"மூச்சைக் கவனி, முழுவிழிப்புநிலையில் இரு!" புத்தர்

Tuesday, December 31, 2013

கை குழந்தைக்கான சத்தான உணவுகள் !


கூட்டு குடும்பமாக வாழ்ந்த காலம் மாறி, தனி குடித்தனமாக குறுகிவிட்ட சூழ்நிலையில், குழந்தை வளர்ப்பு பற்றி தெரிந்து கொள்ள, பெற்றோர் மிக சிரமப்படுகின்றனர். 

குழந்தை பிறந்த ஆறு மாதம் வரை, தாய்ப்பாலே போதும். அதன் பின், உடல் வளர்ச்சிக்கு தேவையான கலோரிகள், தாய்ப்பாலில் அதிகம் இல்லாததால், அதற்கு இணையான உணவுகளை, கஞ்சி வடிவில் நன்கு குழைத்து தருவது அவசியம்.

பச்சரிசியை, "மிக்சி'யில் குருணை போல உடைத்து, வெயிலில் காய வைத்து, வறுத்து, பொடி செய்து, காற்று புகாத டப்பாவில் சேமியுங்கள். ஒரு ஸ்பூன் பச்சரிசி மாவு, மூன்று ஸ்பூன் பாசிப்பருப்புடன் தண்ணீர் சேர்த்து, குழைய வேக வைத்த பின், தேங்காய் எண்ணெய், மூன்று சொட்டு சேர்த்து, நன்கு பிசைந்து, நம் கையாலேயே ஊட்டலாம்.

குறை பிரசவத்தில் பிறந்த குழந்தைகளுக்கு, மருத்துவர்கள் பரிந்துரைக்கும் பல்வேறு சொட்டு மருந்துகள், தேங்காய் எண்ணெயில் உள்ள சத்துக்கள் தான், உடலுக்கு வளம் சேர்க்கும். தேன்வாழை, ரஸ்தாளி, மலை வாழை போன்றவற்றின் விதைகளை நீக்கி, கைகளால் நன்கு மசித்து கொடுத்தால், உடல் எடை அதிகரிக்கும்.

ஏழாம் மாதத்தில் இருந்து கேரட், உருளைகிழங்குகளை நன்கு வேக வைத்து, தோல் நீக்கி, மிளகு, சிறிதளவு உப்பு சேர்த்து, நன்கு மசித்து தர வேண்டும். 

ஒன்பதாம் மாதத்திலிருந்து, அதிக நார்சத்துள்ள கீரை உணவுகளை, நன்கு வேகவைத்து, அதை கடைந்து, உப்பு, சீரகம், மிளகு சேர்த்து கொடுக்கலாம்.

பெற்றோர், தன் குழந்தைக்கு ஈறு வளர்ந்திருக்கிறதா என, கண்காணிக்க வேண்டும். ஈறு வளர்ந்து விட்டால், அதன் பின், நாம் சாப்பிடும் உணவுகளையே குழந்தைக்கும், கொடுக்க ஆரம்பிக்கலாம்.

எட்டு மாதங்கள் வரை அதிக காரம், இனிப்பு, புளிப்பு உள்ள எந்த பதார்த்தத்தையும் தரக்கூடாது. ஏனெனில், தரப்படும் சுவைக்கு ஏற்ப, அச்சுவைக்கு அடிமையாகி, வேறு எந்த உணவையும், உண்ண விரும்ப மாட்டார்கள். 

இதை பின்பற்றினாலே, குழந்தைகள் போதுமான உடல் எடையுடன், ஆரோக்கியமாக இருப்பர்.

ஆறு மாத குழந்தைகளுக்கு, உணவளிக்கும் முறைகளை சொன்னவர் சித்த மருத்துவர், கு.சிவராமன்: தினமலர்