"மூச்சைக் கவனி, முழுவிழிப்புநிலையில் இரு!" புத்தர்

Tuesday, November 30, 2010

இனிய பயணம் - கங்கோத்ரி,கேதர்நாத்க்கு..12

பாறை விழுந்த பாதை துண்டிக்கப்பட்ட இடத்திற்கு மறுபுறம் நடந்து சென்றபோது அந்தப்பகுதியில் நிறைய வாகனங்கள் கீழிறங்க வழி இல்லாமல் காத்திருந்தன.

அதே சமயம் அங்கே உள்ள வாடகை வேன்கள், சிறு பேருந்துகள் காத்திருந்தன. இது போன்ற நிகழ்வுகள் நடக்கும்போது இவர்களின் சேவை பாராட்டப்பட வேண்டிய ஒன்று!!. இரண்டு பேருந்துகள், இரண்டு ஜீப்புகள் வாடகைக்கு அமர்த்தினோம். இதற்கு 40000 ரூபாய் கூடுதல் செலவுதான்.
ஆனால் திரும்பிச் செல்லும் முடிவை எடுப்பதைவிட அமைப்பாளர்கள் பண இழப்பை பொருட்படுத்தாது எங்களது மனநிறைவை முக்கியமாக கொண்டு இந்த ஏற்பாட்டினை செய்தனர். பேருந்தில் சுமார் 45 முதல் 50 பேர் ஏறிக்கொள்ள நின்று கொண்டே பயணம் மீண்டும் தொடங்கியது.மேலே உயரத்தில் செல்லும்போது கங்கையின் தோற்றம்....

இதுவரை இருந்த குளிர் இன்னும் அதிகமாகத் தொடங்கியது.


பாதையின் ஊடே பாகீரதி எனப்படும் கங்கை அதளபாதாளத்தில் ஓடிக்கொண்டு இருந்தாள் குன்றுகள் என்கிற மலை அமைப்பு மாறி செங்குத்தான மலைகள் இருபுறமும் காண முடிந்தது. அதாவது காங்னானியில் கடல்மட்டத்திலிருந்து சுமார் 1980 மீட்டர். அதிலிருந்து கங்கோத்ரி 3140 மீட்டர் என மளமள வென உயர்ந்து செல்லும் ரோடுகளின் வழியாகப் பயணம் தொடர்ந்தது இந்த உயர வித்தியாசமே உங்கள் மனதில் மலைகளின் உயரத்தையும் அமைப்பையும் விளக்கும்.. லங்காசட்டி, பைரன்சட்டி என்கிற ஊர்களைத்தாண்டி கங்கோத்ரியை அடைந்தோம்.

கங்கோத்ரி கடல் மட்டத்திலிருந்து 3140 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ளது. இங்கு அமைந்துள்ள இக்கோயில் 18 ம் நூற்றாண்டில் கட்டப்பட்டதாகும். கோயில் நிற்கும் கல் பகீரதன் தவம் செய்யக் காலை ஊன்றி நின்ற இடமாகக் கருதப்படுகிறது. அதனால்தான் பகீரதசிலா என்ற பெயர் பெற்றது. இங்குதான் பாண்டவர்கள் அசுவமேத யாகம் செய்ததாகவும் நம்பிக்கை..கங்கைத்தாயின் கோயில் பாகீரதி எனப்படும் கங்கை நதியின் வலதுபுறம் அமைந்திருக்கிறது. கங்கை பிறக்குமிடம் கெளமுக் . 4255 மீட்டர் உயரத்தில் உள்ளது. இங்கு அமைந்துள்ள சிறிய குகையில் வெளிப்படும் பாகீரதி சறுக்குப் பனிப்பாறைகள் வழியாக, வடமேற்காக திரும்பி கங்கோத்ரியை அடைகிறாள். கங்கை வடக்கே திரும்பியதால்தான் கங்கோத்ரி ஆயிற்று.

4255 அடி உயரத்தில் உள்ள கெளமுக்கை அடைவது மிகவும் கடினம். கங்கோத்ரிக்கு அப்பால் ஒற்றையடிப்பாதை கூடக் கிடையாது. இந்தப் பள்ளத்தாக்கின் மதில்கள் சுமார் 6000 அடிகள் உயரமாக, பார்க்கவே வியப்பும் அச்சமும் ஏற்படுத்தும்.இதற்கு மேல் பாதை கிடையாது. நடந்து செல்லலாம் என கேள்விப்பட்டேன்,


நாங்கள் இந்த இடத்தை சென்று சேரும்போது மணி 2.30 இருக்கும். கோவில் நடை சாத்திவிட்டார்கள். கோவில் மீண்டும் திறக்க நான்கு மணி ஆகும் என
தகவல் கிடைத்தது. சரி கங்கையில் நீராடலாம் என முடிவு செய்து படிகளில் இறங்கியபோது ஒரு மயக்கமான இளைஞரை கை, கால் தேய்த்துவிட்டுக் கொண்டு இருந்தனர். அவரோ ஒரு துளி கூட அசைவின்றி கிடந்தார். என்ன என கேட்டோம். நீரில் இறங்கி குளித்தவருக்கு குளிர் தாங்காமல் இப்படி
ஆகிவிட்டது. என்றனர்.

நாங்கள் குளிக்கும் முடிவை மறு பரிசீலனை செய்ய வேண்டியதுதான் என யோசித்துக்கொண்டே  படித்துறைக்குச் சென்றோம். அங்கே பால் போன்ற நிறத்துடன் வெண்மை நிற மணல் துகளா, அல்லது பனிப்பாறைத் துகளா என இனம் பிரிக்கமுடியாதபடி நீர் புரண்டு ஓடிக்கொண்டு வந்தது.


கீழே உள்ள படம் நின்று குளிக்க வசதியான படித்துறை... எங்களுடன் வந்த நண்பர்கள் மிகச் சிலரே குளித்தனர். நான் குளிக்கலாமா வேண்டாமா என மனதோடு போராடிக்கொண்டு இருந்தேன். அருகில் இருந்த இயற்கை மருத்துவர் சும்மா இறங்கி நில்லுங்க, அப்புறம் குளிங்க என்றார். நீருக்குள் இறங்கினேன். அதன் விறுவிறுப்பு வார்த்தைகளால் விவரிக்க முடியாது. பனிக்கட்டி கையில் பிடித்தால் கூட இப்படி இல்லை. அழுத்தமான, ஆழமான ஜில்லென்ற தன்மை...நீரில் கால வைத்த விநாடியே கால்கள் விறுவிறு என உணர்ச்சி ஏற கால் மரத்துப்போக ஆரம்பித்தது. அதுவும் ஊசிகள் குத்துவது போலவும்., கால் கல்லாவது போன்ற கடுகடுத்த உணர்வு, அப்படி கல்லாகிய கால் துண்டுதுண்டுஆக பிளப்பது போலவும் இருந்தது. அதோடு நான் நின்று கொண்டிருக்கிறேன் என்கிற உணர்வையும் இழந்தேன். சாய்ந்துவிடுவேன் என்கிற நிலைத் தெளிவாக தெரிந்தது. சட்டென மேலே ஏறிவிட்டேன்.

ஆக மனம் வென்றது. இன்னும் மனதிற்கு போதுமான விருப்பம் இருந்திருந்தால் குளித்திருக்கலாம் என பட்டது. இருப்பினும் பின் விளைவுகளை மனதில் கொண்டு நம்மால் மற்றவருக்கு ஏதேனும் தொந்தரவு ஏற்பட்டு விடக்கூடாது என வெளியே வந்தேன்.எல்லோரும் மதிய உணவுக்காக வாய்ப்புகளைத் தேடினர், அங்கேயே சில நல்ல உணவகங்கள் இருக்கின்றன. வட இந்திய உணவுவகைகள் நண்பர்கள் சிலர் சாப்பிட, உணவு வண்டியும் வந்திருக்கும் அங்கு போய்ச் சாப்பிடலாம் என சில நண்பர்க்ளும் நகர அங்கே வாங்கிய ஆப்பிளை சாப்பிட்டுக்கொண்டே நானும் திரும்பினேன்.

அமைப்பாளர் அங்கு வந்து விரைவாக கிளம்புவது நல்லது, திரும்பிச்சென்று நமது பேருந்தை அடைய வேண்டும். அதன் பின் அங்கிருந்து உத்தர்காசி இரவு தங்கச் செல்ல வேண்டும். இரவு வந்துவிடும் ஆகையால் எங்காவது வ்ழியில் மாட்டிக்கொண்டால் சிரமம் என்றார். அனைவரும் மளமள வென கிளம்பினோம். திரும்பி வரும் வழியில்...................ஆப்பிள் மரம்,கண்கொள்ள இயற்கையன்னையின் அழகு...


தூரத்தில் மெல்லிய கோடாக கங்கை...


இன்னும் கொஞ்சம் கீழே வந்தபின் எடுத்தது.,ஒரு வழியாக பாறை விழுந்த இடத்தில் பேருந்துகள் வரிசையாக நின்ற இடத்திற்கு வந்து சேர்ந்தோம்.  பாறை விழுந்து பாதை துண்டான இடத்திற்கு மறுபுறம் எங்களது நான்கு பேருந்துகளும் இருந்த இடத்தில் ஐந்தாவது பேருந்தும் வந்து சேர்ந்திருக்க எல்லோரும் அவரவர் இடத்தில் ஏறி அமர்ந்து கொண்டோம். மதிய உணவு வண்டி காத்திருக்க மாலை 5 மணியாக இருந்தாலும் பேக்கிங் செய்யப்பட்ட உணவு தரப்பட்டது. பயணம் தொடர்ந்தது.

மெல்ல மெல்ல இருள் சூழ்ந்தது. மழை பெய்யத் தொடங்கிவிட்டது. பேருந்தினுள் அமர முடியாத அளவுக்கு குளிர் வாட்டி எடுத்தது. ஜெர்கின்னின் அவசியம் அப்போது புரிந்தது. ஆங்காங்கே கடும் மழையும் பெய்தது. பேருந்து ஓட்டுநர்களோ மிகவும் நிதானமாக வந்தனர். அந்த இருளிலும் ஒரு சில யாத்திரிகர்கள் மழையில் நடந்து வந்து கொண்டு இருந்தனர். அவர்கள் கையில் மணியை வைத்து அதை அசைத்து ஓசை எழுப்பிக்கொண்டே வந்தனர். அவர்களின் இடத்தில் என்னை வைத்து கற்பனைகூட செய்ய முடியவில்லை!!!

வழியில் எங்குமே வெளிச்சத்திற்கான விளக்குகளோ, கடைகளோ இல்லை. இந்த சூழ்நிலையில் பயணம் செய்யும் போது மனம் திக்திக் எனத்தான் இருந்தது. எங்காவது மழையினால் பாறை விழுந்தாலோ அல்லது மண்சரிவினால் பாதை தடைபட்டாலோ விடியவிடிய இதே நிலைதான். என மனம் அலறியதைத் தடுக்க முடியவில்லை. அதாவது அந்த சுழ்நிலையை
மனம் ஏற்றுக்கொள்ளாததே மனம் துன்பத்திற்கு காரணம் என தெளிவாக புரிந்தது. இரவு 10.45 மணிக்கு உத்தர்காசி வந்தடைந்தோம். மீண்டும் உணவு
தயாரவதற்கு ஏற்பாடுகள் நடக்க நாங்கள் எங்களுடைய அறைகளில் தங்கினோம்.


காலை அங்கிருந்து நேராக கேதார் நாத் பயணம். இந்த கேதார்நாத் பயணம் நிச்சயம் இது போன்ற சவால்களை உள்ள்டக்கி இருக்காதுஎன் என் மனதிற்குப்
பட்டது.....


 பயணம் தொடரும்
நிகழ்காலத்தில் சிவா

12 comments:

 1. சில சமயம் வெந்நீர் குளியலை இப்போது உள்ள சூழ்நிலையை தவிர்த்து குளிர்ந்த நீரில் வெடவெடன்று நடுங்கிக் கொண்டு குளித்து முடித்து விட்டு வெளியே வரும் போது கிடைக்கும் உற்சாகம் வேறு எதிலும் இல்லை என்பதை உணர்ந்து கொண்டேன். நீங்கள் குளித்ததை என்னால் யோசித்துப் பார்க்கமுடிகின்றது. எப்போது இந்த வாய்ப்பு எனக்கு அமையும் என்று யாசிப்பதை தவிர வேறு என்ன என்னால் செய்யமுடியும் சிவா?

  ReplyDelete
 2. very nice write-up and nice photos.

  ReplyDelete
 3. தொடர்ந்து எழுதுங்கள் புகைப்படத்தை குறைத்துக்கொள்ளுங்கள்

  ReplyDelete
 4. ண்ணா எங்களையெல்லாம் கிளப்பாம விடமாட்டிங்கன்னு நினைக்கிறேன். சாமி, தல இவர் எழுதுறதயெல்லாம் படிச்சிட்டு இருக்கிங்களா? படிச்சிட்டுமா சும்மா இருக்கிங்க?

  ReplyDelete
 5. //எப்போது இந்த வாய்ப்பு எனக்கு அமையும் என்று யாசிப்பதை தவிர வேறு என்ன என்னால் செய்யமுடியும் சிவா?//

  கூடிய சீக்கிரம் அமையட்டும் ஜோதிஜி...

  மனதை யாசித்து ஜெயிக்க முடியாது. கட்டலை இடுங்கள் அல்லது மிரட்டுங்கள்:))

  ReplyDelete
 6. //very nice write-up and nice photos//

  நன்றி சித்ரா

  தொடர் வருகைக்கும் பாராட்டுதலுக்கும்..

  ReplyDelete
 7. \\ஆர்.கே.சதீஷ்குமார் said...

  தொடர்ந்து எழுதுங்கள் புகைப்படத்தை குறைத்துக்கொள்ளுங்கள்\\

  நன்றி சதீஷ்.. எடுத்த போட்டோக்கள் 800 அத்தனையும் போடாமல் தேர்ந்தெடுத்துப் போட்டுக்கொண்டு இருக்கிறேன்.

  படிப்பவர்களுக்கு மனதில் அழுத்தமாக பதிய வேண்டும். மனக்காட்சியாக உணர வேண்டும் என்கிற ஆவல்தான்..

  படம் சைஸ் மிகச் சிறியதுதான்..

  ReplyDelete
 8. முரளி நீங்க கோவா போனதை படித்தேன். எனக்கு ஆவல் வந்தது..

  ஆனா நான் அங்க போயி என்ன பண்ணுவேன்னுதான் தெரியல:)))))

  ReplyDelete
 9. நல்ல பகிர்வுக்கு நன்றி
  படங்கள் அருமை

  ReplyDelete
 10. கேதர்ல குளிக்க இறங்கி ஒரு நிமிடம் என்ன ஆச்சின்னே தெரியாம இருந்தேன், பொறவு குளிச்சிட்டு தான் கோவிலுக்கு போனேன் -:)

  ReplyDelete
 11. உங்கள் பயண அனுபவம் சுவையாக இருக்கிறது. வாழ்த்துக்கள்.

  ReplyDelete

மனசுல தோணினத சொல்லிட்டு போங்க :)