"மூச்சைக் கவனி, முழுவிழிப்புநிலையில் இரு!" புத்தர்

Saturday, March 6, 2010

பதின்ம கால மனக் குறிப்புகள்.....தொடர்ச்சி

திரு.முருகேசன் என்கிற ஆங்கில ஆசிரியர் +2 வில் கடைசி நான்கு மாதங்கள் தினசரி காலையில் பள்ளிதுவங்கும் முன்னர் ஒருமணிநேரம் ஆங்கில வகுப்பு எடுத்துவந்தார்.

இதில் முக்கியமான விசயம் இலவசமாக எடுத்தார். இலவசம் என்றாலும் தரமோ உயர்வு. வகுப்பறையில் எடுப்பது புத்தகத்தில் உள்ள பாடத்திட்டம், காலை நேர டியூசனில் அவரது பாணியில் அதே பாடத்தின் நெளிவு, சுளிவு, நுணுக்கங்கள் என எளிமையாக எடுத்துவந்தார். டியூசன் இல்லாமலும் பாடம் புரியும்.

இக்காலை வகுப்பில் கலந்து கொள்வது கட்டாயம் என்றாலும் அதில் எந்த கண்டிப்பும் இல்லை.

அவரது இலவசமான, மாணவர்களின் முன்னேற்றத்தை முன்னிட்ட, இந்த நடவடிக்கை குறித்து நான் மிகுந்த மதிப்பு வைத்திருந்தேன். ஆங்கில வகுப்பில் இலக்கண சந்தேகம் கேட்பவன் நான் ஒருவனாகத்தான் இருக்கும். (இன்னிக்கும் கேட்டுக்கிட்டேதான் இருக்கிறோமுங்கோவ்...) ஆக பாடத்தை அக்கறையாக கவனிப்பதாக(?!) என்மீது தனிபாசம் உண்டு.

கணக்குபதிவியல் ஆசிரியர் திரு.முனுசாமிராவ் அவர்களின் அட்டூழியம் அதிகம் ஆகும்போது ஒரு தகவலாக அதை இவரிடம் நான் தெரிவித்தேன்.

அமைதியாக கேட்ட அவர் ”பொறுமையாக இருங்கள்” என்றார். எனக்கு அப்போது புரியவில்லை.

தேர்வுக்கு இரண்டுமாதம் முன்னர் என்னை அழைத்தவர் “உனக்கு கணக்குபதிவியலில் ஏதேனும் புரிந்து கொள்ள கடினமாக இருக்கிறதா?” என்றார் ஆம் என்றேன்.

”உன் வீடு எங்கே இருக்கிறது” என்றார். சொன்னேன். ”அதற்கு அருகில் பெட்ரோல்பங்க் ஒன்று இருக்கும். அங்கு அதன் உரிமையாளரின் தம்பியைச் சென்றுபார். உன் சந்தேகங்களை தெளிவு செய்வார்”. என்றார்.

பெட்ரோல்பங்க்கிற்கு சென்றேன். உரிமையாளரின் தம்பி வாட்டசாட்டமாக இருந்தார். அவரிடம் ”திரு,முருகேசன் ஆசிரியர் அனுப்பிவைத்தார். கணக்கு பதிவியல் சந்தேகங்களை தெளிவு செய்வதற்காக வந்திருக்கிறேன்” என்றேன்.

பொறுமையாக பல கணக்குகளை செய்முறையாக போட்டுப்பார்த்து, சந்தேகங்களை தெளிவு செய்து கொண்டேன்.அவரிடம் சுமார் வாரத்தில் மூன்று நாட்கள் சென்று படித்தேன்.

ஆங்கில ஆசிரியர் என்னை மீண்டும் அழைத்து ”என்ன சென்று படித்தாயா?” என்றார். அதற்கு

“ஆம் எனக்கு பயனாக இருந்தது”. என்றேன். ”அவர் யார் தெரியுமா?” என்றார், நான் தெரியாது என தலையாட்ட ”அவர் என் முன்னாள் மாணவர்” என்றார்.

அப்போதுதான் புல்லரித்தது என்பதன் பொருளையே உணர்ந்து கொண்டேன். ஆங்கில ஆசான் அவரது பாடத்தை தன்னுடைய நேரத்தை தினமும் ஒதுக்கி எங்களுக்காக பாடுபட்டதுடன், எனக்கு வேறு பாடத்தில் ஒரு தடை என்றவுடன் அதைத் தானாக முன்வந்து, முயற்சி எடுத்து எப்படி தீர்கக வேண்டுமோ அப்படி தீர்த்து வைத்தார்.


இவரது வார்த்தைக்கு மதிப்பு கொடுத்த பணக்காரராக இருந்தாலும் துளியேனும் கர்வமில்லாது எனக்கு ஆசானின் கட்டளைக்காக அன்புடன் அக்கறையுடன் சொல்லிக்கொடுத்த பெட்ரோல்பங்க் உரிமையாளரையும் நன்றியுடன் அப்போது நினைத்தேன்.

பேச வார்த்தைகள் இல்லை. சத்தியம், உண்மை, நேர்மை, பிரதிபலன் கருதாது உழைத்தல், கீழ்படிதல், பிறரின் நலனைப் பேணுதல் போன்றவற்றின் அர்த்தம் புரிந்தது.

இவர் எனக்கு ஆசிரியனும், குருவாகவும் விளங்கியவர். அவரது இந்த அரிய உதவி செய்யும் பண்பு என் பள்ளிப்பருவத்திலேயே என்னுள் ஆழமாக பதிந்தது.

இது என் பதின்ம கால நினைவுகளில் மிக முக்கியமானது என்றால் மிகையில்லை

நன்றி நண்பர்களே..
Post a Comment