"மூச்சைக் கவனி, முழுவிழிப்புநிலையில் இரு!" புத்தர்

Wednesday, September 15, 2010

இனிய பயணம் - கங்கோத்ரி, கேதார்நாத்க்கு ...4

டில்லி செல்லும் தமிழ்நாடு எக்ஸ்பிரஸ்க்கான நேரம் நெருங்கியது. அறையைக்காலி செய்துவிட்டு, செண்ட்ரல் ஸ்டேசனில் தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் எந்த பிளாட்பார்மில் நிற்கிறது என்பதை டிஜிட்டல் அறிவிப்பு பலகையில் பார்த்து 5 வது பிளாட்பார்ம்க்கு சென்றோம். ஏறத்தாழ அனைவருமே வந்துவிட்டனர். அனைவருக்கும் மஞ்சள் வண்ணத்துடன் கூடிய தொப்பியும் கழுத்தில் தொங்கவிடும் வகையிலான அடையாள அட்டையும் கொடுக்கப்பட்டது.மூன்று கம்பார்ட்மெண்ட்டில் அனைவரும் கலந்து இருந்ததாலும், பயணம் முழுமையாக முடியும் வரை யாரும் தவறிப்போகாமலும், எளிதில் அமைப்பாளர்கள் எங்களை அடையாளம் காணவும் கட்டாயம் அதை அணிந்து இருக்கவேண்டும் என சந்திரசேகர் கூற அனைவரும் இரயிலில் ஏறி அமர்ந்தோம்.

சூட்கேஸை கூடவே எடுத்துச் சென்றிருந்த நீளமான செயினுடன் சேர்த்து இரயில் சீட் கம்பியில் கோர்த்து கட்டி பூட்டி விட்டேன். யாரும் தெரிந்தே(திருடி) எடுத்தச் சென்று விடக்கூடாது அல்லவா :)

நான்கு எளிமையான காட்டன் (விலை.120.00) பேண்ட் திருப்பூரில் இருக்கும்போதே வாங்கி, அதில் இரண்டு டிக்கெட்பாக்கெட் வைத்துத் தைத்து எடுத்து சென்றிருந்தேன். அதில் பணத்தை இரண்டாக பிரித்து வைத்துக்கொண்டு உறங்கச் சென்றேன்.

காலை கண்விழித்துப் பார்த்தபோது விஜயவாடாவைத்தாண்டி இரயில் போய்க் கொண்டிருந்தது.இரயில்பெட்டியிலேயே காலையில் ரொம்ப யோசிக்காம சோப்பு, ஷாம்புனு எடுத்துக்கொண்டு சென்று குளியல் போட்டுவிட்டேன்.

 திருப்பூரிலிருந்து சென்னை செல்லும் வரை பெரிய அளவில் எந்த விவசாய நிலப்பரப்பும் கண்ணுக்கு தென்படவே இல்லை. ஆனால் இதற்கு நேர்மாறாக எங்கு பார்த்தாலும் பசுமை, பயிர்கள் செழித்த நிலப்பரப்பு என எங்கள் கூடவே வந்து கொண்டிருந்தது.

திரும்ப திரும்ப என்னை வியப்பில் ஆழ்த்திய விசயம் கண்ணுக்கு எட்டியவரையில் வீடுகளே இல்லை. விவசாய நிலங்களிலும் ஆங்காங்கே விரல்விட்டு எண்ணக்கூடிய அளவில் விவசாயத் தொழிலாளர்கள். ஆனால் எப்படி இந்த பரந்த நிலப்பரப்பில் இந்த அளவு விவசாயம் செய்திருக்கிறார்கள்!!!


வடக்கு வாழ்கிறது தெற்கு தேய்கிறது என்கிறார்கள், வாழாமல் என்ன செய்யும்:))  வடமாநிலங்களினால்தான் நாம் உணவு உண்கிறோம் என்றால் அது மிகையில்லை. தமிழகம் என்னதான் தொழில்துறையில் முன்னேறினாலும் நாம் பணத்தையோ காசையோ நேரடியாக உண்ண முடியாது.

விவசாயத்திற்கு,குறிப்பாக வளமான நதிகள் இல்லாத தமிழகத்தில் காவிரிநீருக்கு கையேந்தும் நிலைதான், அரசோ ’மழைபெய்தால்தானே தண்ணீர் விடுவாங்க’ என்று கையாலாகத்தனமாக ஒதுங்கிக்கொண்டு மிச்சம்மீதி இருக்கின்ற மழைநீர் தேங்குகிற நீர்நிலைகளை சத்தமில்லாமல் குடியிருப்பாக்கி காசு பார்த்துக்கொண்டு இருக்கிறது, நீர்நிலைகுறித்த தொலைநோக்குத் திட்டங்கள் எதுவும் இல்லாத நமது நிலையை எண்ணி மனம் சற்று வருந்தத்தான் செய்தது.

இனி உணவுப்பொறுப்பு அமைப்பாளர்களைச் சார்ந்தது என்பதால் அவர்கள் இரயில் கேண்டீனில் சொல்லி அனைவருக்கும் வாங்கிக் கொடுத்தனர். வேடிக்கை பார்த்துக்கொண்டே வந்ததில் நேரம் போனதே தெரியவில்லை.

மதியம் செல்போனில் சார்ஜ் குறையத் தொடங்கியது. இரயில் பெட்டியில் கடைசியில் இரண்டு பிளக் பாயிண்ட் வைக்கப்பட்டு இருந்தது. பெரும்பாலான பெட்டிகளில் ஒரு பாயிண்ட் வேலை செய்யாது. அல்லது இரண்டுமே வேலை செய்யாது.:) அதனால் நீங்கள் பயணத்தின்போது மல்டிபிளக் ஒன்று வாங்கி வைத்துக்கொள்வது கட்டாயம். மேலும் பயணத்தின்போது அறைகளில் மூவர் ஒன்றாக தங்கும்போதும் இதே பிரச்சினை தலைதூக்கும்.

ஒரு இரயில் பெட்டியில் சுமாராக 80 பேர், இரண்டு இரவு, ஒருபகல் என தொடர்பயணம், இதில் செல்போன் வைத்திருக்கிற சுமார் 60 பேர் என வைத்துக்கொள்ளலாம். ஒருசெல்போனுக்கு சார்ஜ்போட இரண்டுமணிநேரம் தேவையெனில் நான்குபிளக் பாயிண்டுகளாவது கண்டிப்பாக தேவை.இரயில்வே நிர்வாகம் இலாபத்தில் இயங்குகிறது என்றாலும் இதெல்லாம் எப்போது நிறைவேறுமோ!!

அன்று இரவு கூடவந்த அன்பர் ஒருவரின் பணம் ரூ.3000 நள்ளிரவில் தூங்கும்போது எதோ ஒரு இரயில்வே ஸ்டேசனில் ஏறியவர்களால் பிளேடு போட்டு எடுக்கப்பட்டுவிட்டது. பர்ஸை பேண்ட் பாக்கெட்டில் உப்பலாக தெரியும்படி வைத்திருந்தது அவர் செய்த தவறு :(

வரும் வழியில் இரண்டு மூன்று சிறு சுரங்கப்பாதை வழியாக இரயில் வந்தது எனக்கு புது அனுபவம் :)


பார்க்க பார்க்க உற்சாகம் அடையச் செய்யும் பசுமை


சுரங்கப்பாதயைக் கடந்து...

அடுத்தநாள் 04.08.2010 காலை டெல்லி வந்தடைந்தோம்.

பயணம் தொடரும்..
நிகழ்காலத்தில் சிவா
Post a Comment