"மூச்சைக் கவனி, முழுவிழிப்புநிலையில் இரு!" புத்தர்

Friday, April 24, 2009

கடவுளும்....வியாபார உறவும்...

“கடவுளை இவர்கள் கண்டு கொள்வார்கள். ஆனால் கடவுளோ இவர்களைக் கண்டு கொள்வதில்லை!”

என்னும் இரண்டாம் நிலை உறவே வியாபார உறவு.

இது ஆன்மீக வியாபாரிகளிக்கும் கடவுளுக்கும் இடையே உள்ள உறவு.

மடாதிபதிகள், மதபோதகர்கள், போலிச்சாமியார்கள், அர்ச்சகர்கள், பூசாரிகள், மந்திரவாதிகள், மாந்திரீகர்கள் உள்ளிட்டோர் இந்தப் பட்டியலில் உள்ளவர்கள்.

கடவுள் பெயரால் வருமானம் கிடைக்கும் ஒரே காரணத்திற்காகக் கடவுளை விரும்புபவர்கள். சுவரொட்டிகள், ’கட் அவுட்’கள், பத்திரிக்கை விளம்பரங்கள், தொலைக்காட்சி ஊடகங்கள் எனப் பலவழிகளில் மக்களைக் கவர்வார்கள்.

சிலர் நான் தான் கடவுள் அவதாரம் என்பார்கள். சிலர் நான் தான் கடவுள் என்பார்கள். இவர்கள் கடவுளுக்கு விரோதமானவர்கள். ஆனால் இவர்கள் சிறுதெய்வங்களுக்கும், தேவதைகளுக்கும் , துர்தேவதைகளுக்கும் பேய், குட்டிச் சைத்தான் போன்றவற்றிற்கு
மிகவும் விருப்பமானவர்கள்.

அதனால்தான் இவர்களை நம்பிச் செல்பவர்களுக்குச் சில அற்ப வெற்றிகள் கிடைக்கும். ஆனால் முடிவான ஞானமும் சமாதியும் கிடைக்கவே கிடைக்காது.

கடவுள் என்பது ஒரு நாட்டின் பிரதமர் போல. (இந்தியா அல்ல)
தெய்வங்கள் என்பன அமைச்சர்கள் போல
தேவதைகள் என்பன அதிகாரிகள் போல

ஒரு நாட்டின் ஜனாதிபதியோ, பிரதமரோ நாடு நலமாகவும் இன்பமாகவும் இருக்க வேண்டும் என விரும்புவார்கள். அதுபோல்தான் கடவுளும்.

ஆனால் நாடு நாசமாய்ப் போவது யாரால்? அவருக்கு கீழ் உள்ள அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளின் ஆசைகளாலும் பொறுப்பற்ற தன்மையினாலும் தான்.

அந்த வகையில் இத்தகைய ஆன்மீக வியாபாரிகளுக்கு சில சமயங்களில் தெய்வங்களின் துணையும், தேவதைகளின் துணையும் கிடைப்பதுண்டு.

கடவுளின் பெயரால் வியாபாரம் செய்வோருக்குக் கடைசி மன்னிப்பும் கிடையாது. கதிமோட்சமும் கிடையாது. எனவே ஆன்மீக வியாபாரிகளிடம் தொடர்பு தேவையா
என்பதை நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள்

டிஸ்கி: கடவுளை பிரபஞ்ச ஆற்றலாக இவர் நினைப்பதாக கருதுகிறேன்.
தெய்வங்களும், தேவதைகளும் இருப்பதாக தற்காலிகமாக, இதை படிக்கும்வரை ஒப்புக்கொண்டு பார்த்தால் இவர் சொல்ல வருவது முழுமையாக புரியும்.

தொடரும்....அடுத்து … நல்ஒழுக்க உறவு….

நன்றி; கடவுளைக் கண்டோம்! காட்டவும் வல்லோம்! ஞானதேவபாரதி சுவாமிகள் அவர்களின் நூலில் இருந்து

13 comments:

  1. //கடவுளின் பெயரால் வியாபாரம் செய்வோருக்குக் கடைசி மன்னிப்பும் கிடையாது. கதிமோட்சமும் கிடையாது. எனவே ஆன்மீக வியாபாரிகளிடம் தொடர்பு தேவையா
    என்பதை நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள்
    //

    நாத்திகம் பற்றிப் பேசினால், குறையை விட்டு விட்டு நிறையைக் காண முயற்சியுங்கள் என்று சொல்லுகிறீர்கள். நீங்கள் சொல்வது போல் போலி சாமியார்கள், கடவுள் விற்பனையாளர்கள் குறைவு தானே ஆனால் அதைப் பற்றி ஏன் கண்டு கொள்ள வேண்டும். அவங்க பிழைப்பு செய்துட்டு போறங்க என்று ஏன் விடவில்லை :)

    //கடவுள் என்பது ஒரு நாட்டின் பிரதமர் போல. (இந்தியா அல்ல)
    தெய்வங்கள் என்பன அமைச்சர்கள் போல
    தேவதைகள் என்பன அதிகாரிகள் போல
    //

    இவற்றிற்கான வேறுபாடுகள் திருக்குறளில் நுட்பமாக பதியப்பட்டு இருப்பதாக ஒரு நூலில் படித்தேன்.

    கடவுள் / இறைவன் இதற்கும் தெய்வம் என்பதற்கும் பெரிய வேறுபாடு உண்டு, மனிதன் தெய்வமாகலாம் இறைவனாக முடியாது என்பதாக அந்நூலில் எழுதி இருந்தது.

    ஞானதேவபாரதி சுவாமிகளின் கருத்தும் கிட்ட தட்ட அதே போல் இருக்கிறது

    நன்றி வணக்கம் !

    ReplyDelete
  2. \\நாத்திகம் பற்றிப் பேசினால், குறையை விட்டு விட்டு நிறையைக் காண முயற்சியுங்கள் என்று சொல்லுகிறீர்கள். நீங்கள் சொல்வது போல் போலி சாமியார்கள், கடவுள் விற்பனையாளர்கள் குறைவு தானே ஆனால் அதைப் பற்றி ஏன் கண்டு கொள்ள வேண்டும். அவங்க பிழைப்பு செய்துட்டு போறங்க என்று ஏன் விடவில்லை :)\\

    இப்போதும் அந்த கருத்திலிருந்து மாறுபடவில்லை.
    வகைப்படுத்தும் போது இவர்கள் எந்த பிரிவில் வருகிறார்கள் என்றே சொல்லியிருக்கிறோம்.

    அங்கே போகவேண்டாம் என சொல்லவில்லை. உணர்ந்து கொண்டு போங்கள். உங்கள் பார்வை தெளிவாக இருக்கும். அங்கேயிருந்து உங்களுக்கு தேவையானதை மட்டும் எடுத்துக் கொண்டு திரும்பி வந்து விடுவீர்கள்.

    மாறாக உண்மை உணராமல் சென்று அவர்கள் சொல்வது அனைத்தையும் சரி என நம்பி பின்னொரு நாளில் வருத்தப்படாமல் விழிப்பாக
    இருக்க சொல்கிறேன்.

    பிழைப்பை கெடுக்கவில்லை, விபரமாக இருங்கள், நல்லதை மட்டும் எடுத்துக்கொண்டு திரும்பி விடுங்கள் என்றே சொல்கிறேன்.

    திருவள்ளுவர் , ஞானதேவபாரதி இருவரின் கருத்தும் ஒன்றே. அவர்கள் புரிந்து கொண்ட தளத்தில் இருந்து சொல்லி இருக்கின்றனர். அதை நாம் உணர பொறுமையும் முன்முடிவு இல்லா மனமும் வேண்டும்.

    ReplyDelete
  3. /*இவர்களை நம்பிச் செல்பவர்களுக்குச் சில அற்ப வெற்றிகள் கிடைக்கும். ஆனால் முடிவான ஞானமும் சமாதியும் கிடைக்கவே கிடைக்காது.*/

    அல்ப வெற்றி வேண்டுமா? ஞானமும் சமாதியும் சமாதியும் வேண்டுமா என்று வாக்கெடுப்பு நடத்திப் பாருங்கள். அதிக ஓட்டு அற்ப வெற்றிகளுக்கு தான் விழும்.

    /*கடவுளின் பெயரால் வியாபாரம் செய்வோருக்குக் கடைசி மன்னிப்பும் கிடையாது. கதிமோட்சமும் கிடையாது. எனவே ஆன்மீக வியாபாரிகளிடம் தொடர்பு தேவையா என்பதை நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள்*/

    இதை மக்கள் புரிந்து கொண்டு சரியான முடிவு எடுத்து விட்டால், நாட்டில் நாத்திகர்கள் என்றொரு பிரிவே இருக்காது என்று நினைக்கிறேன்.

    ReplyDelete
  4. \\அல்ப வெற்றி வேண்டுமா? ஞானமும் சமாதியும் சமாதியும் வேண்டுமா என்று வாக்கெடுப்பு நடத்திப் பாருங்கள். அதிக ஓட்டு அற்ப வெற்றிகளுக்கு தான் விழும்.\\

    இதை புரிந்து வைத்திருப்பதால்தான் கொஞ்சமேனும்
    அன்பர்களும், நண்பர்களும் (நானும்),விளங்கிக் கொண்டு விருப்பம்போல் வாழலாம் எனக் கருதியே இது போன்ற கருத்துக்களை இடுகையிடுகிறோம்.

    ReplyDelete
  5. அறிவே தெய்வம் என்று பெயர் வைத்திருகிறீர்கள், நாத்திகன் பகுத்தறிவே மேன்மையானது என்கிறான். இரண்டிற்கும் உள்ள வேறுபாடு என்ன ? அறிவை தெய்வம் என்று ஒப்புக் கொண்டால் நாத்திகன் ஆத்திகன் ஆகிவிடுவானா ? அறிவல்லாது (அறிவு அற்ற என்று புரிந்து கொள்ள வேண்டாம்) உருவ வழிபாடு செய்கிறவர்கள் 'தெய்வத்தை' புரிந்து கொள்ளாதவர்களா ?

    ReplyDelete
  6. \\அறிவே தெய்வம் என்று பெயர் வைத்திருகிறீர்கள், \\


    பெயரில் வருகின்ற அறிவு என்கிற வார்த்தையை மிக
    விரிவான அர்த்தத்தை உள்ளடக்கியதாக பெரியோர் அமைத்திருக்கின்றனர்.

    அறிவு என்பதை அனைத்துக்கும் மூலம்,அனைத்து இயக்கத்துக்கும் காரணம் என்ற பொருளை உள்ளடக்கி
    பார்க்கிறோம்.பேரறிவு என்றே பொருள் கொள்ளலாம்.

    பகுத்தறிவு என்பது பகுத்து அறியும் மனித அறிவு.
    அவ்வளவே.

    //அறிவை தெய்வம் என்று ஒப்புக் கொண்டால் நாத்திகன் ஆத்திகன் ஆகிவிடுவானா//

    ஒப்புக்கொண்டால் ஆத்திகன் அல்ல.அப்படி என்றால் நானே ஆத்திகன்.

    (பேரறிவை)அறிவை உணர்ந்துவிட்டால் அங்கு அவன் ஆத்திகனுமல்ல, நாத்திகனுமல்ல. முழுமனிதன். அவனே தெய்வம்.

    உருவ வழிபாடு, சடங்குகள் ஏற்படுத்திய காரணம் முழு அறிவியல், முழு மனவியல் உள்ளடக்கியது.
    தற்காலத்தில் முழுமையாக அவை விடுபட்டுவிட்டதாலேயே, மேலும் தவறான வழிகளில் போலி ஆன்மீகம் வளரவே,நாத்திகம் உருவாக வேண்டிய அவசியம் ஏற்பட்டது.அந்த நாத்திகத்திற்கு போலி ஆன்மீகம் மட்டுமே தெரியும்.

    அறிவு என்பதற்கு விரிவான பொருள் கூறும்போது
    அதனூடாக அறிவல்லாததாக புரிந்து கொண்டதும் வரும்.
    //உருவ வழிபாடு செய்கிறவர்கள் அனைவருமே'தெய்வத்தை' புரிந்து கொள்ளாதவர்களா ?//

    பெரும்பாலும் என்றுதான் சொல்லமுடியும்.

    உணர்ந்தவர் சிலர் தம்மை வெளிக்காட்டிக் கொள்ளாமல் உருவ வழிபாட்டையே (உணர்ந்து) செய்து கொண்டும் இருக்கலாம்.

    வாழ்த்துக்கள் உங்கள் மெயில் ஐடி என்ன..
    arivhedeivam @gmail.com

    ReplyDelete
  7. ஆழமான விஷயங்களைத் தொடுகிறீர்கள்.அதனால் படித்தவுடன் உடனுக்குடன் கருத்துரை வழங்கும் வழக்கமான பதிவுகள் அல்ல உங்களுடையவை.வாழ்த்துக்கள்,நண்பரே.

    ReplyDelete
  8. \\ஷண்முகப்ரியன் said...

    ஆழமான விஷயங்களைத் தொடுகிறீர்கள்.அதனால் படித்தவுடன் உடனுக்குடன் கருத்துரை வழங்கும் வழக்கமான பதிவுகள் அல்ல உங்களுடையவை.வாழ்த்துக்கள்,நண்பரே.\\

    சாதரணமான விஷயங்கள்தான் நண்பரே,
    பாதை புதிதாக இருப்பதால் சற்றே வித்தியாசமாக தெரிகிறது. போய்ச் சேருமிடம் ஒன்றுதான்

    ReplyDelete
  9. மனிதன் பிறந்த முதல் இறக்கும் வரை அவனுக்குத் துன்பங்கள், சோதனைகள் வருவது தவிர்க்க முடியாது. உலகில் பிறக்கும் புழு முதல் யானை வரை 'இன்று உயிருடன் இருப்பது' என்பது இன்றியமையாத ஒன்று.

    மனிதன் தன் பகுத்தறிவினால்(பெரியார் வகை அல்ல) 'இன்று பிழைக்க' முயல்கிறான். எப்போது அவனது பகுத்தறிவினால் பிழைக்கும் முயற்சி தோல்வி அடைகிறதோ அப்போது அவனையும் மீறி தன்னை விட ஒரு பெரிய சக்தி தன்னைக் காப்பாற்றும் என்ற நம்பிக்கை வளர்கிறது.

    அதுவே பிற்காலத்தில் கடவுள் நம்பிக்கையாகப் பரிணமித்திருக்கிறது. தற்காலத்தில் மனிதன் அறிவியல் வளர்ச்சியின் உச்ச கட்டத்தில் இருக்கிறான். அதனால் அவனுக்கு 'இன்று பிழைக்கும்' வழி அறிவியல் மூலமாக சற்று எளிதாகப் படுகிறது.

    எனவே கடவுளின் துணை அவனுக்குத் தேவையில்லாமல் போகிறது.

    உலக மதங்கள் தோன்றிய விதமும், அவையே இன்று அழியக் கூடிய நிலையில் மாறி வரும் விதமும் அறிவியலை ஒட்டி அமைந்திருக்கிறது.

    நாளையே உலகத்தில் இயற்கை வளங்கள் (கச்சா எண்ணெய் வற்றிப் போகுதல்) இல்லாமல் போனாலும், ஒரு 10 ஆண்டுகளுக்கு சரியான மழை பொழியாமல் போனாலும், மனிதனுக்குக் கடவுள் நம்பிக்கை தானாகவே வரும்.

    ReplyDelete
  10. கடவுளின் பெயரால் வியாபாரம் செய்யும் மக்களை மாக்கள் என்பதே சரி....
    சமீபத்தில் படித்த கவிதை...


    ”மனிதன் செய்த
    பாவப் புதையல்கள்
    கோயில் உண்டியல்கள்!”

    ReplyDelete
  11. கடவுள் நம்பிக்கை வைக்கும் முன் கடவுள் எது, அது எப்படி நமக்கு உதவும் என அறிந்து வாழ்வதே முழுமையானதாகும்

    கருத்துக்கு நன்றி, வாழ்த்துக்கள்.,

    ReplyDelete
  12. \\முனைவர்.இரா.குணசீலன் said...

    கடவுளின் பெயரால் வியாபாரம் செய்யும் மக்களை மாக்கள் என்பதே சரி....
    சமீபத்தில் படித்த கவிதை...


    ”மனிதன் செய்த
    பாவப் புதையல்கள்
    கோயில் உண்டியல்கள்..!\\

    அருமையான கவிதை, பாவம் செய்யாதிருக்க கடவுள்நிலை அறிந்த வாழ்வு வேண்டும்.

    முதல் வருகைக்கும், கருத்துக்கும் நன்றி முனைவர் அவர்களே..!

    ReplyDelete
  13. சிவசிவ சிவாயவசி
    அன்பரே தவயோகி அவர்களின் கட்டுரைகளை வெளியிட்டதற்கு மிக்க நன்றி மற்றும் அவரின் புனிதத்தையும், எதையும் எதிர்பாராத தன்மையையும் புரிந்துகொண்டதற்கும் நன்றிகள். நான் சுவாமிகளின் அனுமதிபெற்று அவரின் கட்டுரைகளை http://thavayogi.blogspot.com/ என்ற வலைத்தளத்தில் வெளியிட்டு வருகிறோம். எனவே அவரின் கட்டுரைகளைப் படித்துப் பயன்பெற வேண்டுகிறோம். உங்கள் நண்பர்களுக்கும் அறிமுகம் செய்துவைத்தாள் அவர்களும் பயனடைவர்.

    நன்றி.
    அன்புடன் ச.கார்த்திகேயன்.

    ReplyDelete

மனசுல தோணினத சொல்லிட்டு போங்க :)