"மூச்சைக் கவனி, முழுவிழிப்புநிலையில் இரு!" புத்தர்

Wednesday, March 11, 2009

சொன்னபடி கேளு, மக்கர் பண்ணாதே

மனதளவில் நாம் தனிஆள் அல்ல. மிகப் பெரிய கூட்டம்.

நம் பெற்றோர், மனைவி--(சிலருக்கு மனைவிகள்) கணவன், காதலி,பிள்ளைகள், சொந்த பந்தங்கள், சுற்றத்தார், சுற்றியுள்ள குடித்தனக்காரர்கள்,மேலதிகாரி, முதலாளி, சகதொழிலாளி, நண்பர்கள், விரோதிகள், நமக்குப் பிடித்த மற்றும் பிடிக்காத அரசியல் தலைவர்கள், மதத் தலைவர்கள், கடன்காரர்கள்,எழுத்தாளர்கள், நடிகர்கள்,நடிகைகள் ... இப்படி பல்லாயிரக் கணக்கானோர்கள் நம் மனதினுள் பேசிக் கொண்டே இருக்கிறார்கள்.

இப்படி தொண்ணூறு சதவீதம் மற்றவர்களின் ஆக்கிரமிப்பு. போனால் போகிறது என்று பத்து சதவீதமே நமக்கு.

முதலில், மனதில் உள்ள இந்த சந்தைகடை இரைச்சலை நிறுத்தவேண்டும்.

இதில் நம் குரல் எங்கே? எது? என கண்டுபிடிக்க வேண்டும்.

நம் மனதிற்கும் நமக்குமிடையே நல்லிணக்கம் ஏற்படுத்திக் கொள்ள,நம் மனம் நம்மைப் பற்றி உண்மை சொல்ல அனுமதிக்கவேண்டும். அதை ஏற்றுக் கொள்ளும் துணிவையும் வளர்த்துக் கொள்ள வேண்டும்.

உதாரணத்திற்கு, ஓர் அழகிய இளம்பெண்ணும், ஆணும் கைகோர்த்துக்கொண்டு மகிழ்ச்சியுடன் சிரித்துக் கொண்டு தெருவில் செல்கிறார்கள் என வைத்துக்கொள்வோம்.
நம் மனம் அவர்களை பார்த்தவுடன் அவர்களை வெறுக்கும்; வாய்ப்பிருந்தால் வெளிப்படையாக கண்டிக்கவோ, கிண்டல் செய்யவோ தூண்டும்.

இதற்கு என்ன காரணம்?

உண்மையான காரணம் “இவ்வளவு அழகான பெண்ணுடன் இவன் சுற்றுகிறானே... நம்மால் முடியவில்லையே.... என்ற ஆதங்கமும் பொறாமையுமாகவுமே இருக்கும். ஆனால் மனம் வெளியே காட்டும் நடிப்பு, “இப்படி அலைந்தால் சமுதாயம் என்ன ஆகும்? ஒழுக்கம் கெட்டு விடாதா? என்பது போன்ற போலி சமுதாய அக்கறையாக இருக்கும்.

இது போன்ற உண்மைகளை உணர்ந்தால், உரிய பயிற்சிகளை மேற்கொண்டு மனதை செம்மைப்படுத்தி, சிறந்த நோக்கத்தோடு செயல் புரிய வைக்கமுடியும்.

எனவே, நம் மனம், நம்மிடம் உண்மை பேச வசதியாக இரைச்சலை குறைக்க வேண்டும். மனதோடு இணக்கத்தை ஏற்படுத்திக் கொள்ளவேண்டும்.இதற்கு பல்வேறான எண்ணக் குறுக்கீடுகளை தடுக்கவேண்டும். அதற்கு எண்ணங்களை பின்னால் விரட்டிப் பழக வேண்டும்.

ஏதோ ஒன்றை படிக்கிறோம், அல்லது வேலை அல்லது பயிற்சி செய்கிறோம்; மனம் அதை விட்டு விலகி வேறு எங்கோ போய்விட்டது என வைத்துக் கொள்வோம். உடனே நம் சிந்தனையைப் பின்னோக்கித் திருப்ப வேண்டும்.

எந்த இடத்தில் விலகியது? எந்த குறுக்கீட்டால் விலகியது? என்பதை கண்டுபிடிக்க வேண்டும். கண்டு பிடித்தபின் பயனுள்ள காரணத்திற்காக விலகியிருந்தால் பாராட்டிவிட்டு, மீண்டும் பழைய வேலையில் ஈடுபடுத்தவேண்டும். தேவையற்ற காரணத்திற்காக விலகியிருந்தால், இப்படி போகாதே என கண்டித்துவிட்டு, மீண்டும் வேலையில் தொடர்ந்து ஈடுபடுத்தவேண்டும்.

இப்படி தொடர்ந்து, விடாமல் கவனிக்கத் தொடங்கினால், நம் மனதினுள் மிகப் பெரிய மாற்றங்கள் நிகழும்.

கண்காணிப்புடன் இருக்கும் முதலாளியிடம், வேலைக்காரன் ஒழுங்காக பணியாற்றுவது போல் மனம் விலகி சென்று அலையும் குறைந்து போகும். நம் கட்டளைக்கு கீழ்படிய ஆரம்பிக்கும்.

முடிவில் மனம் ஒரு வேலையிலிருந்து தப்பித்துச் செல்லும் வினாடியிலேயே,அதை கையுங் களவுமாகக் கண்டு பிடிக்கும் விழிப்புணர்வு alertness, நமக்கு வந்துவிடும். அப்புறம் இந்த சந்தை இரைச்சல் தானாகக் குறைந்துவிடும்.

நடப்பில் மட்டும் மனம் ஈடுபடும்.அமைதி ஆட்கொள்ளும். ஆற்றல் வளரும்.
முயற்சி செய்து பாருங்களேன்.



நன்றி; நினைவாற்றல் வளர...புத்தகத்திலிருந்து
நன்றி:கவனகர் திருக்குறள் இராம.கனகசுப்புரத்தினம்.

2 comments:

  1. வருக mahe அவர்களே,
    தொடர்ந்து உங்கள் கருத்துக்களை தெரிவியுங்கள்.
    வாழ்த்துக்கள் நன்றி

    ReplyDelete
  2. மனதைக் கட்டுப்படுத்த வேண்டும் - சிந்தனைகளை நல்ல விதத்தில் அமைக்க வேண்டும்

    நல்ல கருத்து - பகிர்ந்தமைக்கு நன்றி சிவசு

    நல்வாழ்த்துகள்

    ReplyDelete

மனசுல தோணினத சொல்லிட்டு போங்க :)