"மூச்சைக் கவனி, முழுவிழிப்புநிலையில் இரு!" புத்தர்

Monday, September 27, 2010

இனிய பயணம் - கங்கோத்ரி, கேதார்நாத்க்கு ...6 (ரிஷிகேஷ்)

முஸோரி இரயிலில் நாங்கள் வந்தசமயம் ஹரித்துவாரில் கோவிலுக்கு காவடி எடுக்கும் சீசன். சிவனுக்கு காவடி எடுத்துக்கொண்டு இரயில் நிற்கும் ஒவ்வொரு ஸ்டேசனிலும் பக்தர்கள் ஏறிக்கொண்டே வந்தனர். முன்பதிவு செய்யப்பட்ட இருக்கைகளில் உரிமையாக அமர்ந்தும் கொண்டனர்.

கூட்டம் தாங்காமல் இரயிலின் டிடிஆர், படுக்கைவசதி கொண்ட நாங்கள் இருந்த பெட்டிகளின் நான்கு கதவுகளையும் உள்பக்கமாக தாள் போட்டுவிட்டார். நடுஇரவு இரண்டுமணி இருக்கும்.ஏதோ ஒரு ஸ்டேசனில் இரயில் நின்று கிளம்பி வேகம் எடுத்தது. அந்த ஸ்டேசனில் எனக்கு இடதுபுறம் பிளாட்பார்ம் இருந்தது. பெட்டிகளில் பெரும்பாலும் விளக்குகள் அணைக்கப்பட்டு இருந்தது.இரயில் கிளம்பி சுமார் ஐந்துநிமிடம் கழித்து நான் இருந்த பெட்டியில் வலதுபுறம் கதவருகே இருந்தவர்கள் சத்தம்போட்டனர். லைட்டைப்போட்டுப் பார்த்தால் கதவின் வெளிப்பகுதியில் இரண்டுபக்தர்கள் கிங்கரர்கள் சைஸில் கதவைப் பிடித்து தொங்கிக் கொண்டிருந்தார்கள். கையில் காவடி வேறு. எனக்கு இருதயமே நின்று விடும் போல் இருந்தது.

ஓடுகிற இரயிலில் திறந்த கதவருகில் செல்லவே கம்பிகளை கெட்டியாக பிடித்தபடி போகிற எனக்கு, சாத்தியுள்ள கதவின் வெளிபுறத்தில் அவர்களைப் பார்த்ததும் அதிர்ச்சியாகவே இருந்தது. நண்பர்கள் திறக்கமுயற்சிக்க, அந்தக் கதவின் தாழ்ப்பாள் மக்கர் செய்தது. இரயிலோ நல்ல வேகம் பிடித்துச் சென்று கொண்டிருந்தது. நல்லவேளையாக டூட்டி முடிந்த டி.டி.ஆர் அருகில் பர்த்-ல் படுத்திருக்க (அவரது பையை ஜன்னல் கம்பியில் கட்டி பூட்டு போட்டு இருந்தார்:)) அவரிடம் தகவல் கொடுத்தனர் நண்பர்கள்.

அவர் உடனே எழுந்து சென்று கதவைத் திறந்து அவர்களை உள்ளே அனுமதித்து விட்டு அமைதியாக சென்று மீண்டும் படுத்து உறங்கத் தொடங்கிவிட்டார், இது அவருக்கு சாதரண விசயம் போல:)

இவங்க பக்திக்கு உண்மையிலேயே அளவில்லைதான். நாம் இது உயிரைப் பணயம் வைக்கும் முட்டாள்தனமான செய்கை என்றால் கூட அவர்கள் துணிசசலும், எப்படியாவது ஹரித்துவார் போகவேண்டும் என்ற வெறியும் யோசிக்க வைத்தது.

முசோரி எக்ஸ்பிரஸ் ஹரித்துவாரைச் சென்றடைந்த காலை நேரத்தில் எங்களுக்காக மூன்று பஸ்கள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. தங்குமிடமாக ரிஷிகேஷ் திருக்கோவிலூர் மடத்தில் முன்பதிவு செய்யப்பட்டிருந்தது. மடம் என்றுதான் பெயர். ஆனால் தங்குமிடம் மற்றும் வசதிகள் ஓட்டல் அறைகளை விட தாராளமாகவே இருந்தது. அதிலும் குறிப்பாக திருக்கோவிலூர் மடம் தமிழக அன்பர்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து வருகிறர்கள்.

அங்கு காலை உணவு ராஜீ குழுவினரால் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. அனைவரும் அறைகளில் தங்கி குளித்து ரெடியானோம். பிறகு பத்துமணி வாக்கில் சத்சங்கம் ஒருமணிவரை..எல்லாம் வல்ல இறைஆற்றலை துதித்து (எப்பவும் நம்மகூட இருந்தாலும் அவ்வப்போதுதான் நாம் நினைக்கிறோம்:)) பின் ராம் ஜூலா, லக்‌ஷ்மண் ஜூலா பார்க்க கிளம்பினோம். அவரவர் இஷ்டப்படி ஷேர்ஆட்டோ பிடித்துச் சென்றோம்.


ஜூலா என்றால் என்ன எனத் தெரியாத எனக்கு அங்கு சென்றதும் அது பாலம், அதுவும் லஷ்மண்ஜூலா சுமார் எண்பது வருடங்களுக்கு முன்னர் கட்டப்பட்டது என்பதையும் அறிந்து கொண்டேன். அதற்குமுந்தய காலங்களில் கயிற்றுப்பாலம் இருந்திருக்கிறது.மேலே உள்ள படங்கள் பாலமும், பாலத்தின்மீது இருந்து கங்கைநதி....


படத்தில் இருக்கிற இளைஞர்களைப் பாருங்கள். இந்த வயது பக்தர்கள்தான் அனைவரும்:) வயதானவர்களை விரல்விட்டு எண்ணி விடலாம். மழை பெய்த பின் தான் பாலத்தில் கூட்டம் குறைந்தது.

அதிலிருந்து இரண்டு கிலோ மீட்டர் முன்னதாகவே ராம்ஜூலா

போட்டோ எடுக்கலாமா வேண்டாமா என்ற மனத்தடுமாற்றத்துடன் சிங்கம்போல் நிமிர்ந்து வந்து யோகியை படம் பிடிக்க முயற்சித்தேன். சட்டென தலைதாழ்த்தி முகம் மறைத்த யோகி..ராம்ஜூலாவிலிருந்து லக்‌ஷ்மண்ஜூலா போகும் பாதையில்...

பயணம் தொடரும்...
வாழ்த்துகளுடன்
நிகழ்காலத்தில் சிவா
Post a Comment