"மூச்சைக் கவனி, முழுவிழிப்புநிலையில் இரு!" புத்தர்

Saturday, August 15, 2009

குழந்தையும், சுதந்திர தின அனுபவமும்

சுதந்திர தினத்தில் காலையில் 9.00 மணிக்கு குழந்தைகளோடு பள்ளிக்கு சென்றேன். இரண்டுமணி நேர நிகழ்ச்சி, கொடியேற்றம், பின்னர் மாணவ மாணவியரின் அணிவகுப்பு, கூட்டு உடற்பயிற்சி என கொண்டாட்டங்கள் தொடர்ந்தன.

தொடர்ந்து சிறப்பு விருந்தினர் உரை., பள்ளியில் சுமாராக 1800 பேர் அமைதியாக அமர்ந்து கேட்டனர். பெரிய மைதானத்தில் ’ப’ மாதிரி மாணவ மாணவியர் அமர்ந்து கேட்டுக்கொண்டிருந்தனர். அனைவரும் தூய வெண்ணிற ஆடை அணிந்து அமர்ந்திருந்தது கண்கொள்ளா காட்சியாக அமைந்து இருந்தது.

இறுதியாக விழா நிறைவு பெறும் நேரம் நெருங்கிவிட்டது. என்னைப்போன்ற பெற்றோர்கள் அனைவரும் சுமார் 200 அடி தொலைவில் கூடி நின்றிருந்தோம். அங்கிருந்து பார்த்தால் மாணவ மாணவியரைப் பார்த்த போது அவர்களின் முதுகுப்பக்கமே எங்கள் பார்வையில் பட்டதால் வெண்மையைத் தவிர வேறெதுவும் தெரியவில்லை.

இதிலும் எனக்கு பொதுவாக பள்ளியினுள் என் மகளை எளிதில் அடையாளம் காண இயலாது. எந்த குழந்தையைப் பார்த்தாலும் என் குழந்தைபோலவே இருக்கும், அல்லது என் மகள் கூட வேறு பெண்போல தெரிவாள். இந்நிலை பலநாட்கள் ஆகியும் இப்படித்தான்.

விழா நிறைவு பெற்றது. இனி குழந்தைகளுக்கு இனிப்பு வழங்கும் நிகழ்ச்சி. வகுப்பு ஆசிரியைகள் இனிப்பு வழங்கிக் கொண்டு வந்தார்கள்.

நாங்கள் நின்றிருந்த பகுதியில் இருந்து சுமார் ஒன்றரை வயது குழந்தை ”அக்கா, அக்கா” என்ற சத்தம் போட்டபடி விழா நடந்த இடத்தை நோக்கி ’தத்தக்கா பித்தக்கா’ என்று ஓட ஆரம்பித்தது. அந்த நடையைப் பார்த்தால் கீழே விழாமல் நடக்க கற்றுக்கொண்டு ஒரிரு நாட்கள் தான் ஆகி இருக்க வேண்டும்.

குழந்தையின் பெற்றோர் ”அங்கே போகாதே” என சப்தமிட, அவனோ அதை காதில் வாங்காமல் ”அக்கா அக்கா” என்றவாறு 50 அடி தூரமேனும் சென்றிருப்பான்.

நானும் இன்னும் சிலரும் அக்குழந்தையின் பெற்றோரிடம் ”தடுக்காதீர்கள், பள்ளியினுள் விழா முடிந்தபின்னர் தானே போகிறான், போகட்டும்.” என்றோம்

அவர்களுக்கோ தனியாக செல்லும் குழந்தை விழா நடைபெற்ற இடத்திற்கு தனியே அவ்வளவு தூரம் நடக்க இயலுமா? நல்லபடியாக சென்றாலும் அங்கே எப்படி 1800 மாணவர்களுக்குள் தன் அக்காவை எப்படி கண்டுபிடிக்கப்போகிறான்., குழந்தைகள் கூட்டத்தில் சிக்கி விடுவனோ என்ற எண்ண ஓட்டத்துடன் நின்றிருந்தனர்.

நானோ ’உறுதியாக சென்று விடுவான், தன் அக்காவை எப்பாடுபட்டாவது கண்டுபிடித்து விடுவான். மற்றவர்கள் குழந்தையைக் கண்டு ஒதுங்கி விடுவார்கள்’ என்ற நம்பிக்கையுடன் நின்றிருந்தேன்.

மாணவ மாணவியர் எழுந்து நின்றனர். ஒழுங்குடன் வகுப்பறை திரும்ப அவர்களுக்கு உத்தரவிடப்பட்டு இருக்கிறது. யாரும் கலையவில்லை. அருகில் நின்றிருந்த வகுப்பு ஆசிரியைகளின் தலையசைப்புக்கு ஏற்ப நகர எத்தனிக்கின்றனர்.

இதற்குள் அவர்களின் முதுகுப்பக்கமாக இந்த குழந்தை அக்கா, அக்கா என்று சப்தமிட்டவாறு ஓடிக்கொண்டே இருக்கிறான். சுமார் 100 அடிதூரம் சென்றிருப்பான். இதெல்லாம் ஓரிரு நிமிடங்களுக்குள் நடந்து கொண்டிருக்கிறது.

எனக்கோ ஒரு ஆனந்த உணர்வு, அந்த குழந்தை ஓடிக்கொண்டிருக்கும் அழகு, அது தன் அக்காவை உள்ளார்ந்த உணர்வோடு அழைத்துக் கொண்டே செல்லும் பாங்கை பார்த்து, அது நானாக இல்லையே என்ற ஏக்கத்துடன் பார்த்துக்கொண்டே இருந்தேன்.

மாணவ மணிகள் குழந்தை ஓடிய திசை நோக்கி திரும்பி வகுப்பறை நோக்கி நகரத் தொடங்கினர். சற்றே ஒழுங்கு குலைய முதலில் ஓடி வந்த நாலைந்து சிறுமிகளில் ஒருத்தி குழந்தையிடம் ஓடி வர அக்கா என்றவாறே அவளிடம் ஓடி ஒட்டிக்கொண்டான். அவர்கள் இருவரும் எங்களை நோக்கி வர அந்த மாணவி உண்மையிலே அந்த குழந்தையின் அக்காதான், வேறு அல்ல என்பதை அறிந்தேன்.

அதிர்ந்து நெகிழ்ந்து நின்றேன்.

இது எப்படி நடந்தது?

பெற்றோரோ அக்குழந்தை நிச்சயம் ஓடிச்சென்று அக்காவை அக்கூட்டத்தில் கண்டுபிடிப்பது கடினம் என நினைத்தனர்.

நானோ குழந்தைகளை தன்னம்பிக்கையோடு வளர்த்த வேண்டும், அவன் தனியாகவே சென்று தன் அக்காவை எப்பாடுபட்டாவது எவ்வளவு நேரமானாலும் கண்டுபிடித்துவிடுவான், இவனைப்பார்த்து இவன் அக்கா வந்து விட வாய்ப்பும் உண்டு என திடநம்பிக்கையோடு நின்றிருந்தேன்.

ஆனால் நடந்ததோ இரண்டு நிமிடத்திற்குள்ளாக தன் அக்காவை முதல் ஆளாக கண்டுபிடித்து எப்படி சேர்ந்தான்?

இதிலிருந்து நான் மீள சில நிமிடங்கள் ஆயிற்று.

நாமாக இருந்தால் ஆளை அடையாளம் கண்டுபிடிக்கும்வரை பொறுத்திருந்து. பார்த்தவுடன் அவர் காதில் விழும் வண்ணம் சப்தமிட்டு கவனத்தை ஈர்த்து அருகில் செல்வோம்.

தன் அக்கா எங்கு அமர்ந்திருப்பாள் என்று தெரியாது, முதுகு காட்டி அமர்ந்திருக்கும் அந்த கூட்டத்தில் தன் அக்கா யாரென்று தெரியாமலே ‘அக்கா அக்கா’ என அழைத்து சென்று அக்குழந்தை ஒரு நிமிடத்தில் சேர்ந்தது எப்படி?


குழந்தையின் அக்காவோ அந்த கூட்டத்தில் வரிசையில் பின்னதாக அமர்ந்திருந்தது எப்படி,?

கூட்டம் முடிந்த சில நொடிகளில் தன் தம்பியை அடைந்தது எப்படி?

இந்த நிகழ்வை என்னவென்று சொல்வது?

விதியின்படிமுன்னரே தீர்மானிக்கப்பட்டது என்றா?

அறிவியல்பூர்வமாக தற்செயலாக அமைந்த நிகழ்வு என்பதா?

மனதில் எந்த வித மாச்சரியங்களும் இல்லாமல் அன்பு ஒன்றே மனதில்நிறைந்திருக்க ஒன்றை நோக்கி சென்றால் அது கிடைத்தே தீரும் என்ற இறைவிதியாகக் கொள்வதா?


--- புரியாத பொன்னுச்சாமி

13 comments:

 1. சிவாண்ணே!

  இது மாதிரி அருமையா எழுதுறத விட்டுட்டு சும்மா கடவுள், க-டவுள், கட-உள், கடவு-ள்னு பதிவு எழுதீட்டிருக்கீங்களேண்ணே!

  ReplyDelete
 2. வருகைக்கு நன்றி தலைவரே,

  உங்கள் கட்டளைக்கு ஏற்ப செயல்படுவேன்

  இனி இதுபோல் நடந்தால் இதுவும் வரும், கடவுளை பிரிக்க முடியாது. எனவே அதுவும் வரும்

  நன்றி

  ReplyDelete
 3. இன்றைய தேவைக்கு ஏற்ற ஒரு நல்ல பதிவு :-))

  ReplyDelete
 4. நல்லா சுவாரசியமா இருக்கே எந்த புத்தகத்தில் வந்திருக்கோ என தேடி பதிவின் கடைசியில் வந்தால்..

  நம்ம புரியாத பொன்னுசாமி எழுதியது. பலே.

  புத்தகபெயர் இல்லாதது எனக்கு ஏமாற்றம் தான் :)

  ReplyDelete
 5. நன்றி சிங்கக்குட்டி, வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

  ReplyDelete
 6. \\ஸ்வாமி ஓம்கார் said...

  நல்லா சுவாரசியமா இருக்கே எந்த புத்தகத்தில் வந்திருக்கோ என தேடி பதிவின் கடைசியில் வந்தால்..

  நம்ம புரியாத பொன்னுசாமி எழுதியது. பலே.

  புத்தகபெயர் இல்லாதது எனக்கு ஏமாற்றம் தான் :)\\

  கூடிய சீக்கிரம் உங்கள் ஏமாற்றத்தை போக்கிவிடுகிறேன்:)))))

  ReplyDelete
 7. அன்பு செய்கிறேன் இந்தப் பதிவ்ட்ட உங்கள் மீது. வாழ்த்துகள்

  ReplyDelete
 8. ம்ம்ம்ம்..மனசின் வலிமையை உனர ஆரம்பித்து இருக்கிறீர்கள்! மேலும் சிறக்க வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 9. \\கே.பாலமுருகன் said...

  அன்பு செய்கிறேன் இந்தப் பதிவ்ட்ட உங்கள் மீது. வாழ்த்துகள்\\

  அன்புக்கும் வாழ்த்துக்கும் நன்றிகள் நண்பரே

  ReplyDelete
 10. \\திவா said...

  ம்ம்ம்ம்..மனசின் வலிமையை உனர ஆரம்பித்து இருக்கிறீர்கள்! மேலும் சிறக்க வாழ்த்துக்கள்.\\

  ஆசிகளுக்கும், வாழ்த்துக்கும் நன்றி நண்பர் திவா அவர்களே.

  ReplyDelete
 11. // இனி இதுபோல் நடந்தால் இதுவும் வரும், கடவுளை பிரிக்க முடியாது. எனவே அதுவும் வரும் //

  இதுக்கு நீங்க கடவுளப்பத்தியே எழுதியிருக்கலாம்ண்ணே :)

  ReplyDelete
 12. நன்றி.

  வித்யாசமான இடுகைத் தலைப்பு. சமூகத்திற்கு நிகழ்காலம் மட்டும் தான் முக்கியம். திரு வெயிலான் சொன்னது போல் உள்ளே இருப்பவரை உணராத வரைக்கும், திரு. ஓம்கார் அவருடைய பதிவில் சொன்னது போல் திருவண்ணாமலையில் வெறுமனே வாழ்ந்து கொண்டுருப்பவர்களாக வாழ்ந்து விட்டு போய்விடுகிறார்கள் என்பதாகத் தான் கட உள் இருக்கிறார். உங்களின் பள்ளி அனுபவத்தை வேறு விதமாக தினந்தோறும் அனுபவித்துக்கொண்டுருக்கின்றேன்.

  கற்றுக்கொடுப்பவர்கள் குழந்தைகளாகவும் கற்க மறுப்பவர்கள் பெற்றோர்களாகவும்? உண்மை தான்.


  வேறு ஒரு வகையில் திரு வெயிலான் கூற்றை சிந்தித்துப் பார்த்தால் இந்த நம்பிக்கைகள் தான் மிகப் பெரிய கூட்டத்திற்கு எளிதான வருமானமாகவும், ஏமாற்றி பிழைக்கும் கூட்டத்திற்கு எளிதான பயமுறுத்தலாகவும், எத்தனையோ பொருட்களுக்கும் ஏற்றத்தை தரக்கூடிய பொருளாதார குறியீடாகவும் இருக்கிறது?


  என்னை விட்டு பிரிக்க முடியாது என்பதை ஏற்றத்தின் வாயிலாக நான் எடுத்துக்கொள்கிறேன்.


  வாழ்த்துக்கள் உங்களுக்கும் இனைப்பு கொடுத்த இதயங்களுக்கும்.


  தேவியர் இல்லம். திருப்பூர்.

  ReplyDelete
 13. \\இந்த நம்பிக்கைகள் தான் மிகப் பெரிய கூட்டத்திற்கு எளிதான வருமானமாகவும், ஏமாற்றி பிழைக்கும் கூட்டத்திற்கு எளிதான பயமுறுத்தலாகவும்\\

  அவர்களைப் பற்றி நாம் கவலைப் படவேண்டியதில்லை. இருக்கட்டும்.

  நாம் தெளிவு பெற்றிருந்தால் இவையெல்லாம் தானாக மாறிப்போகும், :))

  வருகைக்கும் கருத்துக்கும் நன்றி தேவியர் இல்லம். திருப்பூர் நண்பரே

  ReplyDelete

மனசுல தோணினத சொல்லிட்டு போங்க :)