"மூச்சைக் கவனி, முழுவிழிப்புநிலையில் இரு!" புத்தர்

Monday, July 2, 2012

திரும்பிப் பார்க்கிறேன் - தமிழ்மணம்
தமிழ்மணம் நேயர்களுக்கு வணக்கம். நிகழ்காலத்தில் சிவா என சுயகுறிப்பில் பெயர் இடம் பெற்றிருந்தாலும் என் இயற்பெயர் சிவசுப்பிரமணியன். பிறந்தது வளர்ந்தது இருப்பது எல்லாமே திருப்பூர்தான்.:)

திருப்பூரில் பனியன் உற்பத்தி துறையில் சுயதொழில் செய்து கொண்டு இருக்கிறேன். உழைப்பால் உயர்ந்தவன் என்று என்னை நானே தட்டிகொடுத்துக்கொள்வது உண்டு. உடலுக்கு வயது நாற்பதை தாண்டிவிட்டது. சிறுவயது முதல் எல்லோருடனும் இணக்கமாக இருக்க வேண்டும் என்ற உணர்வு இருந்ததாலும், எதோ ஒரு வெறுமையை மனம் உணர்ந்ததாலும் ஆன்மீகத்தின் பக்கம் சாய்ந்தேன்.ஆன்மீகத்தில் குறிப்பாக உருவவழிபாடு என்னை ஈர்க்கவில்லை. சித்தர்களின் நெறிகள் என்னை ஈர்த்தன, மனிதனை  உடலாக, உயிராக, மனமாக. ஆன்மாவாகப்  பார்த்து, சாதி, மதம் என நாமே உருவாக்கிகொண்ட எந்த சமுதாய கட்டுப்பாட்டுக்குள்ளும் சிக்காது அவர்கள் காட்டிய வழிகளால் மனம் நிறைவுடைந்தது. இருந்தபோதும் கற்றுக்கொள்ள எளிமையும்,கடினமும் கலந்த பாடல்களால் திகைத்து நின்றேன். அப்போது அதே வழியை வேதாத்திரி மகரிஷி எளிதாக்கி இன்றைய சூழலுக்கு ஏற்ப கொடுத்து வந்தார். அந்த வழிமுறைகளில் தீவிரமாய் என் வாழ்க்கை ஓடத்துவங்கியது. அஸ்திவாரம் பலமாய் அமைந்ததால் என் விருப்பப்படி வாழ்க்கை கட்டிடம் நிறைவாக அமைந்தது.

காலஓட்டத்தில் அதை அடிப்படையாய் வைத்துக்கொண்டு பொதுவாக, எந்தவித பாகுபாடும் இன்றி என் சிந்தனைகளை, எனக்குப் பிடித்தவர்களின் சிந்தனைகளை பகிர்ந்து கொள்ள ஒரு தளம் வேண்டுமென 'அறிவே தெய்வம்' என்ற பெயரில் வலைப்பூ ஏற்படுத்தி இயங்கி வந்தேன்.

பின்னர் ஆன்மீகத்தின் இறுதி அம்சம் என்பது நிகழ்காலத்தில் இருத்தல் என்கிற தன்மைதான், இதற்குள் அனைத்தும் அடங்கிவிடும் என்பதை புரிந்து கொண்டவுடன் வலைதளத்தின் பெயரை 'நிகழ்காலத்தில்...' என்று மாற்றி விட்டேன். இதுவும் நிகழ்காலத்தில் நான் இருக்கிறேன் என்பதை நோக்கிய எனது பயணத்திற்கு உறுதுணையாகத்தான். ஆக என் வலைதளம்  எனக்கும், தமிழில் ஆன்மீகத்தில் ஆர்வத்தோடு வருவோருக்கு ஏற்படும் ஐயங்களை அல்லது அவர்கள் கொண்டிருக்கும் எண்ணங்கள் சரியா தவறா என உறுதிப்படுத்திக் கொள்ளும் வகையிலும் சிறிதளவேனும் பயன்பட வேண்டும் இதன் பொருள் நான் எல்லாம் தெரிந்தவன் என்பதல்ல. தெரிந்ததை பகிர்ந்து கொண்டு எனக்குத் தெரியாததை இன்னும் கற்றுக்கொண்டுதான் இருக்கிறேன்.


இந்தவாரம் தமிழ் மணம் நட்சத்திரமாக உங்கள் முன்னால் வந்திருக்கிறேன்.. தினமும் ஒரு இடுகை வெளிவரும். உங்களின் பேராதரவை வேண்டி....


நிகழ்காலத்தில் சிவா
Post a Comment