"மூச்சைக் கவனி, முழுவிழிப்புநிலையில் இரு!" புத்தர்

Tuesday, March 9, 2010

மனதை உற்சாகமாய் வைத்துக்கொள்ள.....பகுதி மூன்று

வீட்டிற்கு தேவையான மளிகைப்பொருள்களை வாங்க நகரில் உள்ள டிபார்மெண்டல் ஸ்டோர்-க்கு மனைவியுடன் சென்றிருந்தேன். ஒவ்வொரு பொருளாகத் தேடித்தேடி எடுத்துக்கொண்டு அரைமணி நேரத்தில் எல்லா பொருள்களையும் எடுத்துக்கொண்டு பில் போடும் இடம் வந்தேன்.

எனக்கு முன்னதாக பில் போட ஒருவர் காத்திருந்தார், அவர் நிறைய பொருள்கள் வாங்கியிருந்தார். அவரடைய பொருள்களை, கணினியில் பில் போட்டுக்கொண்டிருந்தார் பில்போடும் அலுவலர். அவரை கடந்த நான்கைந்து ஆண்டுகளாக பார்த்துக்கொண்டிருக்கிறேன்.

பாதி பில் போட்டுக்கொண்டு இருக்கும்போது, கடையினுள் இருந்து வந்த வாடிக்கையாளர் ஒருவர் “நான் இங்கே இரண்டு பொருள்கள் வைத்திருந்தேனே?’” என்று சொல்ல அந்தப்பொருள்களோ முந்தய வாடிக்கையாளரது பொருள்களுடன் கலந்து பில் போடப்பட்டுக் கொண்டிருந்தது.

அவர் பொருள்களை அடையாளம் காட்டி எடுக்க, தொடர்ந்து கணினியில் மிகச் சுலபமாக அந்த பொருள்களின் பெயரைக் கண்டுபிடித்து, முழுமை அடையாத பில்லில் இருந்து கழித்து விடலாம்.. இதற்கு அலுவலருக்கு ஒரு நிமிடம் ஆகும் அவ்வளவுதான்.

ஆனால் அலுவலரோ, அவ்ரிடம் சற்று கடுமையான தொனியில் ஏனுங்க பில் போடும்போது இடையில கொண்டுவந்து வைக்கிலாமா.. இப்படி பண்ணுனா எப்படி..... இந்த பில்லை என்ன பண்றது.. ..கேன்சல் பண்றதா.... இனி இந்த பொருளகள எப்படி கண்டுபிடித்து அழிக்கறது....இதே வேலயாப் போச்சு, எத்தனை தடவதான் இந்த வேலயச் செய்யறது” என்று அலுத்துக் கொண்டார்.

எதிரே இருந்த வாடிக்கையாளரின் முகம் சுருங்கிவிட்டது.

கடைக்கு வந்தவரோ புதியவர், அவரிடம் எளிமையாக இன்முகத்துடன் ”இனிமேல் தனியாக என்னிடத்தில் சொல்லி, பொருளை வையுங்கள்” எனச் சொல்லாமல் அனுபவமிக்க அலுவலரே கடுமைகாட்ட காரணம் அடிப்படை அலுப்புதான். அறிவுக்குறைபாடு அல்ல. பல நாட்கள், பல வாடிக்கையாளர்களிடன் அவர் இப்படி அனுபவப்பட்டு இருக்கலாம். அந்த அலுப்பே ’இனி இந்த வாடிக்கையாளர் வராவிட்டால் என்ன ஆகும், சுற்றி உள்ள மற்ற வாடிக்கையாளர் என்ன நினைப்பார்கள்’ என்ற எந்த சிந்தனையும் இல்லாமல் செய்து விட்டது. பொறுமையாக யோசித்தால் இவை எல்லாம் அவருக்கு தெரியாத விசயம் அல்ல..

சரி விசயத்துக்கு வருகிறேன்.

இதேபோல் நாளைக்கு செய்ய வேண்டிய பணிகள் குறித்து இன்றே நினைத்து நினைத்துப்பார்த்து அலுப்படைவது தவிர்க்க வேண்டியதில் மூன்றாவது தொல்லை ஆகும்.

நினைத்துப் பார்ப்பது என்பது தவறல்ல. என்னென்ன வேலைகள் இருக்கும், அதை எப்படி செய்ய வேண்டும் என்பது திட்டமிடுதல். இதை அவசியம் செய்யத்தான் வேண்டும். மாறாக, அந்த செயல்களின் தன்மையை/விளைவை நினைத்து நினைத்து உணர்ச்சிவசப்படுதல் தவறு.

தினசரி செய்ய வேண்டிய அலுவலாக இருக்கலாம், குழந்தைகளை பள்ளிக்கு அழைத்துச் செல்வது, அலுவலகத்தில் சகநண்பர் அல்லது மேலதிகாரிகளுடன் உள்ள இணக்கமற்ற சூழல், சகபதிவரிடம் கருத்து வேறுபாடு இது போன்று நீங்கள் அலுப்படையக் கூடிய சூழல் ஏதாவது ஒன்று என அனைவருக்கும் இது உண்டு.

மனைவியோடு கருத்துவேறுபாடு, ம்ம்ம் ஆரம்பிச்சிட்டாளா? இனி நிறுத்தமாட்டாளே என முந்தய அனுபவங்களை எல்லாம் அப்போது நினைவுக்கு கொண்டுவந்து அலுப்பு அடைந்தால் அதன் தொடர்ச்சியாக வேறு என்ன செய்யலாம், கோபம் தானாக வரும், தொடர்ச்சியாக திருப்பிப் பேசலாமா, அடித்துவிடலாமா, இல்லை அவங்க அம்மா வீட்டிற்கு அனுப்பிவிடலாமா என எதிர்மறை உணர்வுகளே உருவாகும்.

அலுப்பை தூக்கி எறிந்துவிட்டு, இப்போதுதான் அந்த பிரச்சினையைப் புதிதாகப் பார்ப்பது போல் உணரவேண்டும். அப்போது மனம் கட்டுப்படும். தற்போதைக்கு அடங்கிப்போய், மனைவியை சாந்தப்படுத்திவிட்டு, பின்னர் ஓய்வாக நல்ல மனநிலையில் இருக்கும்போது இது குறித்து விரிவாக பேசி உடன்பாட்டுக்கு வரலாம். இந்த அணுகுமுறை அலுப்பை தவிர்த்தால் மட்டுமே சாத்தியம்.

இதே நிலைதான் அலுவலகத்திலும், நமது குறிக்கோளை எட்டுவதிலும் கூட..

சந்தர்ப்பங்கள், சூழ்நிலைகள் நமக்கு எதிரியாக அமையலாம், அப்போது அலுப்புக்கு இடம் கொடாமல் இருந்தாலே போதும். மீண்டும் நமக்கு சாதகமான நிலை வரும்போது நம் இலக்கு நோக்கி உற்சாகமாக பயணிக்கலாம்.

இரவு ஓய்வெடுக்கப் போகிறோம். நாளை காலை மீண்டும் புத்துணர்ச்சியோடு பெற்று எழப்போகிறோம்.

நாளை எதிர்பார்த்தோ, எதிர்பாரமலோ சந்திக்கப் போகும் நண்பர்களின் ஒத்துழைப்பு நமக்குக் கிடைக்கலாம்.

எனவே நாளைய சுமையை இன்றே மனதில் தூக்கி வைத்துக்கொண்டு அலுத்துக் களைப்படைவது தவிர்க்க வேண்டியதாகும்.

7 comments:

  1. உண்மைதான், சலிப்பு ஏற்பட்டு விட்டால் நம் செயல்கள் முடங்கி விடும்.

    ReplyDelete
  2. உண்மையான அக்கறை.

    ReplyDelete
  3. நல்ல யோசனை சொன்னீங்க தலைவா
    நானும் இதை கடைபிடிக்கிறேன்

    ReplyDelete
  4. யோசிக்கிறேன்..

    ReplyDelete
  5. எனவே நாளைய சுமையை இன்றே மனதில் தூக்கி வைத்துக்கொண்டு அலுத்துக் களைப்படைவது தவிர்க்க வேண்டியதாகும்.


    ....tomorrow never comes. why worry?
    very nice write-up.

    ReplyDelete
  6. A refreshing article and thanks for your thoughts.

    ReplyDelete
  7. @ சைவகொத்துப்பரோட்டா
    @ ஜோதிஜி
    @ கார்த்திக்கேயனும் அறிவுத்தேடலும்
    @ கண்ணகி
    @ Chitra
    @ Krishnan

    நண்பர்களின் வருகைக்கும் கருத்துக்கும் நன்றிகள் பல :))

    ReplyDelete

மனசுல தோணினத சொல்லிட்டு போங்க :)