"மூச்சைக் கவனி, முழுவிழிப்புநிலையில் இரு!" புத்தர்

Monday, July 25, 2011

திருக்கைலாய யாத்திரை பகுதி-10

அடுத்தநாள் (12/06/2011)முழுவதும் மானசரோவரில்தான் தங்கினோம். நாங்கள் ஒருநாள் முன்னதாக வந்துவிட்டது முக்கிய காரணம், தட்பவெப்பநிலையை, உடல் ஏற்றுக் கொள்ள இன்னும் உதவியாக இருந்தது.கூட வந்த நண்பர் தனுஷ்கோடி (வயது 60)அவர்களுக்கு உணவு முறைகள் ஒத்துகொள்ளாமல் உணவை நிறுத்தி விட்டார். என்னால் பரிக்ரமா செய்ய நிச்சயம் முடியும். இதை சொல்வதைவிட செய்துகாட்டுவேன் என்றவர், இரவு மானசரோவர் குளிர் தாங்க முடியாமலும், உணவை அடியோடு ஒதுக்கி விட்டதாலும், பரிக்ரமா தேவையில்லை. வீடு சென்று சேர்ந்தால்போதும் என்றார். இதை நான் இங்கே குறிப்பிடக்காரணம். அவரை குறை சொல்வதற்காக அல்ல.

பயண ஆரம்பத்தில் உறுதியோடு இருக்கும் ஒருவர் கிளைமாக்ஸ் நெருங்கும்போது எப்படி சூழ்நிலைகளால் மாற வேண்டியதாக இருக்கிறது என்பதை மனதில் கொள்ளுங்கள். இதுதான் நிஜம்:). மனதார, உணவை வெறுக்காமல், நாக்கின் சொல்படி கேட்காமல், கிடைப்பதை கால்வயிறேனும் சாப்பிடுங்கள். இங்கே உடல் ஏற்புத்தன்மையுடன்தான் இருக்கும். ஆனால் மனதில் ஏற்புத்தன்மை இல்லாததால் வரும் பிரச்சினைகளே அதிகம்.

மகளிரில் மதுரை சகோதரி ஒருவர் டில்லியில் விமானத்தில் ஏறும்போது தான் முதல்நாள் பரிக்ரமா மட்டும் செய்ய இருப்பதாகவும், நீங்கள் எப்படி என என்னிடம் கருத்து கேட்டார்.

நான் எந்த முடிவும் செய்யவில்லை. அங்கே சென்ற பின் பார்த்துக்கொள்ளலாம். சிவம் என்ன சொல்கிறதோ அதன்படி, ஒருநாளோ, மூன்றுநாளோ, அல்லது அடிவாரத்துடனோ அதன் இஷ்டம்தான் என்றேன்.

எதிர்பார்ப்புகளை வளர்த்துக்கொள்வது என்பது நிகழ்காலத்தில் இருத்தலை தடை செய்யும். வாழ்க்கைக்கும் இதே சூத்திரம்தான்:)

உங்கள் மனநிலையில் மகிழ்ச்சியைத்தவிர, வருத்தமோ, கலக்கமோ, பயமோ இருப்பின் அது உங்கள் உடல்நிலையை நேரடியாக பாதிக்கும் என்பதை மனதில் கொண்டு இயல்பாக இருங்கள்.

ஆரம்பத்தில் இருந்தே குளிர் எனக்கு பிடிக்காத ஒன்றாக இருந்தாலும் மனதை மாற்றிக்கொண்டேன். சூழ்நிலையை மனதளவில் ஏற்றுக்கொண்டு இருக்க குளிர் பழகிவிட்டது. சாதரண ஆடைகளை அணிந்து கொண்டு இயல்பாக வலம் வரமுடிந்தது. இங்கே என் உடல் ஏற்றுக்கொள்ளும் தகுதியில்தான் இருந்தது. மனதைமுரண்டு பிடிக்காமல் சாந்தப்படுத்தியதும் எல்லாமே எளிதானது. நீங்கள் பயணம் செய்யும்போது உங்கள் உடல்நிலையை கருத்தில் கொண்டு இதுபோல் இயங்கிப்பாருங்கள்.

இன்று ஏரியினுள் அல்லது ஏரிக்கரையினில் இயற்கையாக கிடைக்கும், தெய்வங்கள் வடிவிலான மூர்த்தங்கள் சேகரிக்கத் தொடங்கினோம். கரையினில் நிறையக் கிடைக்கின்றன. பலருக்கும் விருப்ப வடிவ மூர்த்தங்கள் கிடைக்க, நானோ எந்தவித விருப்பமும் இல்லாமல் சற்று வித்தியாசமாக இருந்த வடிவங்களை எடுத்தேன். அவைகளை எனது நண்பர் தனுஷ்கோடி அய்யாவிடம் காண்பித்தேன். அவர் மலைத்தார்.

”என்னங்க இது கைலாசநாதனே வந்திருக்கார்” என்றார். (அங்கீகாரம்!?)” பசுபதி நாதரும் வந்திருக்கார். சிவன் மட்டுமே உங்கள் கண்ணில பட்டிருக்கார்” என்றார். ”எனக்கென்னங்க தெரியும். கண்ணில பட்டுது எடுத்துட்டு வந்திட்டேன். நீங்க சொன்னதுக்கு அப்புறம்தான் எனக்கே அடடே அப்படியான்னு தோணுது” எனச் சொல்லிவிட்டு, அவர் தனது குடும்பத்தினரின் ஆத்மலிங்கங்களை வைத்து பூஜைகள் செய்ய, பரம திருப்தியோடு அவருடன் பூஜையில் கலந்து கொண்டு, பின் கூடாரம் திரும்பினேன்.

அடுத்த நாள் காலை  திருக்கயிலைக்கு அருகில் அமைந்துள்ள டார்சன் என்கிற முகாமுக்கு செல்லக் கிளம்பினோம்.


யாத்திரை தொடரும்
நிகழ்காலத்தில் சிவா

5 comments:

 1. எதிர்பார்ப்புகளே ஏமாற்றத்துக்கு காரணம். ஆணவமே அழிவுக்கு காரணம். இந்த இரண்டையும் விட்டால் இறைவன் மிக அருகில்..

  பகிர்வுக்கு நன்றி... தொடருங்கள். காத்திருக்கிறோம்.

  http://anubhudhi.blogspot.com/

  ReplyDelete
 2. எதிர்பார்ப்புகளை வளர்த்துக்கொள்வது என்பது நிகழ்காலத்தில் இருத்தலை தடை செய்யும். வாழ்க்கைக்கும் இதே சூத்திரம்தான்:)

  அற்புதமான பகிர்வு. நன்றி.

  ReplyDelete
 3. ஏரியினுள் அல்லது ஏரிக்கரையினில் இயற்கையாக கிடைக்கும், தெய்வங்கள் வடிவிலான மூர்த்தங்கள் சேகரிக்கத் தொடங்கினோம். கரையினில் நிறையக் கிடைக்கின்றன.  கேட்பதற்கே ஆச்சர்யமாக உள்ளது!!!!

  ReplyDelete
 4. தொடர்ந்து படிக்கிறேன். நன்றாக விவரித்துள்ளீர்கள். பாராட்டுகள்.

  ReplyDelete
 5. //உடல் ஏற்புத்தன்மையுடன்தான் இருக்கும். ஆனால் மனதில் ஏற்புத்தன்மை இல்லாததால் வரும் பிரச்சினைகளே அதிகம்.//

  நல்ல, முக்கியமான கருத்து. எந்த சூழ்நிலைக்கும் இது பொருந்தும்.

  ReplyDelete

மனசுல தோணினத சொல்லிட்டு போங்க :)