"மூச்சைக் கவனி, முழுவிழிப்புநிலையில் இரு!" புத்தர்

Saturday, October 1, 2011

திருக்கைலாய யாத்திரை பகுதி 26

எங்களை அழைத்துச் செல்ல இரண்டு ஜீப்கள் காத்திருந்தன. அனைவரும் அதில் ஏறி மானசரோவர் ஏரியை நோக்கி சென்றோம்.  அன்றைய தினம் காலையில் மற்ற யாத்திரீகர்கள் அனைவரும் முன்னதாக டார்சன் முகாமிலிருந்து மானசரோவர் சென்றுவிட்டனர்.

மானசரோவர் ஏரியில் அன்று இரவு தங்கினோம். பூசைகள் செய்து வழிபட்டும் பின்னர் இரவு ஆன்மிக உரையாடல்கள் நிகழ்த்தியும் உற்சாகமாக இரவைக்கழித்தோம். அடுத்தநாள் காலை கிளம்பி ஏற்கனவே தங்கிய பழைய டோங்பா ஊரில் தங்காமல் கொஞ்சம் முன்னதாக இருந்த புதிய டோங்பா நகரில் தங்கினோம். திபெத்தில் சீனர்களை குடியமர்த்தும் முயற்சிகளில் ஒன்றாக இந்த நகரம் சகல வசதிகளுடன் நிர்மாணிக்கப்பட்டுள்ளது.

இங்கு நல்ல செளகரியமாகவே இருந்தது. அடுத்த நாள் காலையில் கிளம்பி எங்கும் தங்காமல் நியாலம் வந்து சேர்ந்தோம். வரும் வழியில் எடுத்த சில படங்கள் உங்களுக்காக..:)வழியில் நாங்கள் பார்த்த ஒரே விவசாயம் கடுகு விளைச்சல்தான்:) படம் மேலே.. கீழே உள்ள படத்தில் நானும் எங்களுக்கு உறுதுணையாக வந்த வழிகாட்டி கியான்..இவரோடு பேசியபோது எந்த படிப்பறிவும் இல்லாமல் போர்ட்டராக இருந்து அனுபவத்திலேயே ஆங்கிலத்தில் சரளமாக பேசும் திறனை வளர்த்துக்கொண்டதாகவும், வருடத்தில் இந்த மூன்று மாதம் மட்டுமே வருமானம் எனவும், மற்ற மாதங்களில் சிரமமே எனச் சொன்னார். அதே சமயம் தனக்கு படிப்பு இல்லாததால் தன் மகளை காலேஜ் லெவலில் படிக்கவைத்துக்கொண்டு இருப்பதாகவும் சொன்னார். என் கையில் செலவு போக மீதி இருந்த 500யுவான் பணத்தை கல்விச் செலவுக்கென வைத்துக்கொள்ளுங்கள் என அன்போடு கொடுத்தேன். நன்றியுடன் பெற்றுக்கொண்டார். இதை இங்கே எழுத அவசியமில்லை என முதலில் நினைத்திருந்தாலும் இப்போது பகிர்ந்துகொள்ளத்தோன்றியது:)
திரும்பி வரும் பயணம் முழுவதும் சற்று செளகரியமாகவே தங்குமிடங்கள் இருந்தன. நாங்கள் ஆட்சேபணை தெரிவித்திருததும் ஒரு காரணம்:).நியாலத்திலும் போகும்போது தங்கிய அறைகளுக்குப்பதிலாக, செளகரியமான அறைகள் ஒதுக்கப்பட்டன.

அடுத்த நாள் காலை கிளம்பி சுமார் ஒரு மணிநேரத்தில் அதாவது காலை 10 மணி அளவில் சீன செக்போஸ்டை அடைந்தோம். முதல் குழுவாக நின்று வெளியேறி கொஞ்ச தூரம் வந்து மதிய உணவினை அருந்தி மாலை காட்மண்டு திரும்பினோம்.முன்னர் தங்கிய ஓட்டலில் 19 ஜீலை 2011 அன்று இரவு தங்கினோம். கூடவே எடுத்துச் சென்ற ஸ்லீப்பிங்பேக் திரும்ப ஒப்படைத்துவிட்டு மறு நாள் காலை காட்மண்டுவில் விமானம் ஏறி டில்லி வழியாக சென்னை திரும்பினோம். விமானநிலையத்தில் உடன் வந்த நண்பர்களுடன் பிரியாவிடை பெற்று இல்லம் திரும்பினேன்.

யாத்திரை ஆரம்பிக்கும் முன் நேபாளத்தில் சில இடங்களை சென்று தரிசித்தோம். அதன் புகைப்படங்கள் சிலவற்றை பகிரும் அடுத்த பகுதியுடன் யாத்திரை நிறைவு பெறும்.

நிகழ்காலத்தில் சிவா.

2 comments:

  1. // இதை இங்கே எழுத அவசியமில்லை என முதலில் நினைத்திருந்தாலும் இப்போது பகிர்ந்துகொள்ளத்தோன்றியது//

    உங்கள் கருணை உள்ளத்திற்கு பாராட்டுகள். தொடர் படிக்கும் போது கூடவே நடப்பது போன்ற உணர்வு இருந்தது, நல்லா எழுதத் துவங்கிட்டிங்க

    ReplyDelete
  2. திருக்கயிலாய யாத்திரை செல்லும் கனவு நீண்ட நாட்களாகவே எனக்கு உண்டு. எனவே கைலாய யாத்திரை சென்றவர்களின் பதிவுகள், கட்டுரைகள், புத்தகங்கள் ஆகியவற்றை கவனமுடன் வாசிப்பேன். தங்களின் இந்த பதிவுகள் சில நுணுக்கமான விசயங்களை தெரிய வைத்திருக்கிறது. இன்னும் யாத்திரைக்கு என்னை தயார் செய்து கொள்கிறேன். எண்ணங்கள் வலுப்படும்போது செயலும் உறுதிபடும். அதற்கு உதவிடும் தங்கள் பதிவிற்கு என் மனமார்ந்த நன்றி.

    ReplyDelete

மனசுல தோணினத சொல்லிட்டு போங்க :)