"மூச்சைக் கவனி, முழுவிழிப்புநிலையில் இரு!" புத்தர்

Saturday, March 28, 2009

தீ வெச்சு எரிச்சுடுவேன்..ஜாக்கிரதை

திருப்பூரில் பனியன் கம்பெனிகள் ஏராளம். பெரிய கம்பெனிகளில் செக்யூரிட்டி, அலுவலக கட்டுப்பாடுகள் அதிகம் இருக்கும். ஆனல் சிறிய கம்பெனிகளில் இவை ஏதும் அதிக அளவில் இருக்காது.

அதில் ஒன்று, வேலை நேரத்தில் பணியாளர்களை, வெளிஆட்கள் சந்திப்பது என்பது சிறிய கம்பெனிகளில் சாத்தியமான நிகழ்வு.

நண்பரின் நிறுவனத்திற்கு ஒருநாள் மதியம் சென்றுவிட்டு,பின்னர் வெளியே கிளம்பினேன். தரைத்தளம்,முதல் தளம் கொண்டது அக் கட்டிடம். வெளியே ஒரு நடுத்தர வயது திடகாத்திரமான, பெண் ஒருவர் , முதல் தளத்தில் உள்ள பெண் வேலையாளை பார்க்க வந்திருக்கிறார்.

அவர் கீழே நின்று கொண்டு, “என்னடா இது,கட்டிடத்தை இப்படி கட்டி வச்சிருக்காங்க.. நம்மால மேலவேற ஏறமுடியாதே..மூச்சு வாங்குமே..அந்தப்பெண்ணை கீழ இறங்கி வரச்சொல்லு..” என்று உயரே பார்த்து சப்தமிட்டுக் கொண்டு இருந்தார்...

இது நான் வெளியே கிளம்பிய தருணத்தில் கவனித்தது.

திரும்ப மாலைவேளையில் நண்பரின் கம்பெனிக்கு சென்றேன். அவர் முதல்தளத்தின் மொட்டைமாடியில் தண்ணீர் தொட்டியில் ஏற்பட்ட கசிவை சரிசெய்யும் பணியில் ப்ளம்பருடன் ஈடுபட்டிருந்தார்.

கொஞ்சநேரம் கழித்து, கீழிருந்து மேனேஜர், ஒரு பெண், முதலாளியை கட்டாயம் பார்க்கவேண்டும் என வற்புறுத்தியதாக மேலேயே அழைத்து வந்துவிட்டார். அந்தப் பெண் மதியம் நான் பார்த்த அதே பெண். யாரும்மா, என்ன வேணும்? என்று நண்பர் கேட்டவுடன்...

“கீழ இருக்கிறவனை ஒழுங்கா இருக்கச் சொல்லு, யாரவன், வேலைக்கு இருக்கிரானா, வாடகைக்கு இருக்கிரானா, தொலச்சுப்போடுவேன், போலிஸ்ல புடிச்சு கொடுத்திருவேன், ..”என்று கத்த ஆரம்பித்துவிட்டார்.

“சரிம்மா, என்ன என்று விசாரிக்கிறேன்” என நண்பர் சொல்லச்சொல்ல, “போலீசுக்கு போவேன்’" என அந்த பெண் மீண்டும் சொல்ல, ”சரி போய்க்கோம்மா” என்று நண்பர் சொன்னார்.

அதற்கு அந்த பெண் ”தீ வைத்து எரிச்சிடுவேன், கம்பெனியே காணாமல்
போயிடும், ஜாக்கிரதை, அத்தனை பொருளையும் தீ வைத்து கொளுத்திவிடுவேன்” என்று சத்தமிட்டார்.

அருகில் இருந்த நான் அதிர்ந்தேன். நண்பரைப் பார்த்தேன்.

கட்டிடத்தின் உரிமையாளரான நண்பரோ, சற்றும் அசராமல் ”எங்கே கடைசியாக சொன்னதை இன்னொருமுறை சொல்லு” என்றார்.

அந்தப்பெண் இந்த அணுகுமுறையை எதிர்பார்க்கவில்லை. ”என்னோடஇடத்தில் வந்து என் கட்டிடத்தையே தீ வைச்சிருவேன்னு சொல்றியா? பொம்பளைங்கிறதால தப்பிச்சிட்ட,” என்று நண்பர் குரலை உயர்த்த அந்தப்பெண் சட்டென கீழிறங்கி சென்றுவிட்டார்.

பின்னர் இதைப்பற்றி விசாரித்தேன். மதியம் அந்த பெண் சத்தமிட்டுக் கொண்டிருந்தபோது
யாரைப் பார்க்க வந்தாரோ, அந்த பெண் பணியாளரிடம், உதவிமேனேஜர் அந்தப் பொம்பிளையை சற்று பொறுப்புடன் நடந்து கொள்ளுமாறு வலியுறுத்தியுள்ளார்.

இந்த விசயத்தை ஏடாகூடமாக அந்தப் பெண்ணிடம், இந்தப் பெண் பணியாளர்
சொல்லிவிட்டார். அதனால்தான் மாலை அந்த சம்பவம் நடந்தது.

இப்போ சில கேள்விகள் எனக்குள்...

ஒருபெண், ஒரு நிறுவனத்தில் உள்ளே புகுந்து, கட்டிட உரிமையாளரிடமே தீ வைத்து விடுவேன் என மிரட்டியது திரைப்படத்தில் கூட வந்திருக்குமா என்பது சந்தேகமே.

இந்த பெண் இப்படி பேசுமுன் யோசித்துத்தான் பேசுகிறாரா?

பேசினால் அதன் பின் என்ன விளைவு வரும் என உணர்ந்தாரா?

மதியம் படி ஏறமுடியவில்லை என்றவர் இரண்டுமாடி ஏறியது எப்படி?

மதியம் பேசியது அலட்டலா?

ஒரு நிறுவனத்தில் வந்து ஒருவரை சந்திக்கவேண்டும் என்றால் சுய ஒழுங்கு இல்லாமல் இப்படி எப்படி நடந்துகொள்ளமுடிகிறது?

இவரது குழந்தைகளை எப்படி வளர்த்துவார்? அவர்களின் எதிர்காலம் என்ன?

ஒருவேளை வருங்காலத்தில் மருமகள் எடுத்தால் அவளின் நிலை என்ன?

இதில் இரண்டு மகளிர் குழுவுக்கு தலைவியாம். அந்த மகளிர் எப்படி மேம்படுவர்?

ஒருவேளை ஏதேனும் அரசியல்’தொடர்பு’ இருந்தால்கூட இப்படியெல்லாம் நடந்து கொள்ளலாமா?



இதன் தொடர்ச்சியாக இனிமேல் யாரும் அலுவலக நேரத்தில் சந்திக்க
அனுமதித்து இருந்ததை ரத்து செய்துவிட்டார் நண்பர். ”கொடுக்கிற சலுகைகளை
எப்படி தவறாக மாறி, நமக்கு இடைஞ்சலாகிறது பாருங்கள்” என்றார்.

பெண் பணியாளரின் கூடாநட்பும், சாதரண விசயத்தை பெரிது படுத்திய குணமும், இதர தொழிலாளர்களுக்கும் இடைஞ்சலையே தந்தது.

சாதரண விசயத்தை பெரிதுபடுத்தும் குணம் நம்மிடையே இருந்தால்
தூரப்போடுவோமே. எல்லோருக்கும் நலமாக அமையும்

7 comments:

  1. //இதன் தொடர்ச்சியாக இனிமேல் யாரும் அலுவலக நேரத்தில் சந்திக்க
    அனுமதித்து இருந்ததை ரத்து செய்துவிட்டார் நண்பர். ”கொடுக்கிற சலுகைகளை
    எப்படி தவறாக மாறி, நமக்கு இடைஞ்சலாகிறது பாருங்கள்” என்றார்.//

    அவர் இடம் கொடுத்தது அவருகே எதிராக அமைந்திருக்கிறது, உணர்ந்து கொண்டு
    உங்கள் நண்பர் எடுத்த நடவடிக்கை பாராட்டத்தக்கது.

    //ஒருபெண், ஒரு நிறுவனத்தில் உள்ளே புகுந்து, கட்டிட உரிமையாளரிடமே தீ வைத்து விடுவேன் என மிரட்டியது திரைப்படத்தில் கூட வந்திருக்குமா என்பது சந்தேகமே.//

    தவறு செய்பவர்களின் ஆண் பெண் என்றெல்லாம் பால் வேறுபாடு கிடையாது, தற்கொலை படையில் செயல்படும் பெண்களும் இருக்கிறார்கள். ஒரு படத்தில் "சொர்ணாக்கா"வை பார்த்திர்ப்பீர்கள்.

    //சாதரண விசயத்தை பெரிதுபடுத்தும் குணம் நம்மிடையே இருந்தால்
    தூரப்போடுவோமே. எல்லோருக்கும் நலமாக அமையும்
    //

    மிகச் சரி, பிறர் தனது செயலை கவனிக்க வேண்டும், அல்லது தன்னை பலர் கவனிக்க வேண்டும் என்று எண்ணாதோர் சிறிய விசயத்தை பெரிதுபடுத்த மாட்டார்கள்

    ReplyDelete
  2. \\தவறு செய்பவர்களின் ஆண் பெண் என்றெல்லாம் பால் வேறுபாடு கிடையாது,\\

    நான் இதுவரை ஆண்கள் அதிகமாகவும், பெண்கள் குறைவாகவும் பகிங்கிரமாக தவறு செய்வார்கள் என் நினைத்திருந்தேன்..
    || தற்கொலை படையில் செயல்படும் பெண்களும் இருக்கிறார்கள்.||

    இவர்கள் நோக்கம் பொதுவானதாக, அவர்களைப் பொறுத்தவரை முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கலாம். ஆனால் மேற்கண்ட பெண்களுக்கு சாதரண, அற்ப காரணகளுக்காகவே இந்த சண்டை என நினைக்கிறேன்.தவிர்த்திருக்க வேண்டியது.

    \\ஒரு படத்தில் "சொர்ணாக்கா"வை பார்த்திர்ப்பீர்கள்.\\
    நிழல் நிஜமானதை அன்றுதான் பார்த்தேன்

    நன்றி வாழ்த்துக்கள் கோவியாரே....

    ReplyDelete
  3. தமிளிஷ்ல வோட்டு போட்டதுக்கு மிக்க நன்றி
    அப்படியே இந்த பதிவை படித்து பிடித்தல் வோட்ட போடுங்க
    http://www.tamilish.com/tamvote.php?url=http://sureshstories.blogspot.com/2009/03/blog-post_02.html

    ReplyDelete
  4. //சாதரண விசயத்தை பெரிதுபடுத்தும் குணம் நம்மிடையே இருந்தால்
    தூரப்போடுவோமே. எல்லோருக்கும் நலமாக அமையும்//
    அருமை
    நண்பரே, உங்க பதிவு மிகவும் அருமை வோட்டும் போட்டாச்சு

    ReplyDelete
  5. தான் பிறரால் கவனிக்க பட வேண்டும் என்பது சாதாரண மனித எண்ணம் தான், அதனால் என்னை பொறுத்தவரை தாழ்வு மனப்பான்மை உடைய மனிதர்களின் அகங்காரம் தான் இதை போன்ற செயல்களை செய்ய தூண்டுகிறது.

    \\பெண் பணியாளரின் கூடாநட்பும், சாதரண விசயத்தை பெரிது படுத்திய குணமும், இதர தொழிலாளர்களுக்கும் இடைஞ்சலையே தந்தது\\

    பொதுநல பார்வை இல்லாததே இதற்க்கு காரணம் என்பது என்னுடைய கருத்து.

    பதிவு சிறியதாக இருந்தாலும், சொல்ல வேண்டிய செய்தியை அழகாக சொல்லபட்டுள்ளது. மூர்த்தி சிறிதேனினும் கீர்த்தி பெரியது.

    ReplyDelete
  6. வருக Suresh , கருத்துக்கு நன்றி

    வாழ்த்துக்கள்

    ReplyDelete
  7. தன்னை சுற்றி உள்ளவர்களின் நலனைப் பற்றி சிறிதும்
    கவலைப்படவில்லையே என்பதே என் ஆதங்கம்.

    வருகைக்கு நன்றி,வாழ்த்துக்கள் விஷ்ணு.

    ReplyDelete

மனசுல தோணினத சொல்லிட்டு போங்க :)