"மூச்சைக் கவனி, முழுவிழிப்புநிலையில் இரு!" புத்தர்

Monday, September 3, 2012

போலி குருக்களிடமிருந்து தப்பிப்பது எப்படி?

நண்பர் இக்பால் செல்வத்தின்  தியான சார்ந்த இடுகையில் நான் பின்னூட்டமிட அதன் தொடர்ச்சியாய் நண்பர் சார்வாகனனின் பின்னூட்டங்கள், அதில் சில விளக்கங்கள் கேட்டிருந்தார்.  நண்பர்கள் மேற்கண்ட இடுகையை படித்துவிட்டு இதைப் படித்தால் எளிதாக புரியும்.(#சிகப்பு எழுத்துகளில் உள்ளவை அந்த இடுகையில் இருந்து எடுக்கப்பட்டவை. )

இதோ சார்வாகனன் அவரது பின்னூட்டம்.

நான் யோகம்,தியானம் போன்றவற்றை நம்புவது இல்லை. எனினும் இதில் நிம்மதி தேடும் சகோக்களுக்கு தெளிவாக பதில் சொல்ல வேண்டுகிறேன்!!!

தனக்கென இல்லாவிட்டாலும் பிறருக்கென சில கேள்விகளை எழுப்பி இருந்தார். அதற்கு நான் பதிலளிக்கவேண்டும் என விருப்பமும் தெரிவித்து இருந்தார்...
1. ஜக்கி வாசுதேவை நம்புகிறீர்களா இல்லையா ஆம்/இல்லை
ஆம் எனில் அனுபவம்

ஆம். என் அனுபவம். இங்கே என்ன சொல்வது., ஜக்கியைப் பற்றிய மதிப்பீடா? அவரது நேரடிப்பயிற்சியைப் பற்றியா? அவரால் வடிவமைக்கப்பட்டு வழங்கப்படும் பயிற்சிகள் பற்றியா? ஈசா என்ற அமைப்பைப் பற்றியா? பொதுவில் இனிய அனுபவம்தான்:)., என்ன விவரித்தாலும் இதில் விருப்பமில்லாதவர்களுக்கு பத்தோடு பதினொன்றாக போய்விடும்.

(எனினும் நண்பரது ஆவலை பூர்த்தி செய்யும் விதமாக சுருக்கமாக பார்ப்போம்.  ஒருவரின் அனுபவம் இன்னொருவரின் அனுபவத்தோடு வேறுபடும் என்பதை ஏற்கிறேன்.ஆனால் ஏன் ஆன்மீக வாதிகள் என்று சொல்பவர்கள் பொத்தாம் பொதுவாக்வே பேசுகிறீர்கள் என் என்க்கு புரியவில்லை. வேறுவழியில்லை. ஆன்மீகம் என்பதில் உயிர், மனம், ஆன்மா என மறைபொருள்களைப் பற்றி பேசுவதால் இது குறித்து ஏற்கனவே அறிந்தவர்களுடன் பேசுவது இயல்பாக அமையும். மற்றவர்களுடன் உரையாடுவதில் புரிதல் வராது. கிளைக்கேள்விகள் நிறைய வரும், பயனற்ற, நேரம் விரயம் செய்யக்கூடியதாகவே அமையும். ஆக பொதுவாகத்தான் பேசி ஆகவேண்டும்.  பொருள்சார்ந்து பேசினால் ஈமுகோழி, பதிவர் சந்திப்பு, முகமூடி என குறிப்பிட்டு பேசினால்  ஒரு குறிப்பிட்ட வட்டத்துக்குள் அனைவராலும் பங்கேற்றுப் பேச முடியும்.)

2. வாழும் கலை ரவிசங்கரை நம்புகிறீர்களா இல்லையா ஆம்/இல்லை
ஆம் எனில் அனுபவம்.

ஆம். பயிற்சிகள் கற்றதுண்டு. அனுபவம் இனிமையானதே...

3. இந்த கார்ப்பரேட் சாமிகள் தவிர்த்து யோகா,தியானம் பற்றிய உங்களின் தனிப்பட்ட அனுபவம் உண்டா இல்லையா?
உண்டு எனில் அனுபவம்

உண்டு. விபாசனா.. வேதாத்திரி அவர்களின் யோகமுறை.. அனுபவம் இனியவையே

இவை இல்லாமலேயே தேடல் ,கற்றல்,பகிர்தலில் மகிழ்ச்சியாகவே[எப்போதும் அல்ல பொதுவாக] இருக்கிறேன்.


நீங்கள் இடும் பதிவில் மேலே சொன்ன கேள்விகளுக்கு தெளிவாக பதில் இருக்குமாறு பார்த்துக் கொள்ள‌வும். நன்றி!!!!!!!!!!!!!!!!!  இத்தனை ஆச்சரியகுறிகளின்  பொருள் அன்புக்கட்டளை (!!!) என்பதாக  புரிந்து கொண்டேன் :)) 

இந்த கேள்விகள் என்னை வெளிப்படுத்தும் வாய்ப்பாக அமைந்திருப்பதாக நினைக்கிறேன். இதன் அடையாளமாக, பதில்கள் அமைந்தால் நான் பேச்சளவில் இல்லாமல் செயல்முறையில் இருக்கிறேன் என்பதை உறுதிசெய்யலாம். அந்த சந்தர்ப்பமாக நினைத்து தொடர்கிறேன்.

ஏதோ ஒரு யோக அமைப்புக்கு செல்ல வேண்டும் எனறு நினைப்பவர்களுக்கு தேடுதல் உள்ளவர்களுக்கு உதவும் வகையில் சில குறிப்புகள் கொடுக்கலாம்.

1) ஈஷா
 ஈஷா யோகாவை கற்க விரும்பும் தனிநபருக்கு, உள்ளூரில் அல்லது ஈஷாவில் ஓரிரு நாட்கள் தங்கிப் பயிலும் பயிற்சிகளில் கட்டணம் மிகக்குறைவே.. இது என் அனுபவம். யாரோ சொல்லிக் கேட்டதல்ல.. ஜக்கியின் நேரடிப்பயிற்சிகளில் கட்டணம் மிகவும் அதிகமாகத்தான் இருக்கும்.

ஈஷாவின் பயிற்சி முறைகள் இறுதியில் உடலோடும், உயிரோடும், உயிர்சக்தி ஓட்டத்துடனும் ஒன்றி ஒவ்வொருகணமும் விழிப்புண்ர்வுடன் வாழ வழிகாட்டும் பயிற்சிகள் தாம்..... என்ன தலையைச் சுற்றி மூக்கைத் தொடுகிற விதமாக பயிற்சிகள் அமைக்கப்பட்டு இருக்கும். இது குறையல்ல.,ஈஷாவிற்கு வருவோர்களில் பலதரப்பட்டவர்களையும் மனதில் கொண்டு, மெள்ள மெள்ள நகர்த்திச் செல்லும் விதமாக  வடிவமைக்கப்பட்டு இருக்கும். ஈஷாவில் பயிற்சி அளிக்கும் ஆசிரியர்களை கவனித்தால் விழிப்புணர்வுடன் செயல்படுவதை உணரலாம்.


 2) ஸ்ரீஸ்ரீரவிசங்கரின் வாழும்கலை ரொம்ப அலட்டிக்கொள்வதில்லை. போகிறபோக்கில் மக்களுக்கு எளியமுறையிலான சுதர்சன கிரியாவைச் சொல்லிக்கொடுக்கின்றது. ரொம்ப ஆராய்ச்சி  எல்லாம் கிடையாது. எளிமையிலும் எளிமை., மூச்சுக்கலை மூலம் நமக்கு தேவையானதெல்லாம் கொடுக்கும் பயிற்சி.,ரொம்ப யோசிக்க வேண்டிய அவசியம் இல்லாத எளிதான யோகப்பயிற்சிகள

 
3) வேதாத்திரி மகரிஷி அவர்களின் மனவளக்கலை.,எளிதான உடற்பயிற்சி,  முரண்பாடு இல்லாத அறிவியல் சார்ந்த முழுமையான தத்துவ விளக்கங்கள். தியான முறைகள் சற்றே எளிதாக இருந்தாலும் நுணுக்கங்களை நாமாகத்தான் கண்டுபிடித்துக்கொள்ளவேண்டும். தியானம் தவிர்த்து மற்ற எல்லா வகையிலும் சிறந்தது, 

4)தியானம், தியானம், தியானம் மட்டுமே, மற்றபடி வளவள, கொழகொழா எதுவும் இல்லாமல் ஆனால் என்னென்ன நமக்கு தேவையோ அனைத்தும் கிடைக்க விபாசனா.... முக்கியமாக நன்கொடை நம் விருப்பம்போல.. :)
 

இவை எல்லாமே என் நேரடி அனுபவங்கள் தாம். இந்த அளவில் குறிப்புகள் போதும் என்று நினைக்கிறேன்.

நண்பரின் இடுகையில் //பல்வேறு அமைப்பினர் நடத்தும் தியான முறைகளில் குறைந்த பட்ச அடிப்படைகளில் ஏதேனும் ஒன்றை பயின்று வருவது நல்லது. ஈசா, வாழும்கலை போன்ற போலிகளிடம் ஏமாறவேண்டாம் என்று சொல்லி இருக்கிறார். இக்பாலின் கருத்துக்களோடு பெரும்பாலும் ஒத்துப்போனாலும் ஈசா, வாழும் கலை  இவற்றை போலி எனச் சொல்வது எதனால் எப்படி ஏமாந்தார் என்ற கேள்வி அங்கே கேட்டிருந்தேன். என்ன பயிற்சி பெற்றார்?. அதில் என்ன பிரச்சினை? எனக்கேட்க, அதற்கு பின்னரும், பின்னூட்டத்திலும் அதையே சொல்லி இருந்தார்.(தியானம் குறித்த பயிற்சிகளை அவர்கள் தருவதில்லை.)

கூடவே மதம், வேதாந்தம், சித்தாந்தம் என அளந்துவிடுவார்கள். இது இவரது கருத்து என்றாலும் அளந்துவிடுகிறார்கள் என்பதில் எனக்கு உடன்பாடு இல்லை. நம்மால் புரிந்து கொள்ள முடியவில்லை என்பதே உண்மை. அதன்மூலம் என்ன சொல்ல வருகிறார்கள் என்பதை மீண்டும் அதே விளக்கங்களைக் கேட்டால் ஓரளவிற்குப் ப்ரியும்.

(அத்தோடு ஒன்றும் தெரியாதவர்களை மூளைச்சலவை செய்வதில் வல்லவர்கள் ! ) இது ஈசாவின் பலம் என வைத்துக்கொண்டால் அவர்களிடம் ஏமாறுவது நம்மவர்களின் குறைபாடு அல்லவா? நம்மவர்கள் அப்படி ஏமாறாமல் இருக்க,  விழிப்புணர்வு ஊட்ட வேண்டியது நமது கடமை. ..:) நல்லவர் யார் என அடையாளம் காட்ட வேண்டிய அவசியம் வந்து விடுகிறது. அதே சமயம் அந்த நல்லவர்களுக்கான உத்தரவாதமும் தரவேண்டும். அது சாத்தியமில்லை. ஆகவேதான் இந்த வலைதளத்தில் தியான அமைப்புகளுக்கு செல்பவர்களுக்காகவும், அதுபற்றி தெரியாதவர்களுக்கும் சிந்தனையைத் தூண்டும் வகையில் அவ்வப்போது கருத்துகள் பகிர்ந்துவருகிறேன், தொடர்ந்து படித்து வருபவர்களுக்கு இதில் உள்ள உண்மை புரியும்.

 ஈஷாவை நிர்வாக ரீதியாக நான் விமர்சிக்க விரும்பவில்லை. பணவிசயங்களில் குறைபாடுகள் ஆங்காங்கே தென்படத்தான் செய்கின்றன. ஈஷாவின் பிரமாண்ட கட்டிடப்பணிகளும், வளர்ச்சிகளும், உள்ளேயே ஈஷா கிராமமே உருவாகி இருப்பதற்கும் நிச்சயம் பணம் நிறையத் தேவை. இதை நன்கொடைகள் மூலமும் ஜக்கியில் நேரடி(?) பயிற்சிக்கட்டணங்கள் மூலம் நிறைவு செய்கிறார்கள். விருப்பம் இருந்தால் போகலாம். இல்லையெனில் தாராளமாக ஒதுக்கலாம்.

// ஒருவேளை இந்த யோகா மையத்தினர் நல்லவர்களாக் இருந்து கற்பிக்கும் யோகா உடலுக்கும்,மனதுக்கும் விளைவிக்கும் நன்மையை விட, நடத்துபவர்கள் தீயவர்களாக இருந்தால் விளையும் தீமை மிக மிக அதிகம்.// சார்வாகனின் கருத்துகளில் உள்ள நிதர்சனமான உண்மை இதுதான். எல்லா அமைப்புக்கும் பொதுவான கருத்து.

அடுத்ததாக //மகிழ்ச்சி என்பது நம்மை சுற்றி உள்ளவர்கள் மகிழ்ச்சியாக இருந்தால் மட்டுமே வரும் என்பது நம் கருத்து,அனுபவம்.ஆகவே ஒருவர் மட்டும் சூழல் சாராமல் மகிழ்ச்சியாக இருப்பது சாத்தியம் அற்றது.//
கல்யாண வீட்டில் மகிழ்ச்சியாக இருக்கமுடியும். துக்கவீட்டில் சோகமாகத்தானே இருக்கமுடியும் என்பது பொதுவான உண்மை. அதற்காக சூழல் சாராமல் மகிழ்வாக இருப்பது சாத்தியம் அற்றது என்பது லாஜிக்தான். ஆனால் சாத்தியமே. சூழல் நம்மைத் தாக்காது விழிப்புணர்வாக இருக்க முடியும்.  இதை அவ்வப்போது நான் அனுபவித்து இருக்கிறேன். முழுமையான விழிப்புணர்வுக்கு வருவதற்கான, மனதின் பிடியில் இருந்து விடுபடத்தான் இந்த எழுத்துக்கள் எல்லாம் :), ஆக சாத்தியம் என்பது லாஜிக்கிலிருந்து மேம்பட்ட நிலை, முரண்பட்ட நிலை அல்ல எனபதை அறியவும்.

இக்பால் செல்வன் சொன்னதில் எந்த அறிவியல் அடிப்படையில் அல்லது குரு பரம்பரை முறையில் அவர்களின் (ஈஷா) தியானம் கற்பிக்கப்படுகின்றது என்பதை விளக்குவதே இல்லை.

குரு ஒருவரின் பெயரைச் சொல்லவேண்டுமெனில் அவரது வழிகாட்டுதலை, போதனைகளை முழுமையாக பின்பற்றினால் அதுசாத்தியம். ஈஷா அப்படி அல்ல. கொஞ்சம் விபாசனா, கொஞ்சம் ஓஷோ, கொஞ்சம் கர்நாடகம் சார்ந்த பூஜை முறைகள் என கலந்து கட்டி அமைக்கப்பட்ட முறை அது. அதுவுமட்டுமில்லாமல் ஈஷா அமைப்பினை பரவலாக்கும் மார்க்கெட்டிங் உத்தியாகவும் அமைக்கப்பட்டு இருப்பதால் குருவின் பெயரை எதிர்பார்க்க வேண்டியதில்லை. இதை நண்பர் இக்பாலே ஒத்துக்கொண்டும் இருக்கிறார் :)
 //அதே போல ஈஷா யோகம் எந்த சித்தாந்ததை வலியுறுத்துகின்றன எனத் தெரியவில்லை. வேதாந்தம், பௌத்தம் என அனைத்தையும் குழப்பி அடிப்பார்கள் --- அத்தோடு சிவலிங்க வழிப்பாடு --- கொஞ்சம் பொது சேவை எனப் போகும் //

தியான அமைப்புகளின் நிர்வாகரீதியான நடவடிக்கைகளை கூர்ந்து நோக்குவதும் விமர்சிப்பதும் என் ஆர்வமல்ல...அதற்கு நிறைய நண்பர்கள் இருக்கிறார்கள்:)

அவைகள் தரும் பயிற்சி முறைகள் எப்படி தனிமனிதனை மேம்படுத்துகிறது என்று மட்டுமே நான் பார்க்கிறேன். இந்த நோக்கில் பேச எழுத போதுமான நண்பர்கள் இல்லை. எனவே அந்தப் பணியினை இந்த வலைதளம் செய்து கொண்டு இருக்கிறது.,  தொடர்ந்து செய்யும் என்ற நம்பிக்கையுடன்...

நிகழ்காலத்தில் சிவா

18 comments:

 1. திருவிளையாடல் நாகேஷ் மாதிரி எனக்குக் கேட்க மட்டும் தான் தெரியும் என்ற மனோபாவம் இங்கே நிறையப்பேரை கிளிப்பிள்ளைகளாக்கி விடுகிறது.யாராவது பதில் சொல்ல முனைந்தாலும் அதைக் கொஞ்சம் சுயமாக யோசித்துப் பார்க்காமலேயே மேலும் மேலும் கேள்விகள் கேட்பது மட்டுமே தெரிந்தவர்களுக்கு எப்படிப் புரிய வைப்பது?

  எதையும் புரிந்துகொள்வது யாரோ சொல்லிக் கொடுப்பதிலோ அல்லது நாம் அதை காது கொடுத்துக் கேட்பதிலோ இல்லை.தன்னுடைய சொந்த அனுபவமாக உணர்கிற வரை, அதற்கான தேடலில் இறங்காத வரை சாத்தியமே இல்லை.ஆக, நல்ல குரு, போலி குரு என்பதெல்லாம், நம்முடைய யோக்கியதை உண்மையில் என்னவாக இருக்கிறது என்பதைப் பொறுத்த ஒன்று தான்.

  இக்பால் செல்வன், ஒரு நாத்திகராக, தெளிவாக சிந்திக்கிறார். தெளிவாகவே தன்னுடைய வாதங்களை, கேள்விகளைக் கேட்கிறார். உள்முகமான தேடலில் அவருடைய கேள்விகளுக்கு அவரிடமே பதில் இருக்கிறது.அதை அவர் தான் கண்டறிந்தாக வேண்டும்!

  ReplyDelete
  Replies
  1. கேள்விகள் எப்படி வேண்டுமானலும் எந்த நோக்கத்துடன் வேண்டுமானாலும் இருக்கலாம் ஆனால் பதில்கள் சரியானதாக இருக்க வேண்டும்.

   நமது உரையாடல்கள் இங்கு வருவோருக்கு சிறிதளவேனும் தெளிவைக்கொடுக்கும்.

   கருத்துக்கும் வரவுக்கும் நன்றி ஐயா :)

   Delete
 2. காலம் பொன் போன்றது.
  வார்த்தைகளை கொட்டி விடலாம். திரும்பி அள்ளிவிட முடியாது.
  அனுபவமே ஆசிரியர்.
  அவரவர் வினை அவரவர் வாழ்க்கை.
  விவாதத்திற்கு மருந்துண்டு. வாதத்திற்கு இல்லை.
  ஒருவரின் சுய அனுபவங்களை எப்படித் சொன்னாலும் அடுத்தவரால் புரிந்து கொள்ள முடியாது.
  தனக்கு நடந்தால் தான் எல்லாமே புரியும்.
  கடவுள் என்பது உள்ளே இருப்பவர். வெளியே தேடியலைய தேவையில்லை.

  போதுமா சிவா?

  ReplyDelete
  Replies
  1. ஒவ்வொரு வரியிலும் ஆயிரம் அர்த்தங்கள் உள்ளன ஜோதிஜி.,

   நன்றி ஜோதிஜி :)

   Delete
 3. அருமையான விவரிப்பு
  நானும் வாழும் கலை மற்றும் ஈஷாவில் பயிற்சி எடுத்திருக்கிறேன். என்னுடைய தனிப்பட்ட அனுபவமும் (கருத்து இல்லை) தங்களுடையதுடன் ஒத்து போகிறது.

  அனுபவங்கள் சிறிதும் இல்லாமல் அனுமானத்திலேயே பலரும் ஆன்மீக நிறுவங்களை பற்றி குறை கூறி வருகின்றனர். அதை படிக்கும் பொழுது அவர்களுடைய சிறுபிள்ளை தனம் தான் தெரிகிறது. அவர்களுக்கு புரியவைக்கும் நோக்கில் பொறுமையாக இந்த பின்னூட்டம் இட்ட உங்களை பாராட்டுகிறேன்.

  ஒரு விஷயம் நமக்கு தெரியவில்லை என்றால் அது இல்லை என்று முடிவு செய்பவர்கள் தான் ஏராளம். இப்படி முடிவு செய்து வாழ்க்கையை உணர்வதற்கான கதவை மூடிக்கொள்ளும் மனிதர்களை பார்க்கும் போது இரக்கம் மேலிடுவதை தவிர்க்க முடிவதில்லை.

  ReplyDelete
  Replies
  1. நன்றி பிரபாகரன். மகிழ்ச்சியாக இருக்கிறது உங்கள் பின்னூட்டத்தைப் பார்க்க... ஒத்த சிந்தனை உடையவர்கள் எண்ணமும், அனுபவமும் ஒரே மாதிரி இருப்பதை மற்றவர்களும் உணர இது ஒரு வாய்ப்பு.

   நன்றி :))

   Delete
 4. வணக்கம் சகோ,

  என் கேள்விகளுக்கு விடை அளித்து இருப்பதற்கு மன்மார்ந்த நன்றிகள். எனக்கு யோகம் ,தியானம்,கடவுள் தேவையில்லை என்றாலும் ஈடுபாடு உள்ளவர்களுக்கு உங்கள் பதிவு பலன் அளிக்கலாம்.

  இப்பதிவு மீதும் பல வினாக்கள் எழுப்பலாம் என்றாலும் விவாதம் நம் பொதுவான அனுபவம் சாராது இருப்பின் நாம் இருவரும் ஒரு புள்ளியில் சந்திக்க இயலாது என்பதால் தவிர்க்கிறேன்.

  வேதாத்ரி அய்யாவின் சுற்று சூழல் பாதுகாப்பு," 'வாழ்க வளமுடன்' என்னும் வாழ்த்தும் சொற்றொடர் பிடிக்கும் . கல்லூரியில் படித்த காலத்தில்[15+ ஆண்டுகளுக்கு முன்] ஒருமுறை அவ்ருடைய உரை & பயிற்சி மேற்கொண்டதை நினைவு கூறுகிறேன்.

  மன்னிக்கவும். எனக்கு அதில் அப்போது பயன் இருந்ததாக உணரவில்லை!!!

  இருப்பினும் அவர் மீது மேலே சொன்ன விடயங்களுக்காக மதிப்பு உண்டு.ஜக்கி& இரவி சங்கர் பற்றி நல்ல கருத்து இல்லை!

  நம் கருத்திற்கு உங்கள் நேரம் செலவிட்டு பதில் சொன்னதற்கு மீண்டும் நன்றி சகோ!!!

  நன்றி


  ReplyDelete
  Replies
  1. இப்பதிவு மீதும் பல வினாக்கள் எழுப்பலாம் என்றாலும் விவாதம் நம் பொதுவான அனுபவம் சாராது இருப்பின் நாம் இருவரும் ஒரு புள்ளியில் சந்திக்க இயலாது என்பதால் தவிர்க்கிறேன்.//

   நான் என்ன நினைத்து எழுதினேனோ அப்படியே பிரதிபலித்து இருக்கிறீர்கள் சார்வாகனன். விவாதம் தெரிந்தவற்றை வைத்து செல்லாமல், அனுபவத்தின் அடிப்படையில் இருப்பது நல்லது என்பதை அழகாக வெளிப்படுத்தி விட்டீர்கள்.

   நன்றிகள் பல., வரவுக்கும் கருத்துக்கும் :))

   Delete
 5. குருக்கள் என்றால் சிவன் கோவில் பூசாரி என்று அர்த்தம், அதற்குப் பதிலாக போலி ஆன்மீக வாதி -என்ற வார்த்தை பொருத்தமாக இருக்கும்.

  1. ரஞ்சிக் கோட்டை வாலிபன், ரவிசங்கர் தனக்கு ஆதரவு தெரிவிச்சதா சொல்றான், ஒரு மொள்ளமாரிக்கு ஆதரவு சொல்றான் என்றால் அவன் எப்படிப் பட்டவனா இருப்பான், புரிஞ்சுக்கோங்க, பாத்து சூதனமா இருங்கப்பு.

  2. ஜக்கி:
  http://www.vinavu.com/2012/08/06/sathguru-jaggi-vasudev/

  Tha.ma. -3

  ReplyDelete
  Replies
  1. குருக்கள் என்பது கோயில் ஐயரைச் சொல்றது பொதுமக்கள் வழக்கம். ஆன்மீகம்ப் பாதை என நான் குறிப்பிடுவது யோகம், தியானம் சார்ந்தவை. அவர்களில் வழிகாட்டியாக இருப்பவரை குரு என்கிறோம். இந்த அர்த்தத்தில்தான் இந்த இடுகையில் பேசப்பட்டு இருக்கிறது.

   மற்றபடி எல்லா அமைப்பிலும் நிர்வாக ரீதியான குறைகள் இருக்கின்றன. அவைகளை அலச வினவு போன்ற தளங்கள் இருக்க்லாம். ஆனால் பயிற்சி முறைகளைப் பற்றி பேச தளங்களே இல்லை எனலாம்.

   நிர்வாகம் வேறு, பயிற்சிகள் வேறு என்பது என் நிலைப்பாடு..


   நன்றி ஜெயதேவ்.. வரவுக்கும் கருத்துக்கும் :)

   Delete
 6. எமதுக் கேள்விகளுக்கு பதில் நல்கியமைக்கு மிக்க நன்றிகள் !

  ஜக்கியின் ஈஸா, ரவிசங்கரின் வாழும் கலை ஆகியவைக் குறித்து எனக்குத் திருப்தி இல்லை .. ஏனெனில் அவர்களின் முழு நோக்கம் வியாபாரம் ! வியாபாரம் ! வியாபாரம் மட்டுமே ! அத்தோடு அவர்கள் எந்த குரு பரம்பரை / அறிவியல் முறைப்படியான தியானம் பயிற்றுவிக்கின்றார்கள் என்பதில் வெளிப்படைத் தன்மை இல்லாதவர்கள்.

  ஒருவர் அலோபதி மருத்துவர் என்றால் முறைப்படி பயின்று இருக்க வேண்டும் .. அவருக்கான செயல்முறைகள், திட்ட வட்டக் கொள்கைகள், அங்கீகரிக்கப்பட்ட ஆய்வுகள் அடிப்படையிலான சிகிச்சை முறைகள் இருக்க வேண்டும் ..

  அல்லது மாற்று மருத்துவம் என்றால் குறைந்தது நீண்ட பயிற்சியும், குரு பரம்பரை முறையிலான ஒரு தொடர் பாரம்பரியம் ஊடாக கற்றல் நெறிகளையாவது கொண்டிருக்க வேண்டும். தாம் எந்த குருவிடம் பயின்றோம் என்று சொல்ல வேண்டும்.

  ஆனால் எவராவது ஒருவர் கொஞ்சம் அலோபதி, கொஞ்சம் சித்தா, கொஞ்சம் யுனானி அத்தோடு கொஞ்சம் சாமி வழிபாடு இவற்றைச் சேர்த்துக் கொண்டு பிரச்சாரம் செய்து மக்களை குணப்படுத்துகின்றேன் என்றால் கிளம்பி வந்தால் அவரை ஏற்பீர்களா ?

  உடல் - மனம் இரண்டும் வெவ்வேறு அல்ல .. உடல் சார்ந்த பிணிகளுக்கு முறைப்படியான மருத்துவத்தை அணுகும் நாம். மனம் சார்ந்த நோய்களுக்கு முறைப்படியான மருத்துவத்தை அணுகுவது இல்லை.

  உடல் பயிற்சி செய்வதில் கூட ஒழுங்கு முறைகள் இருக்கின்றன. கண்டபடி செய்தால் உள்காயங்கள் ஏற்படும். மனப் பயிற்சியும் அவ்வாறே ஒழுங்கற்ற முறையில், ஒழுங்கற்றவர்களிடம் கற்பது மனக் காயங்களை மாத்திரமே ஏற்படுத்தும் ... !!!

  ஆகவே தியானம் பயில்வோ, பயிற்றுவிப்போரின் பயிற்சித் தரம், அவர்களுக்கான Credentials, அவர்கள் கற்கை நெறிகளை எங்குக் கற்றார்கள் - முறைப்படியான லைசண்ஸ் அல்லது குரு பரம்பரை ஊடாகவாது பயின்றுள்ளார்களா என்று சரிப் பார்த்துக் கொள்ளுங்கள் ..

  தியானம் என்பதும் பக்க விளைவுகள் ஏற்படுத்தக் கூடிய மருத்துவம் போன்றதே ! வெறும் மூச்சைக் கவனி என்பதோடு நின்றுவிடுவதல்ல !!! அது ஆழ்மனம் சார்ந்த விடயம், அவற்றினை பிழையாகக் கற்றுக் கொண்டால் பக்க விளைவுகள் நிச்சயம்.

  கோயங்காவின் விபஸ்ஸானாவில் எனக்கு கருத்து வேறுபாடு இல்லை. அவர்களுக்கு என ஒரு பாரம்பரிய முறை வைத்துள்ளார்கள் ... அதே போல சிவானந்தா யோகாவில் (பணம் பறித்தாலும்) ஒரு பாரம்பரிய முறை உண்டு !

  ஆனால் காப்பிரேட் சாமியார்களின் தியான முறைகள் அறிவியல் பூர்வமோ, பாரம்பரிய முறைகளோ அற்றவை !!!

  பாரம்பரிய முறைகளைக் கூட அறிவியல் பூர்வமாக ஆய்வு செய்த பின்னரே நடைமுறைப்படுத்தப் படல் வேண்டும்.. ஏனெனில் அவற்றில் கூட பிழைகள் இருக்கின்றன !!!

  ReplyDelete
  Replies
  1. அவர்கள் எந்த குரு பரம்பரை / அறிவியல் முறைப்படியான தியானம் பயிற்றுவிக்கின்றார்கள் என்பதில் வெளிப்படைத் தன்மை இல்லாதவர்கள்.//

   இதற்கான விளக்கம் இடுகையிலேயே இருக்கிறது :)

   //உடல் - மனம் இரண்டும் வெவ்வேறு அல்ல
   தியானம் என்பதும் பக்க விளைவுகள் ஏற்படுத்தக் கூடிய மருத்துவம் போன்றதே //

   இக்பால்., இந்த கருத்துகளோடு முழுமையாக மாறுபடுகிறேன். உடல் கண்ணுக்குத் தெரியும் அறிவியலால் அலசக்கூடிய சங்கதி., இதனால் மருத்துவம் சாத்தியம்.

   மனமோ அறிவியலுக்கு ஒத்துவராத சங்கதி., மறைபொருள் இதற்கு மருத்துவ உதாரணம் சரியாக வராது. தியானம் குறித்து உங்களின் அடிப்படை புரிதலில் நிறைய மாற்றம் தேவை என்பது என் கருத்து.

   இந்த என் கருத்தை நட்புரீதியாக எடுத்துக்கொள்க :)

   வரவுக்கும் கருத்துக்கும் நன்றி இக்பால்செல்வன்.

   Delete
 7. பூசாரி என்றால் சூத்திரனைத் தான் குறிக்கும்;
  குருக்கள் என்றால் தேவநாத குருக்கள்! ஹம்ம்...பாசம் பொங்குது!

  ReplyDelete
  Replies
  1. :))

   எல்லாச் சாதியினரும் பூசாரியாகலாம் என்பதுதானே அரசியல்கட்சியினரின் கோரிக்கை :)

   வரவுக்கும் கருத்துக்கும் நன்றி நம்பள்கி :)

   Delete
 8. விளக்கங்கள் அருமை...

  ரொம்ப நன்றிங்க...

  ReplyDelete
  Replies
  1. ம்கிழ்ச்சிங்க தனபால்., தொடர்ந்து படிக்கிறீர்கள் என்பதில் கூடுதல் மகிழ்ச்சி :))

   Delete
 9. உங்களுக்கு இது உபயோகமாக இருக்குமா பாருங்கள்.

  http://pravaagam.org/

  ReplyDelete
 10. இவரை நான் அறிவேன். இவரது நூல்கள் சில வாசித்திருக்கிறேன். புரிதலே ஞானம் என்பது இவரது கருத்து.

  அக்கறையுடனான தகவலுக்கு நன்றி சுரேஷ் :)

  ReplyDelete

மனசுல தோணினத சொல்லிட்டு போங்க :)