"மூச்சைக் கவனி, முழுவிழிப்புநிலையில் இரு!" புத்தர்

Thursday, February 17, 2011

சதுரகிரி மலைப் பயணம். பகுதி 5

கோணத்தலவாசல் என்கிற Z வடிவிலான மலைஏற்றத்தைத் தாண்டினோம். அதிலிருந்து இன்னும் மேலேற காரம்பசுத்தடம் என்கிற இடத்தை கால்மணி நேர இடைவெளியில் தாண்டினோம். . இங்கு என்ன விசேசம் என்கிறீர்களா:)

கோணத்தலவாசல் என்பது சற்றே கடினமான ஏற்றத்தின் ஆரம்பம். Z வடிவமே பெயர்க்காரணமாக இருக்கும்போல..:)).  காரம்பசுத்தடம் என்பது பாறையின்மீது சந்தனமும், மஞ்சளும் கலந்து பூசி வழிபட்டு இருக்கிறார்கள். தலபுராணத்தோடு சம்பந்தப்பட்ட இடம். பாறையில் பசுவைக்கட்டி வைக்கும் வளையமும்  இருந்தது.  அதைத்தாண்டி கால் மணிநேர பயணத்தில் கோரக்கர் குகை.

பாறையில் இருந்த வழிகாட்டும் எழுத்துகள் மிகவும் மங்கலாக இருக்க நாங்கள் அதைப்பொருட்படுத்தாது மேலே ஏறிவிட்டோம். பின்னர் இறங்கும்போது அந்தக் குகையை தரிசனம் செய்தோம். அடுத்த கால்மணி நேரத்தில் நாங்கள் அடைந்தது இரட்டை லிங்கம். இந்த இடத்தை நீங்கள் அடைந்துவிட்டால் மலையின் பாதி தூரத்தை கடந்துவிட்டீர்கள் என அர்த்தம்:)


இடைப்பட்ட சுமார் ஒன்றரை கிமீ தூரம் மட்டுமே சற்றே கடினம். மற்றவை எளிதில் ஏறிவிடலாம். இன்னும் கால்மணிநேரம் நடந்தால் வருவது குளிராட்டி சோலை எனப்படும் மரங்கள் அடர்ந்த சோலைவனப்பகுதி. இது வரை ஏறிவந்ததில் இருந்த களைப்பு தானாக தீரும் வண்ணம் இதமான குளிர் உடலையும் மனதையும் வருடியது. சற்றே அமர்ந்து ஆசுவாசப்படுத்திக் கொண்டோம்.

இன்னும் மேலே ஏற இந்த இரண்டாம் மலைப்பகுதி முடிந்ததற்கு அறிகுறியாக சமவெளிப்பகுதி வருகிறது. இந்த இடத்தில் சின்ன பசுக்கிடை என்கிற அறிவிப்பு இருந்தது. இது சமவெளிப்பகுதி ஆகும்.  சில பசுக்கள் கழுத்தில் சத்தம் கேட்கும் மணிகளுடன் மேய்ந்து கொண்டிருந்தன. இன்னும் மேலே ஏற ஏற எதிர்படுவது நாவல் ஊற்று. பலவித சத்துகள் நிறைந்ததாக நாவல் மரத்தடியில் அமைந்த இந்த ஊற்று சர்க்கரை வியாதிக்கு சிறந்த நிவாரணி என்கிறார்கள். இது நிலத்தில் அடியில் இருந்து பொங்கி வந்து கொண்டே இருக்கிறது.....

பயணம் தொடரும்.....
நிகழ்காலத்தில் சிவா
Post a Comment