"மூச்சைக் கவனி, முழுவிழிப்புநிலையில் இரு!" புத்தர்
Showing posts with label வற்றாயிருப்பு. Show all posts
Showing posts with label வற்றாயிருப்பு. Show all posts

Tuesday, May 5, 2009

வற்றாயிருப்பு, பேராற்றல், பேரறிவு, காலம்

இறையுணர்வு பெற்றவர்கள் இதுவரையில் தெளிவாக மொழி வழியிலும், பயிற்சி வழியிலும் கொடுத்துள்ள உண்மை விளக்கம் என்னவென்றால்,’சுத்தவெளியாகிய இறைநிலையே முடிவான அருட்பேராற்றலான தெய்வமாகும்’ என்பதாகும்.

சுத்தவெளியானது (1) வற்றாயிருப்பு, (2)பேராற்றல், (3)பேரறிவு, (4)காலம் என்கின்ற நான்கு வளங்களை உடையதாக இருக்கிறது.

வற்றாயிருப்பு

சுத்தவெளியாகிய பெருவெளியில் இருந்து அணு முதலாக அண்டங்கள் மற்றும் உயிரினங்கள் எவ்வளவு தோன்றினாலும் சுத்தவெளியோ, அதனுடைய ஆற்றலோ எந்த அளவிலும் குறைவுபடாது. இந்த உண்மையை விளக்குகின்ற வார்த்தைதான் வற்றாயிருப்பு ஆகும்

பேராற்றல்

பலகோடி சூரியக் குடும்பங்களை உடைய இந்த பேரியக்க மண்டலத்தில் உலவுகின்ற அனைத்தையும் இதே சுத்தவெளிதான் தாங்கிக் கொண்டு இருக்கிறது. இதனால் சுத்தவெளியை பேராற்றல் என்று கூறுகிறோம்.

பேரறிவு

எந்தப் பொருளிலும், எந்த இயக்கத்திலும் இதே சுத்தவெளிதான் ஊடுருவி நிறைந்து ஒழுங்காற்றலாக, செயல் புரிந்து வருகிறது. இந்த ஒழுங்காற்றல்தான் அறிவு என்று கூறப்படுகிறது. ஒவ்வொரு தோற்றத்திலும்,உருவ அமைப்பு,குணங்கள் மற்றும் காலத்தால் காலம் என்ற அதிர்வால் ஏற்படக்கூடிய மாற்றங்கள் அனைத்தும் நிகழ்கின்றன. இதனால் சுத்தவெளியானது பேரறிவு என்று விளக்கப்படுகிறது.

காலம்

சுத்தவெளியானது தன்னிறுக்க அழுத்தமாக உள்ளதால், அது தன்னைத்தானே விட்டுவிட்டு அழுத்தும்போது, அதுவே நுண்ணதிர்வாகச் செயல்புரிகிறது. இந்த நுண்ணதிர்வு என்ற காலத்தின் நுண்ணிய அலகானது கண்சிமிட்டும் நேரம்போல மிகக் குறைவானதாகும். இந்த
அதிர்வு இறைநிலையில் அடங்கி இருப்பதனால் எல்லாப் பொருள்களுக்கும் தோற்றம், வளர்ச்சி, முடிவு என்ற செயல்கள் உண்டாகின்றன. இதனால் இறையாற்றலை காலம் என்று சொல்கிறோம்.

ஆகவே இறையாற்றல் என்ற பெருவெளி வற்றாயிருப்பாக இருக்கிறது. பேராற்றலாக இருக்கிறது. பேரறிவாக இருக்கிறது. அதுவே காலமாகவும் இருக்கிறது.


இறைநிலை


வற்றாயிருப்பு, பேராற்றல், பேரறிவு, காலம் எனும்
வளம் நான்கும் ஒன்றிணைந்த பெருவெளியே தெய்வமாம்
வற்றாத இந்நான்கும் விண்முதல் ஐம்பூதங்கள்
வான்கோள்கள், உலகம், உயிரினம் ஓரறிவு முதல் ஆறாம்
வற்றாது பெருகிவரும் வளர்ச்சியே பரிணாமம்
வந்தவை அனைத்திலும் சீரியக்கம் இயல்பூக்கம்
வற்றாது பெருகும் பேரண்டத்தில் உயிர்வகையில்
வழுவாத செயல்விளைவு நீதியே கூர்தலறம் உண்மை,உண்மை

ஞானக்களஞ்சியம் பாடல் 1666

நன்றி ஆன்மீக விளக்கு தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி