"மூச்சைக் கவனி, முழுவிழிப்புநிலையில் இரு!" புத்தர்

Tuesday, March 22, 2011

சதுரகிரி பெரிய மகாலிங்கம் - பகுதி 9

தவசிப்பாறையிலிருந்து ஒட்டியே வலதுபுறமாக ஏறினால் தவசிப்பாறையின் மேல்பக்கத்திற்கு  வந்துவிடலாம். அந்தப் பாறையின் உச்சியில் ஒன்பது சிறுபாறை கற்கள் உள்ளன. பக்தர்கள் இதை நவக்கிரக பாறை என அழைக்கிறார்கள்.

படத்தில் இடது கீழ்புறத்தில் இருக்கும் சிறுபாறைகளுக்கே இந்தப்பெயர். இது தவசிப்பாறையின் மேல்பகுதி ஆகும். இதை ஒட்டி வலதுபுறம் இருக்கும் பாறை ஏ.சி பாறை கொஞ்சம் கீழிறங்கிப்பார்த்தால் போதும்.

சுமார் இருபதுபேர் செளகரியமாக அமரும் வகையிலான இடம். மேலும் கீழும் வலதும் இடதும் பாறை நீர் கசிந்து கொண்டு குளிர் காற்றில் ஊடுருவி எந்நேரமும் வீசிக்கொண்டே இருப்பதால் ஜில்லென்று ஏ.சி காற்று மாதிரி வீசிக்கொண்டே இருக்கும். வாய்ப்பு இருந்தால் இங்கும் தியானத்தில் இருக்கலாம். தவசிப்பாறைக்கு  வரும் பக்தர்கள் பலபேர்கள் இங்கு வருவதில்லை.:)

அதிலிருந்து சற்று மேலேறி இடதுபுறமாக நமது பயணம் தொடரும். ஒரு கிமீக்கு குறையாமல் நடந்து பின் இடதுபுறமாக கீழிறங்கத்துவங்கினால் திரும்ப அரைமணிநேரப் பயணம் செய்து நாம் அடைவது பெரிய மகாலிங்கம் சந்நதியின் பின்புறம் ஆகும். இயற்கையின் அற்புதங்களில் இதுவும் ஒன்று.

பிரமாண்டமாய் நிற்கும் சிவலிங்கம் போன்ற பாறையின் பின்பகுதியில் அரசமரத்தின் வேர்கள் சிவனின் ஜடாமுடிபோல் பற்றி படர்ந்து நிற்பதை நேரில் பார்க்கும்போது மனதில் ஏற்படும் உணர்வுகளை எழுத்தில் கொண்டு வரமுடியாதுதான்.
இதோ முன்பகுதி இந்த பெரும் பாறையின் கீழ் பெரிய மகாலிங்கம் வீற்றிருக்கிறார்.  கூடுதல் படங்களுடன் சதுரகிரி பிரபாகர் இடுகை


வேர்கள் எவ்வளவு பட்டையாய் பாறையோடு பாறையாய் இருப்பதைப் பாருங்களேன். அருகிலேயே திருவோட்டுப்பாறை ஒன்று இயற்கையாக அமைந்துள்ளது. அதாவது இயற்கையாய் அமைந்தவற்றை எல்லாம் நம் முன்னோர்கள் சிவரூபமாகவும், ஆன்மீக சம்பந்தமுடையதாகவும் பார்த்திருக்கிறார்கள் என்பதே இங்கு முக்கியம்.

தொடர்ந்த மனநிறைவுடன் கீழிறங்கினோம், சுமார் முக்கால் மணிநேரத்தில் சுந்தரமகாலிங்கத்தின் சந்நதி அருகில் வந்து சேர்ந்தோம். சுந்தரரை வணங்கிவிட்டு சந்தன மகாலிங்கரை தரிசனம் செய்யச் சென்றோம்.

பயணம் அடுத்த பகுதியில் நிறைவு பெறும்..

வாழ்த்துகளுடன்
நிகழ்காலத்தில் சிவா1 comment:

  1. சிவலிங்கம் போன்ற பாறை, மரத்தின் வோ்கள் மிகவும் அருமையாக இருக்கிறது.

    ReplyDelete

மனசுல தோணினத சொல்லிட்டு போங்க :)