"மூச்சைக் கவனி, முழுவிழிப்புநிலையில் இரு!" புத்தர்

Tuesday, September 7, 2010

இனிய பயணம் - கங்கோத்ரி, கேதார்நாத்

மனதுக்குள் எப்போதும் ஓடிக்கொண்டே இருக்கும் எண்ணம் இமயமலை செல்லவேண்டும். இந்த திருப்பூரை சுற்றி, காய்ந்துபோன நிலங்களையும், சாயம் கலந்த ஆற்றையும், பார்த்து பார்த்து சலிப்பும் வருத்தமும் மிஞ்சும் வாழ்க்கையிலிருந்து தற்காலிகமாகவேனும் விடுதலை வேண்டும் என நான் அவ்வப்போது எண்ணத்தை மனதில் போட்டு வைப்பது உண்டு.வேலை,வேலை என குடும்பத்திற்கு, எனக்கு என போதுமான நேரம் ஒதுக்கமுடியாமல், என் வாழ்க்கை முறையை சரியாக அமைத்துக் கொண்டிருக்கிறேனா என்ற கேள்வி எனக்குள் அடிக்கடி வரும். அதற்கான பதில் இல்லை என்பதே..ஆயத்த ஆடை தயாரித்தலில் அன்றாடம் பார்க்கும், அனுபவிக்கும் வேடிக்கை, விநோதங்களையெல்லாம் விட்டுவிட்டு நிம்மதியாக சுற்றுலாவாக செல்ல வேண்டும். ( அதுக்கு செல்போன இங்கேயே விட்டுவிட்டு போயிருக்கனும். தெரிஞ்சே..)வெறுமனே சுற்றுலாவாக இல்லாமல் ஆன்மீகம் சார்ந்த இடங்களாக இருக்கவேண்டும் என விருப்பம் அதிகம்.

போன வருடமே கோவையைச் சார்ந்த மனுசிபிஅகாடமி திரு.சந்திரசேகரன் (0422-2441136,9944955168,9944955169 )ஏற்பாடு செய்த இமயமலைப்பயணத்தில்(2009) கலந்து கொள்ள முன்பணம் கட்டியும், சில தவிர்க்க முடியாத தொழிற்சூழ்நிலைகளால் போகமுடியவில்லை. சரி இந்த வருடம் ஆகஸ்ட்-2010 ல் கங்கோத்திரி மற்றும் கேதார்நாத் தலங்களை தரிசிப்பதை முக்கிய நோக்கமாக வைத்து பயணம் அமைந்ததால் முன்கூட்டியே பணம்கட்டி பயணத்தை உறுதிசெய்தேன்.

பயணத்தின் அனுபவம் வரும் அக்டோபர்2, 2010ல் பத்ரிநாத் செல்லும் பயணத்திற்கும் (11.09.2010க்குள்)முன்பதிவு செய்துவிடலாம் என்கிற அளவுக்கு நிறைவாக இருந்தது. மொத்தம் 100 பேர் மட்டுமே பயணம் எனத் திட்டமிட்டாலும், பின்னர் அன்புத் தொல்லைகள் காரணமாக 130 பேராக புறப்பட்டோம்.

’என்ன எடுத்தவுடனே ஆள்புடிக்கிற வேலையா என நினைக்காதீங்க, இல்ல கமிசன் வருமான்னும் நினைக்காதீங்க’ இதை ஏன் எழுதறன்னா அப்படி நினைப்பதுதான் மனதின் பொதுவான இயல்பு, முழுக்க முழுக்க விருப்பம் இருக்கு, 10000 ரூபாய் செலவில் பதினான்கு நாட்கள் வேறு எந்தச் செலவும் இன்றி, மொழி குறித்த கவலை இன்றி நமது தமிழ்நாட்டு உணவுவகைகளுடன் நிம்மதியாக செல்லவேண்டும் என விரும்புவர்களுக்கு சரியான தகவல் சென்று சேர வேண்டும் என நினைத்தே இந்த தகவலை பகிர்ந்து கொள்கிறேன்.

பயணத்திற்கு சிலதினங்களுக்குமுன் குளிரையும், மழையையும் தாங்கும் ஜெர்கின், தொப்பி, கையுறை, மற்றும் எளிய எடைகுறைந்த ஆறுசெட் ஆடைகள் என எல்லாவற்றையெல்லாம் வாங்கி பெட்டியில் அடுக்கி தயார் நிலையில் வைத்துக்கொண்டேன். இரயிலில் பயணம் 02.08.2010 காலையில் சென்னை பயணம். அன்றிரவு சென்னையில் அனைவரும் ஒன்றாக இணைந்து டெல்லி பயணம் என திட்டமிடப்பட்டிருந்தது.

முதன்முதலாக வீட்டைவிட்டு, குடும்பத்தைவிட்டு 12 நாள் விலகி பயணம் என்பது சற்றே உள்ளூர என் குடும்பத்தினருக்கு வருத்தத்தைக் கொடுத்தாலும் மகிழ்ச்சியுடன் பயணத்திற்கு தயார் செய்தனர். இரவு உறங்கி காலையில் 4.30 மணி அளவில் எழுந்து குளித்துவிட்டு இரயில்நிலையத்திற்கு 6.15 மணிக்கு சென்று சேர்ந்துவிட்டேன்.

பயணம் தொடரும்...

வாழ்த்துகளுடன்
நிகழ்காலத்தில் சிவா
Post a Comment