"மூச்சைக் கவனி, முழுவிழிப்புநிலையில் இரு!" புத்தர்

Wednesday, July 6, 2011

திருக்கைலாய யாத்திரை பகுதி 2

நட்புபாலத்தில் எந்த வாகனமும் போக அனுமதி கிடையாது. நடந்துபோக மட்டுமே அம்மாம் பெரிய பாலம்., இது எதுக்குன்னு சீன அரசாங்கத்துக்கே வெளிச்சம். அந்த நட்புப்பாலத்தை கடந்தால் அந்த முனையில் இரண்டு சீன இராணுவ சிப்பாய்களின் சிலைகள் பாலத்தின் இருபக்கமும் கண்ணாடி கூண்டுக்குள் நின்று கொண்டிருந்தன.

நடுப்பாலத்தில் கடுமையான பாதுகாப்புச் சோதனைக்கு பின் சீன பகுதி பாலத்தில், செல்லும் வழியில் அந்த சிலைகளை அருகில் பார்த்தேன். சிலையின் கண் விழிகள் உருளத் தொடங்கின. சற்று பிரமிப்பாக இருந்தது. உற்றுப்பார்த்தில் இரண்டுமே சிலைகள் அல்ல., நிஜ சீன காவல்துறையினர். துளிகூட  அசையாமல், முகத்திலும் எந்தவித உணர்ச்சியும் வெளிக்காட்டாது சிலையினை தோற்கடிக்கும் வண்ணம் இருபுறமும்  நின்று கொண்டிருந்தனர். இது நமக்கு ஆச்சரியத்தை தந்தாலும், எங்களால் எதையும் செய்ய முடியும் சீன அரசாங்கம் நமக்கு தரும் செய்தியாகவே தெரிந்தது.

ஒருவழியாக சீன இமிக்ரேசன் முடித்து வெளியே வந்தால் லேண்ட்குரூஸ்யர் ஜீப்கள் 10 தயாராக இருந்தன. ஒரு ஜீப்புக்கு 4 பேர் வீதம் அமர்ந்தோம். கூட  ஜீப்பிற்கு ஒருவர் என்ற விகிதத்தில் ஷெர்பா எனப்படும் உதவியாளர்கள் ஏறிக்கொள்ள அடுத்த தங்குமிடமான நியாலம் நோக்கி ஜீப் பறந்தது.
போகும் பாதையில் தார்ரோடு, மற்றும் அறிவிப்பு பலகைகள், மண்சரிவு ஏற்படாவண்ணம் கட்டுமானங்கள் என பாதையின் தரத்தை பாராட்டித்தான் ஆகவேண்டும்:)

வழியில் காவல்நிலையத்தில் நமது வருகையை பதிவு செய்துவிட்டு பயணத்தைத் தொடர்ந்தால் மேலும் இரண்டு செக்போஸ்ட்கள். இங்கும் பாஸ்போர்ட்களை பரிசோதித்துவிட்டுத்தான் நம்மை அனுமதிக்கிறார்கள். இத்த்னைக்கும் நியாலம் வரை எந்த பாதையும் இணைவதோ அல்லது பிரிவதோ கிடையாது. இருப்பினும் சீனருக்கு தெரியாமல் எந்தநபரும் உள்ளே நுழைவது சாத்தியமே இல்லை என்கிற அளவில் பாதுகாப்புகள் பலமாக இருந்தது.

அதிலும் ஒரு செக்போஸ்ட் அருகில் காம்பவுண்டுடன் கூடிய பயிற்சிக்கூடம், அதில் தடிகளை வைத்து, காற்றில் அவற்றை வீசி பயிற்சி எடுத்துக்கொண்டு இருந்தனர் காவலர்கள். இதற்கும் யாத்திரைக்கும் என்ன சம்பந்தம் என்றால் நாம் பாதுகாப்பு/பயிற்சிகள் விசயத்தில் எப்படி இருக்கிறோம். சீனர்கள் எப்படி இருக்கின்றனர் என்கிற அடிப்படைஒப்பீடுதான் :)

காவல்துறையினர் உற்சாக பானத்துடன் வலம் வருவதும், அரசியல் கட்சிகளுக்கு அடிபணிவதுமாக இருப்பது நாட்டை பற்றிய கவலை அதிகாரத்தில் இருப்பவர்களுக்கு இல்லை என்பதை உறுதி செய்கிறது.

சுமார் ஒன்றரை மணி நேர  பயணம்தான், உயரத்திலிருந்து கீழே பாயும் சிற்றருவிகளும், மேகமூட்டம் சூழ்ந்த மலைகளும், அடர்ந்த மரங்கள் என பாதை கண்கொள்ளாக்காட்சியாக இருந்தது. ஆனால் மெலே செல்ல செல்ல மரங்களின் அடர்த்தி குறைந்து பசுமை அற்ற, வெறுமையான மலைகளின் துவக்கத்தில் நியாலம் வந்தடைந்தோம். இடைஇடையே காத்திருத்தலுக்கான நேரம் சுமார் இரண்டு மணி நேரம் இருக்கும். சரி நியாலம் வந்து சேர்ந்துவிட்டோம். இந்த இடத்தின் சிறப்புகள் என்ன?

தொடர்ந்து பார்ப்போம்.
நிகழ்காலத்தில் சிவா

7 comments:

  1. யாத்திரை நாங்களும் உடன்வருவதைப்போல் அருமையான நடை. பாராட்டுக்கள்.

    ReplyDelete
  2. கொடுத்து வைத்தவர் நீங்கள். உங்கள் அனுபவத்தைப் பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.

    பின் ஒருநாள் நான் போக முயற்சிக்கும் போது நிச்சயம் உங்கள் உதவியை நாடுவேன்.

    ReplyDelete
  3. நல்ல பதிவு.
    வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  4. மிக நல்ல பதிவுகளாக வெளியிடுகிறீர்கள்.சிலருக்கு பொருள் மேல் ஆசை,சிலருக்கு அருள் மேல் ஆசை.அறுமின் அறுமின் ஆசை அறுமின் ஈசனோடாயினும் ஆசை அறுமின் என்று புத்தி சொன்னாலும்,உங்கள் அனுபவக் கட்டுரைகளைப் படிக்கும் போது இந்த இறைவனின் கோயில்களைப் பார்க்க எனக்கும் ஆசை எழாமல் இல்லை.தொடர்க தொண்டு.
    மிக்க நன்றி
    என்றென்றும் பேரன்பினால்
    சாமீ அழகப்பன்
    http://machamuni.blogspot.com/

    ReplyDelete
  5. Ithaiyum konjam parungalean.....

    http://www.youtube.com/watch?v=JR1CmnBpHXo

    ReplyDelete
  6. நன்றாக இருக்கிறது. தொடரவும்.

    ReplyDelete
  7. தொடரும் பயணம் இனிமையாக உள்ளது

    ReplyDelete

மனசுல தோணினத சொல்லிட்டு போங்க :)