன்னூர் சாலை,
கோயம்புத்தூர் - 641659.
1. திரு அரவிந்த் வீரராகவன் - 81481 35795
2. திரு பரத் ஷா - 98423 47244
3. திரு சிவாத்மா - 98422 80205


 சென்னையில்

டிசம்பர் 2012 
1)5-16 தேதி வரை
 

2)19-30 தேதி வரை 

 தம்ம சேது விபஸ்ஸனா தியான மையம்,
533, பழந்தண்டலம் சாலை,
(திருநீர்மலை வழி),
திருமுடிவாக்கம்,
சென்னை 600 044.

தொலைபேசி (தரைவழி): +91-44-64504142, +91-44-24780952, +91-44-24780953
முகாம் குறித்த விசாரணைகள் மற்றும் விண்ணப்பித்தலுக்கான தொடர்பு எண்கள்: +91-9444462583, +91-9442287592, +91-8148581350, +91-9042632889, +91-8015756339, +91-9940467453

Wednesday, June 20, 2012

மூச்சு விடுவது எப்படி ?

நேரம் காலம் தெரியாம கணினி முன் அமர்ந்து வேலை செய்யலாம்.  படிக்கலாம் அல்லது  ஓய்வில் இருக்க்லாம். என்ன செய்கிறோம் என்பது முக்கியமல்ல. அப்போது அல்லது எப்பவாவது மூச்சைக்கவனித்து இருக்கிறோமா?

அதென்ன மூச்சைக் கவனித்தல்? மூச்சைக் கவனித்தால் மனம் அடங்கும் என்கிற நுட்பங்களுக்குள் நாம் செல்ல வேண்டுமா? மேலோட்டமாக பார்த்தால் போதாதா.?

Thursday, February 16, 2012

காதலுடல் -- பண்புடன் இணைய இதழுக்காக

பசித்துப் புசி என்பது நமக்குத் தெரிந்த விசயம்தான்., நடைமுறையில் பசித்துப்புசிப்பவர்கள் கொஞ்சம் பேர்தான் :) பசி என்பது பல நேரங்களிலும் நமக்கு போதுமான அளவு ஏற்படுகின்றதா என்றால் இல்லை என்பதே உண்மை.

பசி என்கிற உணர்வு ஒரு தூண்டுதலாக ஆரம்பமாக சிக்னல் என்ற அளவில்தான் நமக்கு நம் உடலால் உணர்த்தப்படுகிறது.இதையே நாம் பசி என்பதாக எடுத்துக்கொண்டு சாப்பிட ஆரம்பித்து விடுகிறோம். உடலுக்குக்கூட இரவு 6 மணி நேரமோ 8 மணிநேரமோ ஓய்வு கொடுத்து விடுகிறோம். நம் வயிற்றுக்கு ஓய்வு என்பதே இல்லை. ஏறத்தாழ 24 மணி நேரமும் வேலை செய்து கொண்டே இருக்கிறது.

தொடர்ந்து உடலைப்பற்றி சில சிந்தனைகள் பண்புடன் இணைய இதழுக்காக..... பிப்ரவரி 15க்கான ஆசிரியர் பொறுப்பு ஏற்று இருக்கும் சேர்தளம் வெயிலான் அவர்களின் வேண்டுகோளுக்கு இணங்கி பகிர்ந்து கொண்டது உங்களின் பார்வைக்கு...... படித்து கருத்துகளை பகிர்ந்து கொள்ளுங்கள் நட்புகளே..

Wednesday, November 24, 2010

லிவிங் டு கெதர்..... (18+)

லிவிங் டு கெதர் என்பது என்ன.. இது சரியா தவறா என்பதைவிட இதன் விளைவுகள் என்ன? சாதக பாதகங்கள் என்ன? இது தேவையா எனப் பார்ப்போம்.

லிவிங் டு கெதர் என்றால் என்னுடைய புரிதல் வயது வந்த ஆணும் பெண்ணும் இருவராக சேர்ந்து வசித்துப் பார்ப்போம். எல்லாவிதத்திலும் ஒத்துவந்தால் இணைந்து வாழலாம். இல்லையெனில் பிரிந்துவிடலாம். உடல்ரீதியான புரிதல், மனரீதியான புரிதல் என ஒருவரை ஒருவர் புரிந்து கொள்வதற்காக சேர்ந்து வாழ்ந்து பார்க்கும் முயற்சி என வைத்துக்கொள்கிறேன்.

Tuesday, September 21, 2010

விழிப்புநிலை பெற எளிதான வழி..

விழிப்புநிலை என்பது பயமற்ற விழிப்புணர்வு என்றால் அதை எப்படி அடைவது? அதன் பலன் என்ன? அது வாழ்க்கைக்கு எல்லாவிதத்திலும் எந்த அளவு உதவும்?..

முதலில் பயம் என்பது என்ன? நமது உடல், உயிர், உடமைகள், உறவுகள் இவைகளுக்கு ஏதேனும் பாதிப்பு வந்துவிட்டால் என்ன செய்வது என்கிற உணர்வுதான் பயம். நிம்மதியாக, இன்பமாக உயிர் வாழ தடை வந்துவிட்டால் என்ன செய்வது என்கிற உணர்வுதான் பயம்.

Monday, September 20, 2010

விழிப்புணர்வு என்பது என்ன?

விழிப்புணர்வு என்பதை கொங்குத்தமிழில் சொல்வதென்றால் வே(ய்)க்கானமா இருக்கனும்,விவரமா இருக்கோனும் அப்படின்னு வெச்சுக்குங்களேன்:)

விழிப்புணர்வு என்பது எதிலும் எச்சரிக்கையாக இருத்தலைக் குறிக்கும். எதுகுறித்தும் கூடுதல் விவரங்கள் தெரிந்து வைத்திருத்தலும் கூட விழிப்புணர்வுதான்.