"மூச்சைக் கவனி, முழுவிழிப்புநிலையில் இரு!" புத்தர்

Tuesday, September 21, 2010

விழிப்புநிலை பெற எளிதான வழி..

விழிப்புநிலை என்பது பயமற்ற விழிப்புணர்வு என்றால் அதை எப்படி அடைவது? அதன் பலன் என்ன? அது வாழ்க்கைக்கு எல்லாவிதத்திலும் எந்த அளவு உதவும்?..

முதலில் பயம் என்பது என்ன? நமது உடல், உயிர், உடமைகள், உறவுகள் இவைகளுக்கு ஏதேனும் பாதிப்பு வந்துவிட்டால் என்ன செய்வது என்கிற உணர்வுதான் பயம். நிம்மதியாக, இன்பமாக உயிர் வாழ தடை வந்துவிட்டால் என்ன செய்வது என்கிற உணர்வுதான் பயம்.

சரி இந்த பயம் போக என்ன செய்யவேண்டும்?, போதும் போதும் என்கிற வரை பணம் சேர்ந்தால் வாழ்க்கை குறித்த பயம் போய் நிம்மதி வருமா என்றால், பணம் சேரச்சேர அதை இழந்துவிடுவோமோ அல்லது அதனால் உயிருக்கு ஆபத்து ஏற்படுமோ என்கிற பயம்தான் அதிகம் ஆகிவிடும்:)

நம் வாழ்வில் நடைபெறும், குறுக்கிடும் நபர்கள் நிகழ்வுகள், குறித்தான நமது பார்வையே நமக்கு பயத்தைத் தருகிறது.

காலையில் ஒரு குடும்பத் தலைவி பேப்பர் படிக்கிறாள். அதில் தனியே இருந்த பெண்ணிடம் குடிக்கத் தண்ணீர் கேட்ட வயதான நபர், சட்டென உள்ளே புகுந்து தாலிக்கொடியைப் பறித்துக்கொண்டு தப்பி ஓட்டம் என்கிறது செய்தி. இதைப்படித்து விட்டு பகலில் வேலைகள் அனைத்தையும் முடித்துவிட்டு ஓய்வில் இருக்கும்போது, வெளியே யாரோ அழைக்கிற சப்தம், எட்டிப்பார்த்தால் வயதான நபர் தண்ணீர் வேண்டும் என்கிறார். உடனே மனதில் தோன்றுவது பயம். அடுத்து பயம் கலந்த விழிப்புணர்வு, தண்ணீர் கொடுக்கலாமா வேண்டாமா என்ற குழப்பம், சரி வம்பை விலைக்கு வாங்க வேண்டாம். ”இல்லை போ” அவ்வளவுதான். இது விழிப்புணர்வு:) ஆனால் அவர் சரியான நபராகக்கூட இருப்பார்.:)

மனம் என்பது இதுதான். பயத்தைத் தோற்றுவித்துக்கொண்டே இருக்கும். காரணம் நம் உணர்வுகள் அனைத்தும் மனதிற்கு அடிமையாக இருக்கிறது. மனதின் கட்டுப்பாட்டில் நாம் இருக்கிறோம். ஆகவே தன்னை புத்திசாலியாக காட்டிக்கொண்டு கதவை தாழிடச் சொல்கிறது. தண்ணீர் இல்லை எனச் சொல்லவைக்கிறது.

அப்படியானால் பயம் அகல என்ன வழி? பயம் அகன்றால் மனம் என்ன செய்யும்?

எது குறித்த பயம் வந்தபோதும் அதைத் தீர்க்கவேண்டிய தீர்வு வெளியே இருந்தால் அது முழுமையான தீர்வாகாது. தீர்க்காது:)

நமக்குள்ளிருந்து பயம் வரும்போது தீர்வும் நமக்குள்ளேதானே இருக்கவேண்டும். அது என்ன அப்படின்னு பார்ப்போம்.

மனம் என்பதற்கு பலவிளக்கங்கள் பக்கம் பக்கமாக கொடுத்துக்கொண்டே போகலாம். பயம்தான் மனம் என்றும் சொல்லலாம். மனதோடு நெருங்கிய தொடர்பு நம்முள் என்ன இருக்கிறது என பார்த்தால் அது வேறொன்றுமில்லை,

மூச்சுதான்:)

மூச்சை என்றாவது கவனித்தது உண்டா? அதுபாட்டுக்கு தன்னிச்சையாக ஓடிக்கொண்டு இருக்கும். நாம் விடும் மூச்சு சரியான முறையில் விடுகிறோமா என்று நமக்குத்தெரியாது அது என்ன விளைவுகளை ஏற்படுத்தும் எனவும் தெரியாது.!

செல்போனில் ஸ்டாப் வாட்ச் இருந்தால் சரி பாருங்கள். நம் மூச்சு சாதரண சமயங்களில் ஒரு நிமிடத்திற்கு சுமாராக 30 முதல் 40 வரையில் இழுத்துவிடுவோம். உங்களுக்கு எத்தனை மூச்சு ஓடுகிறது என குறித்து வைத்துக்கொள்ளுங்கள்.

பிறகு தம் கட்டாமல், எந்த கஷ்டமும் இல்லாமல் முடிந்தவரை மெதுவாக, மிகமிகமெதுவாக மூச்சை உள்ளிழுப்பது, அதேபோல் மூச்சை வெளிவிடுவது என முயற்சித்துப் பாருங்கள். இதை விளையாட்டாக எந்த சீரியஸ்சும் இல்லாமல் இயல்பாக மூச்சின் மீதே கவனம வைத்துச் செய்யுங்கள். இதெற்கென தனியாக நேரம் ஒதுக்கவேண்டாம்:)

இந்த முயற்சியை தொடர்முயற்சியாக அமைத்துக்கொள்ளுங்கள். ஒரு மணிநேரம் கழித்துப்பாருங்கள். நிமிடத்திற்கு 10 தடவைக்கும் கீழே மூச்சை இழுத்துவிடுவது என இறங்கி இருக்கும்.

உடனடியாக உங்களுக்கு எந்த மாற்றமும் தெரியாது. இதைத் தொடர்ச்சியாக ஒருநாள் முழுவதும் மிகமெதுவான மூச்சாக இழுத்துவிட்டுப் பழகுங்கள். ஆரம்பத்தில் சிரமமாக இருக்கும். ஒரு நிமிடத்திற்குள் மூச்சு தடம் மாறிவிடும், தொடர்முயற்சிதான் இங்கே முக்கியம். மூச்சை கவனிப்பதை விட்டுவிட்டேன் என்கிற நினைவு வந்தவுடன் மீண்டும் தொடருங்கள்.கவனம சிதறும். வேலை செய்தால் மூச்சைக் கவனிக்க முடியாது, மூச்சைக் கவனித்தால் வேலை செய்ய முடியாது:)) விடாது தொடருங்கள்.

அடுத்தநாள் இந்த மூச்சு மெதுவாக இழுத்துவிடுவதில் எந்த சிரமமும் இருக்காது. இயல்பாகிவிடும். வேலைகளைச் செய்து கொண்டே பேசும் நேரம் தவிர மற்ற எந்நேரமும் மூச்சு கட்டுக்குள் இருக்கும்.

இதன் பலனாக உடல்ரீதியான மாற்றங்களை எளிதில் அனுபவிக்க முடியும். தூக்கம் நன்குவரும். தேவையில்லாத வலிகள் பறந்துவிடும், உடல் சர்வீஸ் பண்ணின மாதிரி இருக்கும்.

இப்போது மனதை கவனியுங்கள். அது கழுவிபோட்ட மாதிரி, புரட்டிப்போட்ட மாதிரி இருக்கும். அதுனுள் எழும் எண்ணங்களைத் தொடர்ந்து கவனியுங்கள். நேற்றைய எண்ணத்திற்கும் இன்றைய எண்ணத்திற்கும் என்ன வித்தியாசம். கூர்ந்து கவனியுங்கள்.

நேற்று இருந்த கோபம் எந்த அளவு தீவிரமாக இருந்தது. அதே கோபம் இன்று எப்படி வருகிறது?. நேற்று இருந்த சோம்பேறித்தனம் இன்று இருக்கிறதா? நேற்று இருந்த கவலை இன்று இருக்கிறதா என்று கவனியுங்கள்.

வெளியே எதுவும் மாறி இருக்காது. அப்படியேதான் இருக்கும். ஆனால் நம் மனம் முழுமையாக மாறி இருக்கும். மனம் அமைதி நிலைக்கு வந்து இருக்கும். எதையும் உணர்ந்து எதிர்கொள்ளும் வலிமை வந்திருக்கும்.

தொடர்ந்து நீங்கள் விரும்பி மூச்சை மெதுவாக இழுத்து விடும் நிலை மாறி, என்னுடைய இயல்பான மூச்சே நிமிடத்திற்கு 5 மூச்சுக்கு கீழ் என மாறும்போது மனம் உங்களது முழுக்கட்டுப்பாட்டிற்கு வந்திருக்கும். எந்த எண்ணங்களும் உங்களது அனுமதிக்குப் பின்னர்தான் செயல்படும்.

அதோ அழகான பெண் போறா, பார்க்கச் சொன்னா பார்க்கிறேன், வேண்டாம்னா கம்முனு இருக்கிறேன் சொல்லுங்க பாஸ், என மனம் வாலைச் சுருட்டிக்கொண்டு நம்மிடம் அனுமதி கேட்கும். ஆனால் முன்னரோ மனம் தானாக பார்த்து ரசித்து..... திரும்பி இருக்கும்.

இப்போது இவ்வளவுநாள் மனதின் பிடியில் சிக்கியிருந்த நீங்கள் மூச்சை மாற்றியதன் மூலம் மனதை உங்கள் வசமாக்கிவிட்டீர்கள். இதுதான் விழிப்புநிலை. ஆனால் இதுவேதான் விழிப்புநிலை என முடிவு செய்துவிட வேண்டாம்:)

இது ஒரு ஆரம்பநிலை L.K.G மாதிரி:)) ஆனால் பலபேருக்கும் இந்த மூச்சுக்கும் மனதிற்கும் இருக்கும் தொடர்பு ஏற்கனவே தெரிந்தாலும் அதிக முக்கியத்துவம் கொடுப்பதில்லை. பயிற்சியின்போது கவனிக்கிறார்கள். பின்னர் கவனிக்கவில்லை என்பதை உணர்வதே இல்லை. விளைவு பயிற்சியில் தொய்வு. பலன் இல்லை.

இதை முதலில் செயலுக்கு கொண்டு வாருங்கள். இவ்வுலக வாழ்க்கையில் ஏற்படும் மாற்றங்களையே இந்த இடுகையில் பார்த்திருக்கிறோம். அகவாழ்வில், நமக்குள் ஏற்படும் மாற்றங்களை எழுதமுடியாது. அனுபவித்தால்தான் தெரியும். காரணம் ஒருவ்ருக்கொருவர் அது மாறுபடும்.

அதன்பின்னர் நீங்கள் படித்த, தெரிந்துகொண்ட மனம் சம்பந்தமான விளக்கங்கள் எல்லாம் தன்னால் ஒரு கோர்வையாக இணைந்து தெளிவாகிவிடும். கேள்விகள் எழாத நிலை உங்கள் மனதில் வந்துவிட்டால் நீங்கள் விழிப்புநிலையில் இருக்கிறீர்கள் என்று பொருள். பயமற்ற எதற்கும் தயார் என்கிற நிலை உங்கள் உடலிலும் மனதிலும் வந்துவிட்டால் விழிப்புநிலையில் இருக்கிறீர்கள் என்று பொருள்.

இந்த மனநிலை உங்களுக்கு மாறாமல் இருக்குமானால் வாழ்வில் நீங்கள் செய்யும் செயல் ஒவ்வொன்றிலும் பாரபட்சம் இன்றி செயல்படும் நடுநிலை மனம் எளிதில் வாய்க்கும். அப்புறம் எங்கிருந்து குடும்பத்தில் சண்டைவரும்.? அலுவலகத்தில் முரண்பாடு வரும்?. சாதி எங்கே வரும்? மதம் எங்கே வரும்? பிறர் வந்து உங்களுக்கு எதுவும் சொல்லவேண்டியதே இல்லை. அதுவே உள்ளிருந்து வழிகாட்டும்.

இந்த இடுகையை படித்துவிட்டு மூச்சைக் கவனித்து நாளைக்கும் வந்து பின்னூட்டமிட்டு பாராட்டுங்கள். உங்கள் அனுபவத்தை ஆர்வத்துடன் வரவேற்கிறேன்.

வாழ்த்துகளுடன்
நிகழ்காலத்தில் சிவா

19 comments:

 1. பதிவு ரொம்ப நல்லாயிருக்கு. இது கிட்டத்தட்ட ஒரு தியானம் மாதிரி. தொடர்ந்து எழுதுங்கள்!

  ReplyDelete
 2. //நமக்குள்ளிருந்து பயம் வரும்போது தீர்வும் நமக்குள்ளேதானே இருக்கவேண்டும். அது என்ன அப்படின்னு பார்ப்போம்.//

  அருமையான வரிகள் நண்பரே! இது தான் தியானத்தின் மூலம். எல்லா உணர்ச்சிகளும் மனத்திலிருந்தே தோன்றுகிறது என்பதே தியானத்தின் தத்துவம். அருமையாக சொல்கிறீர்கள். வாழ்த்துக்கள் + பாராட்டுக்கள்

  ReplyDelete
 3. \\கேள்விகள் எழாத நிலை உங்கள் மனதில் வந்துவிட்டால்\\

  மனம் என்ற ஒன்று உள்ளவரையில் கேள்விகள் எழாத நிலை என்பது இல்லையே??!!!

  \\வேலை செய்தால் மூச்சைக் கவனிக்க முடியாது, மூச்சைக் கவனித்தால் வேலை செய்ய முடியாது\\

  அப்ப, மூச்சைக் கவனிப்பதே வேலையாகச் செய்தால் மாத்திரமே
  தீர்வு.....அப்படித்தானே?!!!!!

  அருமையான பதிவு தொடருங்கள்....

  ReplyDelete
 4. நண்பரே! நீங்கள் கூறுவது புத்தர் கற்பித்த தியான முறையைப் போன்று உள்ளது. அந்த தியானத்தின் பெயர் ஆனாபானா தியான முறை. பாலி மொழியில் ஆனாபானா என்றால் வருகின்ற மூச்சு, செல்கின்ற மூச்சு என்று அர்த்தம்.

  அது எவ்வாறு செய்வதென்றால், உங்களை தொந்தரவு செய்யாத இடத்தில் அமர்ந்துக் கொண்டு கண்களை மூடி, முதுகை நேராக வைத்துக்கொண்டு, ஆனால் உடலை தளர்வாக எந்த ஒரு இறுக்கமும் இல்லாமல் வைத்து, உங்களின் மூச்சை காற்றை கவனிக்க பழகுங்கள்.

  உள்ளே செல்லும் மூச்சு, வெளியே செல்லும் மூச்சு, மூச்சின் மீது வெறுமனே கவனம் செலுத்துங்கள். அதன் போக்குக்கு விட்டுவிடுங்கள். அதை கட்டுப் படுத்தாதீர்கள்.

  (நீங்கள் மூச்சை மெதுவாக இழுத்து விட சொல்லிகின்றீர்கள். நீங்கள் சொன்னது வேறு விதமான தியான முறையாக இருக்கும் என்றே நினைக்கின்றேன்)

  முதலில் எந்த ஒரு சிந்தனைகளும் இல்லாமல் மூச்சுக்காற்றை மட்டுமே கவனிப்பது அதிகமாக சிரமமாக இருக்கும். ஒரு 10 நொடிகள் மூச்சை கவனிக்கும் போதே மனம் எங்கோ பறந்துப் போவதை, உங்களின் அனுபவம் மூலம் காண்பீர்கள்.

  அப்புறம், படிபடியாக மனம் மூச்சிக் காற்றில் லயித்து நிற்கும். அதற்கு நாம் சோர்வின்றி பழக வேண்டும்.

  இப்படி பழக பழகத் தான் தியானம் கைக்கூடும். தியானம் கைக்கூடினால் அகந்தை தானாக ஒழியும். மனசு லேசாகும். மனதில் எழும் எல்லாவித எதிர்மறை உணர்வுகளான காமம், க்ரோதம், லோபம், மோகம், மதம், மாச்சரியம் எல்லாம் அவற்றின் வீரியம் குறைந்து முடிவில் மறைந்தே போகும்.

  உள் அமைதி உங்களுக்கு நிரந்திரமாக கிடைக்க இது வழி செய்கிறது.

  இல்லையென்றால் மனம் புற விஷயங்களில் சிக்கிக் கொண்டு அல்லல் பட்டுக்கொண்டே தான் இருக்கும். அதற்கு நிம்மதி என்பதே கிடைக்காது.

  முயற்சி செய்து பாருங்கள் நீங்களும், மற்ற நண்பர்களும். கண்டிப்பாக பலன் கிடைக்கும்.

  ReplyDelete
 5. \\மனம் என்ற ஒன்று உள்ளவரையில் கேள்விகள் எழாத நிலை என்பது இல்லையே??!!!\\

  நீங்கள் சொல்வது தற்போதய மனம். நான் சொல்லி இருப்பது மூச்சு எப்போதும் 5க்கும் கீழ்,

  அந்த நிலைக்கு வந்து பாருங்கள். கேள்வி வராது அல்லது கேள்வியுடனே பதிலும் தோன்றும்:)


  \\அப்ப, மூச்சைக் கவனிப்பதே வேலையாகச் செய்தால் மாத்திரமே
  தீர்வு.....அப்படித்தானே?!!!!!\\

  அப்படி அல்ல. மூச்சு விட்டுப்பழகும்போது இருக்கிற நிலை அது, பழகிவிட்டால் அதுவும் வேலையும் இரட்டைமாட்டு வண்டிதான்.

  நன்றி வ்ரவுக்கும் கருத்துக்கும் வானவன் யோகி

  ReplyDelete
 6. என்னது நானு யாரா

  பங்காளி நீங்கள் சொல்றது சரிதான். ஆனா பட்டப்படிப்ப சொல்லி இருக்கீங்க, நான் எல்கேஜி பாடத்தை பகிர்ந்திருக்கிறேன்.

  தியானத்தையும் அன்றாடவாழ்வையும் இணைக்கிற முயற்சியின் ஆரம்பம்தான் நான் செய்தது.

  நன்றி வரவுக்கும் கருத்துக்கும்

  ReplyDelete
 7. நன்றி எஸ்.கே

  தொடர்ந்த வருகைக்கும் ஊக்கத்திற்கும்

  வாழ்த்துகளுடன்

  ReplyDelete
 8. நன்று தொடருங்கள்
  வாழ்க வளமுடன்.

  ReplyDelete
 9. எளிமையான நடையில் எளிதான முறையில், தியான பயிற்சியை பற்றி எழுதி இருக்கிறீங்க..... பயனுள்ள இடுகை. ரொம்ப நன்றிங்க.

  ReplyDelete
 10. //மனம் என்பது இதுதான். பயத்தைத் தோற்றுவித்துக்கொண்டே இருக்கும். காரணம் நம் உணர்வுகள் அனைத்தும் மனதிற்கு அடிமையாக இருக்கிறது.//

  மிகச்சரியான வரிகள்

  ReplyDelete
 11. நல்ல பதிவு நண்பரே,. நானும் முயற்சி பண்ணுகிறேன்,..

  ReplyDelete
 12. எப்போதும் தன் முனைப்பு எண்ணங்களால் எழுத்திலும் சொந்த வாழ்க்கையிலும் வாழ்ந்து கொண்டுருக்கும் நீங்கள் கடந்த பதிவில் பன்றிக்காய்ச்சல் நோய் குறித்தும் அரசாங்கம் தூங்கிக் கொண்டுருப்பதும் குறித்தும் எழுதி இருந்தீர்கள். உங்கள் வாக்கு பலித்து விட்டது. பத்து லட்சம் பேருக்கு அரசாங்கமே இலவச மருந்து வழங்க ஏற்பாடு செய்துள்ளது.

  ReplyDelete
 13. மிக அருமையான பகிர்வு.

  சுவாசம்தான் தியானத்தின் அடிப்படை சாவி.

  ReplyDelete
 14. மனம் சார்ந்த உங்கள் பதிவுகள் நன்றாக இருக்கிறது..யோசிக்க வைக்கிறது...

  ReplyDelete
 15. இந்த தலைப்பு வெற்றி பெற வாழ்த்துகள்.

  ReplyDelete
 16. சிங்கத்தை சிட்டுக்குருவியாக மாற்றி சிட்டுக்குருவியை சிற்றெறும்பாக ஆக்கினாலும் சிற்றெறும்பு சீனியை நோக்கித்தான் செல்லும்.

  இரவு இரவாகவும் பகல் பகலாகவும் இருக்கட்டும். எப்போதும் மாலை நேரமாக இருப்பது என்பது இயற்கையின் நியதியல்ல.

  குதிரையை குதிரையாக வாழவிடுங்கள்!
  குதிரைக்கு கடிவாளமிட்டால் உனது மனதிற்கும் நீ கடிவாளம் இடவேண்டியதாகிவிடும்.

  என்றும் நீ இயல்பான மனிதனாக வாழமுடியாது!

  ReplyDelete
 17. சிங்கத்தை சிட்டுக்குருவியாக மாற்றி சிட்டுக்குருவியை சிற்றெறும்பாக ஆக்கினாலும் சிற்றெறும்பு சீனியை நோக்கித்தான் செல்லும்.

  இரவு இரவாகவும் பகல் பகலாகவும் இருக்கட்டும். எப்போதும் மாலை நேரமாக இருப்பது என்பது இயற்கையின் நியதியல்ல.

  குதிரையை குதிரையாக வாழவிடுங்கள்!
  குதிரைக்கு கடிவாளமிட்டால் உனது மனதிற்கும் நீ கடிவாளம் இடவேண்டியதாகிவிடும்.

  என்றும் நீ இயல்பான மனிதனாக வாழமுடியாது!

  ReplyDelete
  Replies
  1. சிங்கத்துக்கோ, சிட்டெரும்புக்கோ ஆறாவது அறிவு கிடையாது. மனம் போன போக்கில் வாழ்தல் மனித தன்மையே கிடையாது. மனதை கட்டு படுத்தி தனக்கும் பிறர்க்கும் பயனுடன் வாழ்வதே , ஆறாம் அறிவின் சிறப்பு.

   Delete

மனசுல தோணினத சொல்லிட்டு போங்க :)