"மூச்சைக் கவனி, முழுவிழிப்புநிலையில் இரு!" புத்தர்

Tuesday, March 1, 2011

சதுரகிரி மலைப் பயணம். பகுதி - 6

மலையேறும்போது சில விசயங்களை தெளிவு செய்து கொள்ளுங்கள். நீங்களும் உங்களைச் சார்ந்தவர்களின் வயது மற்றும் உடல்நலத்திற்கேற்ப பொருத்தமான நடை வேகத்தையும், ஓய்வெடுக்கும் நேரத்தையும் அவ்வப்போது முடிவு செய்து கொள்ளுங்கள். மற்றவர்களோடு எந்தக்காரணம் கொண்டும் போட்டி போட்டு ஏற வேண்டாம். வழியில் கொண்டுபோன உணவை மிகக்குறைவாக உண்ணுவது களைப்பு இல்லாமல் ஏற வசதியாக இருக்கும்.எதிரே வருபவரிடம் இன்னும் எவ்வளவு தூரம் ஏற வேண்டும் என்ற கேள்வியைக்கேட்காதீர்கள். பெரும்பான்மையாக உங்களுக்கு ஆதரவாக ’கொஞ்சதூரம்தான்’ என்ற பொய்யான பதிலே வரும். இதில் கவனிக்க வேண்டிய விசயம் என்னவென்றால் உங்கள் மனதைத்தான். உடல் ஒத்துழைப்பு கொடுத்தால் கூட உங்கள் மனம் இன்னும் எவ்வளவு தூரம்தான் போகணுமோ தெரியலையே, எனப் புலம்பி நம்மை பாடாய்ப்படுத்தி எடுத்துவிடும். :))

உங்கள் கண்ணுக்கெட்டிய தூரம்தான் இலக்கு என வைத்துக்கொண்டு நடந்தால்போதும். அதிகபட்சம் நம் பார்வைக்கு 100 அல்லது 150 அடிதான் தெரியும். அதற்குள் வளைவோ மேடோ வந்துவிடும். திரும்ப அடுத்த இலக்கு இது கூட சரியான முறை அல்ல:)) மனதை ஏமாற்றத்தான்...

இன்று ரொக்கம் நாளை கடன் என்பதுபோல இந்த ஒரு அடியை சரியாக கவனமாக அடி பிரளாமல் எடுத்துவைத்தால் போதும் என நினைத்துக் கொள்ளுங்கள் பயணம் அற்புதமாக இருக்கும். அலுப்பு,சலிப்பு ஏதுமின்றி மூன்று மணிநேரத்தில் சாதரணமாக ஏறிவிடலாம். {நிகழ்காலத்தில இருங்க எதிர்காலத்தைப்பத்தி கவலைப்படாதீங்க அப்படிங்கற தொனி தெரிஞ்சா நாந்தான் பொறுப்பு:)))))}

அப்படி ஏறிக்கொண்டே வந்து நாவல் ஊற்றைத்தாண்டி நகர்ந்தோம். அடுத்த 10 நிமிட நடைதூரத்தில் பாதையின் இடதுபுறம் ஒரு சிறிய ஒத்தையடிப்பாதை வந்து இணைந்து கொள்கிறது. இது தேனி, கம்பம் வழியாக வருபவர்களுக்கான வழி. ஆனால் இதில் அடிக்கடி நன்கு வந்து பழகியவர்களே போய்வரமுடியும். புதியவர்கள் தனியாக போவது உகந்ததல்ல என்றார்கள்.

ஆனாலும் நமக்கு நம் பாதையின் ஒரு அடையாளமாக இந்த இடம் இருந்தது. அடுத்த பதினைந்து நிமிட நடை தூரத்தில் நாம் கடப்பது பச்சரிசிப்பாறை பகுதி., இங்கு மலையின் மண் முழுவதும் சற்று பருமனான மணல்துகள்களாக இருந்தது. இன்னும் சொல்லப்போனால் உடைத்த பச்சரிசிபோல் இருந்தது:) இதுதான் என் அறிவுக்கு (???!!!) எட்டியது. பெயர்க்காரணம் வேறாக இருக்கலாம்:)))))
மேலே இந்தப்பகுதியின் ஒரு பகுதி தோற்றம்,  பச்சரிசிப்பாறை முடிவடையும் இடம் கீழே....

இந்த ஒரு இடம்தான் இப்படி கரடுமுரடாக காட்சியளிக்கும்.  அடுத்த கால் மணிநேர தூரம் வந்ததும் நாம் அடையும் இடம் (குளிராட்டி சோலை எனும் இதமான இடத்தை தாண்டினோம் அல்லவா, அதைப்போல் சற்று சிறியதான வனப்பகுதிதான்) சோலைவனதுர்க்கை எனும் ஆற்றோரப்பேச்சி அம்மன் குடி கொண்டிருக்கும் இடம். தேவையானால் இந்த இடத்தில் நீங்கள் சற்று ஓய்வெடுத்துக் கொள்ளலாம்.

தொடர்ந்த அரைமணிநேரப்பயணத்தில் நீங்கள் சதுரகிரி மலைப்பயணத்தில் முக்கால்வாசிக்கும் மேலாக வந்துவிட்டீர்கள். அந்த இடம்தான் சதுரகிரி நுழைவாயிலாக கருதப்படும் பிலாவடிக்கருப்பர் சந்நதி...

பயணம் தொடரும்
நிகழ்காலத்தில் சிவா
4 comments:

 1. பதிவில் மலையேறிய அனுபவம் மற்றும் அதற்குரிய ஏற்பாடுகளை தெரிந்து கொண்டோம்.

  ReplyDelete
 2. Adventurous trip தான்... படங்களை பார்க்கும் போதுதான் இன்னும் தெளிவா புரியுதுங்க.

  ReplyDelete
 3. மலை ஏறும் போது இருக்கவேண்டிய மனநிலையை நன்றாகச் சொன்னீர்கள். இதெல்லாம் நமக்கும் ஏற்பட்டிருக்கு :)

  சிரமங்கள் இருந்தாலும் சென்று வந்திருக்கிறோம். இப்போது நினைத்தாலும் பயணஅனுபவங்கள் மகிழ்ச்சியைத் தருகின்றன..

  ReplyDelete
 4. வணக்கம் சகோதரம், இயற்கை அழகினைப் பார்த்து மலைக்க வைக்கும், எம்மையெல்லாம் மலையேறத் தூண்டும் தங்களின் பதிவினை ரசித்தேன். இந்தியா வந்தால் தங்களினைத் தொடர்பு கொண்டு சதுரகிரி மலையின் அழகினை ரசிக்க முயற்சி செய்கிறேன்.

  ReplyDelete

மனசுல தோணினத சொல்லிட்டு போங்க :)