"மூச்சைக் கவனி, முழுவிழிப்புநிலையில் இரு!" புத்தர்

Saturday, July 16, 2011

திருக்கைலாய யாத்திரை பகுதி 7

பொதுவாக நியாலத்தில் இருந்து கிளம்பி,(230கிமீ தாண்டி)பிரம்மபுத்திரா நதிக்கரையில் அமைந்துள்ள  சாகா என்கிற ஊரில் தங்குவதே வழக்கம். ஆனால் அங்கு இடமில்லை என்று அதற்கு அடுத்ததாக(மொத்தம் 375 கிமீ) டோங்பா என்ற இடத்தில் ஏழுமணிநேரம் ஜீப்பில் பயணித்து தங்கினோம். இடமில்லை என்ற காரணம் உண்மையானதாக எனக்குத் தெரியவில்லை. ஏனெனில் சாகா ஊரை கடக்கும்போது அங்கு நிறைய தங்கும் வசதியுடைய கட்டிடங்கள் இருந்தன. ஒருவேளை கட்டணங்கள் அதிகமாக இருந்திருக்கலாம். நமது வழிகாட்டி பணத்தை மிச்சம் பிடிப்பதற்காக டோங்பா சென்றிருக்கலாம் என்பது என் கணிப்பு, டோங்பா வசதிகள் மிகக்குறைவாகவே இருந்தது.

இரவு உடன் வந்த சில பெண் யாத்திரீகர்களுக்கு மயக்கம், தலைசுற்றல் அதிகமாகவே இருந்தது. அவரளுக்கு டயாமாக்ஸ் மாத்திரை வழங்கப்பட்டது. இது நீண்ட பயணம் மற்றும் இடையில் சுமார் 80 கிமீ பாதை மண்ரோடுதான். அருகில் உள்ள புதிய டோங்பா என்கிற ஊரில் எல்லா வசதிகளும் உண்டு. சூரிய சக்தியால் அந்த ஊரே இயங்குகின்றது :)

அடுத்தநாள் ஜீன் 11 நேராக மானசரோவர்  நோக்கி பயணம் தொடங்கினோம். 335 கிமீ பயணம், இருபுறமும் மலைகள், நடுவே அகண்ட சமவெளி பரப்பு என இயற்கை அமைத்த பாதையில் வியந்து கொண்டே  சென்றோம். இங்கு விவசாயம் என்பதே கிடையாது. இருக்கிற சிறு புற்கள் ஆடுகளும், யாக்குகளும் மட்டுமே மேயும்.


திடீர் மணல் குன்றுகள் இவை உருவான விதம் எப்படி என ஊகிக்கவே முடியாது:)
நீண்ட பாதை சலிப்பே இல்லாத பயணத்திற்கு உத்தரவாதம்

பூத்தூவலாய் பனித் துகள்கள் மலைகளின்மீது படர்ந்திருக்கும் காட்சி
       திபெத்திய அக்காவும் தம்பியும்...

மனோசரோவர் ஏரிக்கரை வந்தடைந்தோம். அதன் கரையின் வலதுபுறத்தில் அடர்த்தியான பனிபடர்ந்த மலைகளின் காட்சி நம்மை உற்சாகம் கொள்ள வைக்கும்.புத்தம் புது உலகத்தில் நுழைந்த உணர்வு மனதையும் உடலையும் கவ்விக்கொள்ள ஆனந்தமான சூழ்நிலை அங்கே நிலவியதை உணர்ந்தோம்.Post a Comment