"மூச்சைக் கவனி, முழுவிழிப்புநிலையில் இரு!" புத்தர்
Showing posts with label நாய்க்குட்டி. Show all posts
Showing posts with label நாய்க்குட்டி. Show all posts

Monday, May 30, 2016

கிரிவலமும் நாய்க்குட்டியும்

சித்ரா பெளர்ணமி அன்று சென்னிமலை கிரிவலம் குடும்பத்தோடு செல்லும் வாய்ப்பு அமைந்தது.  சுமார் 14 கி.மீ.. கிரிவலம் ஆரம்பித்த இரண்டாவது கி.மீல் சிறுகுன்று, அகலமான ரோடு,  நாங்கள் நடந்து செல்கையில் எங்களுக்கு எதிர் திசையில் மேடான பகுதியில் ஒரு வயதான தம்பதியினர் சைக்கிளில் சிலிண்டர் வைத்து ஓட்ட வலுவில்லாமல், தள்ளிகொண்டு சென்று கொண்டு இருந்தனர். குட்டி நாய் ஒன்று சற்றே தளர்ந்த நடையில் பின் தொடர்ந்து கொண்டிருந்தது.. கூட வந்த மகள்களிடம் ”அங்கே பாருங்க ..அவர்கள் வளர்த்தும் நாய்க்குட்டி போல இருக்கிறது; எவ்வளவு அக்கறையாக பின் தொடர்கிறது பாருங்கள்.  குட்டியாய் இருந்தாலும் பாசம் பாருங்கள்..” என்று சொல்லிக்கொண்டே நடக்கிறேன்... நாய்க்குட்டியின் அழகு ஈர்த்தது. என் மகள்கள் நாய்க்குட்டி கண்ணில் இருந்து மறையும் வரை திரும்பி திரும்பிப் பார்த்துக்கொண்டே வந்தனர்..

அந்த இடத்தில்  ஒரே சமயத்தில் நான்கு வண்டிகள் வரும் அளவு ரோடு அகலம்… தொடர் போக்குவரத்தும் இருந்தது. பேசிக்கொண்டே நடக்கிறோம்.. 5 நிமிடம் நகர்ந்திருக்கும்.  காலுக்குள் ஏதோ புகுவது போன்ற உணர்வு குனிந்து பார்க்க அதே நாய்க்குட்டி..எங்களுக்கோ அதிர்ச்சி.. எங்களைத் தாண்டி செல்லும் எண்ணம் நாய்க்குட்டிக்கு இல்லை என்பது சட்டென புரிந்தது.. அது மட்டுமில்லை. இந்த நாய்க்குட்டி வளர்ப்பு நாய் அல்ல.. ஏதாவது உணவு கிடைக்குமா என்று அந்த வயதான தம்பதியினர் பின்னால் சுமார் ஒருகிமீக்கும் மேலாக தொடர்ந்து ஓடி வந்த  தெரு நாய்க்குட்டி.

இப்போது எங்கள் பின்னால்.. கையில் எடுத்து மார்போடு அணைத்து கொண்டு நடக்க ஆரம்பித்தோம்  மகள்கள் கேள்வி மேல் கேள்வி கேட்டுக்கொண்டே வந்தார்கள், நாயைக்கண்டாலே எகிறிக்குதித்து ஓடும் அவர்களுக்கு மிகக் கிட்டத்தில் ஒரு நாய்க்குட்டி..தொட்டு இரசித்துக்கொண்டே “ எப்படி நாய்க்குட்டி நம்மைத் தேடிவந்து, கண்டுபிடித்து நம்முடனே வருகிறது “ என்ற கேள்வியும் எழுந்தது..  அதைப்பற்றி நாம் கொஞ்சம் முன்னாடி பேசிக்கொண்டும் சென்றோமல்லவா? அந்த ஃபிரீக்வன்சிதான் அதை  இழுத்திருக்கின்றது.. நம்மிடம் வந்துவிட்டது என்றேன்... ஆனால் 4 வழிப்பாதைக்கு சமமான ரோட்டில் அடிபடாமல் தாண்டிவந்து சுமார் 200 பேருக்கும் மேல் தாண்டி நம்மிடம் வந்து சேர்ந்தது. தற்செயல் என்றால் தற்செயல்தான்.. மற்றவர்களுக்கு களைப்படைந்த அந்த நாய்க்குட்டியை எடுத்து ஆதரிக்கத் தோன்றவில்லை..நமக்கு தோன்றுகிறது…அதனால் நம்மிடம் வந்து சேர்கிறது..இப்படி சரியான இடத்துக்கு வந்து சேர்வது என்பதுதான் இயற்கை விதி..


இப்படி பேசிக்கொண்டே நடந்ததில் அருகில் இருந்த சிற்றூர் வந்துவிட்டது.. கடையில்  பிஸ்கட் பாக்கெட் வாங்கி,  அதற்கு கையில் வைத்துக்கொண்டே,  இன்னொரு கையில் உடைத்து வைக்க ஆவலுடன் உண்டது. பிஸ்கட் வாங்க நிற்கையில்  அங்கே இருந்த கிராமத்து நாய்கள் இரண்டு இந்தக்குட்டியை பார்த்துவிட்டு உறுமத் தொடங்கின..  மறைத்தும் பலனில்லை.. அந்த எல்லையை விட்டு நகர்ந்தபின் அவைகள் அடங்கின.

பிஸ்கட் சாப்பிட்டு முடித்த பின்னும் இறக்கி விடவே இல்லை.. ஏதாவது இடத்தில் இறக்கிவிட்டு வேறு நாய்கள் இதை கடித்த விட வாய்ப்புகள் அதிகம். செல்லும் வழியில் நீர்மோர் வழங்கப்பட ., ஒரு டம்ளர் வாங்கி கையில் வைத்துக்கொண்டே மீண்டும் நடந்தோம். கிராமத்தை விட்டு விலகி ஓரிரு வீடுகள் அமைந்திருந்த இடத்தை அடைந்தபோது, நாய்க்குட்டியை இறக்கிவிட்டு நீர்மோரை டம்ளரோடு வைக்க.. அரைடம்ளருக்கு மேல் குடித்துவிட்டு உற்சாகமாய் உடலை குலுக்கியபடி ஓட ஆரம்பித்தது.

வீட்டுக்கு எடுத்துச்செல்ல மகள்கள் ஆவலாக இருந்தாலும் தொடர் பராமரிப்பில் இருக்கும் சிரமங்களை உணர்ந்து அங்கேயே விட்டு விட்டு கூட்டத்தில் கலந்தோம்.. அந்த நாய்க்குட்டி எங்களைத் தேடி அங்கும் இங்கும் ஓடிக்கொண்டே இருந்தது.

FRACTION DEMANDS, TOTALITY SUPPLIES என்பது இயற்கை நியதி..
தேவை உண்மையாய் இருக்கும்பட்சத்தில் இயற்கை அதை எவ்வழியிலேனும் தந்தே தீரும் என்பதற்கு இந்நிகழ்வு ஒரு அத்தாட்சி

Friday, September 25, 2009

நாய் வளர்த்ததும், கண்கள் பனித்ததும்

நாய், பூனை என செல்லப்பிராணிகள் வளர்ப்பதில் ஆர்வம் அதிகம், ரொம்ப உயர்ந்தரகம் என்கிற அளவில் நினைத்து விடாதீர்கள்,

சாதரண கிராமத்தில் கிடைக்கக்கூடிய பழகிய நாய், பூனை அவற்றின் குட்டிகளை பார்க்க பார்க்க, வளர்த்த வேண்டும் என்ற ஆவல் ஏற்பட்டு செயலில் இறங்கிவிடுவேன்

இப்போது அல்ல, சின்ன வயதில், 12 அல்லது 13 வயது இருக்கும்,

நாய்க்குட்டி வளர்த்தும்போது அதைப் பராமரிப்பது தனிசுகம்,அது உணவுக்காக நம்மை எதிர்பார்ப்பதும் வாலை ஆட்டிக்கொண்டு நம்மோடு உறவாடுவதால் ஏற்படும் மகிழ்ச்சியும் அலாதியானது. அது ஒரு தனி சுகம்.

எனக்கு கிடைக்கிற உணவு, பால் ஆகியவற்றை அதனோடு பகிர்ந்து கொள்வேன், இதற்கிடையில் கிணற்றில் நீந்தப்போகும்போது நாய்குட்டியை உடன் கூட்டிச்சென்று, அதைத் தூக்கி தண்ணீரில் போட்டுவிட்டு, அப்புறம்தான் நான் குதிப்பேன்.

நாம் நீச்சல் பழகும்போது, கத்தாளைமுட்டி, என்கிற கத்தாளையின் காய்ந்த தண்டுப்பகுதி, சுரைப்பொரடை என்கிற காய்ந்த சுரைக்காய் ஆகியனவற்றை முதுகில் கட்டிக்கொண்டு நீச்சல் பழகியது உண்டு,

நாய்க்குட்டியோ எந்த உதவியும் இல்லாமலே இயற்கையாகவே நீந்தும். அது மட்டுமில்லாமல் இரவு திண்ணையில் நான் தூங்கும்போது , அது அருகிலேயே வாசற்படியில் தூங்கும், அதிகாலையில் பார்த்தால் எனது போர்வைக்குள் படுத்துக்கொண்டிருக்கும்,

அதற்கு ஆரம்பத்தில் பெயர் வைத்ததுதான் வேடிக்கை, எந்தப்பெயரும் தோன்றாமல், ஏனோ எனக்கு பிடித்தது எனத் தோன்றிய மணி என்கிற பெயரை வைத்தேன்

என் தந்தை சற்று கண்டிப்பானவர், எனவே அவர் பணிக்கு சென்ற பின்னர்தான் இந்த நாய்க்குட்டியுடன் கொஞ்சல் எல்லாம்
.
அவர் இருந்தால் அமைதியாக இருப்பேன், நாயும்தான்

மணி,மணி,மணி... என்று அழைத்தால் போதும், எங்கிருந்தாலும் ஓடி வந்துவிடும், அப்படி ஒருநாள் அழைத்து உணவிட்டுக் கொண்டிருந்தபோது ஒருநாள் பின்னால் வந்து நின்ற என் தந்தையார் ’திமிரப்பாரு..’ என்றபடியே என் முதுகில் ஒரு சாத்து சாத்தினார்,

காரணம் புரியாமல் விழித்தேன்,

அப்புறம்தான் தெரிந்தது. அவரது வேலை செய்யும் இடத்தில் அவரது சுருக்கமான பெயர் மணி என்பது :))

அன்றிலிருந்து நாயின் பெயர் ’ஏய்’ தான்,


அப்போது ஒரு நாய்க்கு பெயர் வைப்பதில் இத்தனை விசயங்கள் அடங்கி உள்ளதா !!!
இந்த சுதந்திரம்கூட நமக்கு வாய்க்கவில்லையே என அந்த வயதில் வருத்தப்பட்டது உண்டு

இன்று மகிழ்ச்சியாக இருக்கிறேன், காரணம் சிவா என்கிற என்பெயர் குறித்துதான். அவ்வப்போது ஏதோ தகுந்த காரணத்தோடுதான் பெயர் அமைந்திருக்கிறது என நினைத்து கொள்வேன்,

என் நண்பரால் எப்போதும் நினைவில் வைத்துக்கொண்டு அன்றாடம் அழைத்து மகிழும் வகையில் அமைந்தது கண்டு உண்மையிலேயே பெருமிதம் கொள்கிறேன்.

நண்பர் ஓம்கார் தினமும் என்னை கவனித்துக்கொண்டும், அழைத்து மகிழ்வதும் நான் பெற்றபேறுதான் :) ஏனோ இன்னும் நெருக்கமாக உணர்கிறேன். மேலதிக விவரங்களுக்கு





இதை சிவனின் திருவிளையாடலுக்கு மேலும் ஒரு சான்றாக எடுத்துக்கொள்கிறேன்.

கண்கள் பனிக்க இதயம் கனக்க      சிவா