"மூச்சைக் கவனி, முழுவிழிப்புநிலையில் இரு!" புத்தர்

Saturday, June 10, 2017

அந்த உணர்வு உங்களைப் பற்றிக்கொள்ள.. ஓஷோ

அந்த உணர்வு உங்களைப் பற்றிக் கொள்ள அனுமதியுங்கள். அப்போது அது என்னவென்று புரிந்துவிடும். ஆனால் அதற்கு மாறாகவே நீங்கள் செயல்படுகிறீர்கள். அதை நீங்கள் ‘பற்றிக்’ கொள்ளவே முயல்கிறீர்கள். மனம் அப்படித்தான் விரும்புகிறது. இதைத்தான் மனம் ‘புரிந்து கொள்ளுதல்’ என்று உங்களுக்குச் சொல்கிறது. எதையாவது ஒன்றைப் பற்றாத வரை மனம் நிறைவடைவதே இல்லை.

எதுவும் செய்யாமல் , சாதரண மெளனத்துடன் உடலளவிலோ, உணர்வுபூர்வமாகவோ, அறிவுபூர்வமாகவோ எதுவும் செய்யாமல் , சும்மா அப்படியே முழு அமைதியுடன் இருக்க முடிகிறதா ? முடிந்தால் அது உங்களைப் பிடித்துக் கொள்ளும்.  அதை அறிவதற்கான ஒரே வழி, அது உங்களைப் பிடித்துக் கொள்ள அனுமதிப்பது மட்டுமே.

பறவைகளின் பாடல் கேட்கும்போது, காற்று மரங்களிடையே வீசும்போது, நீரோடையில் தண்ணீர் சலசலத்து ஓடும்போது உங்களை அந்த உணர்வு பற்றிக் கொள்ள அனுமதித்தால் போதும், சட்டென எங்கிருந்தோ உண்மை வெளியாகிவிடும். உங்களுக்குள் தம்மம் தோன்றிவிடும்.

வைகறை விண்மீன் மறைவதைப் பார்த்தபடி மரத்தடியில் அமர்ந்திருக்கும் போதுதான் புத்தர் ஞானம் பெற்றார்.
புத்தருக்கு ஞானம் கிட்டியது மரத்தடியில்...
மகாவீரருக்கு ஞானம் கிட்டியது வனத்தில் சும்மா உட்கார்ந்திருந்த போது...
முகம்மதுவிற்கு ஞானம் பிறந்தது மலையொன்றின் உச்சியில்...

அதிகாலையில் எழுந்துபோய் உதிக்கும் சூரியனைப் பார். நடு இரவில் உட்கார்ந்து வானத்து நட்சத்திரங்களைப் பார்.. நிலவினைப் பார். மரங்களையும் பாறைகளையும்  நண்பனாக்கிக் கொள். ஆற்றருகே அமர்ந்து அதன் கலகலப்பைக் கேள்.  அப்படிச் செய்யும்போது இயற்கை உன்னைத் தன் வசப்படுத்த விடு. இயற்கையை மனதால் உன் உரிமையாக்க நினைக்காதே.  உன்னை அதன் வசப்பட அனுமதித்துவிடு.

அது உன்னை வசப்படுத்தட்டும்.  விடு... அதை ஆடி அனுபவி..  பாடி அனுபவி. அதனோடு இரண்டாகக் கலந்துவிடு.அதுதான் அதை அறிந்துகொள்ளும் ஒரே வழி.

ஓஷோ
தம்மபதம் I

No comments:

Post a Comment

மனசுல தோணினத சொல்லிட்டு போங்க :)