"மூச்சைக் கவனி, முழுவிழிப்புநிலையில் இரு!" புத்தர்

Tuesday, July 12, 2011

திருக்கைலாய யாத்திரை பகுதி 5

இரவு உணவு சாப்பிட்டுக்கொண்டு இருக்கும்போது லேசாக தலைசுற்றல் ஆரம்பித்தது. அப்படியே அமர்ந்தவாறு மூச்சை மெதுவாகவும், ஆழமாகவும் இழுத்துவிட்டுக்கொண்டே என்னுள் நடப்பதை கவனித்தேன். மெல்ல காது அடைத்தது. நண்பர்கள் பேசுவது எல்லாம் கேட்பது குறையத்துவங்க, கண்ணுள் பூச்சி பறந்தது. இதெல்லாம் சுமார் 20 முதல் 30 விநாடிக்ள் இருக்கும்.

மூச்சைக்கவனிக்க ஆரம்பித்துவிட, அப்படியே எல்லாம் அடங்கி உடல் இயல்பான நிலைக்குத் திரும்பியது. இதுவும் உயர்மட்டத்தில் உடல் தன்னைத் தானே சரி செய்துகொள்ளும் தந்திரம்தான். இதற்குப்பின் எந்த இடத்திலும் இதுபோன்ற எந்த அறிகுறிகளும் வரவில்லை.

இதை இங்கே பகிரக் காரணம் உங்கள் உடல்நிலையில் எந்த பாதிப்பும் இல்லாமல், இப்படி திடீரென உடல்நிலை மாற்றம் வந்தால்  அச்சமோ, கலவரமோ அடைய வேண்டாம். எளிதில் சரியாகிவிடும். அதே சமயம் நேரெதிராக உடல்நிலை பாதிப்பு சரி அடையவில்லை என்றால்  பயண நிர்வாகியிடம் தெரிவித்து பொருத்தமான நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இதற்கு முக்கிய பங்காற்றுவது DIAMOX மாத்திரைதான். நீங்கள் இயற்கை மருத்துவம் முதலியன பின்பற்றினால் கூட அவசியத்தை ஒட்டி மாத்திரை சாப்பிடலாம். நான் அன்று மட்டும்தான் சாப்பிட்டேன். மறுபடி சாப்பிடவே இல்லை:)

அடுத்த நாள் காலை உணவிற்குப்பின் நியாலத்தில் மேற்குப்புறத்தில்  சிறிய குன்றில் (சுமார் ஒரு கி.மீ நடத்தல்)மலையேறுதல் பயிற்சி. டிராவல் ஏஜென்சியின் வழிகாட்டி எல்லோரும் இதில் கலந்து கொள்ளவேண்டும் எனவும்,  சுமார் மூன்று அல்லது நான்குகிலோ எடையுள்ள பொருள்களை பையில் போட்டு முதுகில் மாட்டிக்கொண்டு கிளம்பச் சொல்லிவிட்டார்.

மலையேறும்போது நம் கவனம் முழுவதும் அதிலேயே இருக்க வேண்டும். நம் நண்பர்,உறவினர் வந்துவிட்டாரா? அவரால் ஏற முடியாவிட்டால் நாம் என்ன செய்வது? என்ற குழப்பமெல்லாம் வேண்டாம். சிரமப்படுபவர்களை நாங்கள் (வழிகாட்டி) பார்த்துக்கொள்வோம். என்று தெளிவாக சொல்லிவிட்டார்.  சொன்னதோடு தேவையானவர்களுக்கு, தேவையான உதவிகளையும் செய்தனர்.

நடக்க ஆரம்பித்தவுடன் தான் ஒவ்வொருவருக்கும் தன் உடல்நிலை என்ன என்பது தெளிவாகத் தெரிந்தது. சுமார் 6 பேர் இந்த பயிற்சிக்கே வராமல் அறையிலேயே தங்கிவிட்டனர். இன்னும் 5-6 பேர் கால்வாசி மலையேற்றத்திலேயே முடியவில்லை எனச் சொல்லி அமர்ந்துவிட்டனர்.

25 பேர் மேலே ஏறி இருப்போம். தத்தி தத்தி வந்தவர்கள் இதில் பாதி., அவர்களிலும் சிலர் மேலே ஏறியவுடன் கால் பிடிப்பு, ,மயக்கமடைதல், குளிர் போன்றவைகளால் பாதிக்கப்பட்டனர். 15 பேர் எந்த தொந்தரவும் இல்லாமல் ஏறி விட்டு அங்கே ஓய்வெடுத்தனர். ஓய்வின்போது முடியாதவர்களுக்கு கைகால் பிடித்து விடுதல் போன்ற பணிகளைச் செய்து அவர்களை இயல்புநிலைக்கு கொண்டு வர உதவினர்.

இதையெல்லாம் ஏன் விரிவாக சொல்ல வேண்டி இருக்கின்றது?  நீங்கள் எந்த நபராக இருக்கப்போகிறீர்கள் என்ற கேள்வி உங்களுக்குள் எழ வேண்டும் என்பதற்காகத்தான். ’அவன் அருளாலே அவன் தாள் வணங்கி’ என்பதனை நாம பாட்டுக்கு இருந்தால் போதும் அவன் பார்த்துக்குவான் என்பதாக இல்லாமல், நாம் பாட்டுக்கு செய்ய வேண்டியதை எல்லாம் சரியா செஞ்சிட்டு இருந்தால்போதும் மத்ததை அவன் பாத்துக்குவான் என்றுதான் பொருள் கொள்ள வேண்டும்.

அதாவது திருக்கைலாயம் போக வேண்டும் என்ற ஆர்வமும், ஆசையும் இருந்தால் மட்டும் போதாது. அதற்கேற்றவாறு உடல்தகுதியை, நலத்தை மேம்படுத்திக்கொள்ள வேண்டும். இந்த யாத்திரைக்கு என இல்லாமல் நமது அன்றாட வாழ்வின் அங்கமாக இது மாற வேண்டும். இது உங்களிடம் நான் வைக்கும் வேண்டுகோள்...

யாத்திரை தொடரும்.,
நிகழ்காலத்தில் சிவா

8 comments:

சாகம்பரி said...

திருகைலாய யாத்திரை நிறைய பேர் அனுபவங்களை கேட்டுத் தெரிந்து வைத்திருக்கிறேன். தங்கள் பதிவு இன்னும் நிறைய டிப்ஸ்களை தருகிறது. இன்னும் மனதளவில் தயாராக முடிகிறது. நன்றி.

Sankar Gurusamy said...

அருமையான நடையில் தேவையான தகவல்களோடு வரும் தங்கள் கட்டுரை மிகவும் பயனுள்ளது.

பகிர்வுக்கு நன்றி..

http://anubhudhi.blogspot.com/

தமிழ் உதயம் said...

திருகைலாய யாத்திரைஅனுபவம் எல்லோருக்கும் வாய்க்காது. மிக சிறப்பான வழி காட்டுதலோடு அழகிய பகிர்வு.

FOOD said...

திருக்கயிலாய யாத்திரை, தேவையான குறிப்புகளுடன், நன்றி.

ஸ்பார்க் கார்த்தி said...

பயண அனுபவம் த்ரில்லிங்காக உள்ளது , அதைவிட உங்கள் வார்த்தை ஜாலங்கள் என்னை கட்டி போடுகிறது தொடரட்டும் கைலாய யாத்திரை , காத்திருக்கிறேன் உங்களின் அடுத்த எபிசோடை ரசிக்க

shanmugavel said...

மாத்திரை பற்றி தெரிந்துகொண்டேன்.யாத்திரை அனுபவங்கள் சிறப்பு.

அப்பாதுரை said...

இத்தகைய விவரங்களைத் தான் தேடிக் கொண்டிருந்தேன். மிகவும் நன்றி.

kandhi selvanayagam said...

கைலாயம் புதிதாக செல்ல இருக்கும் என்னை போன்ற புதிய யாத்ரிகரகளுக்கு தங்களது செய்திகள் எச்சரிக்கை யையும் தைரியத்தையும் நம்பிக்கையையும் தருகிறது. நன்றி. தொடருங்கள்