"மூச்சைக் கவனி, முழுவிழிப்புநிலையில் இரு!" புத்தர்

Monday, November 23, 2009

டவுட் தனபாலுக்கான பதில் - முதல் மனிதனின் வினை

திரு.டவுட் தனபால் அவர்களின் சென்ற இடுகையை ஒட்டிய கேள்வி

\\என் வாழ்க்கையின் ஒவ்வொரு நிகழ்வுக்கும் முன் செய்த வினை (செயல்) தான் காரணம் என்றால், நான் இவ்வுலகில் முதன் முதலில் ஒரு பிறப்பு எடுத்திருப்பேன் அல்லவா? [அதற்கு முன் பிறப்பில்லை.] அப்படிபட்ட முதல் பிறப்பில் நான் செய்த செயல்களுக்கு எது காரணமாக இருந்தது?


முன்னால் எதுவும் செயலும் விளைவும் இல்லாத சூழலில் எனக்கு நிகழ்வுகள் எப்படி ஏற்படுத்தபட்டது? \\

டிஸ்கி:என்னைச் சார்ந்த மரியாதைக்குரிய புரியாத பொன்னுசாமி அவர்களிடம் இந்த கேள்வியின் விபரம் தரப்பட்டு அதற்கான பதில் வாங்கி இங்கு இடுகையாக வெளியிடப்படுகிறது.:))


முதல்ல இந்த கேள்வியின் அடிப்படை முதல் மனிதன் திடீரென தோன்றினான். எனவே மனிதன் திடீரென படைக்கப் பட்டதால் அதற்கு முன்னதாக எந்த செயலும் இல்லை, விளைவும் இல்லை. பின் எப்படி விளைவு வந்தது ? சரிங்களா !!”

இதையே கொஞ்சம் மாற்றிப் பாருங்க..

முதல் பிறப்பு, முதல் மனிதன் அப்படிங்கறதே இல்லை, எந்தக் கடவுளும் மனிதனைப் படைக்கவில்லை. மனிதன் விலங்கிலிருந்து பரிணாம வளர்ச்சியில் வந்தவன்தான். விலங்கினங்களிடம் இருந்த அடிப்படைக் குணங்கள் அவனிடமும் இருந்தன,

எனவே விலங்கினத்தொடர் மனிதன், அப்படின்னா
விலங்கினப் பதிவுகள் நம் வினைகள், அவ்வளவுதான்.

போதுங்களா., தேவைன்னா இனி சற்று விளக்கமாப் பார்ப்போம்.

பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளாக நான்கு கால்களோடு வாழ்ந்த ஐயறிவு உயிரினங்கள், பின்கால்கள் இரண்டைக் கொண்டே நிற்கப் பழகிக் கொண்டு, இரண்டுகால் உடைய உயிரினமாகவும், அதிலிருந்து ஆதிமனிதனாகவும் பரிணாமம் அடைந்தன.

ஆதிமனிதன் ஒருபோதும் கடவுளால் இப்போது உள்ளவாறு திடீரென படைக்கப் படவில்லை, அதேசமயம் மனிதனுக்காக வேறு எந்த உயிரினத்தையும் படைக்கவில்லை. :))

 பரிணாம வளர்ச்சியில் யூகம், அனுமானம் என்கிற ஆறாவது அறிவுடன் மனிதன்வந்தான்.

இவையெல்லாம் வருவதற்கு பலகோடி ஆண்டுகள் ஆகிவிட்டன. இதுவே மனித பரிணாம வளர்ச்சியின் சாரம்.

மனிதன் எங்கிருந்து வந்தான் எனப்பார்த்தால் பல கோடி வருடங்களாக பல உயிரினங்களின் வித்துத் தொடராக வந்து இன்றைய நிலையை அடைந்திருக்கிறான்.

பிரபஞ்சம் உருவாகி விரிவடைந்து வரும் கோடிக்கணக்காக வருடங்களில் இப்புவியில் நிலம், நீர், காற்று, வெப்பம், விண் முதலான பஞ்சபூதங்கள் முதலியன  ஒரு பொருத்தமான கூட்டாக தக்க சூழ்நிலையில் சேர்ந்தது.

அப்போது அது ஒரு செல் உயிரினமாக நீரில் தோன்றியதிலிருந்து விலங்கினம் வரை வித்துத் தொடராக அவற்றின் வாழ்க்கை முறைப் பதிவுகள் அனைத்தும் நம்முள்ளே உண்டு. ஆகையால் மனிதனிடத்தில், அவனுடைய வித்தில், கருமையத்தில் இவை அனைத்தின் சாரம்சமும் உள்ளடங்கியே இருக்கும்.

சரி அந்த சாராம்சம் என்ன பறித்துண்ணுதல்

சுருக்கமாக..  ஈரறிவு முதல் ஐயறிவு வரை உள்ள உயிரினங்கள் அனைத்திலும் பெரும்பான்மையாக, வேறு ஒரு உயிரைக் கொன்று அதன் உடலை உணவாகக் கொண்டே வாழுகின்றன,

இந்த விலங்கினத்தின் வித்தில், உடலில், மூளையில் பிற உயிரைப் பறித்து உண்ணும் செயல்களும், குணங்களுமே பதிவுகளாக உள்ளன. அதே விலங்கினத்தின் வித்துத் தொடராகத்தான் மனிதன் வந்திருக்கிறான்.

பிற உயிரின் வாழும் சுதந்திரத்தை அழித்தல்
பிற உயிரைத் துன்புறுத்தல், கொல்லுதல்,
பிற உயிரின் பொருளைத்திருடுதல் - இதுவே விலங்கின செயல்


உணவாகப் போகிற, உணவாக்கிக்கொள்கிற இரு உயிர்களின் போராட்டத்தில் ஒன்றால் மற்றொன்றுக்கு துன்பம் விளையும்போது அதை சமாளிக்க எழும் வேகம், கோபமாகவும், பயமாகவும், தனது உணவை மற்றவை பறிக்க வரும்போது அதை காப்பாற்றிக்கொள்ள முனைவது (அதிக)ஆசையாகவும், தன்னைத்துன்புறுத்திய உயிரினத்தை எதிர்க்கும் முயற்சி தோல்வியடையும்போது எழும் உணர்வு வஞ்சமாகவும் வளர்ந்து தொடர்ந்து நீடித்து நம்மிடம் வந்துள்ளது.

இதே பண்புகள் நவீனமாக மனிதனிடத்தில் பொருள்,புகழ், அதிகாரம்,புலனின்ப வசதிகளுக்கான வேட்கையாக மாறி, அதற்கான வெளிப்பாடாக பொய்,சூது,களவு,கொலை,கற்பழிவு எனும் தீய செயல்களாக பல இலட்சம் தலைமுறைகளாகத் தொடர்ந்து வந்து கொண்டுதான் இருக்கிறது..

இது மேலும் மேலும் அதிகமாகி தீவினைப் பதிவுகளாக நமக்கு சேர்ந்து கொண்டே வருகிறது. மனிதனுக்கு வினை வந்த வழி இதுதான்.

இதை உணர்வது ஆறாவது அறிவு, உணர்ந்துபின் அதை களைவதுதான் நமது வாழ்வின் அமைதிக்கு வழி.

தான் பண்படுதல், தனக்கும் பிறர்க்கும் பயன்படுதல். இதுவே வினை அழிக்கும் மந்திரம்.

அவ்வளவுதான் விசயம். இதை நண்பர் டவுட் தனபாலிடம் சேர்த்து விடுங்கள், இதில ஏதாவது டவுட் வந்தா அதையும் அய்யா கிட்ட சொல்லிடுங்க..

-----புரியாத பொன்னுசாமி.

27 comments:

 1. //இதே பண்புகள் நவீனமாக மனிதனிடத்தில் பொருள்,புகழ், அதிகாரம்,புலனின்ப வசதிகளுக்கான வேட்கையாக மாறி, அதற்கான வெளிப்பாடாக பொய்,சூது,களவு,கொலை,கற்பழிவு எனும் தீய செயல்களாக பல இலட்சம் தலைமுறைகளாகத் தொடர்ந்து வந்து கொண்டுதான் இருக்கிறது..

  இது மேலும் மேலும் அதிகமாகி தீவினைப் பதிவுகளாக நமக்கு சேர்ந்து கொண்டே வருகிறது. மனிதனுக்கு வினை வந்த வழி இதுதான்.
  //

  பரிணாமக் கொள்கையும், (ஆன்மிக தத்துவ) விதியும் ஒன்றோடு ஒன்று ஒட்டாது, எப்படி ஒட்ட வைக்கிறீர்கள். :)

  பரிணாமக் கொள்கை உடல் அமைப்பு மாறுவது மட்டும் தான். அது முன்வினைகளைக் கொண்டு இருக்கும் என்று எவரும் சொல்லவில்லை.

  //மனிதன் எங்கிருந்து வந்தான் எனப்பார்த்தால் பல கோடி வருடங்களாக பல உயிரினங்களின் வித்துத் தொடராக வந்து இன்றைய நிலையை அடைந்திருக்கிறான்.//

  மனிதன் குரங்கிலிருந்து வந்தால் குரங்கு இனம் அனைத்துமே மனிதனாக மாறி இருக்கும், குரங்குகளே இருக்காது, ஆனால் குரங்கும் மனிதனும் இருக்கிறார்களே

  ReplyDelete
 2. //அப்போது அது ஒரு செல் உயிரினமாக நீரில் தோன்றியதிலிருந்து விலங்கினம் வரை வித்துத் தொடராக அவற்றின் வாழ்க்கை முறைப் பதிவுகள் அனைத்தும் நம்முள்ளே உண்டு. ஆகையால் மனிதனிடத்தில், அவனுடைய வித்தில், கருமையத்தில் இவை அனைத்தின் சாரம்சமும் உள்ளடங்கியே இருக்கும்.
  //

  இதுக்கெல்லாம் எதும் ஆதரம் இருக்கிறதா ? எல்லாம் சும்மா அப்படியே அடிச்சி விடுவதா ?

  ReplyDelete
 3. //இது மேலும் மேலும் அதிகமாகி தீவினைப் பதிவுகளாக நமக்கு சேர்ந்து கொண்டே வருகிறது. மனிதனுக்கு வினை வந்த வழி இதுதான்.

  இதை உணர்வது ஆறாவது அறிவு, உணர்ந்துபின் அதை களைவதுதான் நமது வாழ்வின் அமைதிக்கு வழி.


  தான் பண்படுதல், தனக்கும் பிறர்க்கும் பயன்படுதல். இதுவே வினை அழிக்கும் மந்திரம். //

  தீவினைப் போலவே நல்வினையும் பதிவு தானே, பிறகு எங்கே வினை அழியும் ?

  இப்ப நீங்க வெறும் நல்லது மட்டுமே செய்து வந்தால் நல்வினை பதிந்து இருக்குமே. அப்பறம் எப்படி அதை அழிப்பிங்க.

  ReplyDelete
 4. டவுட் தனபால் said...
  :)

  கோவி.கண்ணன் தன் வேலையை செவ்வனச்செய்வதால் என் கேள்விகளை பின் தங்கிவிட்டு கேட்கிறேன்.

  உங்கள் பதிவினால் எனக்கு டவுட் பன்மடங்காகிவிட்டது.

  டார்வினிசம் சார்ந்து இருக்கிறது உங்கள் விளக்கம். நியோ டார்வினிசம் என்று ஒன்று உண்டு அது தெரியுமா?

  ReplyDelete
 5. \\பரிணாமக் கொள்கையும், (ஆன்மிக தத்துவ) விதியும் ஒன்றோடு ஒன்று ஒட்டாது, எப்படி ஒட்ட வைக்கிறீர்கள். :)\\

  தனித்தனியாக இருந்தால்தான் புரியாது, இணைத்துப் பாருங்கள் முழுமையாகிவிடும்.

  \\பரிணாமக் கொள்கை உடல் அமைப்பு மாறுவது மட்டும் தான். அது முன்வினைகளைக் கொண்டு இருக்கும் என்று எவரும் சொல்லவில்லை. \\

  உடலில் உயிர் ஓடத்தொடங்கியபோதே அதன் குணங்கள், தனமைகளையும் எப்பொழுதும் இணைத்துப் பார்க்கிறேன்.

  உடலையும் வினைகளையும் தனியாக பார்ப்பது உங்கள் விருப்பம்.

  மனிதன் நேரடியாக குரங்கிலிருந்து பரிணாமம் அடையவில்லை.

  அறிவியல்ரீதியாக கண்முன் உள்ள பொருத்தமான விலங்கினம் குரங்கு அவ்வளவுதான்.

  \\இதுக்கெல்லாம் எதும் ஆதரம் இருக்கிறதா ? எல்லாம் சும்மா அப்படியே அடிச்சி விடுவதா ?\\

  உயிர், ம்னம், அறிவு,கருமையம் இவற்றிற்கு இவை இருக்கின்றன என காட்ட என்னிடம் ஆதாரம் ஏதும் இல்லை. அடிச்சு விடுறதுதான்.

  இதெல்லாம் யூகம், அனுமானம்தான் !

  \\தீவினைப் போலவே நல்வினையும் பதிவு தானே, பிறகு எங்கே வினை அழியும்\\

  நல்வினையும் பதிவுதான். அதுவும் சேரும். ஆனால் அது கவலைக்குரிய அம்சம் அல்ல.

  என் நோக்கம் எல்லாம் தீவினைகளை அழிப்பது, சமன்படுத்துவது மட்டுமே.

  நல்வினை அழிப்பது தவத்தினால் சாத்தியம்.
  இவ்விசயத்தில் நான் இன்னும் அனுபவப்படவில்லை.
  ஆனால் முழுமையாக இது சாத்தியம் என்றே நினைக்கிறேன்.

  ReplyDelete
 6. \\டவுட் தனபால் said...

  உங்கள் பதிவினால் எனக்கு டவுட் பன்மடங்காகிவிட்டது.\\


  சந்தேகங்களை துண்டு துண்டாக கேட்கும்போது சரியான பதில்களை தரமுடியாது, அது தவறான புரிதலாக போய்விடும்.

  பரிணாமத்தை பற்றிய தனபாலின் கருத்துகளை கேட்டு வாங்கி நீங்கள் ஒரு இடுகையாக போடுங்கள். முதலில் நான் அதை சரியாக புரிந்து கொள்கிறேன்.
  பின்னர் பொன்னுசாமியிடம் விளக்கம் கேட்டால் சரியாக இருக்கும்.

  \\டார்வினிசம் சார்ந்து இருக்கிறது உங்கள் விளக்கம். நியோ டார்வினிசம் என்று ஒன்று உண்டு அது தெரியுமா?\\

  பொன்னுச்சாமி மெத்தப் படித்தவரல்ல, அவருக்கு டார்வினிசமே தெரியாது. நியோ டார்வினிசத்தை சுத்தமாகத் தெரியாது.

  எந்த தத்துவ/விஞ்ஞான விசாரணையும் தனது வாழ்க்கைக்கு எந்த விதத்தில் பயன்படும் என்று மட்டுமே பார்ப்பதாகவும், மற்றவை குறித்து ஆழமான அறிவு இல்லை, இது குறித்து தனபால் விளக்குவது சமுதாயப் பணியாக அமையும் என அபிப்ராயம் தெரிவித்து விட்ட்டார்.

  ஆவன செய்யுங்கள் திரு.ஸ்வாமி ஓம்கார்:))

  ReplyDelete
 7. /பரிணாமக் கொள்கையும், (ஆன்மிக தத்துவ) விதியும் ஒன்றோடு ஒன்று ஒட்டாது, எப்படி ஒட்ட வைக்கிறீர்கள். :)/
  மேற்கத்திய தத்துவ மரபில் தான், அறிவியலும் ஆன்மீகமும் (வாடிகனின் மனவிருப்பம் என்று படித்துக்கொள்ளுங்கள்) தனித்தனி ட்ராக்கில் ஓடின.அதுவும் அறிவியலைத் திருச்சபை மிகக் கொடுமையாக ஒடுக்கவும், அழித்தொழிக்கவும் முற்பட்ட காலத்திற்குப் பிறகு தான். திருச்சபை கீழே இறங்கி வந்தாலும், அதன் விரோதிகளாகவே தங்களைக் காட்டிக் கொள்வது அங்கே "அறிவியல் பண்பாடு!"

  இங்கே கீழைய தத்துவ இயலில் அறிவியலும், மெய்ஞானமும் சேர்ந்தே இருந்தன. நடைமுறையில் நிகழமுடியாத ஒன்றை, இங்கே தத்துவ ஞானம் பரப்பியதும் இல்லை ஏற்றுக் கொண்டதும் இல்லை.

  ஒரு செல் என்பதில் இருந்து ஆரம்பித்து, அந்த செல் mutation என்று இரண்டாகப் பிரிந்து இனப்பெருக்கம் கண்டதில் இருந்து டார்வின் சொல்லும் பரிணாமவியல், உயிரினங்களின் தோற்றம், வளர்ச்சியை விவரிக்கிறது. சுற்றுச் சூழலுக்குத் தக தங்களை மாற்றிக் கொண்டவை மட்டுமே தப்பிப் பிழைத்தன என்பதை survival of the fittest என்ற விதியாகக் கண்டறிகிறது.

  இந்திய மெய்யியல் என்பது பரிணாமத்தை, டார்வினுக்கு முன்பாகவே அறிந்திருந்தது, ஓரோர் படியாக முன்னேறி வந்ததையும்,சிவபுராணம் சொல்லும் இந்தவரிகள்

  புல்லாகிப் பூடாய்ப் புழுவாய் மரமாகிப்
  பல் விருகமாகிப் பறவையாய்ப் பாம்பாகிக்
  கல்லாய் மனிதராய்ப் பேயாய்க் கணங்களாய்
  வல் அசுரர் ஆகி முனிவராய்த் தேவராய்ச்
  செல்லாஅ நின்ற இத் தாவர சங்கமத்துள்
  எல்லாப் பிறப்பும் பிறந்து இளைத்தேன், எம்பெருமான்

  /பரிணாமக் கொள்கை உடல் அமைப்பு மாறுவது மட்டும் தான். அது முன்வினைகளைக் கொண்டு இருக்கும் என்று எவரும் சொல்லவில்லை./
  பரிணாம இயலையோ, இந்திய தத்துவ மரபையோ, நீங்கள் இன்னமும் ஆழ்ந்து நோக்கக் கற்றுக் கொண்டாகவேண்டும்
  உடல் அமைப்பு மாறுவது என்பது, தேவைகளின், முயற்சிகளின் அடிப்படையில் மட்டுமே. ஒட்டகச் சிவிங்கியின் கழுத்து ஏன் அவ்வளவு நீண்டதாக இருக்கிறது என்பதைக் கொஞ்சம் பாருங்கள். தேவை, முயற்சியைத் தூண்டியது, முயற்சி பழக்கமாகவும், அனுபவமாகவும் ஆனது. அனுபவத்தில் அறிவும், அறிவின் சாரமாக ஞானமும் என்று ஒவ்வொரு படியாக மேலே போய்க் கொண்டே இருக்கும். இங்கே முயற்சி, முயற்சிக்குக் கிடைத்த விளைவு என்பதே கர்மவினை என்று வைத்துக் கொள்ளுங்களேன். சிவா, வேதாத்திரி குழுவினரிடம் இருந்து கற்றுக் கொண்ட சில வார்த்தைகளைப் பயன்படுத்தியிருக்கிறார் என்பது பதிவிலும், உங்கள் கேள்விக்கு பதில் தனக்குத் தெரியவில்லை என்றதிலுமேதெரிகிறது.

  அடுத்து, குரங்குகள் எல்லாமே ஏன் மனிதனாகவில்லை, ஆதாரம் இருக்கிறதா என்பதற்கெல்லாம் நவீன அறிவியலில், சரியான குறியீட்டுச் சொல்லை வைத்தே, இணையத்தில் தேடிப் படிக்கலாம். கிடைக்கவில்லை என்றால், எனக்கு மின்னஞ்சலில் தெரிவியுங்கள். தேடித்தருகிறேன்!

  ReplyDelete
 8. சிவபுராணம் உதாரணத்தை இங்கு குறிப்பிட்டதற்கு நன்றி நண்பரே

  ஆன்மீக கருத்துகளை அறிந்தோர் இடத்தில் கலந்து உரையாடும்போது நமது சந்தேகம் தீரும், எளிதில் நாம் சொல்ல வருவதை சரியாக சொல்லா விட்டாலும் கூட எளிதில் அவர்கள் புரிந்து கொள்வார்கள். சரியான விளக்கம் கிடைக்கும்.பலன் இருவருக்கும் மன நிறைவு:))


  மாறுபட்ட கருத்து உடையவர்களிடம் நம் கருத்தை சரியாகச் சொன்னால் கூட விளக்கங்களும் தர்க்கங்களும் அதிகம் நிகழ்த்தவேண்டியது தவிர்க்கமுடியாதது ஆகிறது. பலன் பெரிதாக ஒன்றுமில்லை.

  என் கருத்துகள் வேதாத்திரியத்தை ஒட்டியே அமையும்.

  நன்றி திரு,கிருஷ்ணமூர்த்தி அவர்களே..

  ReplyDelete
 9. வேதாத்திரி வேதாத்திரியமாக ஆகிவிட்டாரா என்ன?

  அவர் சொல்லிக் கொண்டிருந்ததே, அங்கொன்றும் இங்கோன்டுமாக உருவி எடுத்து ஒரு கதம்பமாகத் தானே சிவா!
  உண்மை, சில தனி நபர்களுடைய பெயரோடு சேர்த்து இயமாகவோ ஈயமாகவோ ஆகிவிடும்போது அங்கே பொய்மையும் புரட்டும் சேர்ந்தே ஆரம்பமாகிவிடுகிறது.

  ReplyDelete
 10. \\அவர் சொல்லிக் கொண்டிருந்ததே, அங்கொன்றும் இங்கோன்டுமாக உருவி எடுத்து ஒரு கதம்பமாகத் தானே சிவா!\\

  இருக்கட்டுமே, என்னைப் போன்றவர்களுக்கு தேடுகிற வேலை மிச்சம்தானே :))

  பொய்,புரட்டு இது அவரவர் மனம் தக்க சமயத்தில் தெளிவு படுத்தும் என்பது என் நம்பிக்கை...

  வேதாத்திரி சொன்னதே தற்போது பலவித சேர்க்கைகளுடன் வேதாத்திரியம் ஆகிவிட்டது.

  நாம்தான் விளைவு என்கிற அளவுகோலை வைத்துதான் எதையும் பார்க்கிறோம். அதனால் பயமில்லை:))

  கருத்துக்கும் வருகைக்கும் நன்றிகள் பல

  ReplyDelete
 11. //அடுத்து, குரங்குகள் எல்லாமே ஏன் மனிதனாகவில்லை, ஆதாரம் இருக்கிறதா என்பதற்கெல்லாம் நவீன அறிவியலில், சரியான குறியீட்டுச் சொல்லை வைத்தே, இணையத்தில் தேடிப் படிக்கலாம். கிடைக்கவில்லை என்றால், எனக்கு மின்னஞ்சலில் தெரிவியுங்கள். தேடித்தருகிறேன்!//

  கிருஷ்ண மூர்த்தி ஐயா,

  பரிணாம கூற்று இறுதியான ஒன்று அல்ல, அப்படியாக இருக்க மிகுதியான கூறுகள் உள்ளதாகத்ததன் சொல்லுகிறார்கள். அறிவியல் பரிணாமம் பேசினால் மதங்களிலும், இறைவேதத்திலும் அவை என்றோ இருப்பதாகச் சொல்வது எல்லா மதத்தினரிடமும் பரவலான கூற்றாக இருக்கிறது.

  கற்பனைக்கு அல்லது மனம் ஒத்துக் கொள்ளும் அளவுக்கு என்ற அளவில் தான் அறிவியல் ஆராய்ச்சிகள் முன்னெடுப்புகள் உள்ளன. உதாரணத்திற்கு பறப்பதைப் பற்றிய மனித மனக் கற்பனை காற்றின் மீது பறப்பதில் கட்டுபாடு கொண்டால் முடியும் என்கிற ஒரு சாத்தியப் பட்ட ஒன்றின் மீதான கண்டுபிடிப்பாக விமானம்.

  அதுவே நாளை ஒரு திடப் பொருளின் எடை என்பது புவி ஈர்ப்பு விசையினால் கிடைக்கும் பொருளின் அடர்த்தியைப் பொருத்தது என்கிற ரீதியில் மேலும் ஆராய்ச்சிகள் செய்து பொருளின் மீதான புவி ஈர்ப்பு விசையை தடுப்பதற்கு சாத்தியப்பட்டால் பறப்பதற்கும் மிதப்பதும் விமானங்கள் இன்றி கூட சாத்தியமாகும்.

  நான் சொல்லவருவது என்னவென்றால் அறிவியல் கூற்றுகள் மாறலாம், மதக் கருத்துகளை நம் வசதிக்கேட்ப அதில் பொருத்திப் பார்ப்பது சரி அல்ல என்பதே

  ReplyDelete
 12. //வேதாத்திரி வேதாத்திரியமாக ஆகிவிட்டாரா என்ன?//

  வேதாத்திரி என்ற வார்த்தைக்கு அர்த்தம் தெரியுமா என் அருமை நண்பரே?

  அவரின் ஆன்மீக கொள்கையே வேதாத்திரியம்.
  டார்வின் கொள்கையை டார்வினிசம் என சொல்லுவதில்லையா அதுபோல. அதற்காக டார்வின் இஸம் ஆரம்பித்தார் என்பதல்ல.

  //அவர் சொல்லிக் கொண்டிருந்ததே, அங்கொன்றும் இங்கோன்டுமாக உருவி எடுத்து ஒரு கதம்பமாகத் தானே சிவா!//

  இக்கருத்தை மிகவும் வன்மையாக கண்டிக்கிறேன்.

  ஒரு ஆன்ம ஞானி தனக்கென சுய கண்டுபிடிப்பு வைத்திருந்தார் என சொல்லுவது அவரின் ஆணவத்தின் அடையாளமாகிவிடும். அப்படி சொன்னால் அவர் ஞானியாக இருக்கமாட்டார்.

  உண்மை என்பது ஒன்றுதான். அதை அடைந்தவர்கள் அனைவரும் சொல்லுவது ஒன்றாகத்தானே இருக்க முடியும்?

  இக்கேள்வி சிவா என்றவருக்கு கேட்கப்பட்டாலும்.. சிவா என்பது என்னக்குள்ளும் இருக்கும் உருபொருள் என்பதால் பதில் அளிக்க வேண்டியதாகியது.

  ReplyDelete
 13. //நான் இவ்வுலகில் முதன் முதலில் ஒரு பிறப்பு எடுத்திருப்பேன் அல்லவா? [அதற்கு முன் பிறப்பில்லை.] அப்படிபட்ட முதல் பிறப்பில் நான் செய்த செயல்களுக்கு எது காரணமாக இருந்தது?//

  டவுட் தனபால் கேட்ட கேள்வியில் மனிதன் என கூறவில்லை. பிறப்பு என்றுதான் கேட்டிருக்கிறான்.

  //அப்போது அது ஒரு செல் உயிரினமாக நீரில் தோன்றியதிலிருந்து விலங்கினம் வரை வித்துத் தொடராக அவற்றின் வாழ்க்கை முறைப் பதிவுகள் அனைத்தும் நம்முள்ளே உண்டு. ஆகையால் மனிதனிடத்தில், அவனுடைய வித்தில், கருமையத்தில் இவை அனைத்தின் சாரம்சமும் உள்ளடங்கியே இருக்கும். //


  ஒரு செல் உயிரியாக தோன்றி அவனின் கருமையத்தில் அனைத்தும் பதிவாகி இருக்கும் என கொண்டால்...

  என் கேள்வி... அந்த ஒரு செல் உயிரியின் செயல் எதனால் நிர்ணயம் செய்யப்பட்டது? அதற்கு முன் தான் செயலோ வினையோ இல்லையே?

  ஒரு செல் உயிரியின் செயல் தானே வளர்ந்து மனிதனின் கருமையமாக இருக்கிறது?

  கிருஷ்ண மூர்த்தி ஐயா சொன்ன மாணீக்கவாசகரின் கூற்றுப்படி

  /புல்லாகிப் பூடாய்ப் புழுவாய் மரமாகிப்
  பல் விருகமாகிப் பறவையாய்ப் பாம்பாகிக்
  கல்லாய் மனிதராய்ப் பேயாய்க் கணங்களாய்
  வல் அசுரர் ஆகி முனிவராய்த் தேவராய்ச் //

  புல்லாகி உருவாக புல்லுக்கு முன் என்னவாக இருந்தது? புல்லாக எது செயல்பட்டது? எதன் கருமையம் புல்லில் இருந்தது?

  புல் எந்த செயல் செய்ததால் வினை பயன் பெற்று பூடாகியது? பிறகு புழுவாக மாற எது காரணமாகியது.?

  அப்பா.. டவுட் கேட்கவைச்சே டயர்ட் ஆக்கறாங்கப்பா...:)

  ReplyDelete
 14. \\உண்மை என்பது ஒன்றுதான். அதை அடைந்தவர்கள் அனைவரும் சொல்லுவது ஒன்றாகத்தானே இருக்க முடியும்?\\

  கண்டிப்பாக, சொல்லும்விதம் சற்று மாறுபடலாம்.

  நண்பர் கிருஷ்ணமூர்த்தி அவர்கள் தன் கருத்தை வெளிப்படுத்தி இருக்கிறார்.

  வேதாத்திரி மகான் குறித்து பலருக்கும் பலவித கருத்து இருக்கலாம். அதனால் என்கருத்தை என் தளத்திலேயே வலியுறுத்தவில்லை.

  நட்பின் மீது திணிப்பு என மாறிவிடக்கூடாது அல்லவா?

  ReplyDelete
 15. \\அந்த ஒரு செல் உயிரியின் செயல் எதனால் நிர்ணயம் செய்யப்பட்டது? அதற்கு முன் தான் செயலோ வினையோ இல்லையே?\\

  அதற்கு முன்னர் பஞ்சபூதங்கள் தோற்றம், அதற்கு முந்தய நிலை இவற்றிற்கு எந்த செயலும் விளைவும் காரணம் இல்லைதான்.

  காரணம் உருபொருள் என தாங்கள் சொல்லும் இறையின் தன்மைகளுள் ஒன்று விரிவு,அழுத்தம்
  ஆகவே அதன் பெருக்கத்தில் மலர்போல் உள்ளிருந்து உள்ளாக தோன்றியதே இப்பிரபஞ்சம், இதில் மறைபொருளாய் இருப்பது காந்த ஆற்றல்.

  விளைவு என்பதே வித்திலிருந்துதான் தொடங்குகிறது. அதன் பின்னரே வினைப்பதிவுகள் வந்தன.

  \\புல்லாகி உருவாக புல்லுக்கு முன் என்னவாக இருந்தது? \\

  பஞ்சபூதங்கள், அதற்கு முன்னதாக இந்த பூமியை எது தாங்கிக்கொண்டிருக்கிறதோ அதுவாக இருந்தது.அதற்கு முன் அதுவுமில்லாமல் இருந்தது.

  \\புல்லாக எது செயல்பட்டது? \\

  தோற்றுவித்தது எதுவோ அதுவே செயல்பட்டது.

  \\எதன் கருமையம் புல்லில் இருந்தது?\\

  உயிரோட்டம் எதை மையமாக வைத்து ஓடுகிறதோ அதை கருமையம் என்கிறோம். அப்படி பார்க்கும்போது தாவர இனங்கள் புவியோடு வேர்மூலம் இணைந்தே இருப்பதால் கருமையம் என்று ஒன்று தனியாக இல்லை. அது நகரும் உயிரினங்களுக்கே உரித்தானது

  \\புல் எந்த செயல் செய்ததால் வினை பயன் பெற்று பூடாகியது? பிறகு புழுவாக மாற எது காரணமாகியது.?\\

  இதற்கு சற்று யோசிக்க வேண்டியதாக இருக்கிறது. அதாவது செயலுக்கு, வினைக்கு விளைவு நிச்சயமே தவிர செயலினால்தான், அதன் விளைவினால்தான் அடுத்த பிறவி என என்னால்
  சொல்லமுடியவில்லை.

  ஆனால் அதன் குணங்களும்,அமைப்புகளும் காந்ததின் மூலம் சுருக்கி இருப்பாக வைத்து அடுத்த நிலையில் விரித்து காண்பிக்கப்படுகிறது.

  மாறாக காந்தஓட்டம் பஞ்சபூதங்களுள் முறையான சுழற்சி அடையும் போது ஒருசெல் உயிரினம், இந்த ஓட்டம் மேலும் ஒழுங்கு பெற்றபோது பிற உயிரினங்கள் வந்தன.

  அவையும் அழுத்தம், ஒலி,ஒளி,சுவை, மணம் இவற்றை உணர்ந்து கொள்ளும் வகையில் வரிசையாக தோன்றின. இதில் காந்த(சக்தி) ஆற்றலின் பங்கு மகத்தானது

  இறையின் பண்புகளின் ஒன்று ’விரிவு‘ அதுதான் காரணம்., யார் கண்டார்கள், பலகோடி வருடத்திற்குபின் பரிணாமத்தில் நாம் என்ன உருவம் எடுப்போமோ?

  இதில் ஏதேனும் குறை இருந்தால் அது என்னுடையது. நிறை இருந்தால் வேதாத்திரி மகானுடையது.

  வாழ்த்துகளைத் தனபாலிடம் சொல்லுங்கள்.

  ReplyDelete
 16. இடுகை நல்லா சூடா போகின்றதே... கவனித்து வருகின்றேன்

  ReplyDelete
 17. கண்டவர் விண்டிலர்.விண்டவர் கண்டிலர்.

  This is another kind of entertainment for the Mind.

  ReplyDelete
 18. /அந்த ஒரு செல் உயிரியின் செயல் எதனால் நிர்ணயம் செய்யப்பட்டது? அதற்கு முன் தான் செயலோ வினையோ இல்லையே?/

  இருந்தது, இல்லை என்பதை எதை வைத்துப் புரிந்துகொண்டீர்கள் ஐயா?

  /இக்கருத்தை மிகவும் வன்மையாக கண்டிக்கிறேன்./
  ஓம்கார் சுவாமி! உம்முடைய கண்டனமோ, ஆசீர்வாதமோ இரண்டுமே ஒன்றுக்கும் பயன்படப்போவதில்லை. நீரே வைத்துக் கொள்ளும்!
  1987 ஆம் ஆண்டுகளில் இருந்து ஆழியாறு அறக்கட்டளை மற்றும் இதர விஷயங்களை நேரடியாகவே கவனித்து வந்தவன் நான். வாய் புளித்ததோ, மாங்காய் புளித்ததோ என்று வெறும் கதை மட்டும் பேசிக் கொண்டிருக்கும் பழக்கமும் எனக்கில்லை.

  ReplyDelete
 19. //ஓம்கார் சுவாமி! உம்முடைய கண்டனமோ, ஆசீர்வாதமோ இரண்டுமே ஒன்றுக்கும் பயன்படப்போவதில்லை. நீரே வைத்துக் கொள்ளும்!//

  அமைதி அமைதி !

  ஸ்வாமி ஓம்கார் எனக்கு தெரிந்து ஆசி வழ்ங்கும் சாமியார் இல்லை :)

  ReplyDelete
 20. \\ஆ.ஞானசேகரன் said...

  இடுகை நல்லா சூடா போகின்றதே... கவனித்து வருகின்றேன்\\

  ஆரோக்கியமான வரவேற்க தகுந்த விவாதம் நடைபெறுவது நமக்கு நன்மைதானே:))

  வாழ்த்துகள்

  ReplyDelete
 21. \\ஷண்முகப்ரியன் said...

  கண்டவர் விண்டிலர்.விண்டவர் கண்டிலர்.
  This is another kind of entertainment for the Mind.\\

  மனதிற்கு இதுவும் தேவையானதுதான் அன்புச் சகோதரரே

  ReplyDelete
 22. \\1987 ஆம் ஆண்டுகளில் இருந்து ஆழியாறு அறக்கட்டளை மற்றும் இதர விஷயங்களை நேரடியாகவே கவனித்து வந்தவன் நான். வாய் புளித்ததோ, மாங்காய் புளித்ததோ என்று வெறும் கதை மட்டும் பேசிக் கொண்டிருக்கும் பழக்கமும் எனக்கில்லை.\\

  முழுமையாக இருந்தது, உருவமான போது அது குறைதான், குறை எங்கு இல்லை என சொல்லுங்கள் நண்பரே..

  என் கண்ணுக்கு நிறைகளே தெரிகின்றன. அதன் மீதான விவாதம் நமக்கு ஏதாவது ஒரு வகையில் பயன்படும் அல்லவா திரு.கிருஷ்ணமூர்த்தி அவர்களே

  ReplyDelete
 23. \\கோவி.கண்ணன் said...

  அமைதி அமைதி !

  ஸ்வாமி ஓம்கார் எனக்கு தெரிந்து ஆசி வழ்ங்கும் சாமியார் இல்லை :)\\

  அவர்கள் அமைதியாக கலாய்த்துக் கொண்டு இருக்கிறார்கள், அமைதியாகத்தான் இருக்கிறார்கள்.

  ஆசி வழங்கும் சாமியார் இல்லையா.,

  வேறு என்ன சாமியார், ? ஆரம்பித்து வைத்து விட்டீர்கள் போல் இருக்கிறதே கோவியாரே

  ReplyDelete
 24. //ஆசி வழங்கும் சாமியார் இல்லையா.,

  வேறு என்ன சாமியார், ? ஆரம்பித்து வைத்து விட்டீர்கள் போல் இருக்கிறதே கோவியாரே//

  என்னோட அவதனிப்புல அவர் ஆசி வழங்குவதில்லை, பயிற்சி தான் வழங்குகிறார். மற்றதை அவர் தான் சொல்லனும்

  ReplyDelete
 25. திரு கிருஷ்ண மூர்த்தி,

  ///இக்கருத்தை மிகவும் வன்மையாக கண்டிக்கிறேன்./
  ஓம்கார் சுவாமி! உம்முடைய கண்டனமோ, ஆசீர்வாதமோ இரண்டுமே ஒன்றுக்கும் பயன்படப்போவதில்லை. நீரே வைத்துக் கொள்ளும்!
  1987 ஆம் ஆண்டுகளில் இருந்து ஆழியாறு அறக்கட்டளை மற்றும் இதர விஷயங்களை நேரடியாகவே கவனித்து வந்தவன் நான். வாய் புளித்ததோ, மாங்காய் புளித்ததோ என்று வெறும் கதை மட்டும் பேசிக் கொண்டிருக்கும் பழக்கமும் எனக்கில்லை.//

  முதலில் என்னிடம் கொடுக்க எதுவும் இல்லை.
  அது சாபமோ, விமோசனோ, ஆசிர்வாதமோ எதுவாக இருந்தாலும்.

  கண்டனம் என நான் சொன்னது, ஒரு ஞான நிலையில் இருந்தவரை விமர்சனம் செய்ததையே.

  நான் வேதாத்திரியை பின்பற்றுபவன் அல்ல. ஆழியார் பயிற்சி பெற்றவனும் அல்ல. ஆனாலும் ஒரு தனிமனிதன் பத்து புத்தகங்களை படித்து விஷயத்தை உறுவி மனப்பாடம் செய்தால் அவனை சுற்றி கூட்டம் கூடிவிடாது.

  அவனுக்குள் ஒன்று இருக்க வேண்டும். அது ஒரு செய்தியாக வெளிப்படவேண்டும். இதையே நான் வலியுருத்தியது.

  நீங்கள் பலகாலம் அங்கே சேவை செய்திருக்கலாம். ஆனால் வேதாத்திரியம் என்ற விஷயம் தெரியாது என்கிறீர்களே ஆச்சரியம்

  அமெரிக்க பல்கலைக்கழக பாடமாக வேதாத்ரியம் வைக்கப்பட்டுள்ளதே?

  நீங்கள் நிர்வாகத்தில் இருந்ததை பற்றி எனக்கு மகிழ்ச்சியே. ஒரு தேர்ந்த நிர்வாகிக்கு ஞானியை பிரித்தரிய முடியும் என சொல்லிவிட முடியாது.

  பல ஆன்மீக அன்பர்களுடனும் அவர்களின் சூழலிலும் தொடர்பு கொண்டவன் என்ற காரணத்தால் இதை சொல்லுகிறேன்.

  ReplyDelete
 26. எப்போது தத்துவம் விவாதிக்கவும், புதுப்பிக்கவும் விருப்பமில்லாமல் இருக்கிறதோ அப்போதே இறந்து விடுகிறது.
  இந்திய ஆன்மீக கருத்துக்கள் விவாதங்களின் மூலம் வளர்ச்சி அடைந்து கொண்டே வருகின்றன என்பதை மறந்து விட கூடாது.
  இந்திய ஆன்மீக மரபை பல முனை தன்மையுடன் அனுகுவது மட்டுமே சரியான அணுகுமுறையாக அமைந்து விடும்.

  ReplyDelete

மனசுல தோணினத சொல்லிட்டு போங்க :)