"மூச்சைக் கவனி, முழுவிழிப்புநிலையில் இரு!" புத்தர்

Monday, December 28, 2009

வாழ்வில் பிரச்சினைகள் தேவையா?

கடவுளிடம் ஒரு விவசாயி கடுமையாகச் சண்டைக்குப் போனான்.

”உனக்குப் பயிர்களைப் பற்றி என்ன தெரியும்? நீ நினைத்தபோது மழையை அனுப்புகிறாய்.தப்பான சமயத்தில் காற்றை வீசுகிறாய். உன்னால் பெரிய தொந்தரவாக இருக்கிறது. பேசாமல், இந்த வேலைகளை விவசாயி ஒருத்தனிடம் ஒப்படைத்துவிடேன்!”

கடவுள் உடனே, “ அப்படியா? சரி. இனிமேல் வெளிச்சம், மழை, காற்று எல்லாம் உன் கட்டுப்பாட்டிலேயே இருக்கட்டும்.” என்று வரம் அருளிவிட்டுப் போய்விட்டார்.

விவசாயிக்கு சந்தோஷம் பிடிபடவில்லை. அடுத்த விதைப்பிற்கான பருவம் வந்தது.

”மழையே பெய்” என்றான். பெய்தது. நிறுத்தச் சொன்னபோது, மழை நின்றது. ஈரமான நிலத்தை உழுதான். தேவையான வேகத்தில் காற்றை வீசச் செய்து, விதையை தூவினான்.

மழை வெயில் காற்று எல்லாமே அவன் சொன்ன பேச்சைக் கேட்டன. பயிர் பச்சைப் பசேல் என வளர்ந்தது. வயல்வெளியைப் பார்க்கவே படுரம்மியமாக இருந்தது.

அறுவடைக் காலம் வந்தது. விவசாயி ஒரு கதிரை அறுத்தான். அதனை உதிர்த்து,திறந்து பார்த்தான். அதிர்ந்தான். உள்ளே தானியத்தைக் காணவில்லை, மிகச் சிறிய பதர்தான் இருந்தது. அடுத்தது, அதற்கடுத்தது என்று ஒவ்வொரு தானியக்கதிராக வெட்டி எடுத்து உடைத்துப் பார்த்தால் ஒன்றிலுமே தானியம் இல்லை.

”ஏ கடவுளே!” என்று கோபத்தோடு கூப்பிட்டான். “மழை, வெயில், காற்று எல்லாவற்றையுமே மிகச் சரியான விகிதங்களில்தானே பயன்படுத்தினேன்!, ஆனாலும், பயிர்கள் பாழாகிவிட்டதே, ஏன்?”


கடவுள் புன்னகைத்தார்: “என் கட்டுப்பாட்டில் இருந்தபோது காற்று வேகமாக வீசும். அப்போது பயிர்களெல்லாம், அம்மாவை இறுக்கிக் கொள்ளும் குழந்தைகளைப்போல பூமிக்குள் தங்கள் வேர்களை மிக ஆழமாக அனுப்பிப் பிடித்துக்கொள்ளும். 

மழை குறைந்தால், தண்ணீரைத் தேடி வேர்களை நாலாபக்கமும் அனுப்பும். போராட்டம் இருந்தால்தான் தாவரங்கள் தங்களைப் பாதுகாத்துக்கொண்டு, வலுவாக வளரும். எல்லாமே வசதியாக அமைத்துக் கொடுத்ததில் உன் பயிர்களுக்கு சோம்பேறித்தனம் வந்துவிட்டது. 

தளதளவென்று வளர்ந்ததே தவிர, ஆரோக்கியமான தானியங்களைக் கொடுக்க அவற்றிற்கு தெரியவில்லை!”

வேண்டாமடா, உன் மழையும் காற்றும்! நீயே வைத்துக்கொள்” என்று கடவுளிடமே அவற்றைத் திருப்பித் தந்துவிட்டான் விவசாயி.

பிரச்சினைகள் உங்களைப் போட்டு அழுத்தும்போதுதான், உங்களின் திறமை அதிகரிக்கும். இருட்டு என்று ஒரு பிரச்சினை இருந்ததால்தான் மின்விளக்கு கண்டுபிடிக்கப்பட்டது. பயணம் என்பது பிரச்சினையானபோதுதான் வாகனம் உருவானது.

பிரச்சினைகளே இல்லாமல் இருந்துவிட்டால் நம் மூளையின் திறனை எவ்வாறு அறிவீர்கள்?

எதிர்பாராத திருப்பங்கள்தானே நம் வாழ்க்கையைச் சுவையாக அமைத்துத் தரமுடியும்.


நன்றி: அத்தனைக்கும் ஆசைப்படு, ஜக்கி வாசுதேவ், விகடன் பிரசுரம்

16 comments:

ஜீவன் said...

good post

ஈரோடு கதிர் said...

நல்ல பகிர்வு சிவா

cheena (சீனா) said...

அன்பின் சிவசு

அருமையான சிந்தனை - ஜாக்கி வாசுதேவின் அறிவுரை.

நல்வாழ்த்துகள் சிவசு

இராகவன் நைஜிரியா said...

சபாஷ்... அருமையான இடுகை. வாழ்த்துகள்.

ஜோதிஜி said...

பிரச்சினைகள் உங்களைப் போட்டு அழுத்தும்போதுதான், உங்களின் திறமை வெளிப்படும் அதிகரிக்கும். உண்மை. உண்ர்ந்தது. நல்ல பகிர்வு. நன்றி.

ஷண்முகப்ரியன் said...

அருமையான பதிவு,சிவா.
மகிழ்ச்சிகரமான பாராட்டுக்கள்.

பித்தனின் வாக்கு said...

சத்குருவின் அற்புதமான கருத்துக்களை எழுதியுள்ளீர்கள். மிகவும் நன்று. நன்றி.

மனோகரன் கிருட்ணன் said...

//பிரச்சினைகள் உங்களைப் போட்டு அழுத்தும்போதுதான், உங்களின் திறமை அதிகரிக்கும். இருட்டு என்று ஒரு பிரச்சினை இருந்ததால்தான் மின்விளக்கு கண்டுபிடிக்கப்பட்டது. பயணம் என்பது பிரச்சினையானபோதுதான் வாகனம் உருவானது.//
பிரச்சனைதான் வாழ்க்கையின் திருப்பங்கள். பிரச்சனைகளை புரிந்துக்கொண்டால் வசந்தம் வீசம். புரியவில்லை என்றால் புயல் தான் வீசும்.
அருமையான பதிவு ஐயா.வாழ்த்துக்கள்

Kumar said...

ரொம்ப நல்லா இருக்கு பாஸ்

முனைவர்.இரா.குணசீலன் said...

இருட்டு என்று ஒரு பிரச்சினை இருந்ததால்தான் மின்விளக்கு கண்டுபிடிக்கப்பட்டது. பயணம் என்பது பிரச்சினையானபோதுதான் வாகனம் உருவானது....//

உண்மைதான் நண்பரே..

மனிதனுக்கு வாழ்க்கையே பிரச்சனையானபோது தான் கடவுள் கண்டறியப்பட்டது..!

பிரச்சனைகளே மனிதனை மனிதனாக அடையாளம் காட்டத்துணை நிற்பவை. மலையில் ஒளிந்திருக்கும் சிற்பம் சிற்பியின் உதவியால் சிற்பமாவது போல பிரச்சனை என்னும் சிற்பியால் நமக்குள் இருக்கும் சிற்பம் வெளிப்படுகிறது.

Anonymous said...

கலக்கல் பதிவு.... மிக நன்று...... @ http://wp.me/KkRf @ http://yazhuspages.blogspot.com/

வால்பையன் said...

ஜக்கி இப்படிகூட உளறுவாரா!?

நிகழ்காலத்தில்... said...

@
@ ஈரோடு கதிர்
@ cheena (சீனா)
@ இராகவன் நைஜிரியா
@ ஜோதிஜி
@ ஷண்முகப்ரியன்
@ பித்தனின் வாக்கு
@ மனோகரன் கிருட்ணன்
@ Kumar
@ முனைவர்.இரா.குணசீலன்
@ Iqbal

நண்பர்கள் அனைவருக்கும் ஆங்கில புத்தாண்டு வாழ்த்துகளும் நன்றிகளும்..

நிகழ்காலத்தில்... said...

//வால்பையன் said...

ஜக்கி இப்படிகூட உளறுவாரா!?//

ஆமாம் :))

இப்படி நிறைய உளறி வைத்திருக்கிறார் :))

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி வால்ல்ல்ல்..

ஜோ அமலன் ராயன் பர்னாண்டோ said...

very old thought

kannaki said...

எதிர்பாராத திருப்பங்கள் இருந்தால்தான் வாழ்க்கை சுவைக்கும். போராடினால்தான் வெற்றி கிடைக்கும்.. நல்ல பதிவு சிவா.