"மூச்சைக் கவனி, முழுவிழிப்புநிலையில் இரு!" புத்தர்

Thursday, April 23, 2009

கடவுளும்... நாத்திக உறவும்...

பொதுவாய்க் கடவுளுக்கும் மனிதர்களுக்கும் இடையே உள்ள உறவை நான்காகப் பிரித்துக் கொள்ளலாம். இந்த நால்வகை உறவில் நம் உறவு எத்தகையது என்பதில் தெளிவாய் இருந்தால் நம் பாதையில் தெளிவு கிடைக்கும். பயணமும் குழப்பமின்றி நடக்கும்.

முதல்வகை உறவு - நாத்திக உறவு

கடவுளும் நாத்திக உறவும்


'கடவுளையும் இவர்கள் கண்டு கொள்வதில்லை.கடவுளும் இவர்களைக் கண்டு கொள்வதில்லை’


நாத்திகர்கள், பொதுவுடமைவாதிகள், உலகாயதவாதிகள், பொருள்முதல்வாதிகள் போன்றோர் இந்தப் பட்டியலில் வருவார்கள்.

’கடவுளைக் கண்டுகொள்ளாதோர் அல்லது கடவுளை மறுப்போர்’ என்ற நிலையில் இருக்கும் இவர்களிடம் விருப்பு - வெறுப்பு அற்ற நடுவுநிலை நாயகமாக கடவுள் திகழ்கிறார்.

பொதுவாக ஒருவர் ஆளும் கட்சியை வெறுத்து, விமர்சிப்பவராக இருந்தால் கூட அரசின், மக்களுக்கு கிடைக்கக் கூடிய பொதுவான சலுகைகள் அவருக்கும் கிடைக்காமல் போகாது. ரேசன், தகுதிக்கேற்ப அரசுவேலை, அரசு மருத்துவம் போன்ற நியதிப்படி
கிடைக்க வேண்டியவை அனைத்தும் கிடைக்கத்தான் செய்யும்.(இன்றைய சூழ்நிலை அல்ல)

அதுபோலவே கடவுளை இவர்கள் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும், கடவுள் படிப்படியாய் ஏற்படுத்தி வைத்திருக்கும் உலக வாழ்க்கை எனும் பஞ்சபூத அமைப்புகள் இவர்கள வெறுக்காது. கண் தெரியும், காது கேட்கும், நாக்கு ருசிக்கும், நியதிப்படியே நடக்கவேண்டிய எல்லாம் முறைப்படி நடக்கும்.

இதைத்தான்


கல்லார்க்கும் கற்றவர்க்கும் களிப்பருளும் களிப்பே

காணார்க்கும் கண்டவர்க்கும் கண்அளிக்கும் கண்ணே


வல்லார்க்கும் மாட்டார்க்கும் வரமளிக்கும் வரமே


மதியார்க்கும் மதிப்பவர்க்கும் மதிகொடுக்கும் மதியே


நல்லோர்க்கும் பொல்லார்க்கும் நடுவில் நின்ற நடுவே


நரர்களுக்கும் சுரர்களுக்கும் நலம்கொடுக்கும் நலமே


எல்லார்க்கும் பொதுவில்நடம் இடுகின்ற சிவமே


என்அரசே யான்புகலும் இசையும்அணிந் தருளே


என்று வள்ளல் பெருமான் விளக்கமாக வர்ணிப்பார். இதுதான் இறைவனின் விருப்பு வெறுப்பற்ற நடுவுநிலை நிர்வாகம்.

ஆனால் விதிக்கு அப்பாற்பட்ட வெற்றிகள் இவர்களுக்கு வாய்க்காது.
சாவை வெல்லும் சமாதி, முக்தி, மோட்சம், பிறவிப்பிணியிலிருந்து விடுதலை என்பதெல்லாம் இவர்களுக்கு இல்லை. இவைகள் எல்லாம் இறைவனை ஏற்றுக் கொண்டோர்க்கு மட்டுமே கிடைக்கக்கூடிய சலுகைகள்.

தற்சோதனை செய்யுங்கள்.

இந்த நாத்திக உறவு என்ற வகையில் நீங்கள் இருந்தால் இதுவே போதுமென்றால், தொடர்ந்து பயணம் செய்யுங்கள். இதை ஒரு வகையில் எதுவமற்ற நடுவுநிலை என்றுகூட சொல்லலாம்.

தொடரும்... அடுத்து......கடவுளும் வியாபார உறவும்

நன்றி; கடவுளைக் கண்டோம்! காட்டவும் வல்லோம்! ஞானதேவபாரதி சுவாமிகள் அவர்களின் நூலில் இருந்து

12 comments:

  1. //ஆனால் விதிக்கு அப்பாற்பட்ட வெற்றிகள் இவர்களுக்கு வாய்க்காது.
    சாவை வெல்லும் சமாதி, முக்தி, மோட்சம், பிறவிப்பிணியிலிருந்து விடுதலை என்பதெல்லாம் இவர்களுக்கு இல்லை. இவைகள் எல்லாம் இறைவனை ஏற்றுக் கொண்டோர்க்கு மட்டுமே கிடைக்கக்கூடிய சலுகைகள்.
    //

    நண்பரே,

    இது தவறாகப்படுகிறது, புத்தர் நாத்திகர்தான், அவரே நாத்திகருக்கு முன்னோடி. அவர் பரிநிர்வாண நிலையை (மோட்சம்) அடைந்தார் என்று கேள்விப்பட்டதில்லையா ?

    ReplyDelete
  2. பொறுமை, பொறுமை

    புத்தர் நாத்திகர் இல்லவே இல்லை

    காத்திருங்கள்..

    ReplyDelete
  3. நாத்திகம் என்பது கடவுளின் இயலாமையிலிருந்து உருவாவது. கடவுள் எல்லாம் வல்லவராக எல்லாம் அறிந்தவராக இருப்பாரானால், அவரின்றி ஓரணுவும் அசையாதென்பது உண்மையானால் நாத்திகர்களும் கடவுளின் விருப்பத்தின் பேரிலேயே அவ்வாறிருக்க வேண்டும்.

    அப்படியில்லாது நாத்திகர்கள் கடவுள் விருப்பத்துக்கு மாறானவர்கள் என்றால், கடவுள் விருப்பத்துக்கு மாறாக ஆட்களால் இருக்கமுடியும் என்றால் கவுளின் சக்தி மட்டுப்பட்டது என்று தான் அர்த்தம்.

    நாத்திகம் நல்லதில்லை என்றால், நல்லதில்லாத ஒன்றை ஏன் கடவுள் தான் படைத்த உலகில் விட்டுவைக்க வேண்டும்?

    ReplyDelete
  4. நான் எங்கோ கேட்டது, முடிந்த வரை யாரையும் எதிரியாகவோ , அல்லது விரோதியாகவோ கருத வேண்டாம், அப்படி யாராவது எதிரி / விரோதி இருந்தால், அவர்களயே பற்றி நினைக்க வேண்டாம், அவர்கள் என்ன சொல்றாங்க , என்ன நினைகிறாங்க இதை பற்றியே நினைத்தால், நம் மனம், சதா அதை பற்றியே ஆராய்வதால், நம் நிலயை விட்டுவிட்டு நாம் எதரியின் குணத்தை அடைந்து வேடுவோம் என்று, நாரதரின் சூத்ரம் சொல்கிறதாம். .. இதற்க்கு ஆதாரமாக , கடவுளின் சுவர்க்க வாசலில் இருந்த துவார பாலகர்கள், எப்படி நூறு பிறவி எடுத்து திரும்பவும் வருவது கஷ்ட்டம் என நினைத்து, எப்போதும் கடவுளை, இம்சை படுத்தி, வசை பாடி, மூன்று பிறவிக்கு பின் ஸ்வர்க்கம் வந்தார்கள் என்று புராணம் சொல்கிறது.

    ReplyDelete
  5. \\நாத்திகம் நல்லதில்லை என்றால்,\\

    நாத்திகம், நல்லதா கெட்டதா என்பதல்ல..

    நாத்திகத்தினால் கிடைப்பது என்ன?
    ஆத்திகத்தினால் கிடைப்பது என்ன?
    என்ற பார்வையே.

    இதில் ஆன்மீகம் என்பதன் பரந்த பொருளை, கடவுள் என்ற தற்காலத்தில் நோக்கமே மாறிப்போன உருவ வழிபாட்டை தவிர்த்து உணர்வதே நமது கட்டுரையின் நோக்கம்..

    வாழ்த்துக்கள் மு.மயூரன்.

    ReplyDelete
  6. \\அவர்கள் என்ன சொல்றாங்க , என்ன நினைகிறாங்க இதை பற்றியே நினைத்தால், நம் மனம், சதா அதை பற்றியே ஆராய்வதால், நம் நிலயை விட்டுவிட்டு நாம் எதரியின் குணத்தை அடைந்து வேடுவோம் என்று, நாரதரின் சூத்ரம் சொல்கிறதாம்\\

    இதையே உயர்வாக பாருங்கள். நல்லவர்களை நினைத்தால் நாமும் நல்ல குணம் அடைவோம்தானே.

    நாத்திகர் நாரதரை ஏற்றுக்கொள்வதில்லை. அவரின் சூத்திரத்தையும் கண்டு கொள்வதில்லை.

    இன்றைய ’ஆன்மீகவாதிகள்’ நாரதரை மட்டும் கண்டு கொள்கின்றனர். சூத்திரத்தை உணரவேயில்லை

    நாம் நாரதருக்கு முக்கியத்துவம் கொடுப்பதைவிட
    அவரின் சூத்திரத்திற்கு மிகமுக்கியத்துவம் கொடுக்கிறோம். அதனாலேயே அவர் போன்றவர்களை மதிக்கிறோம்.

    கருத்துக்கு நன்றி---அது ஒரு கனாக் காலம்

    ReplyDelete
  7. ஆனால் விதிக்கு அப்பாற்பட்ட வெற்றிகள் இவர்களுக்கு வாய்க்காது.
    சாவை வெல்லும் சமாதி, முக்தி, மோட்சம், பிறவிப்பிணியிலிருந்து விடுதலை என்பதெல்லாம் இவர்களுக்கு இல்லை. இவைகள் எல்லாம் இறைவனை ஏற்றுக் கொண்டோர்க்கு மட்டுமே கிடைக்கக்கூடிய சலுகைகள்.//

    இத்தனை சொற்களுக்குமே வேறு பார்வைகளும்,வேறு பொருட்களும் உண்டு.அவை வெறுமனே பின்னூட்டத்தில் அடங்காது.
    ஒரே சின்ன எடுத்துக் காட்டு.
    சாவை யாரும் வெல்ல முடியாது.புத்தரும்,ஏசுவும்,கிருஷ்ணரும் உடலாய் வந்தவர்கள் எல்லோரும் செத்துத்தான் தீர வேண்டும்.
    சாவைப் புரிந்து கொள்வதையே வெல்வதாகச் சொல்கிறோம்.சாவைப் புரிந்து கொண்டால் மரணம் என்ற எண்ணத்தினால் விளையும் அச்சமும்,துயரும் தவிர்ந்து அமைதி கிடைப்பதே அதை வெல்வதாகும். இன்னும் நிறைய.நன்றி,அறிவே தெய்வம்.

    ReplyDelete
  8. //சாவைப் புரிந்து கொள்வதையே வெல்வதாகச் சொல்கிறோம்.சாவைப் புரிந்து கொண்டால் மரணம் என்ற எண்ணத்தினால் விளையும் அச்சமும்,துயரும் தவிர்ந்து அமைதி கிடைப்பதே அதை வெல்வதாகும்//

    அப்படியே உடன்படுகிறேன்., இதை உணர்ந்தால் வாழ்க்கை அமைதியாகவும், இனிமையாகவும், சகமனிதரிடையே பொருந்தியும் வாழ முடியும்.
    உலகமே இனிமையாக இருக்கும்.

    ReplyDelete
  9. தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி திரு.ஷண்முகப்ரியன் அவர்களே.

    ReplyDelete
  10. //ஆனால் விதிக்கு அப்பாற்பட்ட வெற்றிகள் இவர்களுக்கு வாய்க்காது.
    சாவை வெல்லும் சமாதி, முக்தி, மோட்சம், பிறவிப்பிணியிலிருந்து விடுதலை என்பதெல்லாம் இவர்களுக்கு இல்லை//

    ஏழுகடலையும் பத்து மலையையும் தாண்டிப் போனால் ஒரு தங்கப்பழம் இருக்கும், அதைப் பரித்து உண்டால் இறப்பே இருக்காது. என்ற நம்பிக்கைப் போன்றது.

    எல்லோரும் செத்து தான் போனார்கள்.
    யார் முக்தி, மோட்சம், பிறவிப்பிணியிலிருந்து விடுதலை அடைந்தார்கள் தெளிவாக சொல்லுங்க.

    அண்மையில் வாழ்ந்த ஒருவராக விவேகாநந்தருக்கு அது கிடைத்தது என்றாவது இராமகிருஷ்ண மடம் சொல்லி இருக்கிறதா ?

    ReplyDelete
  11. \\ஏழுகடலையும் பத்து மலையையும் தாண்டிப் போனால் ஒரு தங்கப்பழம் இருக்கும், அதைப் பரித்து உண்டால் இறப்பே இருக்காது. என்ற நம்பிக்கைப் போன்றது.\\

    அப்படியே வைத்துக்கொள்ளுங்கள். உண்டு,உடுத்தி,பிள்ளைகள் பெற்று எல்லோரும் சாவது போல் அல்லாமல் கூடவே தங்கப்பழத்திற்கும்
    முயற்சித்துப் பார்ப்போமே!

    \\யார் முக்தி, மோட்சம், பிறவிப்பிணியிலிருந்து விடுதலை அடைந்தார்கள் தெளிவாக சொல்லுங்க.\\

    சொல்லும் முன் நான் சரியாக உணர்ந்து,பின் சரி பார்த்துத்தான் சொல்லவேண்டும். அதற்குரிய காலம்
    வரும்வரை நான் அமைதியாக இருக்கவேண்டியதுதான்.

    \\அண்மையில் வாழ்ந்த ஒருவராக விவேகாநந்தருக்கு அது கிடைத்தது என்றாவது இராமகிருஷ்ண மடம் சொல்லி இருக்கிறதா ?\\

    அப்படி எதுவும் அவர் அடையவில்லை என கேள்விப்பட்டிருக்கிறேன். அப்படி இருக்கையில் மடம் எப்படி சொல்லும்?

    ReplyDelete
  12. புலால், மது, புகை தொடர்ந்து அருந்துவோர் எக்காலத்திலும் உயர்நிலைக்கு போக முடியாது. இது ஒரு முக்கிய குறிப்பு

    சாதரண மனித வாழ்க்கைக்கையில் உடல் அளவில்
    பாதிப்பு மட்டுமே கண்ணுக்கு தெரியும்.

    வாழ்த்துக்கள் கோவியாரே...

    ReplyDelete

மனசுல தோணினத சொல்லிட்டு போங்க :)