"மூச்சைக் கவனி, முழுவிழிப்புநிலையில் இரு!" புத்தர்

Friday, September 30, 2011

திருக்கைலாய யாத்திரை பகுதி 25

திருக்கைலாய யாத்திரையில் பரிக்ரமாவின் மூன்றாவது நாள் காலை 6.30 மணி அளவில் கிளம்பினோம். முன்னதாக பையில் வைத்திருந்த உலர்பழங்களை காலை உணவாக எடுத்துக்கொண்டோம். மற்றபடி புறப்படுவதில் எந்த சிரமமும் இல்லை. கூடவே யாத்திரை நிறைவு அடையும் நாள் வேறு:). நாங்கள் தங்கி இருந்த திராபுக் இடத்திற்கு சற்று முன்னதாக முந்தய நாள் மாலை எடுத்த படம் கீழே

காலை கிளம்பிய உடன் இரவு தங்கிய இடம் ஏதோ சொல்வது போல் உணர்ந்தேன். பிரியாவிடை கொடுத்தது போல் இருந்தது. சற்று தூரம் வந்தபின் எடுத்த படம் கீழே..


காலை கிளம்பி தொடர்ந்து நடந்தோம். உணவு எதுவும் தரப்படவில்லை. எங்களுக்கும் பசி எடுக்கவில்லை:) இன்று எவ்வளவு நேரம் நடக்க வேண்டும் என வழிகாட்டி இடம் கேட்டபோது மொத்தம் 5 மணி நேரம் ஆகலாம் என்றார்.பாதை எளிதாகவே இருந்தது.

மிதமான வேகத்திலேயே நடந்தோம். சுமார் இரண்டு மணி நேரம் நடந்தபின் தூரத்தில் கூடாரம் தெரிய சரி இங்கும் ஒரு டீக்கடைபோல என நினைத்துக்கொண்டு நடந்தேன். அருகில் செல்ல செல்ல கார்கள் நின்றிருந்தன. ஆம்,:) நாங்கள் யாத்திரையில் சென்று சேர வேண்டிய இடத்தை இரண்டு மணிநேரத்திலேயே அடைந்துவிட்டோம்.

வழிகாட்டி வேண்டுமென்றே எங்களை தமாஷ் பண்ணவே 5 மணி நேரம் என்று சொல்லி இருந்திருக்கிறார்:) அந்த இடத்தை அடைந்தவுடன் இந்த யாத்திரையில் என்னோடு மனப்பூர்வமாக நெருக்கமாக பழகிவந்த சேலத்தை சேர்ந்த திரு.தனுஷ்கோடி ஐயா அவர்கள் என்னை வரவேற்க காத்திருந்தார்.


கூட வந்த வழிகாட்டி என்னை கட்டிப்பிடித்துக்கொண்டு நாங்கள் போதுமான ஒத்துழைப்பு கொடுத்தற்கு மிகவும் நன்றி எனச் சொன்னார்... அவரில்லையேல் இந்த முழுசுற்று யாத்திரை சாத்தியேமே இல்லை என்பதை பதிலாகச் சொன்னேன்.

சரி இப்போது எப்படி உணர்கிறீர்கள் என்று அவர் கேட்க., இப்பொழுதே இன்னொருமுறை திருக்கைலையை வலம் வர வேண்டும் என்றேன். ஆம் உண்மையிலேயே, உடலும் மனமும் விரும்பியே என் உணர்வினைத் தெரிவித்தேன். உடலில் எந்த ஒரு வலியோ, அலுப்போ எதுவும் இல்லாமல் முழுத்தகுதியுடன் முன்னெப்போதும் இல்லாத அளவு உற்சாகமாக உணர்ந்தேன். திருக்கையிலையின் சக்தி வார்த்தைகளால் வர்ணிக்கமுடியாதது என்பதையும் உணர்ந்தேன்...

யாத்திரை தொடரும்
நிகழ்காலத்தில் சிவா

2 comments:

  1. //ஆம் உண்மையிலேயே, உடலும் மனமும் விரும்பியே என் உணர்வினைத் தெரிவித்தேன். //

    வூட்டுக் கவலையில்லாமல் ஆண்களுக்கு ஊர் சுற்ற கசக்கவாச் செய்யும்.

    :)

    ReplyDelete
  2. //திருக்கையிலையின் சக்தி வார்த்தைகளால் வர்ணிக்கமுடியாதது //

    முற்றிலும் உண்மை... பகிர்வுக்கு மிக்க நன்றி... ஓம் நமசிவாய..

    http://anubhudhi.blogspot.com/

    ReplyDelete

மனசுல தோணினத சொல்லிட்டு போங்க :)