"மூச்சைக் கவனி, முழுவிழிப்புநிலையில் இரு!" புத்தர்

Monday, March 21, 2011

சதுரகிரி தவசிப்பாறை (பகுதி 8)

சதுரகிரி மலையேற்றம் என்பதே பொதுவாக சுந்தரமகாலிங்கர், சந்தன மகாலிங்கர் இருவரையும் தரிசனம் செய்வதே ஆகும்.  சித்தர்கள் தரிசனம் வேண்டியும், அபூர்வ மூலிகைகளை தேடியும் இங்கு வருபவர்கள் இதில் சேர்த்தி இல்லை:) பெரும்பாலானோர் இவ்விரு சந்நதியுடன் தன் பயணத்தை நிறைவு செய்து அங்கு மடங்களில் இரவு தங்கியோ அல்லது உடனேயோ அடிவாரம் திரும்புகின்றனர்.

அதற்கு மேலாக தவசிப்பாறை, பெரிய மகாலிங்கம் என பயணத்தை நீட்டிப்பவர்களும் உண்டு. இதற்கு ஒத்தையடிப்பாதை மட்டுமே இருக்கிறது. அதுவும் ஏற்கனவே சென்று வந்த அன்பர்கள் துணையுடனோ அல்லது அங்கு இருக்கும் வழிகாட்டி(?)களுடனோ மட்டுமோ செல்லமுடியும். இல்லையெனில் வழி தவறும் வாய்ப்புகள் கண்டிப்பாக உண்டு.

போதுமான ஓய்வு எடுத்துக்கொண்டு, காலை வேளையில் சுந்தரமகாலிங்கம் சந்நதியின் இடதுபுறம் வழிகாட்டியின் துணையுடன் ஏற ஆரம்பித்தோம்.
கீழிருந்து மேலே தவசிப்பாறைப் பாறை மற்றும் ஏ.சி பாறையின் தோற்றம்.

தவசிப்பாறை செல்லும் வழியில் இருந்து சதுரகிரியை நோக்கிய பார்வை... படத்தில் இடதுபுறம் கீழ்பகுதி   குழுவாக தங்கி, சமைத்து ஓய்வெடுக்கும் இடம். முன் அனுமதி பெற வேண்டும். வலதுபுறம் கீழே இருப்பது சுந்தரமகாலிங்கம் சந்நதி வளாகம். அதற்கு நேர்மேலே இருப்பது சந்தனம்காலிங்க சந்நதி வளாகம்.

ஒற்றையடிப்பாதையில் பயணம் செய்யும்போது மரங்களின் அடர்த்தி நாம் எங்கு சென்று கொண்டு இருக்கிறோம் என்பதை குழப்பமாக்கி விடுகின்றன. இதுவே நாம் வழியில் குறுக்கிடும் வேறு ஒற்றையடிபாதைகளில் தடம் மாற வாய்ப்புகளை அதிகரிக்கிறது. சற்று செங்குத்தாக ஏற ஆரம்பித்தோம்.
கிட்டத்தட்ட ஒரு மணிநேரத்திற்குப்பின் தவசிப்பாறையை அடைந்தோம்.

பொதுவாக மனிதர்கள் கூட்டமாக எங்கெங்கு கால்வைக்கிறோமோ அந்த இடத்தின் இயல்பினை மாற்றிவிடுகிறோம்.  அதுபோலவே தவசிப்பாறை குகையும்.:))  குளிர்காலத்திலோ, அல்லது மழைநாட்களிலோ அங்கு கிடைக்கக்கூடிய தனிமையும், இருப்பும் மனம் தன்னுள் ஒடுங்க மிகவும் உதவிகரமாக இருக்கும்.

நீங்கள் தவசி குகையினுள் இருக்கும் சிவபெருமானை தரிசிப்பது மட்டுமே நோக்கமெனில் அமாவாசை, பெளர்ணமி நாட்களில் செல்லலாம். மனதை உள் ஒடுங்கும் தியான மார்க்கங்களில் ஈடுபாடு இருப்பின் கூட்டமில்லாத இதர நாட்களில் செல்லலாம். போதுமான நேரம் உள்ளே அமர்ந்து தியானத்தில்  இருக்கலாம்.
குகை வாசல் சுமார் ஒன்றரை அடி உயரமே இருக்கும். மெள்ள படுத்து, தவழ்ந்து நகர்ந்து சுமார் 15 அடி சென்றால் ஆள் மட்டும் நகர்ந்து நுழையும் அளவு உயரம் மட்டும் குறுகலாக இருக்கும். அதை அடுத்து வலதுபுறமாக அமர்ந்த நிலையில் நகரக்கூடிய அளவு சுமார் 10 அடி தூரம் பாதை விரிவடையும், அதன் பின்னர் குனிந்து செல்லக்கூடிய அளவு 5 அடி தூரம், தொடர்ந்து குனிந்தவாறே சென்றால் தவசிப்பாறை சிவலிங்கத்தை தரிசனம் செய்யலாம். உள்ளே ஆறு அல்லது ஏழுபேர் நிற்கலாம்.
வலதுபுறம் உள்ளே தீபஒளியில் மிகச்சிறியதாக சிவலிங்கம் தெரிகிறதா....!!!

கேமரா ஃபிளாஷ் போட்டு அருகில் சென்று வேறொரு நாளில் எடுத்த படம..

ஆனந்தவிகடன் சதுரகிரிநூல் வெளியிட்டு எல்லோருக்கும் சென்று சேரச் செய்தது. சன் தொலைக்காட்சி நிஜம் (வீடியோ) நிகழ்ச்சியில் தவசிப்பாறையை நம் வீட்டு வரவேற்பறையில் கொண்டு வந்துவிட்டது...

பயணம் தொடரும்..
நிகழ்காலத்தில் சிவா

3 comments:

 1. எனக்கும் அங்கு செல்ல ஆசை.. சரியான வழிகாட்டுதல் இல்லாமல் இருந்தேன்,,,

  இந்த கட்டுரை தொடர் மிக மிக மிக பயனுள்ளதாக இருக்கிறது

  ReplyDelete
 2. மகிழ்ச்சி பார்வையாளன் அவர்களே...

  இன்னும் ஏதேனும் கூடுதல் விபரம் தேவையெனில் தனிமடலில் தொடர்பு கொள்ளுங்கள்...

  ReplyDelete
 3. இன்னும் ஏதேனும் கூடுதல் விபரம் தேவையெனில் தனிமடலில் தொடர்பு கொள்ளுங்கள்..."

  அன்புக்கு நன்றி,,,

  விரைவில் தொடர்பு கொள்வேன்...

  ReplyDelete

மனசுல தோணினத சொல்லிட்டு போங்க :)