"மூச்சைக் கவனி, முழுவிழிப்புநிலையில் இரு!" புத்தர்

Friday, February 26, 2010

பதின்ம கால மனக் குறிப்புகள்.......தொடர்பதிவு

பதின்ம கால நினைவுகளை எழுத வேண்டும் என்று திரு.ராதாகிருஷ்ணன் அழைத்தமைக்கு நன்றி சொல்லி சட்டென நினைவிலேயே இருப்பதை எழுதுகிறேன்.

பள்ளித்தோழர்கள் குமார், பழனிச்சாமி, சுப்ரமணியன் நான் நான்கு பேரும் இணைபிரியா நண்பர்கள்
+1 படிக்கும்போது கணக்குபதிவியல், அட அதாங்க அக்கவுண்டன்சி குரூப் படித்தோம். பள்ளியில் கணக்கு பதிவியலுக்கு கட்டாய டியூசன் எடுக்க சொல்லி அந்த துறை ஆசிரியர் திரு.முனுசாமிராவ் கட்டாயப்படுத்தினார். நண்பன் குமார் வசதியானவன். ஆனால் நாங்க என்ன சொல்றோமோ அப்படி, அடுத்ததாக நான், என் வீட்டில் சொன்னால் சற்று சிரமப்பட்டேனும் படிக்க வைத்து விடுவார்கள்.ஆனால் நண்பர்கள் பழனிச்சாமி, சுப்ரமணியன் இருவருக்கும் அதற்கான வசதி இல்லை.

முனுசாமிராவ் ஆசிரியரிடம் விவரத்தை சொன்னபோது அதெல்லாம் தெரியாது. வகுப்பறையில் முழுமையா நடத்தமுடியாது. அதனால கட்டாயம் டியூசன் வந்துதான் ஆக வேண்டும். என்று சொல்லிவிட்டு வகுப்பறையில் கடனுக்கு பாடம் நடத்துவார். எப்படி நடத்தினால் குழப்பம் அடைவோமோ அப்படி நடத்துவார், தொடர்ச்சி இன்றி நடத்துவார் (நல்லா நடத்தினாலே நமக்கு குழப்பம்தான்.. அவ்வ்வ்வ்...)

ஆசிரியர் செய்வது சரியல்ல எனபது உறுதியாக தெரியும், மேலும் பாதிக்கப்படுவது ஏற்கனவே சுமாராக படிக்கக்கூடிய நண்பர்கள். ஆகவே எதிர்க்க வேண்டும் என முடிவு செய்து விட்டேன். எனக்கு கொஞ்சம் (வகுப்பறை)கணக்கு நன்றாக வரும். ஆதலால் கணக்கு பதிவியியலில் கணக்குபதிவு முறைகளை சொல்லித் தரும்போதே அவர் சொல்லித்தருவதில் இடைவெளி வரும் இடங்களை அடையாளம் காண முடிந்தது.

இடையில் எழுந்து சந்தேகம் கேட்க ஆரம்பித்தேன். மறைக்கப்பட்ட விசயம் வெளியே வரும்வரை கேட்பேன். அதுமட்டுமல்ல அவர் முந்தைய நாள் மாலை டியூசனில் ஒரு பதிவு முறையை பாதி சொல்லிக்கொடுத்துவிட்டு அடுத்தநாள் வகுப்பறையில் மீதியைச் சொல்லிக்கொடுப்பார்.

எங்களுக்கோ ஒன்றும் புரியாது. முதல்ல இருந்து சொல்லிக் கொடுக்கச் சொல்வோம். அவரோ ”உங்களுக்கு வேண்டுமானால் வருகைபதிவு போட்டுவிடுகிறேன். தயவுசெய்து வகுப்பு முடியும் வரை வெளியே சென்று வாருங்கள்” என்பார்

”முடியாது எங்களுக்கு சொல்லிக்கொடுத்தே ஆகவேண்டும்” என பிடிவாதம் நான் ஒருவன் மட்டுமே பிடிவாதம் பிடிப்பேன். மற்ற மூன்று நண்பர்களும் எனக்கு கலைஞரைப்போல் ஆதரவு கொடுப்பார்கள். ஒரு வழியாக பலதடைகளைத்தாண்டி +2இறுதித்தேர்வு வந்தது

+2 பொதுத்தேர்வு முடிவுகள் வந்தது. மதிப்பெண்கள் பார்க்க நஞ்சப்பா பள்ளிக்கு செல்ல எதிரே முனுசாமிராவ் ஆசிரியர். என்னை பார்த்தவுடன் வருத்தம் தோய்ந்த தொனியில் ”நான் நம்ம பசங்களுக்கு டியூசன் சொல்லிக் கொடுத்ததெல்லாம் வேஸ்ட், நீ தாண்டா பர்ஸ்ட்” என்றார். கைகுலுக்கி முதுகில் தட்ட எனக்கும் வருத்தம்தான். ஏன் நான் இரண்டாமிடம் பெற்றிருக்ககூடாது?,

நான் அவ்வாறு நல்ல மதிப்பெண்கள் பெற்றதில் இன்னொரு ஆசிரியருக்கு பெரும்பங்கு உண்டு.

அது அடுத்த இடுகையில்...
Post a Comment